ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு சிபிஐ(எம்) அன்பான வேண்டுகோள்!

பிப்ரவரி 13ந் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தல் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தில் முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா பதவி நீக்கப்பட்டதால் நடைபெறுகிறது. ஒரு கட்சியின் தலைவரும், முதலமைச்சரும் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பது அரசியலிலும், பொது வாழ்விலும் ஊழல் எந்தளவிற்கு வியாபித்திருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. ஊழலுக்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் கருத்து எழுச்சியுற்று இருக்கும் போது, தமிழகத்தில் ஊழல் செய்தவர்களை கொண்டாடுகிற புதுக் கலாச்சாரத்தை அஇஅதிமுக உருவாக்கியிருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் அமைச்சர்கள் படை பட்டாளம், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அதிமுகவினர் படையெடுப்பு, எதிர்க்கட்சி மீது தாக்குதல், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவது, இவை எல்லாவற்றையும் தாண்டி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதன் மூலம் வெற்றி பெற நினைக்கிறது அஇஅதிமுக. ஆட்சிக்கு வந்த பிறகு, பஸ் கட்டணம், பால்விலை, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ஏழை எளிய மக்களை மேலும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே ஆளும் கட்சியை எச்சரிக்கவும், தட்டிக் கேட்கவும் அந்த கட்சிக்கு எதிராக வாக்குகளை பதிவு செய்ய வேண்டியது ஸ்ரீரங்கம் வாக்காளர்களின் மிக முக்கியமான கடமையாகும்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக அதன் தலைவரின் குடும்ப உறுப்பினர்களும், அக்கட்சியின் சார்பில் அமைச்சராக இருந்த ஆ.ராசா இந்திய வரலாற்றில் இமாலய ஊழலாக கருதப்படும் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கியுள்ளார்கள். கடந்த 15 ஆண்டுகளாக பாஜக மற்றும் காங்கிரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகள் அனைத்தையும் அமைச்சரவையில் இடம்பெற்று ஆதரித்தும், அமலாக்கியும் தமிழகம் உள்ளிட்டு அனைத்து இந்திய மக்கள் மீதும் கடுமையான தாக்குதல் தொடுப்பதற்கு துணை நின்றவர்கள். எனவே அந்த கட்சியை ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவர்களுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்துவதாக சொல்லிக் கொள்ளும் பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவதற்கு முன்பாகவே இந்தியாவின் தலைநகரத்தில் பிரதமரும், அந்த கட்சியின் தலைவரும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் படை பட்டாளமும் அனைத்துவிதமான தகிடுதத்தங்களில் ஈடுபட்ட பிறகும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை கூட தக்க வைக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. புதுதில்லி வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் பாஜகவையே தேர்ந்தெடுத்தனர். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் 7 சட்டமன்றத் தொகுதிகளை கூட வெல்ல முடியாத அளவிற்கு தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததும், மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றிற்கான மானியத்தை வெட்டிக் குறைப்பதும், இடதுசாரிகள் போராடி கொண்டு வந்த 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததும், நாடாளுமன்றத்தை மதிக்காமல் அவசரச் சட்டங்களின் மூலம் ஆளும் நடைமுறையும் அந்த கட்சி சொல்வதற்கு மாறாகவே செயல்படும் என்பதை புதுதில்லி வாக்காளர்கள் புரிந்து கொண்டு தோற்கடித்திருக்கிறார்கள். மக்களை மோதவிட்டு தனது இந்துத்துவா அமைப்புகளின் மூலம் சர்ச்சுகளை இடிப்பது உள்ளிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான விஷம் கக்கும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்தும் கூட அந்த கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. ஆட்சிக்கு வந்து இவ்வளவு குறுகிய காலத்தில் அம்பலப்பட்டு போய் மக்களிடமிருந்து தனிமைப் பெற்ற ஒரு கட்சி பாரதிய ஜனதா தான். எனவே அவர்கள் சொல்கிற மாற்று எந்த வகையிலும் ஏழை, எளிய மக்களுக்கு சாதகமானதாக இருக்கப் போவதில்லை.

இந்த கட்சிகளுக்கு உண்மையான மாற்றாக, ஊழல் கறை படியாத தலைவர்களையும், தொண்டர்களையும் கொண்ட கட்சியாக, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பக்கம் உறுதியாக நின்று அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழல், மதவெறி, மக்கள் விரோதக் கொள்கை இவற்றிற்கு எதிராக தோழர் அண்ணாதுரையை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்கள் உண்மையான மாற்றுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் மக்கள் நலன் நாடும் கொள்கைகளை அங்கீகரிக்கும் வகையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்.எல்), எஸ்.யு.சி.ஐ.(சி), தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா ஆகிய தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் கே. அண்ணாதுரை அவர்களுக்கு, சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து, தமிழகத்தில் ஒரு நல்ல முன்னுதாரணத்திற்கு முன்னோடியாக விளங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறது.

 

Check Also

வேகப்படுத்தப்படும் தனியார்மயம் வேலையின்மையை மேலும் அதிகப்படுத்தும்!

ஜூன் 18 ஆம் தேதியன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சமர்ப்பித்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: