13-வது சட்டத்திருத்தத்தின்படி இலங்கை மாகாணங்களுக்கும் அதிகாரம் வழங்குவதை உறுதி செய்திடுக! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

26-9-2013 அன்று இலங்கை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளரும், செய்தித்துறை அமைச்சருமான கோஹலியா ரம்பக் மாகாண அரசாங்கங்களுக்கு நிலம் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் கிடையாதென்றும் அந்த அதிகாரங்களின்றியே அவை செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஆட்சி மொழி, வடக்கு- கிழக்கு மாகாண இணைப்பு, நிலம் மற்றும் காவல்துறை அதிகாரம் ஆகியவை 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஷரத்துகள். வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பை ஏற்கனவே உச்சநீதிமன்றம் மறுதலித்துவிட்டது. வடக்கு மாகாணத் தேர்தலுக்கு முன்பாக 13வது சட்டத்திருத்தத்தை நீர்த்துப் போகச்  செய்யும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது.

இந்திய அரசாங்கத்தின் தலையீடு இலங்கைத் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் அது கைவிடப்பட்டது. இப்போது உச்சநீதிம்னற தீர்ப்பை முன்னிறுத்தி நிலம் மற்றும் காவல்துறையின் அதிகாரம் மாகாணங்களுக்கு மறுக்கப்படுமென்றால் அது இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையும். மேலும் இலங்கையின் இதரப்பகுதி மாகாண மக்களையும் வஞ்சிப்பதாகும்.
13-வது சட்டத்திருத்தம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை என்பதோடு அரசியல் தீர்விற்கான முதல்படியும் ஆகும். இதை நிராகரிக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.

இலங்கை அரசாங்கம் தனது நியாயமற்ற இந்த அணுகுமுறையை கைவிட வேண்டும். இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து 13-வது சட்டத்திருத்தத்தின் படியான அதிகாரம் மாகாணங்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
 

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a Reply