அனைவருக்கும் சுகாதாரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-க்கு வாக்களித்திடுக

இடதுசாரிக் கட்சிகளை வலுப்படுத்திடுக

அனைவருக்கும் சுகாதாரம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளானது, பெரும்பாலான இந்திய மக்களின் உண்மையான சுகாதார பாதுகாப்பு சேவைகளுக்கான தேவைகள் மற்றும் நடைமுறைபடுத்தப்படும் சுகாதார சேவைகளுக்கு இடையே மிகப் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை சுகாதார சேவைகள் சீரழிந்துள்ளன.  தேசிய கிராமப்புற சுகாதார மிஷன் (NRHM) திட்டமானது மக்களின் தேவைகளுக்கு எட்டாததாக உள்ளது.  மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது மட்டுமே, அதுவும் ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு மட்டுமே பலனடைய முடியும்.  எனவே, இவற்றின் கீழும் போதுமான பாதுகாப்பு மக்களுக்கு கிடைப்பதில்லை.  பொது சுகாதார திட்டத்தில் பெருமளவில் ஊழல் நிலவுகிறது. 

போதுமான அளவில் பொது சுகாதார சேவைகள் கிடைக்காத காரணத்தினால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் காரணமாக மக்கள் தங்களது தேவைகளுக்கு பெருமளவில் தனியார் துறையையே சார்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதன் காரணமாக தனியார் மருத்துவத் துறை பெருமளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.  மேலும், கார்ப்பொரேட்டுகளுக்கு சொந்தமான சங்கிலி மருத்துவனைகள் (Hospital Chains) இன்று கோலொச்சுகின்றன.  தனியார் மருத்துவத் துறையானது, எந்த கட்டுப்பாடும் இல்லாததாகவும், மிகுந்த செலவு பிடிக்கக் கூடியதாகவும் உள்ளது.  தரக் குறைவான சேவைகளே  பெரும்பாலும் அளிக்கப்படுகின்றன.  அவர்கள் மேற்கொள்ளும் முறைகேடான நடவடிக்கைகள் குறித்தும், அவர்களது அலட்சியப் போக்கு குறித்தும் ஏராளமான புகார்கள் குவிகின்றன. 

உலகிலேயே மிக அதிகமாக தனியார்மயமாக்கப்பட்ட சுகாதார திட்டத்தினை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.  இந்தியாவில் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுவோரில் 80 சதவீதத்தினரும், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரில் 60 சதவீதத்தினரும் தனியார் மருத்துவத் துறையையே சார்ந்துள்ளனர்.

சுகாதாரத்திற்கான செலவுகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதன் காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் சற்றேறக்குறைய 8 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டு வருகின்றனர்.  கையிலிருந்து செலவு செய்யப்படும் தொகையின் பெரும்பகுதி  கிட்டத்தட்ட 70 சதம்  மருந்துகளை வாங்கிடவே செலவழிக்கப்படுகிறது. மிகக் குறைந்த அளவிலேயே மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.  80 சதத்திற்கும் அதிகமான மருந்துகள் நோயாளிகளாலேயே நேரடியாக வாங்கப்படுகின்றன.  2005ல் இந்திய காப்புரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, புதிய மருந்துகளின் விலை அநியாயத்திற்கு உயர்ந்துள்ளது.  இந்திய மருந்துக் கம்பெனிகளால் புதிய மருந்துகளை மலிவு விலையில் தயாரித்திட முடியவில்லை.  பெரும்பாலான புதிய மருந்துகளை இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள்தான் விற்பனை செய்கின்றன.  இவற்றின் விலையோ இந்திய நோயாளிகளின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. 

ஆய்வுக்காக ஒதுக்கப்படும் சொற்பத் தொகை

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, சுகாதாரத் துறைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்திடும் நிதி ஒதுக்கீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 5 சதவீதம் என்ற அளவிற்காவது உயர்த்தப்பட வேண்டும்.  உலகளவில் சுகாதாரத் திட்டத்திற்காக மிகக் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்திடும் நாடுகளில் ஒன்றாகவே இந்தியா மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.

ஐமுகூ அரசு-1ன் குறைந்தபட்ச பொது செயல்திட்டமும், 11-வது ஐந்தாண்டுத் திட்டமும் பொது சுகாதார செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 சதம் என்ற அளவிற்கு உயர்த்திடுவதாக வாக்களித்திருந்தன.  எனினும், தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.2 சதவீதம் என்ற அளவே தற்போது பொது சுகாதாரத் துறையில் செலவிடப்படுகிறது.

ஐந்தாண்டுத் திட்ட மதிப்பீடுகளுக்கும், உண்மையில் செய்யப்படும் ஒதுக்கீட்டிற்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதம் என்ற அளவில் (0.87 சதம் மத்திய அரசாலும், 1.13 சதம் மாநில அரசுகளாலும்) சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என 11வது ஐந்தாண்டுத் திட்டம் மதிப்பீடு செய்திருந்தது.  ஆனால், இதற்கு நேர்மாறாக, 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில் 2011-2012ல் வெறும் 1 சதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.32சதம் மத்திய அரசும், 0.68 சதம் மாநிலங்களும்) என்ற அளவே ஒதுக்கப்பட்டிருந்தது.

அட்டவணை  சுகாதாரத்துக்கான அரசு செலவினத்தில் உலகளாவிய நிலை

நாடு / மண்டலம் சுகாதாரத்துக்கான மொத்த செலவினத்தில் அரசு செலவினத்தின் சதவீதம்
இந்தியா 29.20
உயர் வருமானம் கொண்ட நாடுகளின் சராசரி 65.10
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் சராசரி 38.78
நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் சராசரி 52.04
உலக சராசரி 62.76
   

ஆதாரம்  உலக வங்கி புள்ளிவிவரம்

நிதிப் பற்றாக்குறையால் திணறும் தேசிய கிராமப்புற சுகாதார மிஷன்

மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பிற்காகப் போராடி வரும் பல்வேறு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைகள் காரணமாக 2005ம் ஆண்டிலிருந்து தேசிய கிராமப்புற சுகாதார மிஷன் செயல்படுத்தப்பட்டது. 

ஐமுகூட்டணி அரசு-1ன் ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் உருவாக்கப்படுவதில் இடதுசாரிக் கட்சிகள் முக்கிய பங்காற்றின. எனினும், இத்திட்டம் துவக்கப்பட்ட நாளிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகை என்பது வாக்குறுதி அளிக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பகுதியே ஆகும். அதாவது, இத்திட்ட வரையறையின் கீழ் அனுமதிக்கப்பட்ட ரூ.175,000 கோடியில் வெறும் ரூ.66,000 கோடியே ஒதுக்கப்பட்டது.  உண்மையில் திட்ட செலவினத்திற்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பாதிக்கும் குறைவான நிதியே 11வது திட்ட காலத்தில் ஒதுக்கப்பட்டது.  அரசின் மீது தங்களது ஆதிக்கத்தினை செலுத்திடும் சக்திகள் திட்டக் குழுவின் தலைமையில், சுகாதார பாதுகாப்பிற்கான அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி தனியாரின் கைகளுக்கு தாரை வார்க்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை வைத்தனர்.

போதுமான அளவு இல்லாத பொது சுகாதார சேவைகள், கட்டமைப்பு மேம்பாடு செய்யப்படாதது மற்றும் கசக்கிப் பிழியும் பணி

இன்றைக்கு சுகாதாரத் துறையில் செலவிடப்படும் மொத்தத் தொகையில் வெறும் 20 சதம் மட்டுமே அரசுத் துறை செலவினமாக இருக்கிறது.  நாட்டின் மொத்த சுகாதாரத் துறை பணியாளர்களில் வெறும் 20 சதவீதத்தினர் மட்டுமே அரசுத் துறையில் பணியாற்றுகின்றனர்.  தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் தற்போது இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது.  துணை மையம், ஆரம்ப சுகாதார மையம், சமூக சுகாதார மையம் ஆகியனவற்றில் இந்த இடைவெளியானது முறையே 17சதம், 18 சதம் மற்றும் 33 சதம் என்ற அளவில் உள்ளது.  சிறப்பு மருத்துவர்கள் எண்ணிக்கையின் பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.  அறுவை சிகிச்சை நிபுணர்களின் பற்றாக்குறை 76 சதவீதமாகவும், மகப்பேறு மருத்துவர்களின் பற்றாக்குறை கிட்டத்தட்ட 67 சதவீதமாகவும், மருத்துவர்களின் பற்றாக்குறை 80 சதவீதத்திற்கும் கூடுதலாகவும், குழந்தை சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை ஏறத்தாழ 72 சதவீதமாக உள்ளது.  ஏஎன்எம்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட, ஆரம்ப நிலை பாதுகாப்பு வரையிலான இத்தகைய இடைவெளியானது காணப்படுகிறது. 

பொதுத்துறை மருத்துவக் கல்லூரிகளில் செய்யப்படும் அரசு முதலீட்டை முற்றிலுமாக நிறுத்துவதுடன், அதே நேரத்தில் தனியார் மருத்துவ மற்றும் செவிலியர் கல்வி நிறுவனங்களை ஊக்குவித்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  அரசின் இத்தகைய நடவடிக்கைகளே இன்றைய மிக மோசமான நிலைமையை உருவாக்கியுள்ளன.  இந்த தனியார் நிறுவனங்களின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதும், கார்ப்பொரேட்கள் ஊக்குவிக்கப்படுவதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

கார்ப்பொரேட்களால் கபளீகரம் செய்யப்படும் இந்திய சுகாதார பாதுகாப்பு

சுகாதார பாதுகாப்பின் பல்வேறு கூறுகளின் பெரும்பகுதி இன்று தனியாரிடமே உள்ளது.  இந்தியாவின் பொதுசுகாதார பாதுகாப்பில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியின் காரணமாகவே தனியாரின் கைகள் ஓங்குகிறது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.  புற்றீசல் போல பெருகி வரும் தனியார் மருத்துவ கல்லூரிகள் காரணமாக இன்றைக்கு பொதுசுகாதார திட்டத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  கட்டுப்பாடு எதுவுமில்லாத மருத்துவ உபகரணத் துறையின் வளர்ச்சி என்பது மருத்துவ செலவினங்கள் அதிகரித்திட துணைபோகிறது. மிக அதிக விலை கொண்ட, முரண்பாடான மருந்துகளையும், இணைப்பு மருந்துகளையும் (Drug Combinations) வலிமை மிகுந்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்து, விற்பனை செய்திடுகின்றன.

அட்டவணை  இந்திய சுகாதார திட்டத்தில் தனியார் துறையின் பங்கு (சதவீதத்தில்)

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவர்கள்                       –           90-95

புறநோயாளிகள் சிகிச்சை                                                  –           80

உள்நோயாளிகள்                                                              –           60

மருத்துவ கல்லூரிகளில் ரனேநசபசயனரயவந இடங்கள்       –           45

மருந்துகள் தயாரிப்பு                                                         –           99.5

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு                                    –           100

சுகாதார சேவை என்பது எவ்வாறு தனியாரால் கைப்பற்றப்பட்டு வருகிறது என்பதனை புற்றீசல் போல பெருகி வரும் கார்ப்பொரேட் மருத்துவமனைகள் தெளிவாகக் காட்டுகின்றன.  சமீகாலமாக, சங்கிலி மருத்துவமனைகளின் வருமானம் பெருமளவில் அதிகரித்துள்ளது. உதாரணமாக, இந்தியாவிலுள்ள சங்கிலி மருத்துவமனைகளில் மிகப் பெரியதான அப்போல்லொ மருத்துவமனையின் மொத்த நாடு தழுவிய வருமானம், 2009ல் 16.1 பில்லியன் ரூபாயாக இருந்தது.  2012ல் இதன் வருமானம் 31.5 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.  கார்ப்பொரேட்டுகளுக்கு சாதகமான விதிமுறைகள் வாயிலாக பொதுசுகாதாரத்தை ஊக்குவிப்பது என்பதற்கு பதிலாக வெறும் இலாபமீட்டுவது என்பதே இலக்காக மாறிப் போயுள்ளது.  தனியார் மருத்துவமனைகள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து நோயாளிகளை ஏமாற்றி, கொள்ளையடித்து, மோசமான சிகிச்சையினை அளிக்கின்றனர் என்பன குறித்து ஏராளமான சான்றுகள் உள்ளன.  இத்தகைய முறைகேடுகளை கட்டுப்படுத்திடக் கூடிய வகையில் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய மருத்துவ கவுன்சில் போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்படுவதில்லை.  இந்திய மருத்துவ கவுன்சிலே ஊழலில் சிக்கி புதைந்துள்ளது.

தற்போதைய மருத்துவமனைகள் பதிவு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம், இவற்றை கட்டுப்படுத்திடுவதற்கான ஒரு சில வழிமுறைகளை வகுத்துள்ளது. தற்போது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளின் உரிமைகள் குறித்தோ அல்லது பொது சுகாதார சேவையில் தனியார் நிறுவனங்களின் கடமை குறித்தோ இச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  எனவே, இச்சட்டம் மேலும் விரிவுபடுத்ததப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

தேசிய மருத்துவ காப்பீடு  யாருக்கு பலனளிக்கிறது?

பொது சுகாதார சேவையின் வாயிலாக தொழிலாளர்களின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டம், திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது.  அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுத்திடுவதற்கான அனைத்து முயற்சிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பெருமளவிலான சுகாதார பாதுகாப்பு சேவை தனியாரிடம் அவுட்சோர்சிங் செய்யப்பட்டுள்ளது.  நாடு தழுவிய ஆர்எஸ்பிஒய் திட்டம் மற்றும் ஆந்திராவின் ஆரோக்கியஸ்ரீ திட்டம் போன்ற பல்வேறு மாநிலங்களால் மாநில அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களும் இதில் அடங்கும்.  இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமே இவை பாதுகாப்பு அளிக்கின்றன. 

சுகாதார சேவையை மக்களுக்கு கிடைக்கச் செய்வதில் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஏற்படுத்திடுவதில் மிகச் சிறிய அளவிலேயே இவை பங்களித்துள்ளன.  அரசு நிதியினை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கரங்களுக்கு மாற்றிடவே இத்திட்டங்கள் வழிவகுத்துள்ளன.  தரமற்ற மருத்துவ சேவைகளை அளிக்கின்ற அதே நேரத்தில் முறைகேடான வழிமுறைகளில் இத்திட்டங்களை தனியார் மருத்துவ சேவை அளிப்போர் தவறாகப் பயன்படுத்துவது குறித்த சாட்சியங்கள் அதிகரித்து வருகின்றன.  உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மருத்துவ  சேவைகளுக்காக, 2007 முதல் 2013 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ4,723 கோடி செலவிடப்பட்டுள்ளது.  இதில் ரூ.1071 கோடி அரசுத் துறையின் வாயிலாகவும், ரூ3652 கோடி தனியார் துறை வாயிலாகவும் பெறப்பட்ட மருத்துவ சேவைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சை தேவைப்படும் ஒரு சில நோய்களுக்கு மட்டுமே இத்திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.  ஒட்டுமொத்த சுகாதார பாதுகாப்பினை அவர்கள் அளிப்பதில்லை.  மேலும், ஏற்கனவே வரையறை செய்யப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு மட்டுமே இவை பொருந்துவதாக உள்ளன.  அடிப்படை சுகாதார சேவையை இத்தகைய மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் அளிப்பதில்லை.  2009-2010ல், சுகாதாரத்திற்கான மொத்த செலவினத்தில், மூன்றாம் நிலை சிகிச்சைக்கான அரசு நேரடியாக செலவிட்டது 20 சதத்திற்கும் சிறிது கூடுதலாகும். 

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்படும் சிகிச்சைகளை மட்டுமே குறியீடாகக் கொண்ட காப்பீட்டுத் திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகையையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அது 37.42 சதம் என்ற அளவிற்கு உள்ளது.  ஆந்திர பிரதேசத்தில், ஆரோக்கியஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு அடிப்படை சுகாதாரத்திற்கான ஒதுகக்பப்டும் நிதியின் அளவு 14 சதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவின் சுகாதார பாதுகாப்பு குறித்து பாஜகவின் பார்வை

சுகாதார பாதுகாப்பு குறித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பார்வையிலிருந்து பாஜகவின் பார்வை மாறுபட்டதா?  சொல்லப்போனால், பேரழிவினை ஏற்படுத்துகிற, இந்தியாவில் பொது சுகாதார சேவையை சீரழித்த தனியார் துறைக்கு ஆதரவான அதே கொள்கைகளையே இம்மியளவும் பிசகாமல் பாஜகவும் உறுதி கூறுகிறது. அதன் 2009 தேர்தல் அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது  புதுமையான காப்பீட்டு திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் சுகாதாரம் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்திட, அரசு மற்றும் தனியார் பங்கேற்புடனான, ஒரு மிகப் பெரிய திட்டத்தினை பாஜக துவக்கிடும்.  இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கான பிரிமியத் தொகையை அரசு செலுத்திடும்.  இதன் வாயிலாக பயனாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம்.

வெற்றிகரமான குஜராத் மாடல் வளர்ச்சி குறித்து பாஜக தம்பட்டம் அடித்து வரும் நேரத்தில், 2012ல் திட்டக் கமிஷன் மேற்கொண்ட ஆய்வில், சுகாதார பாதுகாப்பு சேவையை அளிக்கும் 21 பெரு மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டது.  இப்பட்டியலில் குஜராத் மாநிலத்திற்கு கீழிருந்து 6வது இடம் கிடைத்தது. 

அட்டவணை  சுகாதாரத் துறையில் மாநிலங்களின் செயல்பாடு குறித்த பட்டியல் 2010

1-கேரளா, 2-தமிழ்நாடு, 3-மேற்கு வங்கம், 4-ஒடிசா, 5-பீகார், 6-கர்நாடகா, 7-கோவா, 8-பஞ்சாப், 9-இமாச்சல பிரதேசம், 10-சத்திஸ்கர், 11-ஆந்திரப்பிரதேசம், 12-மகாராஷ்டிரா, 13-ஜார்க்கண்ட், 14-ஜம்மு காஷ்மீர், 15-அசாம், 16-குஜராத், 17-உத்திரபிரதேசம், 18-ராஜஸ்தான், 19-மத்தியபிரதேசம், 20-ஹளீயானா, 21-உத்தர்காண்ட்.

பட்டினிக் குறியீடு பட்டியலில் (மாநில பட்டினி குறியீடு 2008) 17 பெரிய மாநிலங்களில் குஜராத் 13வது இடத்தில், ஒரிசாவிற்கும் கீழே, இடம் பெற்றிருந்தது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மாநில அரசின் மொத்த செலவினத்தில் சுகாதாரத்திற்கான செலவினம் 2.83 சதவீதமே ஆகும்.  இது தேசிய சராசரியான 3.60 சதத்தை விட குறைவாகும்.  மேலும், குஜராத் மாநிலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.38 சதம் மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.  இது அனைத்து மாநிலங்களுக்கான தேசிய சராசரியான 0.59 சதத்தைவிட குறைவாகும்.  (2009 புள்ளிவிவரங்கள்).

கைவிடப்படும் இலவச மருந்து திட்டம்

இந்திய மக்கள் தொகையில் 50 முதல் 80 சதவீதத்தினருக்கு அவர்களுக்குத் தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  உலக சுகாதார அமைப்பின் உலக மருத்துவ அறிக்கையின்படி, இந்தியாவில் 649 மில்லியன் மக்களுக்கு  உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையிலான மக்கள்  அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை.  உலகிலேயே மிக அதிக அளவிலான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் மூன்றாவதாகவும், 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்திடுகிற நாடாகவும் இந்தியா இருப்பது முரணாணதே.

2012ம் ஆண்டு சுதந்திர தின உரையாற்றிடும்போது, அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் இலவசமாக அனைத்து பொது சுகாதார மையங்களிலும் கிடைக்கும்.  இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கிடும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.  ஆனால், தற்போது இதற்கான பொறுப்பு மாநில அரசுகளின் மீது மாற்றப்பட்டுள்ளது.  பொது சுகாதார மையங்களில் இலவசமாக மருந்துகளை விநியோகித்திடும் இத்திட்டம், தமிழகம், கேரளா மற்றும் ராஜஸ்தான் போன்ற ஒரு சில மாநிலங்களில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால், இப்பொழுது ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த இலவச மருந்து விநியோகத் திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் திட்டம் எனப் பார்த்த தற்போதைய பாஜக அரசு அதனை  புறக்கணித்து வருகிறது.

மருந்து விலைகள் மீதான கட்டுப்பாடு நீக்கம்

1979ம் ஆண்டில் 342 மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் இருந்தன; 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட மருந்து விலைக் கட்டுப்பாடு உத்தரவுகளின் படி இந்த எண்ணிக்கை 74ஆகக் குறைக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து, 2003ம் ஆண்டில் அகில இந்திய மருந்துத்துறை செயல்பாட்டு அமைப்பு சார்பில் ஒரு பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மருந்துகளின் விலைகள் கடுமையாக இருப்பது இந்த நாட்டில் மருத்துவச் செலவுகளில் ஒரு நாசகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியது; மேலும், அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் அனைவரும் வாங்கக்கூடிய அளவில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் விலைக் கட்டுப்பாட்டு முறையை அமலாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து, மத்திய அரச, 348 மருந்ததுகளை அத்தியாவசிய மருந்துகள் எனப் பட்டியலிட்டு, அவற்றுக்க விலைக்கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதன்மூலம் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்கவில்லை. ஏனென்றால், மீண்டும் புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட மருந்து விலைக் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் படி, மருந்துகளின் அதிகபட்ச விலையாக தற்போது சந்தையில் நிலவுகிற மருந்து விலைகளின் சராசரியே தீர்மானிக்கப்பட்டது. முன்பு, மருந்து உற்பத்தி விலையை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்மானிப்பில் நடைமுறையாக இருந்தது. அந்த நடைமுறை கைவிடப்பட்டது. புதிய நடைமுறையானது, எப்போதும் மருந்துத் துறையில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனங்களின் விலையைத்தான் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துவிட்டது. இன்றைக்க மருந்துவிலைகள் மிகக்கடுமையாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு இதுதான் அதிகாரமும் கொடுத்தது. இந்தப் புதிய விலை நிர்ணய நடைமுறை, பெரும் மருந்துக் கம்பெனிகளுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த பரிசே அன்றி வேறல்ல.

சட்டவிரோத மருத்துவ சோதனைகள் தீவிரமாக பரவியிருக்ம் நிலை

இந்திய நாடு, ஏராளமான மருத்துவத்துறை சோதனைகளை நடத்திப் பார்க்கிற இடமாக மாற்றப்பட்டுவிட்டது; குறிப்பாக பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் தங்களது ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகள் மூலமாக பெரும் எண்ணிக்கையில் இப்படிப்பட்ட சோதனைகளை நடத்துகின்றன. அரசாங்கமும், மருந்துகள் மற்றும் அழகுசாதான பொருட்கள் சட்டம் 2005ஐ மாற்றியதன் மூலம் இத்தகைய சோதனைகளுக்கு ஊக்கமளித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய சோதனைகள் தொடர்பான ஒழுங்குமுறை விதிகள் அப்பட்டமாக சிதைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைகளில் பலவும் பெண்களை குறிவைத்தே நடக்கின்றன. குறிப்பாக ஏழைப்பெண்கள் மிக கடுமையான முறையில் இந்தச் சோதனைகளுக்கு இலக்காகிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற பரிசோதனைகளுக்கான செலவு, வளர்ச்சியடைந்த நாடுகளில் இருப்பதைவிட சரிபாதி குறைவாக இருப்பதால் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைக்கின்றன. அது மட்டுமின்றி, இந்தியாவில் ஒழுங்குமுறை விதிகளையும் சட்டங்களையும் எளிதாக மாற்றிவிடமுடியுமென்றும் நம்புகின்றனர்.

இந்நிலையில், ஒரு பொதுநலன் வழக்கில் அவசியம் தலையிடவேண்டிய நிலை உச்சநீதிமன்றத்திற்கு ஏற்பட்டது. அந்த வழக்கில், 2013 ஜனவரியில் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரங்களை மீண்டும் உறுதிசெய்தது; மேலும், மத்திய சுகாதாரத்துறை செயலாளரின் அனுமதியும் அவரது தனிப்பட்ட முறையிலான ஆய்வும் இல்லாமல் புதிய வேதிப்பொருட்கள் அடங்கிய மருந்துகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதை தடை செய்தும் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, மருத்துவ பரிசோதனைகள் நடத்துவதற்கு கடுமையான விதிமுறைகளை வகுக்கவேண்டும் என்றும், அந்தப் பரிசோதனைகளின் விளைவாக பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்குவது தொடர்பான உறுதியான விதிமுறைகளை வகுக்கவேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதையும் மீறி, முன்பு எப்படி எவ்வித விதிகளுமின்றி மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டதோ அதே போல நடத்திட அனுமதிக்க வேண்டுமென்று மருந்துகம்பெனிகளிடமிருந்து கடுமையான நிர்பந்தம் அரசுக்கு வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை; பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க முயற்சி

மருந்துகளை உற்பத்தி செய்வதில் உலகிலுள்ள வளர்முக நாடுகளிலேயே தன்னிறைவை எட்டிய முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனை மூன்று முக்கிய நடவடிக்கைகள் மூலமாக நிகழ்த்தப்பட்டது. 1. இந்திய காப்புரிமைகள் சட்டம் 1970 நிறைவேற்றப்பட்டது; இந்தச் சட்டம் 1911ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரிட்டிஷ் இந்திய அரசின் சட்டத்தை காலாவதியாக்கியது. அது மட்டுமின்றி வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகளால் காப்புரிமை பெறப்பட்டிருந்த மருந்துகளை இந்திய கம்பெனிகளும் உற்பத்தி செய்வதற்கு அனுமதித்தது.

2.மருந்து உற்பத்தியில் அடிப்படை நிலையிலிருந்தே இந்துதான் ஆன்டி பயாடிக் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நிறுவனம் (ஐடிபிஎல்) போன்ற அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக நடத்தப்பட்டது;

3. 1978ம் ஆண்டு மருந்துக்கொள்கையின் மூலமாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (ஹத்தி கமிட்டி) பரிந்துரைகள் அமலாக்கப்பட்டன; இந்தப் பரிந்துரைகள் பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்திய கம்பெனிகளுக்கு முன்னுரிமை அளித்தது.

துரதிருஷ்டவசமாக இந்த மூன்று மிக முக்கிய நடவடிக்கைகளும் கடந்த 20 ஆண்டுகளில் ஒவ்வென்றாக கைவிடப்பட்டன. எச்ஏஎல் மற்றும் ஐடிபில் ஆகிய நிறுவனங்கள் படிப்படியாகவும் திட்டமிட்டும் மலினப்படுத்தப்பட்டன. அந் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை விலக்கிக்கொள்ளப்பட்டது. நிர்வாகச் சீர்கேடுகள் அதிகரித்தன. இந்நிறுவனங்கள் உட்பட தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உட்பட மருந்துத்துறையின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடுவிழா நடத்துவதற்கு காரணமாக இருந்தவை காங்கிர கூட்டணி அரசும் பாஜக கூட்டணி அரசுமே ஆகும். 1978ம் ஆண்டு மருந்துக்கொள்கையின் முக்கியமான அம்சங்கள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டு, 1986, 1994, 2002 என அடுத்தடுத்து புதிய மருந்துக்கொள்கைகள் வரையறை செய்யப்பட்டன. கடைசியாக, 1970 காப்புரிமைச் சட்டமானது 2005ல் திருத்தப்பட்டது; உலக வர்த்தக அமைப்பில் இந்தியா இணைந்ததன் விளைவாக இது நடந்தது.

மருந்துத்துறையில் இன்றைக்கு நம்மை அதிர்ச்சியடையச் செய்கிற நிலைமை என்னவென்றால் மருந்துநிறுவனங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன என்பதுதான். இந்நிறுவனங்கள் பெரும் அளவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற மருந்தையே சார்ந்திருக்கின்றன. பல்வேறு பெரிய இந்திய தனியார் துறை மருந்துக்கம்பெனிகள் பன்னாட்டு பெரு நிறுவனங்களுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டிருக்கின்றன ரான்பாக்சி நிறுவனமும், கிளாக்ஸோ மிக் கிளைன் நிறுவனமும் கூட்டுச்சேர்ந்து இத்தகைய இறக்குமதிக்கு வித்திட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் கூட்டுச்சேர்ந்து செயல்பட தொடங்கிய நிலையில், ஜப்பானைச் சேர்ந்த பெரும் நிறுவனமான டெய்ச்சி, ரான்பாக்சி நிறுவனத்தை விலைக்குவாங்கிவிட்டது. ரான்பாக்சி தான் இந்தியாவின் மிகப்பெரும் மருந்து உற்பத்தி நிறுவனமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்தாண்டுகளில் இப்படி பல்வேறு இந்திய கம்பெனிகள் பன்னாட்டு நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இப்படி இந்திய கம்பெனிகள் பன்னாட்டு நிறுவனங்களால் கைப்பற்றப்படுவது என்பது, மருந்துத்தேவைக்கு இந்தியச் சந்தையிலிருந்து எதுவும் கிடைக்காமல் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்கவேண்டிய நிலையை மேலும் தீவிரப்படுத்தும். இப்படித்தான் உள்நாட்டில் மருந்துகள் கிடைப்பது குறைந்துவருகிறது. 1998, 1999 காலத்தில் இந்தியாவில் 10 பெரிய மருந்து நிறுவனங்கள் இருந்தது என்று சொன்னால் ஒரேயொரு வெளிநாட்டு கம்பெனிதான் இங்கு மருந்துச்சந்தையில் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த 10 உள்நாட்டு நிறுவனங்களில் முதல் மூன்று பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டு கம்பெனிகளால் சொந்தமாக்கபட்டுவிட்டன.

இந்திய மருந்துத் தொழில் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் கோலோச்சுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற்போல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன்னிச்சையாகவே மருந்துப்பொருள் உற்பத்தித்துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இந்த அந்நிய முதலீடு இந்தியாவிற்குள் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவரும் நோக்கத்திலேயே அனுமதிக்கப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில், வெளிநாட்டு கம்பெனிகள் இந்திய சந்தைக்குள் நுழைவது இங்கே கொழுத்த லாபத்தை கைப்பற்றுவதற்காகத்தான்.

மருந்து காப்புரிமை

இந்திய காப்புரிமை சட்டத்தில் 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றம், இந்திய மருந்து கம்பெனிகளிடம் இருந்த ஒரு முக்கியமான தற்காப்பு ஏற்பாட்டை பறித்துவிட்டது. 2005ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய காப்புரிமை சட்டதிருத்தங்களில் முக்கியமானவை புற்றுநோய் தடுப்பு மருந்து (சோராபெனிப்), முதன்மை மருந்துக்கான காப்புரிமையை ரத்துசெய்வதன் மூலம் ஹெபடைட்டி-சி நோய்க்கான மருந்து, புற்றுநோய் தடுப்பு மருந்தான கிளீவெக்கை தயாரிப்பதற்கு நோவெர்ட்டி நிறுவனத்திற்கு காப்புரிமை மறுப்பதை உறுதிப்படுத்துவது என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. (இவை அனைத்தும் இடதுசாரி கட்சிகளின் கடும் நிர்பந்தத்தின் விளைவாகவே சட்ட திருத்தங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக புதிய மருந்துகளை இந்திய மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டது. இந்த வகையில் சுகாதார பாதுகாப்பிற்கு உதவும் விதத்தில் சமீபத்தில் சாதகமான சில தீர்ப்புகளும் வந்துள்ளன. இதில் குறிப்பாக வெளிநாட்டு கம்பெனியால் உற்பத்தி செய்யப்படுகிற காப்புரிமை பெற்ற மருந்தை இந்தியக் கம்பெனியும் உற்பத்தி செய்வதற்கு உரிமம் வழங்குவது என்பதும் அடங்கும்)

இப்படி பல்வேறு புதிய மருந்துகளுக்கு காப்புரிமை பெறப்பட்டிருந்தாலும், இந்திய சட்டத்தில் இதற்காக செய்யப்பட்டுள்ள சாதகமான மாற்றங்களை மீண்டும் சிதைக்கும் நோக்கத்துடன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மற்றும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் சவால்விடுக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்வதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டு; அதற்காக நிறுவனமயப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அமெரிக்க சட்டத்தை இந்திய மண்ணில் அமலாக்கும் நிலை

காங்கிர தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பை இந்தியாவில் அமலாக்குவதற்கு அனுமதித்துள்ளது-2009 செப்டம்பரில் புதுதில்லியில் இந்த அமெரிக்க நிர்வாகத்தின் அலுவலகம் திறப்பதற்கு இடம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பையிலும் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகங்கள் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக ஆய்வு நடத்துகின்றன, தங்களது மருந்துகளுக்கான பரிசோதனைகளை இங்கு நடத்துகின்றன, இந்தியாவின் மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும் இந்த ஆய்வை நடத்துகின்றன, இந்தியாவிற்கு இறக்குமதியாகும் மருந்துப்பொருட்களையும் கூட சோதனைக்கு உள்ளாக்குகின்றன. இந்த சோதனைகளுக்குப் பிறகு இந்திய மருந்து கம்பெனிகளுக்கு நோட்டீசும் அளிக்கின்றன. உங்களது மருந்துப் பொருட்கள் அமெரிக்க சட்டத்தின்படி தரமற்றவையாக உள்ளன என்றோ பொருத்தமான கலவையாக இல்லை என்றோ கூறி குற்றம்சாட்டுகின்றன.  ஆனால் இதை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

தவறான தரமற்ற மருந்துகள் குவிப்பு

இந்தியாவில் ஒரு சராசரி குடும்பம் ஒவ்வொரு ஆண்டும் மருந்து வாங்கவும் பரிசோதனைகள் செய்யவும் ரூ.3ஆயிரம் செலவழிக்கிறது. இதில் 50 சதவீத செலவு தவறான மருந்துகளை அல்லது தேவையற்ற மருந்துகளை வாங்குவதற்கும் தேவயைற்ற பரிசோதனைகளை செய்வதற்குமே செலவழிக்கப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.30ஆயிரம் கோடி முதல் ரூ.40ஆயிரம் கோடி வரை அப்பட்டமாக  இந்திய மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்திய குடும்பத்திலிருந்தும் ரூ.1500 திட்டமிட்டு திருடப்படப்படுகிறது. இந்திய சந்தையில் 60ஆயிரம் முதல் 80ஆயிரம் வரையிலான பல்வேறு வகை மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் இவற்றில் வெறும் 348 மருந்துகள்தான் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவையாகும். இந்த நிலையில், ஏற்கனவே கடுமையாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், இம் மருந்துகளை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கிடைப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள 80ஆயிரம் மருந்துப்பொருட்களில் பெரும்பாலானவை கழிவுப் பொருட்கள் அல்லது தவறான மருந்துகள் அல்லது எதற்கும் பயன்படாத பொருட்கள். இதில் மருந்து உற்பத்தி கம்பெனிகளும் அரசாங்க ஒழுங்குமுறை அமைப்புகளம்-குறிப்பாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு- ஒன்றுக்கொன்று உதவிகொள்ளும் விதத்தில் அப்பட்டமான ஊழல்களில் திளைத்துக்கொண்டிருக்கின்றன. மேற்கண்ட மோசமான நிலைமை தொடருவதற்கு காரணமாக உள்ளன.

அதே நேரத்தில், இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளில் 8 முதல் 10 சதவீத மருந்துகள் தரமற்றவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமை நீடிப்பதற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பே காரணம். இந்த அமைப்பில் பல்வேறு மட்டங்களில் ஊழல் புரையோடிப் போய் இருப்பது பலமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

உண்மையான மாற்றம் காண எனவே, இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு என்பது ஏராளமான பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறது; அதில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிர மற்றும் பாரதிய ஜனதாகட்சி தலைமையிலான அரசுகளால் பின்பற்றப்பட்ட நவீன தாராளமய கொள்கைகளின் விளைவாக திட்டமிட்டு அறிமுகப்படுத்தப்பட்டவையேயாகும். அனைவருக்கும் சுகாதாரம் என்பதே இலக்கு என்று நாம் உணர்வோமேயானால் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என மார்க்சிட் கம்யூனிட் கட்சி வற்புறுத்துகிறது. அத்தகைய மாற்று நடவடிக்கைகளை மார்க்சிட் கம்யூனிட் கட்சி உறுதி செய்யும்.

  1. சுகாதார உரிமைச்சட்டத்தை நிறைவேற்றவேண்டும்- அனைத்து துறைகள் மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும் விதத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வசதி மற்றும் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதியை இந்த சட்டம் உறுதி செய்ய வேண்டும்; தரமான அல்லது எளிதில் கிடைக்கும் குறைந்த கட்டணத்தில் இந்த வசதிகள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது மறுக்கப்பட்டலோ அது நீதி கிடைக்க வேண்டிய ஒரு குற்றமாக கருதப்படவேண்டும்.
  2. சுகாதாரத்திற்கான பொது செலவினம் அதிகரிக்கப்பட வேண்டும்- உடனடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3. 6 சதவீதமும், இடைக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமும் நிதி ஒதுக்கவேண்டும்.
  3. தரமான சுகாதார சேவைகள் எளிதாக கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
  4. சுகாதார சேவைகள் தனியார்மயமாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.
  5. மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான ஒட்டுமொத்த பயிற்சிக்கும் பொது முதலீடு அதிகரிக்கப்படவேண்டும்.
  6. அனைத்து பொது சுகாதார நிலையங்களிலும் தரமான அத்தியாவசிய மருந்துகளும் மருத்துவ சோதனை சேவைகளும் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  7. தனியார் மருத்துவமனைகளின் சுரண்டலை தடுத்து நிறுத்தவேண்டும்.
  8. பல காலமாக நடைமுறையில் இருக்கும் பொது நிதியால் செயல்படுத்தப்படும் சுகாதார காப்பீட்டுத்திட்டங்களை (பல மாநிலங்களில் வெவ்வேறு சுகாதார காப்பீட்டுத்திட்டங்கள் உள்ளன) ஒரு விரிவடைந்த, பொது நிதியால் செயல்படுத்தப்படுகிற பொது சுகாதார காப்பீட்டு கட்டமைப்பாக ஒருங்கிணைக்க வேண்டும்.
  9. அத்தியாவசிய மற்றும் பாதுகாப்பான மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்- அனைத்து மருந்துகளுக்கும் உற்பத்தி செலவு அடிப்படையிலான விலை கட்டுப்பாடு, மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள், தவறான மருந்துகள் மற்றும் தவறான மருந்துக் கலவைகளை தடைசெய்தல், போதுமான எண்ணிக்கையில் பொது மருந்துக்கடைகளை திறப்பது, மருந்துகளின் பெயர்களை அனைவருக்கும் புரியும் விதத்தில் எழுதவேண்டுமென கட்டாய விதி அமலாக்குதல், மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்திய காப்புரிமைச் சட்டத்தில் பொது சுகாதார பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்தல் மற்றும் பெரும்பாலான மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
  10. மருத்துவ பரிசோதனைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உயிரி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான நெறிகள்- இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளை நடத்துவது தொடர்பான ஒரு தெளிவான நெறிமுறைகளை வரையறை செய்தல், இந்த சோதனைகளை நடத்துவதற்கு நிதியளிக்கும் நிறுவனங்கள், அவற்றை நெறிப்படுத்தும் குழுக்கள், ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகள் ஆகிய அனைத்தையும் ஒழுங்குபடுத்துகிற ஒருங்கிணைந்த வரையறையாக உருவாக்குவது அவசியம்.  மேலும், மருந்துகளுக்கான பரிசோதனையில் பங்கேற்று அதன் விளைவாக பாதிக்கப்பட்டால்  அவர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்குவதை உறுதி செய்வதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட வேண்டும்.

English Version:-

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply