அநீதிக்கு எதிராக பொங்கிட உறுதியேற்போம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்பது வள்ளுவர் வாய்மொழி. மனிதகுலத்தின் ஆதித் தொழில் உழவு. இயற்கையோடு இயைந்து வாழும் மனிதகுலத்தின் இயல்பான கொண்டாட்ட வெளிப்பாடே பொங்கல் திருநாளாகும். 
 
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் மகாகவி பாரதி. உழவையும் உழைப்பையும் வந்தனை செய்யும் விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது. 
 
கிழிந்த துணியாய் நைந்து கிடக்கிற வாழ்க்கையை வருகிற தைத்திருநாள் தைத்து செம்மைப்படுத்தும் என்று ஒவ்வொரு பொங்கல் திருநாளின் போதும் மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கைக்கான போராட்டங்களை கைக்கொள்கிறார்கள். 
 
உலகுக்கே உணவு படைக்கும் உழவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்று இந்த நாளில் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. காவிரி பாசனப் பகுதி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் காய்ந்து போவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் உழவர்கள் மாண்டு போகும் செய்தி வேதனையளிக்கிறது. 
 
இதுவரை விவசாயத்தைப் பற்றி மட்டுமே விவாதித்து வந்தோம். இனிமேல் விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்கிறார் பிரபல வேளாண் விஞ்ஞானி எம். எ. சுவாமிநாதன். கட்டுப்படியாகாத தொழிலாக மாறிக் கொண்டிருப்பதால் உழவுத் தொழிலை விட்டு வெளியேறும் உழவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உழவையும் உழவர்களையும் பாதுகாப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவதோடு மட்டுமின்றி, இந்திய பாரம்பரிய உழவுக்கும் உலைவைக்கும் கொள்கைளை எதிர்த்து போராட வியூகம் வகுப்பதன் மூலமே உழவர் திருநாள் என்பது உண்மையில் அர்த்தம் பெறும். 
 
காவிரி பாசன விவசாயிகள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வாழ்விழந்து வழிதெரியாமல் தவிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் வழங்குவதும், நீண்ட கால தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவதும் இன்றியமையாதது. மெய்யான நிலச் சீர்திருத்தம், பாசன பாதுகாப்பு, உரத்திற்கு மானியம், விதை உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்நோக்கு திட்டமாக அது அமைந்திடல் வேண்டும்.  
 
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவின் மூலம் வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இந்த முடிவு கோடிக்கணக்கான சில்லரை வர்த்தகர்களின் வாழ்வை மட்டுமின்றி கோடானுகோடி விவசாயிகளின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடி பெற்ற விடுதலையை பாதுகாக்க வேண்டுமானால், கண்மூடித்தனமான அந்நிய மூதலீட்டு நுழைவை எதிர்த்து போராடுவது அவசியமாகும்.
 
உழவை மட்டுமின்றி உணவின் தேவையையும் வலியுறுத்தும் உணர்வுமிக்க விழா பொங்கல். ஆனால், மத்திய ஆட்சியாளர்கள் வறுமைக்கோடு என்ற மோசடியான அளவீட்டின் மூலம் மக்களின் உணவுக்கான உரிமையையே பறிக்க முயல்கின்றனர். இதை எதிர்த்து மார்க்சிட் கம்யூனிட் கட்சி உள்ளிட்ட  இடதுசாரிக்கட்சிகள் தீயின் தீவிரத்தோடு போராடி வருகின்றன. ஒவ்வொரு இந்திய குடிமகனின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வது காலத்தின் தேவையாகும். அதற்கு பொது விநியோக முறையை பாதுகாப்பதும், பலப்படுத்துவதும் அவசியமாகும். 
 
நிலவுடைமை சமூகத்தின் தீய விளைச்சலாக விளங்கும் சாதியம் தனது கோரமுகத்தை மேலும் மேலும் வெளிப்படுத்தி வருகிறது. நாடு விடுதலை பெற்று இத்துணை ஆண்டுகள் ஆனபின்னும் கூட தீண்டாமைக் கொடுமை தீரவில்லை என்பதையே தருமபுரி மாவட்டத்தில் நடந்த கோரத்தாக்குதல்கள் உணர்த்துகின்றன. 
 
அகம், புறம் என வாழ்வை பகுத்த தமிழர்கள் காதலையும் வீரத்தையும் பிரிக்க முடியாத பண்பாட்டு கூறுகளாக கொண்டிருந்தனர். அதிலும் அகவாழ்க்கையில் களவுநெறி என்ற பெயரில் காதல் வாழ்க்கை போற்றப்பட்டது. ஆனால் இன்றைக்கு சில சாதி அமைப்புகள் காதல் திருமணங்களே கூடாது என்று வெளிப்படையாக வெறிக்கூச்சல் போட்டு வருகின்றன. சாதிமறுப்பின் முதல் படியாக விளங்குகிற காதல் திருமணங்களை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் தமிழ் பண்பாட்டின் தவிர்க்க முடியாத கூறாகும். 
 
தலைநகர் தில்லி துவங்கி தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்து வருகின்றன. பெண் விடுதலை இன்றி மண்விடுதலை அர்த்தம் பெறாது. அனைத்து நிலைகளிலும் பெண்கள் விடுதலை பெற, ஒடுக்குமுறைகளை உடைத்தெறிய போராட வேண்டியுள்ளது. 
 
தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தமிழ் தலைமையேற்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளிட்ட மொழிகள் மாறுவது ஜனநாயகத்தின் வேரை மேலும் பலப்படுத்தும். 
 
பல்வேறு பொருட்களின் கூட்டுச் சேர்க்கையால் எவ்வாறு பொங்கல் இனிக்கிறதோ அவ்வாறு பன்முகப் பண்பாட்டால் நம்முடைய இந்தியத் திருநாடு நிமிர்ந்து நிற்கிறது. மக்கள் ஒற்றுமையை, மதச் சார்பின்மையை கெடுக்க முயலும் குறுகிய நோக்கம் கொண்ட மதவெறி சக்திகளை முறியடிக்க வேண்டும். 
 
அநீதிக்கெதிராக, அக்கிரமத்திற்கெதிராக – மக்கள் வாழ்வை நாசம் செய்யும் தீய கொள்கைகளுக்கு எதிராக பொங்கிட இந்த பொங்கல் நாளில் உறுதியேற்போம்.  
 
எத்தகைய சோதனைகளை சந்தித்தாலும் துயர் அகலும் நம்பிக்கையுடன் உழவர் திருநாள் பொங்கல் விழா கொண்டாடிட வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

Check Also

7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒன்றுபட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதை சிபிஐ(எம்) ஏற்கனவே ...

Leave a Reply