அதிமுக அரசை அகற்றுவோம்! பாஜகவை நிராகரிப்போம்! ஆட்சி மாற்றம் நிகழட்டும்! தமிழகம் நிமிரட்டும்!

டிசம்பர் 25-31 தேதிகளில் ஒருவார காலம்
தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) மக்கள் சந்திப்பு இயக்கம்!

மத்திய பாஜகவின் ஆட்சியில் மதவெறி எனும் நச்சரவம் படமெடுத்து ஆடுகிறது. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் செய்கிற மோடி அரசு வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது. உதாரணமாக, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, கோவிட் -19 பாதிப்பினால் ஏற்பட்ட வேலையிழப்பு, தொழில்முடக்கம் என தொடர் தாக்குதலால் மக்கள் வாழ வழியின்றி தத்தளிக்கிறார்கள்.

வேளாண் துறையை கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றி விடுவதற்காக மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் (2020) எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் 25 நாட்களுக்கும் மேலாக கடும் குளிரில் வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாமல் போகும்; அரசு கொள்முதல் கைவிடப்படும்; நியாய விலைக் கடைகள் மூடப்படும். ஒப்பந்த முறை விவசாயம் என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து அவர்களது விளை நிலங்கள் பறிக்கப்படும். கார்ப்பரேட் முதலாளிகள் அடிமாட்டு விலைக்கு விளைபொருளை வாங்கி பதுக்கி வைத்து கொள்ளையடிப்பார்கள். செயற்கையாக பஞ்சங்கள் உருவாக்கப்படும், பட்டினிச்சாவுகள் தொடர்கதையாகும். இலவச மின்சாரத்தையும் இல்லாமல் செய்ய சட்டத்திருத்தம் வர உள்ளது.

அதேபோல, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையும் சலுகைகளையும் பறிக்கும் வகையில் முதலாளிகளின் முன்மொழிவுகளை ஏற்று தொழிலாளர் நலச்சட்டங்களையும் முதலாளிகள் நலச் சட்டங்களாக மாற்றி வருகிறது மோடி அரசு. எட்டு மணி நேர வேலை, நிரந்தரப் பணி, சட்டப்பூர்வ சலுகைகள் அனைத்தும் முதலாளிகளின் விருப்பத்துக்கேற்ப முடக்கப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வித்துறையை மதவெறிமயமாகவும், வணிகமயமாகவும் மாற்றுவது, கல்வியில் மாநிலங்களின் உரிமையை மறுப்பது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு பறிப்பு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பெயரில் ஜனநாயகத்தின் சக்கரத்தை உடைக்க முயற்சி, குடியுரிமைச் சட்ட திருத்தம் என்கிற பெயரில் சிறுபான்மை மக்களின் குறிப்பாக பெரும்பகுதி இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிக்க முயற்சி, நர வேட்டையாடப்படும் சிறுபான்மை மக்கள், தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர். பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிர்ச்சி தரத்தக்க வகையில் அதிகரிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகள் புறக்கணிப்பு உள்ளிட்டு இந்திய திருநாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்படுகிறது. ரயில்வே, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்ப்பு, வேலைவாய்ப்புகள் முற்றாக பறிப்பு என நாசகர பாதையில் நாட்டை நடத்திச் செல்கிறது மத்திய பாஜக கூட்டணி அரசு.

தமிழகத்தை படுபாதாளத்தில் தள்ளிய அதிமுக ஆட்சி

பாஜகவின் தப்புத் தாளங்களுக்கு ஏற்ப ஆட்டம் போடும் அதிமுக ஆட்சியில் தமிழகம் இழந்தவை ஏராளம். அனைத்துத் துறைகளிலும் கீழிருந்து, மேல்வரை ஆலவட்டம் போடும் லஞ்ச லாவண்யம், கொரோனா காலத்திலும் கொடிக்கட்டி பறக்கும் ஊழல். இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நேர்மையான இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜினமா செய்துள்ள அவலம், இருந்த வேலையையும் பறித்தது மட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்புகளும் முடக்கம். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை தர மறுப்பது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் படுகொலை, எட்டுவழிச்சாலை, ஆறுவழிச்சாலை என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்கள் பறிப்பு, நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக செயல்படுத்த மறுப்பு, சாத்தான்குளம் படுகொலை உட்பட காவல்துறை அத்துமீறல் ஜனநாயக உரிமைகள் பறிப்பு போன்ற எதேச்சதிகார நடவடிக்கையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும் மின் வாரியத்தை தனியார்மயமாக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து மின் ஊழியர்கள் போராடி வெற்றி பெற்றுள்ளனர். மின்வாரியம் உள்பட அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மறுபக்கம் தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலையின்றி தவித்து வருகின்றனர்.

அதேபோல, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு, இந்தி, சமஸ்கிருத திணிப்பு, மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பங்கீடு உள்ளிட்ட பல்லாயிரம் கோடி நிதியை தர மறுப்பது, பட்டியலின – பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர் கல்வி படிப்புக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை ஒழித்துக் கட்டுவது போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திராணியற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக கண்ணை மூடிக் கொண்டு ஆதரவளித்து தமிழக நலன்களையும், மக்களையும் அதிமுக அரசு படுபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது.

தமிழகத்தை வஞ்சித்து வரும் “அதிமுக அரசை அகற்றுவோம், பாஜகவை நிராகரிப்போம் – ஆட்சி மாற்றம் நிகழட்டும்! தமிழகம் நிமிரட்டும்!” என்ற முழக்கத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் 2020 டிசம்பர் 25-31 ஆகிய தேதிகளில் ஒருவார காலம் மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது.


இவ்வியக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் முழுவதும் களமிமிறங்கி, 10 ஆயிரம் குழுக்கள் கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து 50 லட்சம் துண்டுபிரசுரம் விநியோகித்து அதிமுக – பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

நாட்டு நலனையும், மக்கள் நலனையும், தமிழகத்தின் எதிர்காலத்தையும் பாதுகாக்க மாற்றுப் பாதைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இவ்வியக்கத்திற்கு தமிழக மக்களும், ஜனநாயக அமைப்புகளும் பேராதரவு தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...