அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக

தீர்மானம் – 1

அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக

அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவருடன் வழக்கை முடித்து விடுவது என்ற அடிப்படையில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளது ஏற்புடையதல்ல.  மேலும் சம்பந்தப்பட்ட மூவரும் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பேட்டியளித்திருப்பதும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கதாகும். இவையனைத்தும் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் மீதான குற்றத்தை மறைத்து, அவர்களை தப்ப வைக்கும் முயற்சியாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறது. உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ புலன் விசாரணை செய்ய வேண்டும், குற்றமிழைத்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (டி.வி.ஏ.சி.) ஐ.ஜி. முருகன் மீது ஒரு பெண் எஸ்.பி., பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். காவல்துறையில் அமைக்கப்பட்ட விசாகா குழு, மாதர் அமைப்பு / தன்னார்வ அமைப்பு பிரதிநிதியைக் கொண்டதாக முறையாக அமைக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஜி. அதே அலுவலகத்தில் உயர்பொறுப்பில் நீடிக்கும் போது அவரை எதிர்த்து சாட்சி சொல்ல யாரும் முன்வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அவரை இடமாற்றம் செய்வதற்குக் கூட காவல்துறை முன்வரவில்லை. மாறாக, புகார் கொடுத்த பெண்ணை இடமாற்றம் செய்துள்ளனர். உயர்நீதிமன்றமோ பாதிக்கப்பட்டவர் கேட்டுக் கொள்ளாமலேயே இருதரப்பும் பேச்சுவார்த்தை (கன்சிலியேசன்) நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதல்ல. தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரியாக முருகன் இருக்கிறார் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசும், காவல்துறையும் தயக்கம் காட்டுகிறதா என்கிற வலுவான ஐயம் எழுகிறது. உடனடியாக, ஐ.ஜி. முருகனை இடை நீக்கம்செய்து முறையாக விசாரணையை நடத்த வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவியை ஒரு பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரச்சனையில் கல்லூரி நிர்வாகம் அதை மூடிமறைக்கவே முயற்சிக்கிறது. மாணவி விடுதியை விட்டு நீக்கப்பட்டு வேறு கல்லூரிக்கு இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளார். இது கண்டனத்திற்குரியது. மாவட்ட நீதிமன்றம் தாமாகவே முன்வந்துவிசாரித்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்குப் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதுவரை எப்.ஐ.ஆர். கூட போடாமல் காவல்துறை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் சட்டவிதிகளுக்கு முரணாகவே அமைந்துள்ளன. உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து தொடர் நடவடிக்கைக்குப் போக வேண்டுமெனவும், மாணவியை மீண்டும் விடுதியிலும், கல்லூரியிலும் அனுமதிக்க வேண்டுமெனவும் மாவட்ட காவல்துறையையும், அரசு நிர்வாகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வற்புறுத்துகிறது.

கோவை, எஸ்.என்.எஸ். கல்லூரி தாளாளர் தம் அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காட்சி வலைதளங்களில் பரவியிருக்கிறது. கல்விக் கூடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான சான்று. ஜனநாயக மாதர் சங்கம், இது குறித்து கொடுத்த புகாரை துடியலூர் காவல்நிலையம் வாங்க மறுத்திருப்பது கண்டனத்திற்குரியது. மாவட்ட காவல்துறை ஆணையர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

சிவகங்கையில் அண்மையில் ஜனநாயக மாதர்சங்கம் நடத்திய பொதுவிசாரணையில் எடுத்துக் கொள்ளப்பட்ட பல வழக்குகளில் காவல்துறை உரியநேரத்தில், உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே வெளிவந்துள்ளது. சட்டப்படி செயல்படாத காவல்துறையினர் மீது இ.பி.கோ. 166 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல் பல்வேறு துறைகளில் குறிப்பாக கல்வித்துறையில் விசாகா குழு அமைக்கப்படவில்லை என்பதும் தெரிய வருகிறது.

எனவே, தமிழக அரசு உரிய தலையீட்டினை செய்து மேல்நடவடிக்கைக்குப் போக வேண்டும் என மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...