அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி

தி இந்து நாளிதழ் (தில்லிப் பதிப்பு சார்பில்) செய்தியாளர் ஷோபனா கே. நாயர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களிடம், கேரளம் மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிவாகை சூடியது குறித்தும் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் நேர்காணல் கண்டார். அப்போது அவர் கேட்ட கேள்விகளும், சீத்தாராம் யெச்சூரி அளித்த பதில்களும் வருமாறு;

(தமிழில்: ச. வீரமணி)

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கேரளாவிலும், காஷ்மீரிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

சீத்தாராம் யெச்சூரி: இடதுசாரிகள் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதில் மிகவும் நிலையான மற்றும் உறுதியான போராளிகள் என்று பார்க்கப்படுகின்ற அடிப்படைக் காரணி மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற போதிலும், கேரளாவிலும் காஷ்மீரிலும் வெற்றி பெற்றதற்கானக் காரணங்கள் என்பவை விரிவான அளவில் வித்தியாசமானவைகளாகும். இவை, இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய அளவில், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், ஆதாயங்களை அளித்திருக்கிறது.

கேரளாவில், கடந்த ஐந்தாண்டுகளில், வெள்ளம் ஏற்பட்ட சமயங்களாக இருந்த போதிலும் சரி, அல்லது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் சரி, சமூக முடக்கக் காலத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்ததிலும் சரி, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, மக்களுக்கு நிவாரணம் அளித்தது, தேர்தலில் எங்கள் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்புகளைச் செய்திருக்கிறது. முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி, பாஜக-வுடன் இணைந்து கட்டவிழ்த்துவிட்ட அனைத்துப் பிரச்சாரங்களும், வாக்காளர்கள் மத்தியில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்திடவில்லை.

ஜம்மு-காஷ்மீரில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் நிற்பவர்களாக இடதுசாரிகள் பார்க்கப்படுகிறார்கள். பாஜக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் “இரும்புத் திரை”யை ஏற்படுத்தியபோது அதனைக் கிழித்துக் கொண்டு உள்ளே சென்ற முதல் அரசியல் கட்சித் தலைவராக நான் இருந்தது, மக்கள் மத்தியில் எங்கள் மீதான அபிமானத்தை அதிகரித்தது. இடதுசாரிகளின் பொருத்தப்பாட்டை அளவிடுவதற்கான கருவியாக தேர்தல்களைப் பார்க்கக்கூடாது என்று எப்போதுமே நான் கூறி வந்திருக்கிறேன். தேர்தல் செயல்பாடுகள் முக்கியமானவைகள்தான். இது தொடர்பாக எவரொருவரும் மாற்றுக் கருத்தைக் கூறமாட்டார்கள். ஆனாலும் இடதுசாரிகளின் பலம் என்பது, மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களுக்குள்ள வல்லமையால் அளவிடப்படுவதாகும்.

கேள்வி: இடதுசாரிகள் குறித்து மேற்கு வங்கத்திலிருந்து இதுபோன்ற ஆக்கபூர்வமான அறிக்கைகளை ஏன் கேட்கப்பட முடியாமல் இருக்கிறது?

சீத்தாராம் யெச்சூரி: வங்கத்தில் பிரதானமான பிரச்சனை என்னவென்றால், தேர்தல்கள் முறையான வழியில் நடைபெறவில்லை என்பதேயாகும். அங்கே தேர்தல்கள் நடைபெறும் சமயங்களில், அவை மக்களின் விருப்பத்தைத் தெரிவிப்பதைவிட தேர்தல் தில்லுமுல்லுகளையே அதிகமான அளவில் பிரதிபலிக்கின்றன. இப்போது, அங்கே காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்திருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்று பார்ப்போம். இதுதொடர்பாக மாநில அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. இப்பேச்சுவார்த்தைகளில் நாங்கள் தரும் அழுத்தம் என்பது இரு தரப்பினருக்கும் இடையே தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும், கூட்டு இயக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

கேள்வி: வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு பெரிய அளவிற்கு சவாலாக பாஜக வளர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில், காங்கிரசும் இடதுசாரிகளும் முக்கியத்துவம் பெற்றவர்களாக எப்படி வர முடியும்?

சீத்தாராம் யெச்சூரி: பிரதான காரணம், திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கூர்மையான முறையில் அதிருப்தி அதிகரித்திருக்கிறது என்பதேயாகும். இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை யார் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்? இடதுசாரிகளும் காங்கிரசும் தனித்தனியே இருந்த சமயத்தில், பாஜக, தாங்கள்தான் திரிணாமுல் காங்கிரசுக்கு மாற்று என்று காட்டிக்கொள்வதுபோல் தோற்றமளித்திருக்கிறது. இதற்கு ஊடகங்கள் வெகுவாகப் பிரச்சாரத்தைச் செய்திருக்கின்றன. பிரதமரா, முதல்வரா என்றும், மத்திய அரசா, மாநில அரசா என்றும் ஊடகங்கள் பிரச்சாரத்தை வெகுவாகச் செய்துகொண்டிருக்கின்றன. மேலும், மாநிலத்தில் மதவெறி அடிப்படையில் பிரச்சாரமும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. வங்கம், கணிசமான அளவிற்கு சிறுபான்மை மக்கள் வாழும் மாநிலமாகும். திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் மதவெறியைத் தூண்டிவிடுவதில் ஒன்றையொன்று ஊட்டி வளர்த்துக்கொண்டிருக்கின்றன. இப்போது இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிற தேர்தல் புரிந்துணர்வு,

மக்கள் மத்தியில் திரிணாமுல் காங்கிரசுக்கு மாற்று பாஜக அல்ல, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணிதான் என்கிற உணர்வினை ஏற்படுத்திடும்.

கேள்வி: விவசாயிகள் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சமிக்ஞை எதையும் இதுவரை காட்டவில்லை. அரசாங்கம் தன் நிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால், எதிர்க்கட்சிகளின் பங்கு என்னவாக இருக்கும்?

சீத்தாராம் யெச்சூரி: இது ஒன்றும் அரசியல் கட்சிகளின் இயக்கம் அல்ல. நாங்கள் ஒன்றும் இதனைத் துவக்கிடவில்லை. அல்லது நாங்கள் மட்டும் இதனை ஆதரித்திடவில்லை. இது ஒரு விவசாயிகளின் இயக்கமாகும். இதற்கான வேலை என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. நாட்டில் இயங்கும் 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு என்ற பதாகையின் கீழ் ஒரணியில் திரண்டிருக்கின்றன. மத்திய அரசாங்கம், வேளாண் சட்டங்கள் தொடர்பாக, அவசரச் சட்டங்களைப் பிரகடனம் செய்தவுடனேயே இதற்கெதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன.

அடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயக விரோதமான முறையில், நாடாளுமன்ற நடைமுறை விதிகள் மற்றும் நெறிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இவை எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் பார்த்தோம். இத்தகு நடவடிக்கைகள்தான் விவசாயிகள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது அவர்களின் ஜீவமரணப் போராட்டம். இவற்றின் விளைவாக அவர்களின் எதிர்காலமே ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த விவசாயமும் ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. எனவேதான் விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். போராட்டத்தில் 40 பேர் இதுவரை உயிர்ப்பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எனினும் கூட விவசாயிகள் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாது பிரதமர் இருந்துகொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். எப்போதாவது அவர் பேசினார் என்றால், அவர் எதிர்க்கட்சியினர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறாரேயொழிய, பிரச்சனையை முழுமையாகக் கண்டு கொள்வதில்லை.

இப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம். பேச்சுவார்த்தையில் ஏதேனும் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

எதிர்க்கட்சியினரைப் பொறுத்தவரையில், 11 கட்சிகள் ஒருங்கிணைந்திருக்கின்றன. நாங்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தோம். வேளாண் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, பேச்சுவார்த்தையை நடத்துங்கள் என்று கூறினோம். பேச்சுவார்த்தையின்போது விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் தூக்கிப்பிடிக்கின்ற கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகளும் வரட்டும். அனைத்துத் தரப்பினரும் அமர்ந்து விவாதிக்கட்டும். விவாதத்தின் அடிப்படையில் புதிய சட்டமுன்வடிவுகளை உருவாக்குங்கள். இதுதான் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, ஜனநாயகபூர்வமான வழியாகும். இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியுறுமானால், பின் எதிர்க்கட்சியினர் தனியே கூடி, ஒருவர்க்கொருவர் கலந்தாலோசனை செய்து இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

கேள்வி: எதிர்க்கட்சியினரை ஒருங்கிணைப்பதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கேந்திரமான பங்கு இருந்ததைப் பார்க்கமுடிந்தது. சமீபத்தில், சிவசேனைக் கட்சித் தலைவரான சஞ்சய் ராத், ஐமுகூ வலுப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது என்றும், அநேகமாக தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் அதற்குத் தலைமையேற்க வேண்டும் என்றும் கூறினார். இது குறித்து உங்கள் கருத்து…

சீத்தாராம் யெச்சூரி: சஞ்சய் ராத் அறிக்கை சம்பந்தமாக சரத் பவாரும், சஞ்சய் ராத்துமே விளக்கம் அளித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது உண்மை. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இந்தத் திசைவழியிலேயே எங்கள் முயற்சிகளும் அமைந்திருக்கின்றன. வேளாண் சட்டங்களை ரத்து செய்வதில் மட்டுமல்ல, இதற்கு முன்பு பண மதிப்பிழப்பு ஏற்படுத்தப்பட்ட சமயத்திலும், சமூக முடக்கம் விரிவுபடுத்தப்பட்ட சமயத்திலும், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை சமாளித்திட அரசாங்கம் கையாண்ட விதம் குறித்தும், பொருளாதார மந்த நிலை குறித்தும் இன்னும் இதுபோன்று பல அம்சங்களிலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கட்ட நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டோம்.

2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு, இந்தியக் குடியரசில் புதிய நிலைமைகள் உருவாகி இருக்கின்றன. இந்தியக் குடியரசின் அடிப்படைக் குணாம்சத்தை மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்திருக்கிறார்கள். முன்பெல்லாம், இந்திய அரசுமைப்புச் சட்டத்தினை அரித்து வீழ்த்திடும் நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தை முற்றிலுமாக அழித்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்காகத்தான் இப்போது ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும், நாட்டில் மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கூர்மைப்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்பட்டு வருகிறது. அதேசமயத்தில் மறுபக்கத்தில் அரசாங்கம், ‘புனித ஜிகாத்’ (‘love jihad’) என்னும் சட்டத்தைக் கொண்டு வருவதில் மும்முரமாக இருக்கிறது. நம் அரசமைப்புச் சட்டத்தையும், இந்தியக் குடியரசின் அடிப்படைக் குணாம்சத்தையும் பாதுகாத்திட, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும்.

கேள்வி: எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை தாங்குவதில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துவிட்டது என்று கூறப்படுகின்ற கருத்துடன் நீங்கள் ஒத்துப்போகிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் கட்சி, தனித்த பெரிய கட்சியாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சில பொறுப்புகள் உண்டு. அதில் பலவீனங்கள் காணப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல்கள் நடந்து கொண்டிருக்கிறது, சிலர் கட்சிவிட்டு கட்சி தாவிக் கொண்டிருக்கிறார்கள். இவையும் பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், அவையெல்லாம் இந்தியக் குடியரசையும், இந்திய அரசமைப்புச்சட்டத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை நீர்த்துப்போகச் செய்திட முடியாது, செய்திடவும் கூடாது.

கேள்வி: கேரளாவில், 21 வயதுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக, தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அடுத்து இதேபோன்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உட்பட அனைத்து அமைப்புகளிலும் இளைஞர்கள் பங்கெடுப்பார்களா என்கிற கேள்வியை பலர் மத்தியில் எழுப்பியிருக்கிறது.

சீத்தாராம் யெச்சூரி: எந்தவொரு அரசியல் கட்சியிலும், மேலேயிருந்து திணிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது கீழேயிருந்து நடைபெற வேண்டிய ஒன்றாகும். ஆர்யா ராஜேந்திரன் மட்டுமல்ல, கேரளாவில் பஞ்சாயத்துத் தலைவர்களாக இளைஞர்களை முன்னுக்குக் கொண்டு வந்ததில் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இயக்கத்திற்குள் இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். அது நடைபெறுகிறது என்பதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் எப்போதுமே என் கருத்து என்னவெனில், எங்கள் கட்சி இந்திய மக்களின் கட்சியாக இருந்திட வேண்டுமென்றால், இந்தியாவில் மக்களின் சராசரி வயது 40. எங்கள் தலைமையின் சராசரி வயது 60. இத்தகைய பொருத்தமின்மை தொடர முடியாது. இது சரி செய்யப்பட வேண்டியிருக்கிறது. இது சரி செய்யப்படும்.

நன்றி: தி இந்து நாளிதழ், 31.12.2020

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...