அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரகத்தின் மீது தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள கியூபா தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள கியூபா தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. ஓர் அடையாளம் தெரியாத நபர், தூதரகத்தின்மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  

கியூபா தூதரகத்தில் கியூபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள்  இருந்ததன் காரணமாக,  இதில் தூதராலயத்தைச் சேர்ந்த எவருக்கும் காயம் இல்லை.

தூதரகத்தில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது, அந்தத் தூதரகம் அமைந்துள்ள நாட்டின் பொறுப்பாகும் என்று வியன்னா கன்வென்ஷன் ஆணைபிறப்பித்திருக்கிறது.

இங்கே இது அமெரிக்காவின் பொறுப்பாகும். ஆனால், அமெரிக்கா கியூபா தூதரகத்திற்குப் பாதுகாப்பு அளித்திடத் தவறியிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரிகள் இதுவரையிலும் கியூப தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் இல்லை, இந்த சம்பவத்தைக் கண்டித்து அதிகாரபூர்வமாக அறிக்கை எதையும் வெளியிடவும் இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமைச்சர் மைக் போம்பியோ ஆகியோரின் கியூபாவிற்கு விரோதமான பேச்சுக்கள்தான் இத்தகைய தாக்குதலுக்குக் காரணமாகும்.   

சோசலிஸ்ட் கியூபா கோவித்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கின்ற சமயத்தில், அந்நாட்டின் தூதரகத்தின்மீது இவ்வாறு தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. கியூபா மருத்துவக் குழுக்கள் தற்போது ஐரோப்பா நெடுகிலும், லத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ள  59 நாடுகளில் சேவை செய்துகொண்டிருக்கிறது.

பொலிவியாவில் நடந்ததைப்போன்று, இத்தகைய மருத்துவ ஊழியர்களின் மீதும்கூட தாக்குதல் நடத்திட ஊக்கப்படுத்துவதில் அமெரிக்காவின் பங்கினை இது ஆவணப்படுத்தப்படுகிறது.

கியூபாவிற்கு எதிராக மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைவிதித்திருப்பதைக் கண்டித்து ஐ.நா. நிறைவேற்றியுள்ள பல்வேறு தீர்மானங்களை மதித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

பொருளாதாரத் தடையை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் மற்றும் அதன்மீது ஏவியுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ரத்து செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

அமெரிக்க அரசாங்கம், கியூபா மீது தாக்குதல் தொடுத்த நபர்கள் மற்றும் குழுக்கள் மீது நடவடிக்கைகள் தொடங்கிட வேண்டும். இப்போதைய கொரானா வைரஸ் தொற்று காலத்தில் உலகில் உள்ள மக்களுக்கு அளப்பரிய சேவை செய்து வரும் சோசலிஸ்ட் கியூபாவிற்கும் அதன் மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் ஒருமைப்பாட்டை மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...