CPIM

அனுபவத்திலிருந்து பாடம் கற்போம்! தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்!

“17வது மக்களவைத் தேர்தல் அளித்துள்ள அனுபவத்திலிருந்து பாடம் கற்போம் என்றும் தவறுகளை சரி செய்து, சரிவிலிருந்து மீள்வோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியேற்றுள்ளது. போராட்டங்கள் மூலமாக அரசியல் தலையீட்டை வலுப்படுத்துவோம்” எனவும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் புதுதில்லியில் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், 17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக – தேசிய ஜனநாயகக் கூட்டணி 17ஆவது மக்களவைக்கான தேர்தல்களில் பெரும்பான்மையுடன் தீர்மானகரமானதொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் ஒரு சில மாநிலங்கள் தவிர இதர மாநிலங்களில் அநேகமாக எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை இத்தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இத்தேர்தலில், தாங்கள் வலுவாக இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே, கடும் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மக்கள் மீது திணித்த கடும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது மக்கள் கவனம் செல்லாத விதத்தில், பாஜக, மக்களின் கவனத்தை, மிகவும் வெற்றிகரமான முறையில் திசைதிருப்பி இருக்கிறது.

மதவெறி, தேசியவெறி ஆகியவற்றைச் சுற்றி அது கட்டி யெழுப்பிய வெறுப்புப் பிரச்சாரங்களும், அத்துடன் தாங்கள்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று அவிழ்த்துவிட்ட பிரச்சாரங்களும் மக்கள் நாள்தோறும் எதிர்கொண்ட அனைத்துவிதமான பிரச்சனைகளிலிருந்தும் கவலைப்படாத விதத்தில் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டது. இதற்கு, மோடியைப் பல்வேறு காரணிகள் மூலமாக தூக்கிப்பிடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் உதவியுள்ளன.

தொழில்நுட்பத்தையும் அதன் சாதனங்களையும் மிகவும் நுட்பமானமுறையில் பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் செயல்படும் புள்ளிவிபர விற்பன்னர்களின் உதவியோடு, சமூகத்தின் அடிமட்டம் வரை சென்று வெறியூட்டும் வகையில் மக்களுக்கு செய்திகளை அனுப்பிய செயல்பாடு உட்பட அனைத்தும் இதில் அடங்கும்.

இதற்காக ஊடகங்களின் பல பிரிவுகளை பாஜக தன்னுடைய பணபலத்தால் தன்வயமாக்கிக் கொண்டது. மோடி தூக்கிப் பிடிக்கப்படுவதற்கு, தேர்தல் ஆணையத்தின் பங்கும் ஒரு காரணியாக இருந்தது. ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்புகளின் மிகப்பெரிய வலைப்பின்னலின் உதவியோடு மேற்கண்ட செயல்பாடு நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாக்காளர் தளம் மிகவும் வலுவாக இருந்த இடங்களிலேயே ஒரு மிகப்பெரிய சரிவினைச் சந்தித்துள்ளது. இத்தகைய சரிவிற்கு இட்டுச் சென்ற காரணிகள் எவை என்பது குறித்த சில பிரச்சனைகளை அரசியல் தலைமைக்குழு விவாதித்தது. 2019 ஜூன் 7-9 தேதிகளில் நடைபெறவுள்ள மத்தியக்குழுக் கூட்டம் இதுதொடர்பாக விவாதித்து, இத்தேர்தலில் பெற்ற அனுபவங்களை மிகவும் ஆழமான முறையில் பரிசீலிப்பதன் அடிப்படையில் முறையான படிப்பினைகளை வரையறுத்திடும்.

நாம் வலுவாக உள்ள மாநிலங்களில் இயங்கும் நம் மாநிலக்குழுக்களும், மத்தியக்குழுக் கூட்டத்திற்கு முன்பாகக் கூடி, கட்சியின் செயல்பாடுகள் குறித்து சுயவிமர்சன ரீதியாக மதிப்பீடுகளைச் செய்திடும். இவற்றின் அடிப்படையில் மத்தியக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுயேச்சையான பலத்தையும் வெகுஜனப் போராட்டங்கள் மூலமாக அரசியல் தலையீடு செய்யும் பலத்தையும் வலுப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான, சரி செய்யும் நடவடிக்கைகளை உருவாக்கிடும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் இருவர், கேரளாவில் ஒருவர் 17வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்திட்ட அனைவருக்கும் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் மிகவும் உக்கிரமான பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு இடையில்தான் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களை வாக்களிக்கவிடாமல் வலுக்கட்டாயமாகத் தடுக்கப்பட்டதாக பெரிய அளவில் செய்திகள் வந்திருக்கின்றன. தேர்தலை ‘நேர்மையாகவும் நியாயமாகவும்’ நடத்த வேண்டும் என்று நாம் தேர்தல் ஆணையத்திடம் கூறி, அதற்கு அது அளித்த உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மேற்கு வங்கத்தில் இடதுசாரி ஆதரவாளர்கள் இருவரையும், திரிபுராவில் ஒருவரையும் இழந்திருக்கிறோம். இவ்விரு மாநிலங்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்கின்றன. இவை, மதமோதல்கள் வெடித்திடுமோ என்கிறமிகவும் ஆபத்தான முனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியவுடனேயே ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. புதிய அரசாங்கம் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் என்றும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்கிடும் என்கிற நரேந்திர மோடியின் பிரகடனத்திற்கு முரணாக இது அமைந்துள்ளது.

நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய அளவில் சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. நமது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பாதுகாத்தல், அரசமைப்புச் சட்ட நிறுவனங்களையும், மக்களின் உரிமைகள், குடிமைச் சுதந்திரங்களையும் பாதுகாத்தல் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற பிரச்சனைகள் மீது ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக வேண்டுகோள் விடுக்கிறது.

நம்முடைய சமூகவலைப் பின்னலில் உருவாகியுள்ள அனைத்து மதத்தினர், அனைத்து இனத்தினருக்கிடையேயான நல்லிணக்கத்தை வலுப்படுத்திடவும், எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்களை எதிர்கொண்டிடவும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று நாட்டு மக்களின் அனைத்துத் தரப்பினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது.

English Version: On the 17th Lok Sabha Election Results

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...