அட்டப்பாடி பிரச்சனை: உண்மை நிலை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் தமிழர்கள் தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப்படுவதாக சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தனர். இதுகுறித்து உண்மை நிலையை அறிந்து வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு குழு அட்டப்பாடிக்கு அனுப்பப்பட்டது. அக்குழுவில் கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி மற்றும் யு.கே.சிவஞானம், ஆர்.கேசவமணி, ஏ.ஆர்.பாபு ஆகிய தோழர்கள் இடம் பெற்றனர். இக்குழு அப்பகுதியில் உள்ள தமிழர்கள், பழங்குடியினர், மலையாளிகள் ஆகியோரை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர்.

அட்டப்பாடி பகுதியில் 1960ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 90 சதவிகிதம் பழங்குடி மக்கள் வசித்திருக்கின்றனர். இப்போது 30 சதவிகிதத்தினர் மட்டுமே பழங்குடி மக்கள் உள்ளனர். 2012-13ம் ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைவால் பழங்குடியினர் குழந்தைகள் 60 பேர் வரை மரணமடைந்துள்ளனர். பழங்குடி மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் வாழ்வாதாரமான நிலங்களை பழங்குடி அல்லாதோர் அடிமாட்டு விலைக்கு வாங்கியதும், அபகரித்ததுமே இதற்கான பிரதான காரணம். இடைப்பட்ட காலத்தில் கேரள மாநில அரசு 1996ம் ஆண்டில் பழங்குடியின மக்களின் நிலங்களை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்க சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் 2009-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, அதன் தொடர்ச்சியாக அந்த நிலங்களை பழங்குடியினருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களை விட்டு வெளியேற வேண்டுமென 77 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 19 பேர் தமிழர்கள். இதர 58 பேர் மலையாளிகள். இந்த 77 பேரில் 13 பேர் தாமாகவே முன்வந்து நிலங்களை அரசிடம் ஒப்படைத்துளளனர்.

இந்நிலையில் தமிழர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுவது போன்ற இனவாத பேச்சுக்கள் நியாயமற்றவையும், உண்மைக்குப் புறம்பானவையுமாகும். அரசியல் ஆதாயத்திற்காக கிளப்பப்படும் இத்தகைய இனவாத முழக்கங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறது.

அதேசமயம் தவறான நோக்கங்களின்றி பழங்குடியினத்தவர்களின் நிலங்களை வாங்கி வாழ்க்கை நடத்தி வரும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய மாற்று ஏற்பாடுகளைசெய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேரள மாநில அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
 

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...

Leave a Reply