அரசின் அலட்சியத்தால் மாற்றுத் திறனாளி மரணம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் மாற்றுத் திறனாளிகளை காவல்துறை கைது செய்து சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்துள்ளனர்.

இவர்களில், குப்புசாமி (வயது 67) என்பவர் மாற்றுத் திறனாளியின் பாதுகாவலராக வந்தவர் 17-02-2016 அன்று இரவு 7 மணிக்கு கைது செய்து வைத்துள்ள இடத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பலனின்றி 18-02-2016 காலை 3.30 மணிக்கு மரணமடைந்தார். மரணமடைந்த குப்புசாமி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மாதனூர் ஆத்தோரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

இதேபோன்று கைது செய்யப்பட்டுள்ள சின்ன சேலத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி இராஜாராம் (வயது 40) என்பவர் மயக்கமடைந்த நிலையில் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பிப்ரவரி 8.9 ஆகிய இரு நாட்கள் போராட்டத்தை நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை பலப்பிரயோகம் செய்து அடக்கியது. தமிழக அரசு அப்போதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

நேற்றைய தினம் மீண்டும் அவர்கள் போராடியபோது காவல்துறை கைது செய்துள்ளது. தங்களது சொந்த நடமாட்டத்திற்கே மற்றவர்களை சார்ந்து இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகள் மீது பேச்சுவார்த்தை நடத்திட மறுப்பது ஜனநாயக விரோத போக்கு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற செயலாகும். மாநில அரசின் அலட்சியத்தால் உயிரிழப்புகளும், இதர பாதிப்புகளும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

மாநில அரசின் இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், மாற்றுத் திறனாளிகளின் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் மரணமடைந்த குப்புசாமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...