அதிகரித்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

தமிழகத்தில் சாதி ஆணவப்படுகொலைகள் தொடர் கதையாக நடந்து வருகின்றன. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்து வந்துள்ள சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் ஒருவரை ஒருவர் விரும்பி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட கனகராஜ், விஷ்ணுபிரியா தம்பதியினர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படுகொலையில் சிந்தப்பட்ட ரத்தம் காய்வதற்கு முன்னரே நேற்று இரவு (3-7-2019) தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் கிராமம், தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த, 4 மாதங்களுக்கு முன்னால் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சோலை ராஜா, ஜோதி தம்பதியினர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரண்டு பேரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள இரண்டு உள்சாதி பிரிவுகளைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிய ஆணவ மனோபாவம் அனைத்து சாதிகளை சார்ந்தவர்களிலும் மனிதாபிமானமற்றவர்களை உருவாக்குகிறது என்பதற்கு இச்சம்பவம் எடுத்துக்காட்டாகும்.

தமிழ்ச் சமூகத்தில் நிலவும் இத்தகைய சாதி ஆணவ மனோபாவம் மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டதாகும். இத்தகைய சாதி ஆணவ மனோபாவத்தை வேரோடு அழித்திட அனைத்து ஜனநாயக நல்லெண்ணம் கொண்டவர்களும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தொடர்ந்து தமிழ்நாட்டில் சாதி ஆணவப்படுகொலை நடந்த போதும், இப்படுகொலைகளை தடுத்து நிறுத்திட தனி சட்டம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தப்பட்ட பின்னரும் தமிழக அரசு அமைதி காத்து வருவது வன்மையான கண்டத்திற்குரியதாகும். மேலும், சாதிய ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாதது ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான போக்கினை அரசு மேற்கொள்கிறதோ என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

எனவே,

¨ உடனடியாக ஆணவக்கொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும்,

¨ சாதி ஆணவ சிந்தனைப் போக்கை வேரறுக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசே மேற்கொண்டு நடத்த வேண்டும்,

¨ சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை அரசே நேரடியாக தத்தெடுத்துக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது, அரசு வேலை வழங்குவது, தொழில் துவங்க கடன் வழங்குவது

உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...