அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் முடிவை கைவிடுக!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது என்றும், நூலகத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்திற்கு மாற்றுவது என்றும் தமிழக அரசு எடுத்துள்ள முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசின் இந்த தவறான முடிவிற்கு கல்வியாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், மாணவர்கள் – இளைஞர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக செயல்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தற்போதைய தேவை – எதிர்கால விரிவாக்கத்தேவை –   இதற்கென உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதன் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் கடந்த ஆட்சியில் எழுப்பப்பட்ட நூலகம் என்ற காரணத்திற்காகவே அதிமுக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவேத் தெரிகிறது. 

இடதுசாரி இயக்கங்கள், இளைஞர் – மாணவர் அமைப்புகளின் நெடிய போராட்டங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த சமச்சீர் கல்வியின் தொடக்கமான பொதுப்பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து செழுமைப்படுத்துவதற்கு மாறாக அதிமுக அரசு முடக்க முனைந்த போது தமிழகமே எதிர்த்தது. இதனால் பள்ளிக்குழந்தைகள் இரண்டு மாத கல்வியை இழக்க நேரிட்டது.  இளைஞர் – மாணவர்- கல்வியாளர்கள்-பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கு பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகே அதிமுக அரசு செயலில் இருந்த பொதுப்பாடத்திட்ட நடைமுறையை செயல்படுத்தியது. இந்த தவறான அணுகுமுறையிலிருந்து அதிமுக அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம்பெயர்த்துவது என்ற முடிவு வெளிப்படுத்துகிறது.

குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உருவாக்குவதையும், அதன் நோக்கத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே சமயம் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை, வடசென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனை பிரிவு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முன்வரவில்லையே? சேலத்தில் கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை அதிமுக அரசு மூடியுள்ளதே அதன் காரணம் என்ன? செயல்பாட்டில் உள்ள சிறப்பு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்; மூடக்கூடாது என்று போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது தடியடி நடத்தி, பொய்வழக்குகள் புனைந்து போராட்டத்தை ஒடுக்க முனைந்ததே அதன் நோக்கம் என்ன? – இது அதிமுக அரசின் காழ்ப்பு அரசியலையே வெளிப்படுத்துகிறது.

எனவே இதுபோன்ற காழ்ப்பு அரசியல் அணுகுமுறைக்கு மாறாக ஆக்கப்பூர்வமான அரசியல் அணுகுமுறையை, ஜனநாயக நடைமுறையை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் அரசின் முடிவை கைவிட்டு, தற்போது உள்ள இடத்திலேயே நூலகம் தொடர்ந்து இயங்குவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். அரசின் முடிவிற்கேற்ப பொருத்தமான வேறொரு இடத்தை தேர்வு செய்து குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை தொடங்கிட வேண்டும் என்றும் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும்  கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சித் திட்டங்களில், கொள்கைகளில் உள்ள குறைபாடுகள், தவறுகள், முறைகேடுகள், ஊழல்கள் களைந்தெறியப்பட வேண்டுமென்பதில் ஆட்சேபணை இல்லை. மத்திய காங்கிரஸ் – திமுக ஆட்சியின் செயல்பாட்டால் முடக்கப்பட்டுள்ள சேதுசமுத்திரத் திட்டம், அரைகுறையாக நின்று போயுள்ள குடிமனைப்பட்டா வழங்கும் திட்டம், மின்வெட்டு, புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது, அரசுப் பணியில் உள்ள காலியிடங்களை பூர்த்தி செய்வது உள்ளிட்ட மக்கள் நல பயன்பாட்டுத்திட்டங்களை நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அதிமுக அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், தவறான கொள்கையால்  கடுமையாக  உயர்ந்துள்ள உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய காங்கிரஸ் – திமுக அரசை வலியுறுத்த முன்வர வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply