அரசியல் கலாச்சாரத்தை மீட்க தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி த.மா.கா அணியை ஆதரிப்பீர்!

14-5-2016 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தர்மபுரியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியின் போது அளித்த அறிக்கை :

திமுக – அதிமுக ஆட்சிகளில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னடைந்துள்ளது. அரசியல் கலாச்சாரத்தை மீட்க தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி த.மா.கா அணியை ஆதரிப்பீர்!

திமுக அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் தமிழக மக்களுக்கு பலனளிக்கவில்லை. இக்காலகட்டங்களில் தமிழக உற்பத்தி வளர்ச்சிவீதம், தேச சராசரி உற்பத்தி வளர்ச்சியை விடவும் குறைவாகவே இருந்துள்ளது. வேளாண் உற்பத்தி விகிதமும் முன்னேற்றம் காணவில்லை. பெருமளவில் நிலங்கள் விவசாயத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 70 சதவீதம் விவசாயிகள் நிலமற்றவர்களாகவும், 44.5 சதவீதம் பேர் விவசாயத் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

சிறு, குறுந்தொழில்களே 75 சதவீதம் வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிப்பதிலேயே இரண்டு கழகங்களும் குறியாய் இருந்துள்ளன. பெரும் சலுகைகள் கொடுத்து ஒப்பந்தம் போடுகின்றனர். தடையற்ற மின்சாரமும், குறைந்த விலையில் நிலமும் கொடுத்தாலும் ரூ.1 கோடி முதலீட்டுக்கு ஒரு வேலைவாய்ப்பு கூட வரவில்லை.

அரசுப் பணிகளில் காலியிடங்கள் அதிகரிக்கின்றன. சொற்பமான புதிய நியமனங்களிலும் பெருமளவில் லஞ்ச முறைகேடுகள் நடக்கின்றன. கல்வி கடைச்சரக்காக்கப் பட்டுள்ளது. கிரானைட், தாதுமணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளைகள் மிகப்பெருமளவில் நடந்துள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சகாயம் ஐ.ஏ.எஸ், ககன்தீப் சிங் பேடி ஆகியோரின் அறிக்கைகள் மிகப்பெரும் முறைகேடுகளை வெளிப்படுத்தியுள்ளன. இவற்றை தடுப்பது பற்றியோ, இதனால் அரசுக்கு  ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு பற்றியோ திமுகவும், அதிமுகவும் எதுவும் சொல்லவில்லை.

தமிழகத்தின் அரசியல் கலாச்சாரத்தை இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு சீரழித்து வருகின்றனர். இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யவிருந்த சுமார் ரூ.102 கோடி பணத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது. திமுக, அதிமுக என இரண்டு கட்சியினரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ”வாக்குக்கு பணம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டோம்” என்று திருச்சியில் நடைபெற்ற மாற்று அரசியல் வெற்றி மாநாட்டிலும், தமிழகம் முழுவதும் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி -– தமாகா அணியினர் உறுதியெடுத்துக் கொண்டோம். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தகவல்கள், குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், இரண்டு கட்சித் தலைமைகளும் எவ்வித குற்ற உணர்வுமின்றி இதுபற்றி மௌனம் சாதிக்கின்றன.

திமுகவும், அதிமுகவும் அரசியலை வியாபாரமாக்கி, மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளனர். மேலிருந்து, கீழ்வரை ஊழலும், லஞ்சமும் புரையோடிப் போயுள்ளது.

இந்த நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அரசியல் மாற்றமும், கொள்கை மாற்றமும் தேவை. அதற்கான உறுதியை மக்கள் மத்தியில் தேமுதிக –-  மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி முன்வைத்துள்ளது. இளைஞர்கள், முதன்முறை வாக்காளர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமிழ் மாநில காங்கிரஸ் அணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...