அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக தொழிலாளர்நலச் சட்டங்கள் திருத்தம் குடியரசுத் தலைவர் தலையிட்டு தடுத்த நிறுத்த வேண்டும்!!

இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கடிதம்

அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக, தொழிலாளர்நலச் சட்டங்கள் திருத்தப்பட்டிருப்பதனை, குடியரசுத் தலைவர் தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, ராஷ்ட்ரிய ஜனதா தள, நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, விடுதலைச்சிறுத்தைகள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் தொல்.திருமாவளவன் முதலானவர்கள் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் உள்ள கோடானுகோடி தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் பாதுகாப்பு, நலன்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கிற ஆழமான பிரச்சனை குறித்து இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறோம்.

உண்மையில், இது ஒட்டுமொத்த நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயமாகும். இது, இப்போது இருந்துவரும் தொழிலாளர் நலச்சட்டங்களையும், தொழிலாளர்கள் இத்தனை ஆண்டு காலம் கடினமாகப் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகளையும் பயனற்றதாக்குகிறது. அரசாங்கம், கோவிட்-19 தொற்றை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சமூக முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு இதனைச் செய்திருக்கிறது. இப்பிரச்சனைகளுக்குத் தங்களின் கவனத்தை ஈர்க்கிறோம். இவை அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளாகும். எனவே இது இந்நாட்டின் சட்டங்களுக்கும் எதிரானதாகும்.

கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற சாக்கில், அமலில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களில் மிகவும் மோசமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இவை, உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும், நலன்களையும் கடுமையாக ஆபத்திற்கு உள்ளாக்கும். ஏற்கனவே, சமூக முடக்கத்தின் விளைவாக நாடு புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையையும் அவர்களுக்கு ஆட்சியாளர்களால் மனிதாபிமானமற்ற முறையில் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்களின் உயிர் மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, இன்றையதினம் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள நிலைமைகள் காட்டுமிராண்டித்தனமானவைகளாகும்.

நேற்றிரவு, புலம்பெயர் தொழிலாளர்கள் 16 பேர், அநேகமாக அனைவரும் பழங்குடியினர், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பாலுள்ள தங்கள் கிராமங்களுக்குச் செல்வதற்காக ரயில் பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது ரயில் ஏறி இறந்த கொடுமை மகாராஷ்ட்ராவில் நடந்திருக்கிறது.

இதேபோன்று விசாகப்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள விபத்து காரணமாக 12 பேர் இறந்துள்ளார்கள். நூற்றுக்கம் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு “உங்களுடைய அரசாங்கத்தில்” தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உயிர்கள் மிகவும் மோசமாக உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் நாட்டின் இப்போதைய நிலைமையாகும்.

ஏற்கனவே, “உங்களுடைய அரசாங்கம்” தற்போது இருந்துவரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டங்களாகச் சுருக்கிட நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. இவற்றில் ஊதியங்கள் சட்டம் மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்றவை நடைமுறையில் இருந்து வருகின்றன.

இவை நிறைவேற்றப்படுவதற்கு முன்னரேயே, இருக்கின்ற சட்டங்கள் அனைத்தும் மீறப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டால், பின்னர் ஆட்சியாளர்கள் ஒரு நிர்வாக உத்தரவு மூலமாகவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைக் கலந்தாலோசிக்காமலேயே அனைத்தையும் மாற்றிவிடுவார்கள். இது நிச்சயமாக தொழிலாளர் விரோத, அரக்கத்தனமான நடவடிக்கைகளாகும்.

கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில், நாட்கூலித் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பது 12 மணி நேரம் என ஆட்சியாளர்களின் நிர்வாக உத்தரவு மூலமாகவே உயர்த்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கிறது.

தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் எதுவும் செய்யாமலேயே இதனைச் செய்திருக்கிறார்கள். இதில் மேலும் சில மாநில அரசுகள் இணைந்து கொள்ள இருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநில அரசு மூன்று சட்டங்களைத் தவிர மற்ற அனைத்துத் தொழிலாளர் நலச் சட்டங்களையும் மூன்று ஆண்டு காலத்திற்கு ரத்து செய்துவிட்டது. மத்தியப் பிரதேச அரசாங்கம், இதேபோன்று, ஒரு அமைச்சரவைக்கூட்ட முடிவின்கீழ் ஆயிரம் நாட்களுக்கு, அனைத்து நிறுவனங்களுக்கும் அனைத்து தொழிலாளர் நலச்சட்டங்களிலிருந்தும் விலக்கு அளித்திருக்கிறது.

தொழிலாளர்கள் தாங்கள் அணிதிரள்வதற்காகவும் சங்கம் வைத்துக்கொள்வதற்காகவும் இருந்த அடிப்படை உரிமை மிகவும் மோசமானமுறையில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது.

கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில், “உங்கள் அரசாங்கம்” அதில் முழுமையாக ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளைச் செய்து தருவதற்குப் பதிலாக, இவ்வாறு தொழிலாளர்களின் உரிமைகளை “உங்கள் அரசாங்கம்”, மத்தியில் மற்றும் பல மாநிலங்களிலும் நீர்த்துப்போகச் செய்துகொண்டிருக்கின்றன.

இவை அனைத்தையும், நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கிறோம் என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிறது. இந்தத் தொற்று வெளிப்படுவதற்கு முன்பே, இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையை நோக்கி சென்றுவிட்டது.

“உங்கள் அரசாங்கம்”, சமூக முடக்கத்தால் பாதிப்புக்கு உள்ளான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாத்திடவோ, அவர்களின் பசி-பஞ்சம்-பட்டினி நிலையைப் போக்கிடவோ அநேகமாக எதுவுமே செய்திடவில்லை. 14 கோடி தொழிலாளரிகள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். நிச்சயமாக, கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய சாவைக் காட்டிலும் அதிகமான அளவில் மக்கள் பசி-பஞ்சம்-பட்டினியால் இறப்பதை அனுமதிக்க முடியாது என்று நீங்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்வீர்கள்.
கேரளாவைத் தவிர இதர மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம், மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருக்கிறது. இப்போது அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கச் செல்வதற்கு, ரயில் கட்டணத்தை அளிக்க வேண்டும் என்று கோருவது கொடுமையிலும் கொடுமையாகும். கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக அவர்கள் நடத்தப்பட்டு, அவர்களுக்குப் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்தியா, ஒரு வீர்யமிக்க நவீன் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருப்பதற்குப் பதிலாக இன்றையதினம் மத்தியகால காட்டுமிராண்டித்தனம் மற்றும் அடிமைச் சமுதாய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல என்பது மாண்புமிகு குடியரசத் தலைவர் அவர்களே, மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அவர்தகளை அடிமை நிலைக்குத் தள்ளுவது, அரசமைப்புச்சட்டத்தை மீறும் செயல் மட்டுமல்ல, அதனை செல்லாததாக்குவதுமாகும்.

எனவே, அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ள நீங்கள், அதற்கு உண்மையாக இருந்து, தொழிலாளர் வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிராக எடுக்கப்பட்டுள்ள இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை நிறுத்துவதற்கு நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இன்றையதினம் குரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடித்திட நாட்டு மக்கள் அனைவரின் ஒற்றுமையும் அவசியம் தேவைப்படக்கூடிய இன்றைய சூழ்நிலையில் இதனை நீங்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு அவர்கள் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்கள்.

Check Also

சட்டமன்றம் – நாடாளுமன்றம் துவங்கும் நாள் மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்!

செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி (மார்க்சிஸ்ட் – ...