அனைத்து பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் சமைத்த மதிய உணவு வழங்கிட தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

பெறுநர்

      மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

      தமிழ்நாடு அரசு,

      தலைமைச் செயலகம்,

      சென்னை – 9.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

பொருள்:-        அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்குவது – இந்த கல்வி ஆண்டில் கல்வி அளிப்பது  குறித்து ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்வது – பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உடனடியாக விநியோகிப்பது தொடர்பாக:

            “கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்னும் முதுமொழி வேதனைக்குரிய விதத்தில்  கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடைமுறை ஆகிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சுமார் 65 லட்சம் பள்ளிக்குழந்தைகள் மதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் துன்புறுகின்றனர். தொற்று வராமல் இருக்க ஊட்டச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அவசியம் என்கிற யதார்த்த சூழலில் ஊட்டச்சத்து இல்லாமல் லட்சக்கணக்கான குழந்தைகள் பரிதவிக்கும் நிலைமையை அனுமதிக்கக்கூடாது என்று ஏற்கனவே கல்வியாளர்கள், அறிவியல் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைப்புகள் தமிழக  அரசுக்கு சுட்டிக் காட்டியிருக்கின்றனர். எனினும் அது சம்பந்தமான நடவடிக்கைகள் எதுவுமே மார்ச் மாதத்தில் இருந்து இப்போது வரை பள்ளிகள் மூடப்பட்ட காலத்தில் எடுக்கப்படவில்லை. ஊட்டச்சத்து பாதிப்போடு கூடிய ஒரு தலைமுறையையே உருவாக்குவதற்கு இது இட்டுச் செல்லும்.

            அண்டை மாநிலங்களான  கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே தமிழகத்திலும் இது சாத்தியமே. இதற்கான தொகையை குடும்பங்களுக்கு பணமாக அளிக்கும் யோசனை அரசு இருப்பதாக செய்தி வருகிறது. இது உதவாது. குடும்பத்தினுடைய வேறுசில முன்னுரிமை தேவைகளுக்கு செலவாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

            எனவே, அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் சமைத்த மதிய உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டை தமிழக அரசு உடனடியாக செய்திட வேண்டும். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இரண்டு சுற்றறிக்கைகள், கொரோனா பேரிடரால்  பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் மதிய உணவை உறுதிப்படுத்த வேண்டும்  என்பதை வலியுறுத்துகின்றன. எனவே  தமிழக அரசு தனிமனித இடைவெளி, முக கவசம், கையுறைகள், கிருமி நாசினி தெளிப்பு போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டே மதிய உணவை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

            அடுத்து இணையவழிக் கல்வி என்பது சில தனியார் கல்வி நிலையங்களில் துவங்கப்பட்டுள்ளது. மாநில அரசும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இணைய வழிக் கல்வி முறையே கூடாது என்பது வாதமல்ல. ஆனால் அதற்கான வாய்ப்பு வசதிகள் மிக மிக குறைவாக இருக்கக் கூடிய சூழலில், சிலருக்கு கல்வி கிடைக்கும், பலருக்கு கிடைக்காது என்கிற பாகுபாட்டை (Digital divide) ஏற்க முடியாது.

கல்வி என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை என்பதை எந்தக் காலத்திலும் மீறக்கூடாது. இப்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் எப்போது தொடங்கும், மாணவர்களின் படிப்பின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, இன்றைய சூழலில் மாணவர்களுக்கு கல்வி போதிப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர், மாணவர் தரப்பு பிரதிநிதிகளோடு கலந்து பேசி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் உள்ளூர் மட்டத்தில் கல்வி அளிப்பதை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

            அதே போல் கல்வியாண்டின் துவக்கத்தில் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாட நூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

            மேலும் வளரிளம் குழந்தைகளுக்கு சானிட்டரி நாப்கின்கள், தேவைப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் இரும்புச் சத்து  மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்பட வேண்டும்.

            தமிழகத்தின் பள்ளி மாணவர்களின் மேற்கண்ட முக்கியமான தேவைகளை  நிறைவேற்றிட தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...