வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்களை செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில், தொடக்கக் கல்வித் துறையிலும், 6 முதல் 8 வரை உள்ள நடுநிலைப்பள்ளிகளிலும் அரசு, மாநகராட்சி, நலத்துறை உயர்நிலைப்பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் சம்பந்தமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 7.12.2011 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி 11,593 கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்களை அரசு எப்படி தேர்வு செய்யும் என்பது குறித்து எந்த வித விளக்கமும் இல்லை. கடந்த கால ஆட்சியின் போது ஆசிரியர் பயிற்சியும், கல்வித்தகுதியும் பெற்றவர்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தான் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு செய்யப்பட்ட நடைமுறையிலேயே ஏராளமான குற்றச்சாட்டுகளும், பணப் பரிமாற்றங்களும் நடந்ததை நாடறியும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செய்துள்ள நியமனங்கள் குறித்து கூட சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தப் பின்னணியில், திடீரென சுமார் 12,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வந்துள்ள அறிவிப்பு – வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் முன்னணியில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நியமன முறை வெளிப்படைத் தன்மையுடனும், இயற்கை நீதிக்குப் புறம்பற்ற முறையிலும் நடைபெறுமோ என்ற அச்சமும் அனைவரின் மனதிலும் உள்ளது.

சுமார் 12,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கும் அதே வேளையில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான 12,000 பணியிடங்கள் இதுகாறும் நடைபெற்று வந்த முறைப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான் நிரப்பப்பட வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறது.

மேலும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கலக்கத்தையும், அச்சத்தையும் போக்கும் வண்ணம் அரசு வெளிப்படையான நியமனக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமெனவும், அது குறித்து தெளிவான அறிவிப்பினை வெளியிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

 

Check Also

உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்!

மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து ...

Leave a Reply