அடக்குமுறையை கைவிட்டு மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை நிறைவேற்று! ம.ந. கூட்டணி வலியுறுத்தல்!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு சட்ட ரீதியாக வழங்க வேண்டிய உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு போன்ற 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி 8 முதல் சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராடும் மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல், தமிழக அரசு அடக்குமுறையை ஏவி விட்டதோடு, 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதை மக்கள் நலக்கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சென்னையில் ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளது.

தமிழக அரசு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமெனவும், மாநில அரசை மக்கள் நலக்கூட்டணி வலியுறுத்துகிறது. போராடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மக்கள் நலக்கூட்டணி தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

வைகோ, பொதுச் செயலாளர்- மதிமுக, ஒருங்கிணைப்பாளர் – மக்கள் நலக்கூட்டணி

ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்-சிபிஐ (எம்)

இரா. முத்தரசன், மாநிலச் செயலாளர்-சிபிஐ

தொல். திருமாவளவன், தலைவர்-விசிக

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...