அக்டோபர் 25 தோழர்.பி.திவாகரன் நினைவு தினம்

      கன்னியாகுமரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளரவும், ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் வாழ்வில் முன்னேற்றம்ஏற்படவும் உழைத்த ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவர்களில் தோழர்.பி.திவாகரன் அவர்களும் ஒருவர். கல்குளம் வட்டம், நெய்யூர் அருகில் கொகோடு என்ற சிறு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தார். உயர்கல்வி பயில வாய்ப்பின்மையால் ஆரம்பகல்வியிலேயே தனது கல்வியை முடித்துக் கொண்டார். அவர்து ஊரின் அருகாமையில் திங்கள் நகர் பகுதி பீடி சுற்றும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. எனவே,  தோழர்.பி.திவாகரன் திங்கள் நகரில் பீடி சுற்றும் தொழிலாளியாக மாறினார். அன்று பீடி தொழிலாளர்களுக்கு சட்டபடி எந்த உரிமையும் வழங்குவதில்லை. பீடி தொழிலாளர்களை சங்கமாக திரட்டி அவர்களின் சட்டபடியான உரிமைகளுக்கான போராடினார்.

       தொழிற்சங்கம் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் கொள்கை மற்றும் தலைவர்களின் அற்பணிப்பு தன்மை, சுயநலமற்ற நடத்தைகள், எளிய வாழ்கையால் கவரப்பட்ட அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்சிக்காக அயராது பாடுபட்டார். தனது செயல்பாட்டாலும், உழைக்கும் மக்களின் வாழ்வு உயர வேண்டுமென்ற வேட்கையாலும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் உதவியாக வேண்றுனமென்ற நிலையாலும், தன்னை முழு நேரமும் கம்யூனிஸ்ட் கட்சிக்கான செயல்பாட்லே அர்பணம் செய்தார். எனவே, திருமணம் செய்வதை மறுத்தார். அவருடைய செயல்திறனை உணர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி பல உயர் பொறுப்புகளை வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை தாய்தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்ற போராட்டத்தில் ஒரு மலையாள மொழிக் குடும்பத்தை சார்ந்தவர் என்ற போதிலும் முன்னணி போராளியாக செயல்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்த போது மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்குளம் வட்டார செயலாளராக, மாவட்ட செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக நீண்டகாலம் செயல்பட்டார்.

ஒரு கம்யூனிஸ்டின் சிறப்பு அம்சங்கள் அனைத்தும் பொருந்தியவராக தனது பொறுப்புக் காலத்தில் கட்சியை வழி நடத்தினார். சொந்த வாழ்க்கையில் எளிமை, தற்பெருமையின்மை, கட்சி வேலை செய்யும் தோழர்களை அரவணைப்பது, அவர்களை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருவது போன்றவற்றில் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். கட்சி ஊழியர்களை கண்டெடுப்பதும், அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதும், கண்டிக்க வேண்டிய நேரம் கடுமையாக கண்டிப்பதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே உரித்தான ஸ்தாபன கட்டுப்பாடுகளை கறாராக அமல்படுத்த வைப்பதிலும், தனக்கு நிகர் தானே என்பதை நிரூபித்தார். என்னை போன்ற ஒரு சாதாரண கயிறு திரிக்கும் தொழிலாளியை மாவட்ட அளவில் பொறுப்புகள் தந்து பயிற்றுவித்தவர். அவருடைய தனிப்பட்ட நடவடிக்கைகள் என்னை போன்ற ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் குமரி மாவட்டத்தில் உருவாக காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.

அவசரகால கட்டத்தில் கைது செய்யப்பட்டி ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். சிறை அனுபவத்தில் பல விசயங்களை எங்களுடன் பகிர்ந்துகொன்டார். “நான் மிசா கைதியாக இருந்த போது சிறைச்சாலையில் சிறு வேலைகள் செய்ய வேண்டி வரும், அதற்கு ஒரு சிறு தொகை சம்பளமாக தருவர். என் வாழ்நாளில் அந்து தாய்க்கு உழைத்துக் கொடுத்த வருவாய் என்பது இதுமட்டுமே. எனது வயதான தாய்க்கு இதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை” என்று கூறுவார். வயது காரணமாக நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்ட போது அன்று மீனட்சிபுரம் கட்சி அலுவலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்ட ஒரு சிறு அறையில் பழுதுபட்ட ஒரு பெஞ்சில்தான் படுத்து தூங்குவார். ஒருமுறை மருத்துவர் அவரை பரிசோதித்துவிட்டு உங்களுக்கு உடல் நலம் மிகவும் பலவீனமாக உள்ளது, வாரம் ஒரு முறை மட்டன் பிரியாணி சாப்பிடுங்கள் என ஆலோசனை வழங்கியுள்ளார். எண்ணற்ற தோழர்கள் மதியம் சாப்பிடாமலேயே கட்சி வேலை செய்யும் போது தான் மட்டன் பிரியாணி சாப்பிடுவது எப்படி சரியாக இருக்கும் என்று தனது மனதில் பட்டதை கூறினார். கட்சி தோழர்கள் மிகவும் வற்புறுத்திய பின்பே சில முறை பிரியாணி சாப்பிட்டார். இவ்விதம் உணவு, உடை, உறைவிடம் அனைத்திலும் எளிமையின் சின்னமாக இருந்து மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தார். ஏராளமான புத்தகங்களை விற்பனை செய்வது, தீக்கதிர் விற்பனை செய்வது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார். ஆரம்ப கல்வி பெற்றவர், கல்லூரி ஆசிரியர்களுக்கே அரசியல், பொருளாதாரம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக செயல்பட்டார். கடைசியாக நோய்வாய்ப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரியில் மரணமடைந்தார்.

அவர் நினைவிடம் அமைந்துள்ள செறுகோலில் அக்டோபர் 25ம் தியதி நூற்றுக்கணக்கான கட்சி ஊழியர்களாலும் பொது அமைப்புகளாலும் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தபடுகிறது. 13 வருடங்களாக அவரது நினைவு நாளில் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு “ஒழியட்டும் ஜாதி, மத வெறி என்ற பொருளில் நாகர்கோவிலில் ஆனந்தம் மண்டபத்தில் பேராசிரியர்.அருணன் உரையாற்றுகிறார்

ஜாதி, மத வெறியை வேறறுப்போம்!!

அனைவரும் வாரீர்!!

                                  என்.முருகேசன்,

                                  மாவட்ட செயலாளர்

Check Also

குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காண்ணிப்பு அதிகாரியிடம் சி.பி.ஐ(எம்) மனு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 30.11.2017 அன்று ஏற்பட்ட ஓக்கி புயலின் எதிரொலியாக கனமழையும் சூறைகாற்றும் வீசியது.இதனால் மாவட்டமே புரட்டி போடப்பட்டது. நூறு ...