வதந்தி என்கிற பெயரில் எடுக்கப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளைக் கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதாக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கோவையில் 2 வங்கி ஊழியர்கள்  அதிமுக பிரமுகர் ஒருவரின் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.  சமூகத்தின் மிக முக்கியமான பொறுப்புகளில் இருப்போர் குறித்தான செய்திகள் முறையாக வெளியிடப்படவில்லை அல்லது மறைக்கப்படுகிறது என்கிற சந்தேகம் வருகிற போது அது குறித்தான விவாதங்கள் பொதுவெளியில் வருவதைத் தடுத்து விட முடியாது. முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் வாரக்கணக்கில்  அமைச்சர்கள், அதிகாரிகள் குவிந்திருப்பதும், அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவதில் ஈடுபடுவதும், தமிழகம் மட்டுமன்றி, அகில இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதலமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்து, நேரடியாக முதலமைச்சரைப் பார்க்க வழியின்றி, அதிகாரிகளிடம் விசாரித்து விட்டு செல்வதும், முதலமைச்சர் துறைகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களைப் பொறுப்பாக்கி இருப்பதும் இயல்பாகவே முதலமைச்சர் உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு இடமளிக்கின்றன.

திட்டமிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காகப் பரப்பப்படும் விஷமப் பிரச்சாரம் வேறு; வலைத்தளத்திலும், நேரடியாகவும்  கிடைத்த செய்திகளை ஆர்வம் காரணமாகப் பகிர்ந்து கொள்வது வேறு. இதற்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது கருத்து கூறுவதையும், செய்திகள் பரிமாறிக் கொள்வதையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.

இந்நிலையில், காவல்துறை இந்த வழக்குகளைப் புனைந்திருப்பதும், கைது செய்திருப்பதும் தவறான அணுகுமுறை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுவதோடு, கண்டனத்தையும் பதிவு செய்கிறது. மேலும், இத்தகைய வழக்குகள் தொடுப்பதை உடனடியாகக் கைவிட வேண்டுமென்றும், ஏற்கெனவே போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும், முதலமைச்சர் உடல்நிலை குறித்த உண்மை விவரங்களை வெளியிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வலியுறுத்துகிறது.

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.