அயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

புதுதில்லி, ஆக.3-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளை செய்யட்டும் என்றும், மாறாக ‘பூமி பூஜை’ செய்யும் பணியை மாநில நிர்வாகமோ, மத்திய அரசாங்கமோ இதில் சம்பந்தப்படக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அயோத்தி தாவா, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தம் மூலமாகவோ, அல்லது, நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாகவோ தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆரம்பம் முதல் கூறி வந்தது. உச்சநீதிமன்றம், கோவில் கட்டுவதற்காக வழியேற்படுத்தி, தன்னுடைய தீர்ப்பை அளித்திருந்தது. எனினும், இந்தக் கட்டுமானப் பணி ஓர் அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தது.

எனினும் அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான ‘பூமி பூஜை’ வைபவத்தை உத்தரப்பிரதேச நிர்வாகம், மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து மேற்கொள்ள இருக்கிறது. நாட்டின் பிரதமரே இதில் பங்கேற்கச் செல்கிறார். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் எதிரானதாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஒரு கிரிமினல் நடவடிக்கை என்றும் கண்டித்திருக்கிறது. அதனைச் செய்த கயவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, மத்திய மாநில அரசுகள் அப்போது பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதை இப்போது நியாயப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுதும் காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் எவ்விதமான மதஞ்சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கிறது. அயோத்தியில் இறக்கிவிடப்பட்டுள்ள கோவில் பூசாரிகளுக்கும் போலீசாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது, மனித உயிர்களுக்கு எந்த அளவிற்கு ஆபத்து இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

இந்நிலையில் நாம், அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை மற்றும் நீதியை உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் கறாராகப் பின்பற்ற வேண்டும் என்றும் மக்களின் மத உணர்வுகளை எவரும் தங்களின் குறுகிய அரசியல் குறிக்கோள்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...