அரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் வெளியேற வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஒரு மாத காலம் கடந்த பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திவருகிறார்.

கொரோனா பெரும் தொற்று நோய் காரணமாக முழுமையாக வகுப்புகள் நடக்கவில்லை, நீட் தேர்வே நடக்குமா என தெரியாத நிச்சயமற்ற நிலை இப்படியான சூழலுக்கு நடுவில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது நீட் தேர்வு நடந்து அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகள் அனைத்திலும் இருந்து அதிகபட்சமாக 8 பேர் மட்டுமே தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியும். இப்படியான கவலையளிக்கும் சூழ்நிலையில்தான், தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துகிறார்.

இந்த சூழலில், தமிழக எதிர்க் கட்சித் தலைவருக்கு ஆளுநர் எழுதிய பதில் கடிதத்தில், இந்த சட்டத்தின் மேல் முடிவு எடுக்க இன்னும் மூன்று நான்கு வாரங்கள் ஆகும் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ஆளுநர் இந்தக்காலத்தில் இதைத் தவிர வேறு பிரதான வேலை என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
இந்த சட்டம் பற்றி, ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்தபோதே இதனை அவர் தெரிவித்தாரா? அப்படியென்றால் அமைச்சர்கள் ஏன் இதுபற்றி தெரிவிக்கவில்லை? என்ற கேள்விகளும் எழுகின்றன.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில், மத்திய அரசு பறித்துக் கொண்ட இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டும் இட ஒதுக்கீடு இல்லை என அறிவித்துள்ளது, பல்வேறு போட்டித்தேர்வுகளில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகித இடம் கொடுப்பதற்காக பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடங்களை பறித்துக் கொண்டது என தொடர்ச்சியாக வரக்கூடிய செய்திகள், இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டையே மொத்தமாக ஒழித்துக் கட்ட பாஜக முயற்சிக்கிறது என்ற கருத்திற்கு வலுச்சேர்க்கின்றன. இப்படியான சூழலில் தமிழக ஆளுநரும் அரசமைப்புச் சட்டத்தின்படியான தனது கடைமையை நிறைவேற்றாமல், பாஜகவின் கொள்கையை அமல் படுத்தும் நோக்கிலேயே தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நலனையும் அதன்மூலம் தமிழக மருத்துவ கட்டமைப்பையும் சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு துணையாக உள்ளார் என கருத இடம் ஏற்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கவே முடியாது.

ஆளுநர் உடனடியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...