அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்

மதவெறிக்கு எதிரான போரில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்!
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுதி

புதுதில்லி, ஜூன் 8-

குடியரசுத் தேர்தல், காஷ்மீர் விவகாரம், பொருளாதாரக் கொள்கைகள், அதிகரிக்கும் மதவெறிக்கு எதிர்ப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இடதுசாரி – முற்போக்கு – அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுதியேற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

மோடி அரசாங்கத்தின் மூன்றாண்டுகள்

மூன்றாண்டு கால மோடி அரசாங்கமானது, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் ஒட்டுமொத்தமாக வஞ்சகம் செய்துவிட்டது என்பதையே காட்டுகிறது. “நல்ல காலம் பிறக்குது” என்று வாக்குறுதி அளித்து வந்தவர்களின் ஆட்சியில், மக்களின் துன்ப துயரங்கள்தான் பல்கிப் பெருகியுள்ளன.

பாய்ச்சல் வேகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்

ஒவ்வோராண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், இதற்கு மாறாக நாம் என்ன பார்க்கிறோம்? கடந்த எட்டாண்டுகளில் தொழில்துறையில் வேலை வளர்ச்சி என்பது மிக மிகக் குறைவாகும். கிராமப்புற வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய தொகையையும் அது ஒதுக்கவில்லை. இதன்மூலம் ஏற்கெனவே வாடிவதங்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படாமல் மறுக்கப்பட்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்துறையில், மெக்கின்சி என்னும் சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு, இந்த ஆண்டின் இறுதிவாக்கில் தற்போதுள்ள 40 லட்சம் ஊழியர்களில் 50 முதல் 60 சதவீதத்தினர் ‘மிகை ஊழியர்கள்’ எனக் கருதப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியிருக்கிறது. இன்போசிஸ், விப்ரோ மற்றும் காக்னிசன்ட் ஆகிய நிறுவனங்கள் சுமார் 60 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றிடப் பரிசீலனை செய்து கொண்டிருக்கின்றன. எல் & டி போன்ற கட்டமைப்புத்துறைகளின் ஜாம்பவான்கள் கூட தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை ஏற்கெனவே கணிசமாகக் குறைத்துவிட்டன.ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்று கூறிய ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் நாட்டில் பொருளாதார மந்தத்தையும், ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களைக்கூட வேலையில்லாதோர் பட்டாளத்தில் சேர்த்திடும் வேலையையே செய்துகொண்டிருக்கின்றன.

கிராமப்புற இந்தியா

பாஜகவும் பிரதமர் மோடியும் தங்களுடைய அரசாங்கத்தின்கீழ் நாட்டின் விவசாயிகள் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவார்கள் என்று உறுதி அளித்திருந்தார்கள். அவர்கள் பயிரிடும் பொருள்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையானது, இடுபொருள்களின் செலவைக் கணக்கிட்டு அளித்திடும் தொகையைவிட ஒன்றரை பங்காக இருக்கக்கூடிய விதத்தில் இருந்திடும் என்றும் உறுதி அளித்திருந்தார்கள். ஆனால் அப்படி அளிக்கப்படவில்லை.

மேலும் இந்த அரசாங்கம், வேளாண் பொருள்களுக்கான இறக்குமதி தீர்வைகளைக் குறைத்திருப்பதன் காரணமாகவும், நம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை உரிய விலைக்கு விற்க முடியாததாலும், அதன் காரணமாக தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமலும், தாங்கள் வாங்கிய கடன்களைக் கட்டமுடியாமலும் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். கடன் சுமையிலிருந்து மீள முடியாததன் விளைவாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் அதிகரித்து இருக்கிறது. ஒவ்வோராண்டும் 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், அதாவது கடந்த மூன்றாண்டுகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அரசாங்கமே உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது.

கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு கடன்களைத் தள்ளுபடி செய்து, அதன் மூலம் அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாத பணக்கார கார்ப்பரேட்டுகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கே முன்னுரிமை தருகிறது. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் சொத்துக்கள் மற்றும் கால்நடைகளை ஜப்தி செய்திடும் இந்த அரசாங்கம் பணக்கார கார்ப்பரேட்டுகளை மட்டும் சுதந்திரமாக செல்வதற்கு அனுமதிக்கிறது. பொருளாதார மந்தம், அதிகரித்துக்கொண்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரித்துவரும் விலைவாசி மற்றும் விவசாய நெருக்கடி ஆகிய இன்றைய சூழ்நிலையில், மூன்றாண்டு ஆட்சியைக் கொண்டாடுவதில் அர்த்தம் எதுவும் கிடையாது.

மோடி அரசாங்கத்தின் மூன்றாண்டு கால நிறைவைக் கொண்டாட வேண்டும் என்று அரசாங்கம் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. மோடியின் செல்லத்திட்டமான மாபெரும் சர்தார் பட்டேல் சிலைத் திட்டத்திற்கு எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பணத்தைக் கொட்ட வேண்டும் என்று கேட்டு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இது பொதுப் பணத்தை சொந்த விருப்பத்திற்குப் பயன்படுத்தும் கையாடல் குற்றத்திற்கு இணையானதாகும். உயர்ந்த அதிகார மையங்களின் ஊழலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

குடியரசுத் தலைவர்/துணைத்தலைவர் தேர்தல்கள்

குடியரசுத்தலைவர் பொறுப்புக்கு, இந்திய அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பவராகவும், மதச்சார்பற்ற மாண்புகளை உயர்த்திப்பிடிக்கக்கூடியவராகவும் உள்ள மாசு-மருவற்ற ஒருவரையே தேர்ந்தெடுத்திடக்கூடிய விதத்தில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது.அதேபோன்றே குடியரசுத் துணைத்தலைவர் பொறுப்புக்கும், நம் குடியரசின் அரசமைப்புச்சட்ட மாண்புகளை உயர்த்திப்பிடித்திடக்கூடிய ஒருவரை எதிர்க்கட்சிகளின் சார்பாக கூட்டாக நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

திரிபுரா சட்டமன்றத் தேர்தல்

வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக் குழு தயாரிப்புப் பணிகளைச் செய்துகொண்டிருப்பதாக கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்கு அறிக்கைகள் வந்திருக்கின்றன.வட கிழக்கில் இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழும் திரிபுராவில் நுழைவதற்கு பாஜக மும்முரமாக வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. மக்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்காக ஏற்கெனவே அது ஏராளமாகச் செலவு செய்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தன்பிறவிக்குணத்திற்கேற்ப, மக்கள் மத்தியில் வகுப்புவாத மற்றும் இனவெறியைக் கிளப்பிடும் வேலைகளிலும் வெறித்தனமாக இறங்கி இருக்கிறது. இதற்காக, தடைசெய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்புகளுடனும் பாஜக ஒருவிதமான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கக்கூடிய பின்னணியில், அவை கேரளா இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை பலவீனப்படுத்திட பல்விதமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்துநின்று மாநிலத்தின் இடதுசாரி சக்திகளை பலவீனப்படுத்துவதற்காக வெறித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகு பின்னணியில்தான் திரிபுராவில் நடைபெறும் தேர்தல் என்பது இடதுசாரிகளுக்கும் மதவெறி சக்திகளுக்கும் இடையிலான யுத்தமாக முக்கியத்துவம் பெறுகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிகளின் கோட்டையைப் பாதுகாத்திடவும், மீண்டும் அபரிமிதமான வெற்றியுடன் மாநில அரசை அமைப்பதற்கும் உறுதிபூண்டிருக்கிறது.

காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் நிலைமைகள் மிகவும் மோசம் அடைந்துள்ளன. காஷ்மீரி மக்கள் இதர பகுதியினரிடமிருந்து கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பாஜக மத்திய அரசாங்கத்தின் காஷ்மீர் கொள்கை படுதோல்வி அடைந்துவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் அது ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அளித்திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்துவிட்டதாகும். உள்துறை அமைச்சரின் தலைமையில் சென்ற அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும், கல்லெறிபவர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட மாட்டாது;

காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்; காஷ்மீரில் இயங்கிடும் அனைத்து அரசியல் சக்திகளுடன் அரசியல்ரீதியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி, காஷ்மீர் பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்றும், காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது. இதனைநிறைவேற்றுவதில், பாஜக ஓர் அங்கமாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கம் பரிதாபகரமானமுறையில் படுதோல்வி அடைந்துவிட்டது என்பது தெளிவாகிவிட்டது. காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண தேசிய அளவில் தலையிடுவதற்காக அனைத்து மதச்சார்பற்ற அரசியல்கட்சிகளின் ஒத்துழைப்பையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்குத் தடைவிதித்து மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிக்கையை பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களில் பெரும்பாலானவை எதிர்த்திருக்கின்றன. இந்த அறிவிக்கை மாநிலங்களின் உரிமைகளை மீறும் நடவடிக்கை என்றும் இதனை கூட்டாக எதிர்த்திட, பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்தப்பிரச்சனை மீது நாம் முன்கை எடுத்திட வேண்டும். பாஜக அல்லாத முதலமைச்சர்களுடன் ஆலோசனைகள் நடத்திட வேண்டும்.

வெகுஜன போராட்டங்களுக்கான மேடை

அரசின் கொள்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களைத் துன்ப துயரங்களிலிருந்து பாதுகாத்திட, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் முற்போக்கு மதச்சார்பற்ற மக்கள் இயக்கங்களின் கீழ் இயங்கும் பல்வேறு வெகுஜன மற்றும் வர்க்க அமைப்புகள் தேசிய அளவில் சிறப்பு மாநாடு நடத்திட நடவடிக்கைகள் எடுத்துவருவதாக அரசியல் தலைமைக்குழுவிற்கு அறிக்கைகள் வந்துள்ளன.

ஊடகங்களின் மீதான தாக்குதல்கள்

பாஜக தலைமையிலான தே.ஜ.கூ. அரசாங்கத்தின்கீழ் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களும் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. வளர்ந்துவரும் இந்தப் போக்கானது மிகவும் ஆபத்தான எதேச்சதிகாரப் போக்காகும்.இத்தாக்குதல்களின் மத்தியில் தங்களுக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை முடக்குவதற்கான வேலைகளிலும் இறங்கியிருக்கிறது. ஊடக சுதந்திரம் என்பது நம் ஜனநாயகத்தில் முழுநிறைகாப்புடைய ஒரு விதியாகும். இது உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டும். ஊடகங்களைத் தாக்குவதையோ அவற்றைப் பல்வேறுவிதங்களிலும் துன்புறுத்துவதையோ ஏற்கமுடியாது.

(தமிழில் : ச.வீரமணி)

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...