அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை உடனே நிறைவேற்று சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப்பணியை உடனடியாகத் தொடக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 10 ஒன்றியங்களில் பல லட்சம் மக்களின் நீராதாரத்தை உருவாக்கும் சிறப்பான திட்டம் அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம். 60 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டத்தை முன்மொழிந்தபோதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக அரசுகள் திட்டத்தை நிறைவேற்ற அக்கறை செலுத்தவில்லை.
இந்த கால கட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும், பல்வேறு பொது நல அமைப்புகளும் இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ச்சியாகப் பலவித போராட்டங்களை நடத்தி வருகின்றன. 
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இத்திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.3200 கோடி வரை செலவாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொறியாக உள்ளது. அத்துடன் கடந்த காலங்களிலும் திமுக, அதிமுக அரசுகள் தலா ஒரு முறை நிதி ஒதுக்கி அறிவிப்புச் செய்துள்ளன. அதன் பிறகும் இத்திட்டத்தை செயல்படுத்த பூர்வாங்கப் பணிகள் கூடத் தொடங்கப்படவில்லை. 
எனவே தற்போது நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதுடன், உரிய நிர்வாக ஏற்பாடுகளைச் செய்து, உடனடியாக திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த வட்டார மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கையை முன்வைத்து திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் வடக்கு ஒன்றியம், ஊத்துக்குளி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் மார்ச் 22 முதல் 24ம் தேதி வரை மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்வதென்றும், 26ஆம் தேதி பெருமாநல்லூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி திட்டமிட்டது.
இதன்படி புதன்கிழமை அவிநாசி ஒன்றியத்தில் பழங்கரை ஊராட்சி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதிகளில் ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர் அ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், பழங்கரை முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோர் கொண்ட ஒரு குழுவினர் சுமார் 25 மையங்களில் பிரச்சாரம் செய்தனர். அதேபோல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.சண்முகம், ஆர்.பழனிசாமி, ஏ.ராஜன், வேலாயுதம்பாளையம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் பி.சாமியப்பன், புதுப்பாளையம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கே.முருகன் உள்ளிட்ட குழுவினர் வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், கணியாம்பூண்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் சந்திப்புப் பிரச்சாரம் செய்தனர்.
ஊத்துக்குளி தாலுகாவில் புதன்கிழமை கட்சியின் தாலுகா செயலாளர் கை.குழந்தைசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.கே.கொளந்தசாமி உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனப் பேரணியாகச் சென்று கிராமம், கிராமமாக மக்கள் சந்திப்புப் பிரச்சாரம் செய்தனர்.  செங்கப்பள்ளியில் தொடங்கி, விருமாண்டம்பாளையம், ஒத்தப்பனைமேடு, வெள்ளியம்பதி, ஆதியூர், குன்னத்தூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தனர்.
—————————-

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...