வேலையில்லா பட்டதாரிகளின் கல்விக் கடனை அரசே ஏற்க வேண்டும் – சிபிஐ(எம்)

கல்விக் கடன் வாங்கி உயர்கல்வி படித்த மாணவர்கள் எண்ணற்றோர் வேலை கிடைக்காமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கை அமலாக்கத்தின் காரணமாக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அருகி வருகிறது. வேலை கிடைக்கும் சிறுபகுதியினருக்கும் கல்வித் தகுதிக்கேற்ற வேலையும், வருமானமும் கிடைக்காத நிலையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி மிகவும் கொடூரமான வழிமுறைகளை கையாளத் தொடங்கி உள்ளது. கல்விக் கடனை வசூலிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி மேற்கொள்ளும் தவறான வழிமுறைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழகத்தின் கல்விக் கடன் பெற்றுள்ள சுமார் 10 லட்சம் மாணவர்கள் பெற்றுள்ள கடன் தொகை ரூபாய் 17 ஆயிரம் கோடியில் சுமார் 1875 கோடி மட்டுமே வாராக்கடனாக மாறியுள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கி கொடுத்த கல்விக்கடன் ரூபாய் 847 கோடியாகும். இந்த வாராக் கடனை ஸ்டேட் வங்கி ரூபாய் 381 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. வாராக் கடன்களை வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலுள்ள மாணவர்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. வாங்கிய கடனை உடனடியாக செலுத்தாவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென்று எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்படுகிறது.  இதனால் கடன் பெற்ற மாணவர் குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கெடுபிடி நடவடிக்கையினால் வேலை இல்லாத இளைஞர்களும், அவர் தம் குடும்பத்தினரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்ய வேண்டுமெனவும், கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை அரசே ஏற்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி வாராக் கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு எவ்வாறு அனுமதியளிக்கப்பட்டது என்பதை மத்திய பாஜக அரசு தெளிவுபடுத்த வேண்டுமெனவும், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

Check Also

சாதி ஆணவப் படுகொலை: நீதிமன்றத் தீர்ப்பு சிபிஐ(எம்) வரவேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் டிசம்பர் 12-13 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு ...