அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினின்ஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மே தினமான இன்று சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்கு, இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஒருமைப்பாட்டை விரிவாக்கிக் கொள்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொழிலாளர் வர்க்கம் நடத்திவரும் போராட்டத்துடன் இடதுசாரிக் கட்சிகளும் தங்களை இணைத்துக் கொள்கின்றன.

இதற்காக மத்திய அரசாங்கம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அவசரகதியில் மேற்கொண்டிட வேண்டும்:

  • அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
  • நாடு முழுதும் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த 35 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவு செய்திட வேண்டும். ‘பிரதமர் கேர்ஸ் நிதியம்’ என்னும் தனியார் அறக்கட்டளை மூலமாக வசூலித்த பணத்தை விடுவித்திட வேண்டும். 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘சென்ட்ரல் விஷ்டா’ என்ற பெயரில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதை நிறுத்திட வேண்டும். அந்தத் தொகையை தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும்.
  • தகுதிபடைத்த அனைத்து நிறுவனங்களும் தடுப்பூசிகளும், உயிர்காக்கும் மருந்துகளும் உற்பத்தி செய்வதற்கான கட்டாய உரிமங்கள் கொள்கையைக் கொண்டுவர வேண்டும்.
  • அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் விலைகள் மீது கறாரான கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும். அவற்றைப் பதுக்குவோர் மீதும், கள்ளச் சந்தையில் விற்போர் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
  • வருமான வரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் 7,500 ரூபாய் நேரடி மாற்று செய்திட வேண்டும். தேவைப்படும் அனைவருக்கும் உணவு தான்யங்கள் இலவசமாக அளிக்கப்பட வேண்டும்.
  • அரசாங்கம், அனைத்து மருத்துவமனைகளிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவமனைப் படுக்கைகள், வென்டிலேடர்கள், அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் கிடைப்பதை உடனடியாக உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

நாங்கள் அளித்தப் பரிந்துரைகள் எதையும் கேட்காது அரசாங்கம் ஓராண்டை வீணடித்துவிட்டது. இதன் மூலம் அரசாங்கமே மிகவும் வேகமான முறையில் நோய் பரவுவதற்கு மிக முக்கிய காரணியாக இருந்திருக்கிறது.

இந்தியா இனியும் காலத்தை வீணடிக்க முடியாது. குறைந்தபட்சம் இப்போதாவது மேலே கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும். இல்லையேல், மத்திய அரசாங்கம், ஆட்சியில் நீடித்திருப்பதற்கான தார்மீக அதிகாரத்தை (moral authority) முற்றிலுமாக இழந்துவிடும்.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...