அரசியல் தீர்மானத்தின் முதல் பகுதி, 20-வது அகில இந்திய மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

20வது அகில இந்திய மாநாடு

அரசியல் தீர்மானம்

(2012 ஏப்ரல் 4-9 கோழிக்கோட்டில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டியல் நிறைவேற்றப்பட்டது)

சர்வதேச நிலைமை

1.1 கட்சியின் 19-வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு முதலாளித்துவ உலகம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. 1930களில் ஏற்பட்ட பொரு ளாதார பெருமந்தத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் நெருக்கடி சர்வதேச நிதி மூலதனம் பின்பற்றிய நவீன தாராளமய முதலாளித்துவப் பாதையின் நேரடி விளை வாகும். நீண்டகாலமாக நீடிக்கும் இந்த நெருக்கடி நிதி மூலதனத்தால் இயக்கப்படும் உலகமயமாக்கல் கொள்கையின் உறுதியற்ற தன்மையை வெளிப்படுத்தியது. நவீன தாராளமய முறைமை மற்றும் அதன் விளைவுகளான சமத்துவமின்மை மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மைக்கு எதிராக உலகளாவிய முறையில் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. வளர்ச்சியடைந்த பொருளாதார நாடுகளில் மேலும் மேலும் மக்கள் தங்களது வாழ்வாதாரம் மற்றும் சமூக நலப் பலன்கள் மீதான கொடூரமான தாக்குதலுக்கு எதிராக அணி திரண்டு வருகின்றனர்.

1.2 நீண்ட காலமாக நீடித்திருக்கும் பொருளாதார நெருக்கடி யைச் சமாளிக்க, அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதி பத்தியம், நெருக்கடியின் சுமையை வளர்முக நாடுகளுக்கு மடைமாற்றம் செய்யவும் மேற்காசியா மற்றும் இதர பிராந்தியங்களில் நேட்டோ அமைப்பின் மூலம் ராணுவத் தலையீட்டை தீவிரப்படுத்தவும் முயன்று வருகிறது. மறு புறத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் இடது சாரி அரசுகள் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு மாற்றுவழி உண்டு என்பதை நிலை நிறுத்தி வருகின்றன. பன்முக உலகிற் கான போக்கு வலுப்பட்டு வருவதோடு நாடுகளுக்கிடையே பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையே வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இடது மற்றும் முற்போக்கு சக்திகளின் முன்னுள்ள சவாலாக ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை எதிர்ப்பது மற்றும் முற்போக்கான மாற்றைக் கட்டமைப்பது ஆகியவை உள்ளன. நெருக்கடியில்

உலக முதலாளித்துவம்

1.3 2007-08-ல் நிதி மூலதனத்திரட்சியின் இரக்கமற்ற கடன் வசூல் கொள்கை மற்றும் ஊகபேரத்தின் காரணமாக உலக பொருளாதார நெருக்கடி துவங்கியது. நெருக்கடியில் சிக்கிய பெருவணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களை மீட்க அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள அரசுகள் வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்தன. ஒருபுறத்தில் இந்த நடவடிக்கையின் மூலம் சமாளிக்க முயன்று கொண்டு, மறுபுறத்தில் ஏகாதிபத்திய சக்திகள் குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் பொதுமக்களுக்கான அரசு செலவினத்தை வெட்டுமாறு வலியுறுத்தின. இதன்மூலம் சுமையை உழைக்கும் மக்களுக்கு மடைமாற்றம் செய்தனர். தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அரசு கஜானாவிலிருந்து பெறப்பட்ட தொகையைக் கொண்டு மீண்டும் பெரும் லாபத்தை ஈட்டத் துவங்கிய நிலையில், சமூக நலத்திட்டங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக வேலையின்மை, வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுதல் போன்ற துயரங்களை மக்கள் சந்திக்க நேர்ந்தது.

1.4 2012 ஆண்டுக்கான உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் குறித்த ஐநா சபையின் அறிக்கை டிசம்பர் 2011ல் வெளியிடப்பட்டது. 2010ல் 4 சதவீதமாக இருந்த உலகப் பொருளாதார வளர்ச்சி வீதம் 2011-ல் 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய இந்த அறிக்கை மேலும் ஒரு சுற்று நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் ஒட்டு மொத்தமாக 2012-ல் 1.3 சதவீதமாக மட்டுமே வளரும் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி

1.5 ஐரோப்பிய நாடுகள் கடன் வலையில் சிக்கியதன் மூலம் ஐரோப்பிய யூனியனின் இருத்தலே கேள்விக்குள்ளானது. பொருளாதார மந்தம் அதன் விளைவாக அரசு வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி, அதோடு சேர்ந்து திவாலாகிப் போன வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை மீட்க அரசு வாரிக் கொடுத்த மீட்புத்தொகை ஆகியவைதான் இந்த கடன் நெருக்கடிக்கு காரணங்களாகும். பெரிய நிறுவனங்களின் கடன் சுமை ஐரோப்பிய நாடுகளின் சுமையாக மாற்றப் பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக்கடன் விகிதம் 2007ம் ஆண்டு முதல் கடுமையாக உயரத் தொடங்கியது. கிரீ நாடு மிக மோச மான பாதிப்பிற்கு உள்ளானது. கிரீஸ் நாட்டின் கடன் சுமையை சீரமைப்பது மற்றும் பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு பதிலாக ஐரோப்பிய யூனியன்-சர்வதேச நிதியக் கூட்டணி கிரீ அரசுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு எதிராக கொடூரமான நிபந்தனைகளை விதித்தன. இதனால் கிரீ நாட்டில் பொருளாதார மந்த நிலை மேலும் தீவிர மானதோடு கடன் பிரச்சனை மேலும் சிக்கலானது. பல்வேறு சர்வதேச வங்கிகள் மற்றும் நிதிச் சந்தைகள் மீது தாக்கம் ஏற்படும் வகையில் கிரீ பொருளாதாரம் திவாலாகி விடுமோ என்ற பரவலான அச்சம் ஏற்பட்டது.

1.6 போர்ச்சுக்கல், ஐயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளும் கடுமையான கடன் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிதி வெட்டு சார்ந்த நடவடிக்கைகளால் பிரச்சனைகள் தீர்வதற்கு பதிலாக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் மேலும் பலவீன மடைந்தன. ஐரோப்பிய நாடுகள் கடனால் திவாலாகி விடுமோ என்ற அச்சமும் இதனால் யூரோ நாணயத்தின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியும் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பிரிட்டன் தவிர பிரான் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் யூரோ அமைப்பின் நம்பகத் தன்மையை மீட்க நிதிசார் யூனியன் உடன்பாட்டிற்கு ஒத்துக் கொண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகள் தேசிய நிதிக் கொள்கைகளைப் பொறுத்த வரையில் ஐரோப்பிய நாடுகள் இறையாண்மையை இழந்து விட்டன என்பதே இதன் பொருளாகும். பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் சமூக நலன் சார்ந்த அரசு செலவினங்கள் கடுமையாக வெட்டப்பட்ட தால் வளர்ச்சி குன்றியுள்ளதோடு வேலையின்மையும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நெருக்கடியும் அதன் தொடர்பான அமெரிக்க பொருளாதார சக்தி வலுவிழந்து வருவதும், ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடு வளரும் என்பதற்கான அறிகுறிகளாகும்.

நெருக்கடியின் தாக்கம்

1.7 வளர்ந்த நாடுகளில் 2011ம் ஆண்டில் வேலையின்மை விகிதம் சராசரியாக 8.6 சதவீதமாக இருந்தது. 2009ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 9 சதவீதத்தை யொட்டி  இருந்து வந்துள்ளது. 2011ம் ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ந்த நாடுகளில் வேலையற்றோரில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓராண்டிற்கும் மேலாக எந்த வேலையும் கிடைக்காமல் வாடினர் என்றும் 1.5 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) மதிப்பிட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள இளைஞர்களில் வேலையின்மை விகிதம் 2008ல் 13 சதவீதமாக இருந்தது. இது 2011-ம் ஆண்டின் துவக் கத்தில் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமூக நலன் சார்ந்த திட்டங்களில் அரசு செலவினம் மிகக் கடுமையாக வெட்டப் பட்டதால் வேலைவாய்ப்பு நிலை மேலும் அபாயகரமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

1.8 வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் வசதி படைத்தோருக்கும் ஏழைகளுக்குமிடையிலான இடைவெளி கடந்த 30 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (டீநுஊனு) வெளியிட்டுள்ள அறிக்கையில் வசதி படைத்தோரில் 10 சதவீதம் பேரின் சராசரி வருவாய் ஏழைகளில் 10 சதவீதம் பேரின் வருவாயை விட 9 மடங்கு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் செல்வாதார நிலையில் அடிமட்டத்தில் உள்ள 90 சதவீதம் பேரில் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை விட வசதி படைத்த 1 சதவீதம் பேரின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. வீட்டுககடன் வழங்கும் திட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் அமெரிக்காவில் லட்சக் கணக்கானோர் வீடுகளை வங்கிகள் கைப்பற்றிக் கொண்டு அவர்களை வீதிக்கு விரட்டியது. 2010ம் ஆண்டில் மட்டும் 10 லட்சம்  வீடுகளை அமெரிக்கர்கள் இழந்துள்ளனர். நடுத்தர வர்க்கத்தினர் இதனால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளர்முக நாடுகள்

1.9 வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளோடு ஒப்பிடும் போது கடந்த நான்காண்டுகளில் பெரும்பாலான வளர்முக நாடுகள் ஏறுமுகத்திலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளன. ஜி-8 நாடுகள் அமைப்பின் இலக்குகள் சமச்சீரற்றவை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகு வளரும் பொருளாதார நாடுகள் ஜி-20 அமைப்பிற்கு அழைக்கப்பட்டன. தொடரும் பொருளாதார நெருக்கடி வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் மட்டுப்படுத்தியதைக் காண முடிந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்பட்ட மந்த நிலை வளர்முக நாடுகளை வேறொரு வகையில் கடுமையாகப் பாதித்தது. ஏற்றுமதியில் தேக்கம், விவசாய பொருள்களுக்கான விலையில் வீழ்ச்சி, மூலதன பாய்ச்சலில் பின்னடைவு ஆகிய பாதிப்புகளை வளர்முக நாடுகள் சந்திக்க நேர்ந்தன.

1.10 வளரும் பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடுகள் குறிப்பாக பிரிக் நாடுகள் ஒப்பீட்டளவில் வலிமை வாய்ந்ததாக இருந்ததால் பொருளாதார அதிகாரச் சம நிலையில் மாற்றம் ஏற்பட்டது. வளரும் பொருளாதார நாடுகளின் வலிமை அதிகரித்ததால் வளர்ச்சியடைந்த முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கும் வளர்முக நாடு களுக்கும் இடையிலான முரண்பாடு பல்வேறு சிக்கல்களைக் கொண்ட தாக்கத்தை  ஏற்படுத்தியது. தங்களது மேலாதிக் கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஏகாதிபத்தியம் எடுத்த முயற்சிகளும், வளர்முக நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் மேற் கொண்ட முயற்சிகளும் வளர்முக நாடுகளில் மக்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமிடையிலான முரண்பாட்டை தீவிரப்படுத்தியது.

ஏகாதிபத்திய-நேட்டோ தலையீடு

1.11 உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பலவீனத்தைச் சமாளிக்க ஆக்கிரமிப்பு சாகசம் மற்றும் ஏகாதிபத்திய ராணுவமயம் மூலம் மேற்கத்திய நாடுகள் முயன்றன. இந்த சூழ்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்க ஊடுருவலை மேலும் அதிகப்படுத்தியது. இதற்காக நேட்டோ அமைப்பை தனது உலக மேலாதிக்கத்திற்கான ஒரு கருவியாக அது பயன்படுத்திக் கொண்டது. இதே நோக்கத்திற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை நேர்மையற்ற முறையில் பயன்படுத்தப்பட்டது.

சீர்குலைந்த ஆப்கானிதான்-பாகிதான் வியூகம்

1.12 அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா 2008ம் ஆண்டில் ஆப்கானி தானிற்கு மேலும் 30 ஆயிரம் படைவீரர்களை அனுப்பினார். தாலிபான்களுக்கு எதிரான போரில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. பெரும்பாலான நேட்டோ கூட்டாளிகள் தங்களது படைகளைத் திரும்பப் பெறத் துவங்கினர். 2014-ம் ஆண்டில் படைகளை ஆப்கானிதானிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளப் போவதாகவும், எனினும் அதற்குப் பிறகும் 25,000 பேர் கொண்ட ராணுவ தளம் அங்கு இயங்கும் என்றும் அமெரிக்கா அறிவித்தது. இந்தக் காலத்தில் தாலிபான்களை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆப்கன் படை தனது வலிமையைப் பெருக்கிக் கொள்ளும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்தது. அமெரிக்காவும் சவுதி மற்றும் வளைகுடா நாடுகளின் தொடர்பாளர்கள் மூலம் தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிதான் படைகளை முன்னணியில் நிறுத்த அமெரிக்கா முயற்சித்தது. எல்லைப்புற மாகாணங்களில் தீவிரவாத சக்திகளை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த வழிமுறை நேர்மையற்ற தன்மையாக இருந்தது. பாகிதான் அரசிற்கும் அமெரிக்க அரசிற்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிதான் எல்லையைத் தளமாகக் கொண்ட சில தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக செயல்பட பாகிதான் ராணுவம் மறுத்தது. அமெரிக்க தலையீடு நிகழ்ந்து பத்தாண்டுகள் கழிந்த பின்னரும் இந்தப் பிராந்தியத்தில் திரமற்ற தன்மை நிலவுவதோடு, சித்தரிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போரினால் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் மேலும் வளர்ச்சியடைந்ததே கண்ட பலனாயிற்று.

வடஆப்ரிக்கா மற்றும் மேற்காசியப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு

1.13 ஆப்கானிதானிற்குப் பிறகு லிபியாவில் ராணுவ ரீதியிலான தலையீட்டிற்கு நேட்டோ பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. கடாபி ஆட்சி முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பிறகு மேற்கத்திய நாடுகளின் பிடியில் லிபியா கொண்டு வரப்பட்டது. சிரியா அடுத்த இலக்காக உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒரே மதச்சார்பற்ற அரபு நாடு இது மட்டுமே ஆகும். துருக்கியில் ஏற்பட்ட உள்நாட்டுப போரைப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள நேட்டோ கூட்டாளிகள் மூலம் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் அந்த நாடு இதுவரை ஏகாதிபத்திய தலையீட்டிற்கு இசையவில்லை. மேற்காசியப் பகுதியில் ஏகாதிபத்திய தாக்கத்திற்கு உள்ளாகாத, பெருமளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் கொண்ட ஒரே நாடான ஈரான் இறுதி இலக்காக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகள் தவிர மேலும் ஒரு பகைமை முயற்சியாக ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு 2012 ஜூலை 1 முதல் தடைவிதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

1.14 இராக்கில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கொடூர மான ஆக்கிரமிப்பு மற்றும் கையகப்படுத்தலுக்குப் பிறகு இராக்கில் அமெரிக்க ராணுவத்தளம் தொடர்வதற்கான இசைவை அந்நாட்டு அரசிடமிருந்து பெறத்தவறிய நிலையில், அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. இதற்குப் பதிலாக இராக்கிற்கு அடுத்துள்ள குவைத்தில் கணிசமான படைபலத்தை அமெரிக்கா தொடர்ந்து வைத்திருப்பதோடு பாரசீக வளைகுடா பகுதியில் கப்பற்படையையும் தக்க வைத்துள்ளது.

1.15 லிபியாவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை அமெரிக்கா பயன் படுத்திக் கொண்டு ஆப்பிரிக்காவில் தனது நலனை முன் னெடுத்துச் செல்ல அங்கு தனது ராணுவ இருத்தலை அதிகரிக்கவும் தன்னை ஆப்பிரிக்கத் தளபதியாக நிலைநிறுத்திக் கொள்ளவும் முயல்கிறது. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நாடான சூடானை உடைத்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கத் தளபதி என்று காட்டிக் கொள்ள சூடானில் மிகப் பெரிய ராணுவத்தளத்தை அமைத்து அமெரிக்கா பயன்படுத்துகிறது.

1.16 சீனாவைக் கட்டுப்படுத்துவது என்ற கொள்கையின் அடிப்படையில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவத்தளத்தை விரிவுபடுத்துவதோடு அதற்கான கூட்டணியையும் உருவாக்கி வருகிறது. இது அடுத்து வரும் பத்தாண்டுகளில் கேந்திரரீதியாக மிகப் பெரிய அச்சுறுத்த லாக உருவெடுக்கும். அமெரிக்காவின் இந்த கேந்திரக் கூட்டணியில் ஜப்பான், ஆதிரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கூட்டாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

1.17 அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஓபாமா பதவியேற்றபோது தம்மை அமைதியை உருவாக்குபவராகக் காட்டிக் கொண் டார். ஆனால் எதிர்பார்த்தபடியே அமெரிக்க ஆளும் வர்க் கத்தின் நலனிற்கு சேவை செய்யும் வகையில், ஆப்கானி தானுக்கு கூடுதல் படைகளை அனுப்புவது, பிரான் மற்றும் பிரிட்டனுடன் கூட்டணி அமைத்து லிபியாவை ஆக்கிர மிப்பது, அணு ஆயுத விவகாரத்தைப் பயன்படுத்தி ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேற்காசியா மற்றும் ஏனைய உலகப் பிரச்சனைகளில் கூட்டாகத் தலையிட ஐரோப்பியக் கூட்டாளிகளை அணி சேர்ப்பது என்ற அமெரிக்காவின் தொடர் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. ஏகாதிபத்திய நலனைப் பாதுகாக்க நேட்டோ அமைப்பை ஒரு கூட்டு ஆயுதமாக பயன்படுத்தவே இந்த ஒத்துழைப்பு உதவியது.

அரபு நாடுகளில் வெகுஜன எழுச்சி

1.18 அரபு உலகில் நிகழ்ந்த வெகுஜன எழுச்சி குறிப்பிடத்தக்க தொரு முன்னேற்றமாகும். மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசி, வேலையின்மை, ஊழல், கொடுங்கோன்மை ஆட்சி முறை ஆகியவை இந்த எழுச்சித் தீயில் எண்ணெய் வார்ப்பதாக அமைந்தன. துனிஷியாவில் ஏற்பட்ட எழுச்சி பென் அலியின் எதேச்சதிகார ஆட்சியைத் தூக்கி எறிய வழி செய்தது. துனிஷிய எழுச்சியைத் தொடர்ந்து எகிப்தில் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மக்கள் எழுச்சி முப்பதாண்டு காலமாக நீடித்த முபாரக் ஆட்சிக்கு முடிவு கட்டியது. மிகப் பெரிய அரபு நாடான எகிப்தில் ஏற்பட்ட வெகுஜன எழுச்சி மேற்காசியப் பகுதியில் அமெரிக்காவின் கேந்திரரீதியான திட்டங்களுக்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியது. இரேலிய-எகிப்து கூட்டணியை மைய அச்சாகக் கொண்டு எகிப்தைத் தனது சார்பு நாடாக வைத்திருந்ததன் மூலம் மேற்காசியப் பகுதியை அமெரிக்கா கட்டுப்படுத்தி வந்தது. பஹ்ரைன் மற்றும் ஏமனில் அமெரிக்க ஆதரவுடன் இருந்துவந்த கொடுங்கோல் ஆட்சி யாளர்களுக்கும் வெகுஜன எழுச்சி அச்சுறுத்தலாக அமைந்தது.

1.19 தங்களுடன் நட்புறவு கொண்ட நாடுகளில் ஆட்சியாளர் களுக்கு எதிராக எழும் மக்கள் எழுச்சி இயக்கங்களை கைப்பற்றி திசை திருப்புவதற்காக அமெரிக்காவும், அதன் நேட்டோ கூட்டாளிகளும் கடாபி ஆட்சிக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு இயக்கங்களை பயன்படுத்தி அங்கே தலையிட்டன.  அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது பிரிவு முகாமிட்டுள்ள பஹ்ரைனில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியை அடக்க அமெரிக்க அங்கீகாரத்துடன் சவூதி அரேபியா தலையிட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சிரியா ஆட்சியைச் சீர்குலைப்பதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. துனிஷியா மற்றும் எகிப்தில் நடந்த தேர்தலில் இலாமியக் கட்சிகள் பிரதான இடத்தைப் பிடித்தன. இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன் மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை கேள்வி கேட்காமல் இருந்தால்  இந்த நாடுகளில் இலாமிய சக்திகள் ஆட்சிக்கு வருவதற்கு அமெரிக்கா உடன்படும்.

பாலதீனம் மற்றும் இஸ்ரேல்

1.20 எகிப்தில் ஏற்பட்ட வெகுஜன எழுச்சி மற்றும் முபாரக் ஆட்சி தூக்கி எறியப்பட்ட நிகழ்வுகள் பாலதீன இயக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பதா மற்றும் ஹமா அமைப்பு கள் மேம்பட்ட வகையில் இணைந்து செயல்படும் விதத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டன. பாலதீனம் ஐநாவின் அங்கமாக இணைவதற்கு ஐநாபொதுச் சபையில் பரவலான ஆதரவு வெளிப்பட்டது. 2009ல் காசா பகுதியில் இரேல் நடத்திய கொடூரமான தாக்குதல் எகிப்தில் நடந்த நிகழ்வுகளுக்குத் தூண்டுதலாக அமைந்தன. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக காசா குடியிருப்புப் பகுதியில் கட்டுமானப் பணிகளை நிறுத்த இரேல் மறுத்து விட்டது. மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டதை எதிர்த்து இரேலுக்குள் பெருந்திரள் போராட் டங்கள் நடைபெற்றன. ஈரானுக்கெதிராக வஞ்சப் பகைமை யுடன் செயல்பட்ட இரேலியத் தலைமை அணுசக்தி மையங்கள் மீது கூட ராணுவ தாக்குதல் நடத்த தயங்க வில்லை.

எதிர்ப்பு மற்றும் போராட்ட இயக்கங்கள்

1.21 நீண்ட காலம் நீடிக்கும் முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட்ட சுமையை மக்கள் தலையில் சுமத்த சர்வதேச நிதி மூலதனம் மற்றும் ஆளும் வர்க்கங்கள் மேற்கொண்ட இரக்க மற்ற முயற்சிகளால் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஏனைய வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் பெருமளவில் போராட்டங்களும், எதிர்ப்பு இயக்கங்களும் வெடித்தன. ஐரோப்பாவில்  கடன் நெருக்கடியில் அதிர்வு மையமாக இருந்து கொண்டிருக்கும் கிரீஸ் நாட்டில் கடன் நெருக்கடியை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்கள், பொது வேலைநிறுத்தங்கள் கடந்த இரண்டாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெயினில் இளைஞர்கள் நடத்திய போராட்டமும், போர்ச்சுகல், இத்தாலி, பிரான் மற்றும் இதர நாடுகளில் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட பொது வேலை நிறுத்தங்களும் குறிப்பிடத்தக்க வெகுஜனப் போராட்டங்களாகும். கல்விக்கான அரசின் செலவினத்தில் வெட்டு மற்றும் பயிற்சிக் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்களும் இளைஞர்களும் முன்னணிக்கு வந்து போராடினார்கள்.

1.22 திவாலாகிப் போன வங்கிகளை காப்பாற்ற அரசு எடுத்த மீட்பு நடவடிக்கைகள், பெருநிறுவனங்களின் பேராசை மற்றும் வால் ட்ரீட்டின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை எதிர்த்து 2011 செப்டம்பரில் நியூயார்க்கில் வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற பெயரில் வெடித்த போராட்டத்திற்கு பரந்துபட்ட மக்களின் ஆதரவு கிட்டியது. இந்தப் போராட்டம் அமெரிக்காவின் எழுபது நகரங்களுக்குப் பரவியதோடு 82 நாடுகளில் ஆதரவு இயக்கங்கள் நடந்தன. அமெரிக்காவில் வேலையின்மை, வீடின்மை, வருவாயில் சமத்துவமின்மை மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள், நிதி முதலாளிகளால் ஜனநாயகம் இழிவு படுத்தப்பட்டது ஆகிய வற்றால் கொந்தளித்திருந்த தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் இதர பகுதி மக்கள் போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டனர். பல நகரங்களில் பலாத்காரம் மற்றும் அடக்குமுறையைப் பயன்படுத்திக் காவல்துறையினர் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்திய போதும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1.23 ஐரோப்பாவில் ஏற்பட்ட நெருக்கடி தீர்வதற்கான அறிகுறிகள் தெரியாத நிலையில் எதிர்வரும் நாட்களில் முதலாளித்துவத் திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையும். சமூக ஜனநாயக அரசாங்கங்கள் நவீன தாராளமயமாக்கல் சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டு செயல்பட்டதால் நம்பிக் கையை இழந்துள்ளன. இந்த வெகுஜனப் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளான வளர்ந்து வரும் வேலையின்மை, சமூக நலன்களில் வெட்டு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள அதிருப் தியை பயன்படுத்திக் கொள்ள வலதுசாரி சக்திகள் முயற்சிக் கின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குறிவைத்து இனவெறி உணர்வுகளையும் இலாமிய எதிர்ப்பு உணர் வையும் தூண்டி வருகின்றன. வலதுசாரி எதேச்சதிகார சக்திகளின் அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

1.24 ஒரு வலுவான அரசியல் மாற்று இல்லாத நிலையில்தான் இன்றைய எதிர்ப்பு இயக்கங்களும், போராட்டங்களும் நடைபெறுகின்றன. மாற்று இல்லாத  இந்த நிலைதான் ஆளும் வர்க்கங்கள் சிற்சில சமாளிப்புகளின் மூலம் நெருக்கடியின் சுமைகளை மக்களின் மேல் ஏற்றி வைக்க உதவுகிறது. வலுவான இடதுசாரி மாற்று ஒன்று எழுவது தான் தேவைப்படும் அடிப்படை மாற்றங்களை உறுதி செய்யும்.

1.25  ரஷ்யாவில் ஆளும் அரசை எதிர்த்தும், பேராசை கொண்ட முதலாளித்துவ முறைமை நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தைச் சுரண்டிக் கொழுப்பதை எதிர்த்தும் மக்களின் அதிருப்தி வலுத்து வருகிறது. 2011 டிசம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மற்றும் 2012-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும்  ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்யக் கட்சி தில்லுமுல்லுகளில் ஈடுபட்டது. ஜனநாயக விரோத முறை கேட்டைக் கண்டித்து மிகப் பெரிய அளவில் போராட் டங்கள் நடந்தன. இத்தகைய முறைகேடுகளுக்கு மத்தியிலும் கூட வளர்ந்து வரும் மக்கள் செல்வாக்குடன் ரஷ்ய கம்யூ னிட் கட்சி 19 சதவீத வாக்குகளைப் பெற்று நாடாளு மன்றத்தில் 92 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

லத்தீன் அமெரிக்கா

1.26 லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளின் முன்னேற்றம் மற்றும் இடதுசாரி சிந்தனை கொண்ட அரசுகள் பின்பற்றும் கொள்கைகள் நவீன தாராளமயமாக்கல் சார்புடைய பழமை வாதிகள் மற்றும் பாரம்பரியமான அமெரிக்க ஏகாதிபத்திய தாக்கத்திற்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. தனியார்மயமாக்கத்தைத் திரும்பப் பெறுவது, எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தில் அரசு கட்டுப்பாட்டை நிலை நிறுத்துவது, விரிவான நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்துவது, கூட்டு நிறுவனங்களை முன்னிலைப்படுத்துவது மற்றும் அரசியல் அமைப்பை ஜனநாயகப்படுத்துவது ஆகிய கொள்கைகளைச் செயல்படுத்துவதில் வெனிசுலா, பொலிவியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. ஈகுவடார், நிகரகுவா ஆகிய நாடுகளில் உள்ள அரசுகளோடு இணைந்து சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் மற்றும் வருவாய் அசமத்துவத்தைக் குறைக்கும் வகையில் செல்வாதாரத்தை மறுவிநியோகம் செய்வதில் இந்த அரசுகள் ஈடுபட்டுள்ளன.

1.27 நவீன தாராளமயம் மற்றும் தனியார்மயத்திற்கு எதிராக உழைக்கும் மக்களின் போராட்டங்கள் மற்றும் வெகுஜன போராட்டங்கள் நீண்ட நெடுங்காலம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டதன் விளைவாகவே இடதுசாரி அரசுகளின் இருத்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிவியா, உருகுவே, பிரேசில், அர்ஜெண்டைனா, நிகரகுவா, எல்சால்வடார் மற்றும் பெரு ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி மற்றும் மீண்டும் வெற்றி என தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் நவீன தாராளமய, உலகமயமாக்கல் கொள்கைக்கு மாற்றை முன்வைக்கும் அரசியல் போக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் உறுதி செய்யப்பட்டது.

1.28 வெனிசுலா தலைநகரில் 2011 டிசம்பர் மாதத்தில் 33 லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் இணைந்து சிலாக் (CELAC) அமைப்பை உருவாக்கியது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்காகும். அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் இணைந்து கைகோர்த்ததால் இந்தப் பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடாவின் பிராந்திய கூட்டு அகற்றப் பட்டது. இந்தப் பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடித்ததன் தெளிவான அடையாளமாக இது அமைந்தது.

சோசலிச நாடுகள்

1.29 கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் தொடர்ந்து அபரிமிதமாக இருந்து வந்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண் டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுத் துள்ளது. உலக நிதி நெருக்கடியை மற்ற நாடுகளை விட ஆற்றல் வாய்ந்த முறையில் சீனா சமாளித்தது. வளர்ச்சி யடைந்த முதலாளித்துவ நாடுகள் திவாலான பெரு நிறுவ னங்களை மீட்க உதவியதைப் போல அல்லாமல், சீனா கட்ட மைப்பை வளர்த்தெடுப்பது கிராமப்புற வளர்ச்சி மற்றும் உள்நாட்டு தேவையை ஊக்கப்படுத்துவது ஆகிய நடவடிக் கைகளின் மூலம் பெருமளவிலான நிதி ஊக்குவிப்பை ஏற் படுத்தியதன் மூலம் உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2009ம் ஆண்டில் 8.7 சதவீதமாகவும் 2010ல் 10.3 சதவீத மாகவும் இருந்தது. எனினும், விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வருவாய் மற்றும் செல்வாதார விநியோகத்திலும், பிராந்திய மற்றும் சமூக வளர்ச்சியிலும் சமச்சீரற்ற நிலைமை, ஊழல் அதிகரிப்பு, மற்றும் இவற்றை யொட்டிய பதற்றம் ஆகிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. சீனாவின் பொருளாதார வலிமை மற்றும் செல்வாக்கு அதிகரித்ததால் இந்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்த அமெரிக்கா ராஜீயரீதியிலான, அரசியல் ரீதியிலான மற்றும் ராணுவ ரீதியிலான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

1.30 வியட்நாமும் சீரான வளர்ச்சியைக் கண்டுவருகிறது. 2010ல் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடியின் தாக்கத்திலிருந்து மீண்டு 6.78 சதவீதம் அளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத் தியைக் கண்டுள்ளபோதும் உயர் பணவீக்கவிகிதப் பிரச்சனை நீடிக்கிறது. வறுமையைக் குறைப்பதிலும், பின்தங்கிய பிராந் தியங்களை வளர்த்தெடுப்பதிலும் வியட்நாம் முன்னேற்றம் கண்டுள்ளது.

1.31 ஜனநாயக முற்போக்கு கொரியக் குடியரசைத் (வடகொரியா) தனிமைப்படுத்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை அந்த நாடு முறியடித் துள்ளது. அண்மைக் காலத்தில் ஜனநாயக முற்போக்கு கொரிய குடியரசு சீனா மற்றும் ரஷியாவுடன் தனது பொரு ளாதார உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

1.32 அமெரிக்காவின் பொருளாதார முற்றுகையை முறியடிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளை அணி திரட்டுவதில் கியூபா வெற்றிகண்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக அமைப்பில் கியூபா உறுப்பினராகியுள்ளதன் மூலம் இந்த வெற்றியை உணர முடியும். சிறிய நிறுவனங்கள் மற்றும் சுயவேலை வாய்ப்பு நிறுவனங்களை அனுமதிப்பது ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையை அனு மதிப்பது ஆகியவற்றின் மூலம் பொருளா தார சீர்திருத்த நடவடிக்கைகளை கியூபா மேற்கொண்டு வருகிறது. இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பொருளா தார மற்றும் சமூக அமைப்பிற்கு புத்துணர்ச்சி அளிக்க முடியும் என்று கியூபா நம்புகிறது. மிக மேம்பட்ட பொதுக் கல்வி மற்றும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு கொண்ட நாடாக கியூபா நீடித்து வருகிறது.

பன்முகத்தன்மை

1.33 உலகப் பொருளாதாரத்தில் வளர்முக நாடுகள் தங்கள் முக்கியத்து வத்தை உணரவைத்துள்ளன. ஜி-8 அமைப்பு நீண்ட காலத்திற்குப் பொருத்தமான ஒன்றாகத் தொடர முடியாது என்ற நிலையில் உலகளாவிய முறையில் பொரு ளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைக்க ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் இது பிரதிபலித்தது. 2009ல் பிரேசில், ரஷ்யா இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பிரிக் அமைப்பை உருவாக்கியதன் மூலமும் 2011-ல் பிரிக் அமைப்பில் தென் ஆப்ரிக்காவையும் இணைத்துக கொண்டு விரிவுபடுத்தப் பட்டதன் மூலமும் வளர்முக நாடுகளின் பலம் அதிகரித்துள்ளது. ஐநா சீர்திருத்தம், சர்வதேச வர்த்தகம், பருவ கால மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளில் பிரிக் அமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட்டதோடு வளர்முக நாடுகளுக்கு கூடுதல் உரிமைகளைக் கோருகிற அமைப் பாகவும் உருவெடுத்துள்ளது. பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைக்கும் அதே நேரத்தில் சர்வதேச பிரச்சனைகளில் பொதுவான அரசியல் முடிவுகளை எடுப்பதன்மூலம் இந்த அமைப்பு மேலும் முக்கியத்துவம் பெற முடியும். லத்தீன் அமெரிக்காவின் பிராந்திய ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளைத் தவிர்த்து சிலாக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது புதியதொரு வளர்ச்சிப் போக்காகும். முன்னதாக, அல்பா (Alba) அமைப்பு மூலம் அமெரிக்காவிற்கான பொலிவாரிய மாற்று உருவாக்கப்பட்டது மிக முக்கியமானதொரு நடவடிக்கையாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை விரிவுபடுத்த ரஷ்யாவும் வலியுறுத்தியது. இந்தியா, பாகிதான் மற்றும் ஈரான் போன்ற பிராந்திய சக்திகளை எசிஓ அமைப்பில் இணைப்பதன் மூலம் உலக விவகாரங்களில் பன்முகத் தன்மையை ஏற்படுத்தும் போக்கு வலிமை பெறும்.

பருவநிலை மாற்றம்

1.34 பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அபாயத்தையும், பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தா விட்டால் ஏற்படவிருக்கும் பேரழிவு விளைவுகளையும் மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கவனத்தில் கொண்டது. உலக முதலாளித்துவத்தின் மிருகத்தனமான பேராசை மற்றும் அநீதி இழைக்கும் தன்மையின் விளைவே பருவ நிலை மாற்றத்திற்கான காரண மாகும். உலக மக்கள் தொகையில் 20 சதவீதத்தைக் கொண் டுள்ள வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் கரியமில வாயு தொகுப்பில் 74 சதவீதத்திற்கு காரணமாக உள்ளது. அதே நேரத்தில் 80 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட வளர்முக நாடுகளின் பங்களிப்பு கரியமிலத் தொகுப்பில் 24 சதவீதமேயாகும். பருவ நிலை மாற்ற நெருக்கடிக்கு பெருமளவு காரணமாக உள்ள வளர்ந்த நாடுகள் அந்த நெருக்கடியின் தாக்கத்தை வளர்முக நாடுகள் மற்றும் உலக ஏழைமக்கள் மீது சுமத்துகின்றன.

1.35 வளர்ச்சியடைந்த நாடுகளின் கரியமில வாயு வெளியேற்றம் 1990-களில் 5.2 சதவீதமாக இருந்த நிலையில் 2008-12 ஆண்டுகளில் இந்த அளவைக் குறைக்க வேண்டும் என்ற கியாட்டோ செயல்திட்ட உறுதிமொழியை வளர்சியடைந்த நாடுகள் மதிக்கவில்லை. கரியமிலவாயு வெளியேற்றத்தை 17 சதவீத அளவிற்கு அதிகரித்த அமெரிக்கா இந்த செயல் திட்டத்தை ஒருபோதும் நடைமுறைப் படுத்தவில்லை. அமெரிக்கா தலைமையிலான வளர்ச்சியடைந்த நாடுகள் கரியமிலவாயு தொகுப்பைக் குறைப்பதற்கான சுமையை வளர்முக நாடுகளின் தலையில் சுமத்தியதோடு எதிர்கால கரியமில வாயு வெளியேற்ற அளவில் தங்களுக்குரிய பங்கை விடக்கூடுதலான அளவை எடுத்துக் கொண்டன. பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உலக சுற்றுச்சூழல் சம நிலையைப் பாதுகாக்க சமமானதொரு பங்களிப்பைச் செய்ய வேண்டும். தனிநபர் பொறுப்பேற்பு உரிமையை கேலிக் கூத்தாக்கும் வகையில், இந்தியா போன்ற வளர்முக நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்கிறது. ஆனால் இந்தியாவின் தனி நபர் பங்கீட்டு கரியமிலவாயு வெளியேற்றம் அமெரிக்காவின் வெளியேற்றத்தில் 1/13-ஐ விடக் குறைவே யாகும்.

1.36 கோபன்ஹேகனிலிருந்து டர்பன் வரை தொடர்ச்சியாக நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடுகளில் உலக கரியமில வாயு கட்டுப்பாடு மற்றும் கரியமிலவாயு வெளியேற்றப் பங்கீட்டு அளவு தொடர்பான நெறிமுறைகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. 2011ம் ஆண்டு டிசம்பரில் டர்பனில் நடைபெற்ற மாநாட்டு முடிவின்படி அனைத்து நாடுகளும் 2015ல் சட்டபூர்வமாக நிறைவேற்ற வேண்டிய கடமை குறித்து புதிய உடன்பாடு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் செயலாக்கம் 2020ல் துவங்கும். இந்த உடன்பாடு, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு சாதகமாகவும் வளர்முகநாடுகள் மீது மேலும் அதிக சுமையை சுமத்தவும் வகைசெய்யப்பட்டுள்ளது. இந்த சட்டபூர்வ கடமையைப் பொறுத்தவரை இந்தியா தனது முற்போக்கான நிலைபாட்டை நீர்த்துப் போகச் செய்து அமெரிக்க, சார்பு நிலைபாட்டை எடுத்துள்ளது. எதிர்கால உலகளாவிய கடமை சார்ந்த ஏற்பாட்டிற்கு ஏற்ப இந்தியா தனது பருவ நிலை குறித்த நிலைபாட்டில் புதிய செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். அர்த்தபூர்வமான, சமநிலைத்தன்மை கொண்ட பருவநிலை உடன்பாட்டை தங்களது நாடுகளின் அரசுகளை எடுக்கச் செய்ய உலகில் உள்ள அனைத்து முற்போக்குசக்திகளும் இணைந்து நிர்ப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

தெற்காசியா

1.37 பாகிதான்: பாகிஸ்தான் அதிகரித்துக் கொண்டிருக்கும் வன்முறை சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. பாகிஸ் தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் பதட்ட நிலை அதிகரித்துக் கொண்டிருந்தாலும் பாகிஸ்தான் அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையே உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் எல்லைப்புற பகுதிகளில் நடக்கும் மோதல்களின் விளைவுகளால் பாதிக்கப்படும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது. அபோட்டாபாத் நகரில் வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்புப் படையினரால் கொல்லப்பட்ட நிகழ்வானது தீவிரவாதக் குழுக்கள் உளவு மற்றும் பாதுகாப்புப்படையினரின் ஆதரவுடன் அந்நாட்டுக்குள் எந்த அளவிற்கு கலந்திருந்தன என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்தது. தாலிபான் மீது அமெரிக்கா தொடுத்த விமானத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்; இது பொது மக்களை ஆத்திரமூட்டியது. தீவிரவாதிகளும் திருப்பித் தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆப்கானிதான் எல்லையில் அமெரிக்காவினால் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் இருநாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்பில் விரிசல் விழுந்தது. அது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவு குறைவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு விளைவுகளை உருவாக்கும்.

1.38 பஞ்சாப் ஆளுநர் மற்றும் பாகிதான் அரசில் அங்கம் வகித்த ஒரே கிறிஸ்த்தவ அமைச்சர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் எந்த அளவிற்கு அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத சக்திகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி செயல்படு கின்றன என்பது தெரியவந்தது. விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையினால் பாதிப்புக்குள்ளாகி யிருக்கும் மக்களின் வாழ்நிலை மிகவும் மோசமடைந் திருக்கிறது. மூன்று பிரச்சனைகளில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள மோதல்போக்கு பாகிதானின் எதிர்கால வளர்ச்சிப் போக்கில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவதாக அமெரிக்கா மற்றும் பாகிதானின் ராணுவ நிர்வாகங்களின் உறவில் ஏற்பட்டுள்ள முரண்பாடு; இரண் டாவதாக, ஆட்சி கவிழ்ப்பு அபாயம் ஏற்படப்போவதாக அமெரிக்க அதிகாரிகளிடம் தரப்பட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து பாகிதான் அரசுக்கும் ராணுவத்திற்கும் ஏற்பட்டுள்ள பதற்றம்; மூன்றாவதாக  ஊழல் வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கும் அரசிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல். பாகிதானில் மக்களின் அபிலாஷை களுக்கேற்ப ஜனநாயகபூர்வ அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென்றால் அது அடிப்படைவாத மற்றும் தீவிரவாத சக்திகளைத் தனிமைப்படுத்துவதன் மூலமாகவும் அமெ ரிக்காவிற்கு பணிந்துபோகும் வகையிலான உறவை கைவிடு வதன் மூலமாகவும்தான் முடியும்.

1.39 வங்கதேசம்: அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவியேற்றதன் மூலம் 2009-ம் ஆண்டில் முழுமையான நாடாளுமன்ற ஜனநாயக முறை புனரமைக்கப் பட்டது. அது முதற்கொண்டு, மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படையிலான அரசை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதச்சார்பற்ற ஜனநாயக நடவடிக்கைகளை செயலற்றதாக ஆக்க வலதுசாரி அடிப்படைவாத சக்திகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. அண்மையில் ராணுவத் தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது ஏற்பட்ட அபாயத்தை உணர்த்துவதாக உள்ளது. பொருளாதார நெருக்கடியும் செங்குத்தாக உயரும் விலைவாசியும் மக்களை கடுமையாக பாதித்திருக்கின்றன.  இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கான ஒத்துழைப்பில் குறிப் பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேச மண்ணில் தளம் அமைத்து செயல்பட்டு வந்த உல்பா போன்ற தீவிர வாத அமைப்புகளை ஒடுக்க வங்க தேச அரசு சில நடவடிக் கைகளை எடுத்துள்ளது. இந்தியப் பிரதமரின் வங்கதேசப் பயணத்தின்போது இருதரப்பு நிலப்பகுதிகள் பரிமாற்றத் திற்கான உடன்பாடு மற்றும் எல்லையை வகுத்துக் கொள்வது தொடர்பாக ஏற்பட்ட உடன்பாடு சாதகமான நிகழ்ச்சிப் போக்கு ஆகும். டீஸ்டா நதி நீர் பங்கீடு குறித்து இரு நாடுகளும் உடன்பாடு எட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

1.40 நேபாளம்: மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு மேலாக நீடித்த முட்டுக்கட்டை நிலைமையை நீக்குவதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பிரதமராக பாபுராம் பட்டாராய் பதவியேற்ற பிறகு, மாவோயிஸ்ட்டுகளில் ஒருபகுதியினரை பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்வது குறித்தும் மற்றவர்களது புனர்வாழ்வு குறித்தும் மூன்று பிரதான கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான வழி திறக்கப்பட்டுள்ளது என்ற போதும் இந்த மூன்று பிரதான கட்சிகளுக்கிடையே தொடர் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. மக்களின் விருப்பத் திற்கு ஏற்ப குடியரசு மற்றும் ஜனநாயகமுறை ஆட்சிமுறை நேபாளத்தில் ஏற்படுவதற்கு அமைதி முயற்சிக்கான உடன்பாடு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

1.41 மியான்மர் (பர்மா): தங்களது ஆட்சிக்கு ஒரு ஜனநாயக முகத் தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ராணுவ ஆட்சியாளர்கள் புதிய அரசியல் சட்டத்தின்படி 2010ம் ஆண்டு தேர்தலை நடத்தினர். தீன் சேன் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு ராணுவ எதேச்சதிகார ஆட்சியைத் தளர்த்துதல், அரசியல்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக உரிமைகளைமீண்டும் வழங்கவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆங்சான் சூஹி இதனை வரவேற்றார். அவரும், அவருடைய கட்சியான நேஷனல் லீக் பார் டெமாக்ரசியும் இடைத்தேர்தலில் போட்டியிட்ட 44 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றனர்.  எதேச்சதிகார ஆட்சி நீடித்த கடந்த பல ஆண்டு களுக்குப் பிறகு ஜனநாயகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் அரசுக் கிடையிலான உறவில் நெகிழ்வு ஏற்பட்டுள்ளது ஒரு முன் னேற்றமான நிகழ்ச்சிப் போக்காகும். மியான்மர் அரசுடன் நல்லுறவைக் கொண்டுள்ள இந்திய அரசு அந்த நாட்டில் ஜனநாயக முறை உருவாவதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்க உதவ வேண்டும்.

1.42 இலங்கை: ராணுவ ரீதியாக எல்டிடிஇ தோற்கடிக்கப் பட்டதைத் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட மோதலால் பாதிக்கப்பட்ட அனை வரையும் மீள்குடியமர்த்துதல், மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பணியை இலங்கை அரசு இன்னமும் முடிக்கவில்லை. போரின் கடைசி கட்டத்தில் பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து நம்பகத்தன்மை கொண்ட விசாரணை நடத்தப்படுவதோடு அதில்  சம்பந்தப் பட்டவர்கள் அதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும். ஆயுத மோதல் முடிவிற்கு வந்து மூன்றாண்டுகள் கடந்த பின்னரும் கூட தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.

1.43 தமிழ் பேசும் மக்கள் வசிக்கக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவல் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு விரைவுபடுத்த வேண்டும். இதன் மூலம் தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும். தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படவும், தமிழ் மக்களுக்கு முழுமையான மறுவாழ்வு வழங்கப்படவும் ராஜீயரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியா தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

1.44 தெற்காசியப் பகுதியில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்வதோடு இந்தப் பிராந்தியத்தில் உள்ள இடது, ஜனநாயக மற்றும் மதச்சார் பற்ற சக்திகளோடு ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள பாடுபடவும் உறுதி கொள்கிறது.

முடிவுரை

1.45 சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு முதலாளித்துவத்திடம் இருந்த குதூகல மனநிலை குறைந்திருக்கிறது. அந்த இடத்தில் முதலாளித்துவத்தின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் ஆளும் வர்க்கங்களிடையே எழுந்திருக்கின்றன. மக்கள் தங்களது பொருளாதார உரிமைகள் மற்றும் போராடிப் பெற்ற பலன்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடுவது அதிகரித்து வருகிறது. அரபு நாடுகளில் எதேச்சதிகாரத்திற்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்களின் பெருந்திரள் எழுச்சி முக்கியமான அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. நவீன தாராளமய கொள்கைகளுக்கெதிராக வளர்ச்சி காணமுடியும் என்பதற்கான மாற்று திசைவழியை லத்தீன் அமெரிக்க நாடுகள் காட்டி வருகின்றன. ஒரு மாற்று அரசியல் அமைப்பு உருவாகும் வகையில் உலகம் முழுமையும் உள்ள கம்யூனிஸ்டுகளும், இடதுசாரி சக்திகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை கட்டமைத்து வலுப்படுத்த வேண்டும்; நிதி மூலதனத்தின் கொடூர சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும். (முதலாளித்துவ) அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்குள்ள ஒரே மாற்று சோசலிசமே ஆகும். உழைக்கும் வர்க்க இயக்கத்தை வலுப்படுத்துவதும், விரிந்து பரந்த இடதுசாரி அரசியல் மாற்றை உருவாக்குவதும் காலத்தின் தேவையாகும்.

1.46 இந்தியாவைப் பொறுத்தவரை ஏகாதிபத்திய உலகமயமாக்க லுக்கும் மக்கள் விரோத நவீன தாராள மயமாக்கல் கொள்கை களுக்கும் எதிரான போராட்டங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்தும் தங்களது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் போராடும் அனைத்து சக்திகளுக்கும் மார்க்சிட் கம்யூனிட் கட்சி தனது ஆதரவைத் தெரிவித் துக் கொள்கிறது. நாட்டில் இடது மற்றும் ஜனநாயக இயக் கத்தின் ஒருபகுதியாக வலிமையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும்.

தேசிய நிலைமை

2.1 அன்னிய மூலதனம் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முக்கியமாகப் பின்பற்றுகிறது என்று 19வது அகில இந்திய மாநாடு முடிவிற்கு வந்தது. அரசுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில் சுயேச்சையான நிலையை பின்பற்றுவதோடு நவீன தாராளமயமாக்கல் கொள்கை எதிர்ப்பைக் கட்சி தொடர வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இழந்த தங்களது தளத்தை மீட்க முயலும் பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்துவதற்கு கட்சி முனைப்புக் காட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது. அமெரிக்காவுடன் மத்திய அரசின் கேந்திரக் கூட்டணியை எதிர்ப்பதோடு ஏகாதிபத்திய ஊடுருவலை எதிர்த்து மக்களை கட்சி திரட்ட வேண்டும் என்றும் முடிவெடுக்கப் பட்டது. மாற்றுக் கொள்கைக்காக மக்களை அணிதிரட்டவும், சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிராக உழைக்கும் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரிவினரை அணி திரட்டவும் வேண்டும் என்றும் அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுத்தது. நவீன தாராளமய மாக்கல் கொள்கையை எதிர்த்தும் அமெரிக்காவுடனான கேந்திரக்கூட்டணியை எதிர்த்தும் மார்க்சிட் கம்யூனிட் கட்சி போராடுவதால் ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய வட்டாரத்தின் இலக்காக கட்சி மாற்றப்படக்கூடும் என்று அகில இந்திய மாநாடு எச்சரித்தது. கட்சியின் வலிமையான தளமான மேற்கு வங்கம் ஏற்கெனவே தாக்குதலுக்கு இலக்காகியிருந்தநிலையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டது.

2.2 ஏற்கெனவே அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு மாறாக அமெரிக்கா உடனான அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திடுவதை நோக்கி  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சென்றதால், அகில இந்திய மாநாடு முடிவடைந்து 3 மாதத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன. பெரும்பான்மையை இழந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நெறியற்ற முறையில் பணபலத்தைப் பயன்படுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்சி தாவ வைத்தும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2009 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிர தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்ற போதும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியவில்லை. கடந்த ஆட்சியைப் போலவே ஐமுகூ-2 அரசு அதே பொருளதாரக் கொள்கைகளையே பின்பற்று கிறது என்றபோதும் முன்னிலும் உக்கிரமான முறையில் நடைமுறைப்படுத்துகிறது.

கடந்த 3 ஆண்டு கால ஐமுகூ-2 அரசு செயல்பாட்டை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம். 

a. அத்தியாவசியப் பொருள்களின் தொடர்ச்சியான விலை யேற்றம்.

b. ஐமுகூ-1 ஆட்சியின் போது துவங்கி, தொடரும் பெருமளவிலான உயர்நிலை ஊழல்கள்

c. அமெரிக்க சார்பு அயல்துறை கொள்கைகளைத் தொடர் வது மற்றும் அமெரிக்காவுடன் கேந்திரக் கூட்டு.

d. தீவிரமான சுரண்டல் மற்றும் வாழ்வாதார உரிமைப் பறிப்பின் காரணமாக உழைக்கும் வர்க்கம் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் இதரபிரிவினருக்கு பாதிப்பு.

2.3 இடதுசாரிக் கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையிலிருந்து விடுபட்ட நிலையில் மன்மோகன் சிங் அரசு நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை மேலும் முன் நகர்த்தியது: எனினும் நாடாளுமன்றத்தில் திரமான பெரும் பான்மை இல்லாததால் சில தடைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஊழல் புகார்களால் சூழப்பட்ட, காங்கிர தலைமையிலான அரசு தடுமாறுவதால் உரிய அரசியல் திசைவழியை இந்த அரசினால் தர முடியவில்லை.

நவீன தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரல்

2.4 நவீன தாராள மயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துவது இடதுசாரிகளின் எதிர்ப்பால் முந்தைய ஆட்சியின் போது மட்டுப்பட்டிருந்த நிலையில் ஐமுகூ-2 அரசு இந்தக் கொள்கைகளை செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டியது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் சாராம்சம் என்பது உள்நாட்டு மற்றும் அன்னிய பெருநிறுவனங்கள் நாட்டின் வளங்களைச் தடை ஏதுமின்றி சுரண்டி கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழிப்பதே ஆகும். பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நிரல் புதுப்பிக்கப் பட்டு, 2009-ம் ஆண்டு முதல் ரூ.47,500 கோடி மதிப்புள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. லாபத்தில் இயங்கும் அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளையாவது பங்குச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசினால் கட்டாயமாக்கப்பட்டது.

2.5 எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதாதரங்கள் தனியார்மயமாக் கப்பட்ட நிலையில், உள்நாட்டு இயற்கை எரிவாயு உற் பத்தியில் ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றன. இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில்தான் மிகப்பெரிய தனியார் நிறுவன ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. சுரங்கத்துறைக் கொள்கையை மாற்றியமைத்ததன் மூலம் சுரங்கங்களும் அன்னிய மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவில் திறக்கப் பட்டு விட்டது. 2009-10ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 218.6 மில்லியன் டன் இரும்புத் தாது உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்கு 63 சதவீதமாக இருந்தது; இதில் 45 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நிலக்கரி சுரங்கங் களையும் தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. சுரங்கங்கள் மற்றும் கனிமத்துறையைத் திறந்து விட்டதன் விளைவாக சட்டவிரோத சுரங்கங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற ஏற்றுமதி மூலம் நாட்டின் கனிம வளம் கொள்ளையடிக்கப்படுகிறது.

2.6 காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கவும், வங்கித் துறையில் கட்டுப்பாடுகளைத் தகர்க்கவும், ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யவும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு சட்டங்களை நிறைவேற்றத் துடிக்கிறது. இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் நிதித்துறையை ஊக நிதிமூலதனத்தின் பிடியில் சிக்க வைத்துவிடும். நிதித் துறையை மேலும் திறந்து விடுவதற்கான சட்டங்களை இயற்றுவதை இடதுசாரிகள் தடுத்து வந்துள்ளனர். உண்மையில் இதனால் தான் உலக நிதி நெருக்கடியின் சுழற்சியில் இந்தியா  நிலைகுலைந்து போகாமல் தடுக்கப் பட்டது. அன்னியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கடைகளை விரிக்க அனுமதிக்கும் மசோதா நிலுவையில் உள்ளது. பாதுகாப்புத்துறையில் அன்னிய முதலீட்டு வரம்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

2.7 2011ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை 51 சதவீதம் அளவிற்கு அனுமதிக்க ஐமுகூ அரசின் மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்த முடிவு நான்கு கோடிக்கும் மேற்பட்ட சில்லரை வர்த்தகர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் முடிவாகும். அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள், வெகுஜன அமைப்புகளின் பரவலான எதிர்ப்பின் காரணமாக இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு அறிவிக்க நேர்ந்தது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை புகுத்தும் அரசின் முடிவை அமல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்; 2012-2013 ஆண்டுக்கான பட்ஜெட்டில் இது முன்மொழியப்பட்டுள்ளது.

2.8 மருந்து உற்பத்தித் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதித்ததின் மூலம் உள்நாட்டு மருந்து உற்பத்தி நிறுவ னங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கி, இந்திய மருந்துச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது பிடியை இறுக்கியுள்ளன. இந்தியாவில் அதிக மருந்துகளை விற்பனை செய்யும் முதல் 5 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகும். மருந்து சந்தைத் துறையில் இவர்களது ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் மருந்துகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருந்துத் துறையில் அன்னிய முதலீட்டைக் கட்டுப்படுத்தவோ, மருந்துகளின் விலையைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவோ அரசு விரும்ப வில்லை.

2.9 2012-ம் ஆண்டு தேசிய நீர்க்கொள்கை என்பது இதற்கு முன் உலக வங்கி அளித்த பரிந்துரைகளுக்கு இசைவானதாகவே உள்ளது; அது தனியார் மயத்தை ஊக்குவிக்குகிறது. சேவை அளிப்பவர் என்ற அரசின் பாத்திரத்தை அது புறந்தள்ளு கிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பாதுகாப்பான குடிநீர் என்ற அடிப்படை உரிமையினை பெறுவதற்கு அதிக அளவில் வரி செலுத்த வேண்டும் என்கிற சந்தைக் கோட்பாட்டின் மீது அந்த கொள்கை அழுத்தம் கொடுக்கிறது.

பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு

2.10 பணவீக்கம் மற்றும் எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. 2011 நவம்பர் மாதத்தில் ஆண்டு மொத்த விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க விகிதம், ஜனவரி 2012ல் 6.55 சதவீதமாக கொஞ்சம் குறைந்த போதிலும், 9.1 சதவீதமாக இருந்தது. 2008 செப்டம்பர் மாதம் முதல் 2011 அக்டோபர் மாதம் வரையிலான 38 மாதகாலத்தில் உணவுப் பொருள் மீதான பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து சாதனை படைத்துள்ளது சுதந்தரத் திற்குப் பிந்தைய காலத்தில் இந்த அளவு நெடுங்காலத்திற்கு உணவுப் பொருள் மீதான பணவீக்கம் இரட்டை இலக்க அளவில் இருந்தது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். நுகர்வோர் விலை பணவீக்கம் ஜி-20 நாடுகளிடையே இந்தியாவில்தான் மிகவும் அதிகமானதாக உள்ளது. பருப்பு வகைகள், காய்கறி, பழங்கள், சமையல் எண்ணெய்,சர்க்கரை, பால், முட்டை, இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை செங்குத்தாக உயர்ந்ததால் மக்கள் கடும் துயருக்கு ஆளானார்கள். அரசு பின்பற்றும் நவீன தாராளமயமாக்கல் உணவுக் கொள்கையே உணவுப் பொருள் மீதான பணவீக்கம் உயர்ந்ததற்குக் காரணமாகும். உணவுப் பொருட்கள் பதுக்கல், ஊக முன்பேர வர்த்தகம், தவறான ஏற்றுமதிக் கொள்கை, உணவுச் சங்கிலியில் பெருநிறுவனங்களின் ஊடுருவல் ஆகியவற்றோடு உற்பத்தித் திறன் தேக்கம் மற்றும் விவசாய உற்பத்திக் குறைவு ஆகியவை தாவிப்பாயும் உணவுப் பொருள் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

2.11 பெட்ரோலுக்கு அரசு விலை நிர்ணயிக்கும் முறையை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டது. தில்லியில் 2009ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.40 ஆக இருந்த நிலையில் 2011ம் ஆண்டு லிட்டருக்கு ரூ.65 ஆக உயர்ந்தது. பெட்ரோலியப் பொருட்களின் மீது கடுமையாக வரிவிதிப்பதை அரசு தொடர்ந்து வருகிறது. 2011ம் ஆண்டில் டீசல் லிட்டர் ஒன்றிற்கு ரூ.3ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.2ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.50ம் விலை உயர்த்தப்பட்டதால் பணவீக்கம் அதிகரித்தது.

2.12 2010ம் ஆண்டு முதல் யூரியா உரத்தின் விலை 20 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. மேலும் யூரியா கள்ளச்சந்தை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. யூரியா அல்லாத உரங்களான டிஏபி மற்றும் எம்ஓபி உரங்களின் விலை நிர்ணயம் 2010 முதல் கைவிடப்பட்டு, 100 சதவீதம் அளவிற்கு விலை உயர்த்தப்பட்டது. விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு என்பது உற்பத்திச் செலவு உயர்வு மற்றும் பண வீக்கத்திற்கு நேரடி காரணமாக அமைந்துள்ளது.

2.13 காலத்தே தலையிடாமல் இருப்பதன்மூலம் ரூபாயின் மதிப்பு தேய்ந்து போக அரசு அனுமதித்து வருகிறது. எண்ணெய் மற்றும் உரத்தை இந்தியா இறக்குமதி செய்வதால் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கிறது. வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக உயர்த்தி வருவதும் பொருளாதாரம் முழுமை யிலும் செலவினம் அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளது.

2.14 பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்; அத்தியாவசியப் பொருள் வர்த்தகத்தில் ஊக முன்பேர-எதிர்கால வர்த்தகத்திற்குத் தடைவிதிக்க வேண்டும்; மத்திய உணவுக் கிடங்குகளில் தேங்கியுள்ள உணவுப் பொருட்களை மாநில அரசுகள் பொதுவிநியோக முறை மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு விற்கப்படும் விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிப்பதற்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டும்; ஒருங்கிணைந்த பொது விநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்க ஐமுகூ அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை நீண்ட கால நோக்கில் செயல்படுத்துவதன் மூலம் கட்டுப் பாடின்றி உயரும் விலைவாசியைக் குறைக்க முடியும்.

உணவுப் பாதுகாப்பு

2.15 மத்திய அரசு பின்பற்றும் கொள்கைகளால் பொது விநியோக முறை பலவீனமடைந்துள்ளதோடு உணவுப் பொருள் பணவீக்கத்திற்கு நிவாரணமளிக்கும் அதன் ஆற்றலும் குறைக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு மேலேயுள்ளவர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் (ஏபிஎல்-பிபிஎல்) என்ற பிரிவினையில் பெருமளவு தவறு ஏற்பட்டு மலிவு விலையில் உணவு தானியம் பெறுவதில் இருந்து ஏழை மக்கள் விலக்கப்படுகிறார்கள். நகர்ப்புறங்களில் ரூ.32ம் கிராமப்புறங் களில் ரூ.26ம் தனி நபர் வருமானம் ஈட்டுபவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே சென்றுவிட்டவர்கள் என்ற மத்திய திட்டக் குழுவின் மோசடியான மதிப்பீட்டிற்கு தேசிய அளவில் எதிர்ப்புக்குரல் எழுந்தது. எனினும், இலக்கு சார்ந்த அனைத்துக் கொள்கைகளுக்கும் இந்த மதிப்பீடு தான் அளவுகோலாகத் தொடர்கிறது.

2.16 உத்தேச உணவுப் பாதுகாப்பு மசோதா பெருமளவு மத்திய அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்கக்கூடியது என்பதோடு மட்டுமல்லாமல் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் (பிபிஎல்) பொதுப்பிரிவினர் (ஏபிஎல்) மற்றும் விலக்கப்பட்டவர்கள் என்று இனம் பிரித்து இலக்கு தீர்மானிப்பதன் மூலம் ஏழைமக்களிடையே மேலும் பிளவை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. அனைத்து உரிமைகளும் நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மானிய விலையில் உணவு தானியம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதன் மூலம் மாநில அரசுகள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முயல்கிறது. நவீன தாராளமயமாக்கல் சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட மத்திய அரசின் திட்டங்க ளான உணவுக் கூப்பன்கள் மற்றும் பண விநியோகம் உள்ளிட்ட மக்கள் விரோதத் திட்டங்களை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கு உரியதை வழங்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. உணவுக் கூப்பன்கள் மற்றும் பண விநியோகம் செய்யும் நடைமுறை யினை புகுத்தி அதைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடன்தான் ஆதார் திட்டம் முன்வைக்கப்படுகிறது. இது பொதுவிநியோக அமைப்பினையும், உணவுப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினையும், அதன் கொள்முதலையும் சீர்குலைத்து விவசாய வணிக பெருநிறுவனங்களும், கார்ப்பரேட் சில்லறை வணிகர்களும் உணவுப் பொருளாதாரத்தை கையிலெடுக்க வாய்ப்பினை அளிக்கும்.

2.17 ஒருங்கிணைந்த பொது விநியோக முறையைப் புனரமைப்பதே உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி யாகும். அனைத்து குடும்பங்களுக்கும் மாதத்திற்கு  35 கிலோ உணவு தானியம் கிலோ ரூ.2க்கு மிகாத விலையில் வழங்கப் படவேண்டும் என்று மார்க்சிட் கம்யூனிட் கட்சி வலியுறுத்துகிறது. பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களும் ஒருங் கிணைந்த பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட வேண்டும்.

பொருளாதார சரிவு நிலை

2.18 முந்தைய ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீத மாக இருந்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 2011-2012ல் அது 7 சதவீதமாக குறைநது இருக்கிறது. உலக அளவிலான பொருளாதார சரிவு நிலை மற்றும் உள்நாட்டில் செயல்படுத்தப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கையே இந்த சரிவுக்குக் காரணமாகும். தொடர்ச்சியான பணவீக்கத்தின் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததால் உள்நாட்டுத் தேவையும் குறைந்தது. இதன் காரணமாக தொழிற் துறை மற்றும் கேந்திரமான துறைகளிலும் மந்தநிலை ஏற்பட்டது.

2.19 வேலைவாய்ப்பு நிலைமை மிகவும் மோசமடைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்ட போதும் சமீபத்திய தேசிய மாதிரி ஆய்வின் படி (66வது சுற்று) இந்தியாவில் வேலைவாய்ப்பு ஆண்டு விகிதத்தில் மிகப் பெரிய அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2000-05ல் 2.7 சதவீதமாக இருந்த ஆண்டு வேலைவாய்ப்பு விகிதம், 2005-10ம் ஆண்டில் 0.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. சமீபத்திய காலத்தில் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதமாக இருந்தபோதும் கூட விவசாயத்துறை அல்லாத துறைகளின் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 4.65 சதவீதத்திலிருந்து 2.53 சதவீதமாகக் குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட குறைவு வேலைவாய்ப்பு சூழலை மேலும் மோச மாக்கியது.

2.20 பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த பொதுமுதலீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம். 2009-2010ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவீதமாக இருந்த திட்டச் செலவீடு 2010-11ம் ஆண்டில் 4.6 சதவீதமாகக் குறைந் துள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2009ல் அறிவிக்கப்பட்ட நிதித்துறை ஊக்க நடவடிக்கைகள் முக்கியமாக வரிக் குறைப்பாக இருந்ததேயன்றி பொதுச் செலவினத்தை அதிகரிப்பதாக இல்லை. 2008-11ம் ஆண்டு களில் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.2,28,045 கோடியளவிற்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. 2007-08ம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்த வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2010-11ம் ஆண்டு 9.5 சதவீதமாக குறைந்ததால் பொதுச் செலவினம் சிக்கலுக்கு உள்ளானது. இந்தநிலை மாற்றப்பட வேண்டும். செல்வந்தர்களின் மீது வரி விதிப்பதன் மூலம் பெருமளவில் நிதியாதாரத்தை உருவாக்கி நலத்திட்டங்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புப் பணிக்கு செலவிட வேண்டியது அவசியமாகும்.

2.21 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் முதலீட்டை அதி கரிக்க வேண்டிய தேவையும் உள்ளது. 2009-10ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 6.3 சதவீதமாக மட்டுமே இருந்தது. பாரபட்சமான, தவறான அரசின் கொள்கைகளால் தொலைதொடர்புத் துறை, உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை, உரத்துறை ஆகிய மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்தன. 2009-10ம் ஆண்டில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் இருப்பு மற்றும் உபரியான ரூ.6 லட்சம் கோடியினை பயன்படுத்தி புதிய முதலீடுகள் மற்றும் பொருளாதா விரிவாக்கத்திற்கு இந்நிறுவனங்கள் பங்களிப்பைச் செய்திருக்க முடியும்.

விவசாயத்துறை நிலைமை

2.22 இந்திய மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் விவ சாயத் துறையைச் சார்ந்தே உள்ளனர். 11வது திட்ட காலத்தில் (2007-12) விவசாயத்துறை வளர்ச்சிக்கான இலக்கு 4 சதவீத மாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இதைவிடக் குறைந்து 3 சதவீதம் அளவிற்கே எட்ட முடிந்தது. 9-வது திட்டக்காலத்திலிருந்தே விவசாயத்துறைக்கான இலக்கு பூர்த்தி செய்யப்படவில்லை. நாளொன்றுக்கு தனிமனித தேவைக்கான உணவு தானியம் கிடைத்த விகிதம் 1991ல் 510 கிராமாக இருந்த நிலையில் 2010ம் ஆண்டில் 438 கிராமாகக் குறைந்தது. பாசன வசதியில் ஏற்பட்ட பற்றாக்குறை மற்றும் பருவ நிலையை பெருமளவு சார்ந்திருக்க வேண்டியதிருந்ததால் விவசாய பருவநிலைக் காலங்களில் முக்கிய விவசாயப் பயிர்களின் அளிப்பு தேவைக்கு குறைவாகவே இருந்தது. உணவுப் பொருள் மீதான பணவீக்கத்திற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

2.23 தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் புள்ளி விவரப்படி 1995 முதல் 2010ம் ஆண்டுவரை நாடுமுழுவதும் 2 லட்சத்து 56 ஆயிரத்து 913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். கடன்வலை விவசாயிகள் தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. பருத்தி விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக 2011ம் ஆண்டில் மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தது. கர்நாடகம் மற்றும் இதர மாநிலங்களில் பட்டுப்பூச்சி வளர்ப்பு விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இடது தலைமையிலான அரசு அதன் பொறுப்பிலிருந்து விலகியதற்குப் பிறகு மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும்  விவசாயிகளின் தற்கொலை என்பது வழக்கமான நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. பணப்பயிருக்கான உற்பத்திச் செலவு அதிகரித் திருப்பது இந்திய விவசாயிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.

2.24 விவசாயத்துறை சந்திக்கும் நெருக்கடிக்கு நவீன தாராள மயமாக்கல் கொள்கையே காரணமாகும். விவசாயிகளுக்கான தேசியக் குழுவின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. விவசாய சாகுபடிக்கான உற்பத்திச் செலவு கடுமையாக உயர்ந்த நிலையில் அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்குக் கட்டுபடியானதாக இல்லை. கிட்டங்கி வசதிகள் பற்றாக்குறையின் காரணமாக மத்திய அளவிலான நிறுவனங்களின் கொள்முதலும் ஒரு குறிப் பிட்ட வரம்பிற்குள்ளேயே உள்ளது. பொது முதலீட்டில் பற்றாக்குறை மற்றும் விதை உரம் ஆகிய இடுபொருள்களுக்கு மானிய வெட்டு மற்றும் எண்ணெய்/மின்சாரம் விலை உயர்வால் விவசாய உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இடுபொருள்செலவு உயர்வு மற்றும் விவசாய விளைபொருள் களுக்கு கட்டுபடி விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகளுக்கு விவசாயத் தொழில் என்பது கட்டுபடியாகக் கூடியதாக இல்லை. கிராமப்புற கடன் வசதியை கிராமப் புறத்திலுள்ள பணக்காரர்கள் கைப்பற்றி விவசாயம் அல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றனர். (வங்கி போன்ற) அமைப்பு ரீதியான கடன்கள் மறுக்கப்படுகிற பொழுது, சாதாரண விவசாயிகள் லேவாதேவிக்காரர்களை நாடிச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.  குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் விவசாயம் கட்டுபடியாகாத தொழிலாக மாறியுள்ளதால் ஏராளமான விவசாயிகள் மீளமுடியாத கடன்வலையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர். மறுபுறத்தில் நெருக்கடியின் துயரால் தங்களது நிலத்தை விற்றும் விடுகின்றனர்.

2.25 இந்திய விவசாயக் குடும்பங்களில் 80 சதவீதமாக உள்ள சிறு மற்றும் குறுவிவசாயிகள்தான் விவசாயத்துறை நெருக்கடிக்கு முக்கிய பலிகடாவாக உள்ளனர். குத்தகை விவசாயிகள், வார விவசாயிகள், சிறுவிவசாயிகள், மற்றவர்களது நிலங்களில் உழைக்கும் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலைச் சந்திப்பதோடு நெருக்கடியின் சுமையையும் தாங்க வேண்டிய வர்களாக உள்ளனர். குத்தகை உரிமைகளை மறுப்பது, கடனுக்கு கடுமையான வட்டி மற்றும் குறைவான கூலி என பல்வேறு வழிகளில் குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள் அடங்கிய கிராமப்புற வசதிபடைத்த கூட்டம் சுரண்டிக் கொழுக்கிறது. ரியல் எடேட் போன்ற விவசாயம் அல்லாத தொழில்களிலும் கிராமப்புறப் பணக்காரர்கள் முதலீட்டைத் திசைதிருப்பி விடுகின்றனர். பெருநிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த விவசாய முறையும் அதிகரித்து வருகிறது.

2.26 விவசாயத் தொழிலாளர்களின் நிலை தொடர்ச்சியாக கீழிறங்கி வருகிறது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் தாக்கம் காரணமாக நிலமற்றவர்களின் எண்ணிக்கை கணிச மாக அதிகரித்து 2010ம் ஆண்டில் 14 கோடியாக உயர்ந் துள்ளது. பல்வேறு மாநிலங்களில் விவசாயத் தொழிளர் களுக்கு சட்டபூர்வ குறைந்தபட்சக் கூலியோ, ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்பு திட்டங்களோ இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைஉயர்வு காரணமாகவும் இவர்கள் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு தொழிலாளர்களின் சட்டபூர்வக்கூலி மறுக்கப்படுகிறது. விவசாயத் தொழிலாளர்களின் வாழ்நிலை மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே தொடர்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் அவர்களுக்கு வீடு மற்றும் மனைப்பட்டா வழங்குவதற்கு எந்தமுயற்சியும் எடுக்கப்பட வில்லை. பெண்விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மிகவும் அவலநிலையில் உள்ளது. விவசாயத் தொழி லாளர்களின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்வ தால் அவர்கள் பிழைத்திருப்பதே கூட கேள்விக்குள்ளாகி யுள்ளது. அரசு பின்பற்றும் கொள்கைகளால் கிராமப்புற ஏழைகள் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டு வேறு பகுதியில் அல்லது நகர்ப்புறப் பகுதிக்கு குடியேறி துயரமான சூழலில் பிழைக்க நேர்கிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை நிர்ணயிப்பதற் கான விரிவான சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு மறுத்து வருகிறது.

2.27 விவசாயத்திற்கு அரசு ஆதரவை விலக்கிக் கொள்வது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகத்தை தாராளமய மாக்குவது, இறக்குமதி வரிகுறைப்பு ஆகிய அரசின் நவீன தாராளமயமாக்கல் திட்டத்தின் நோக்கம் சிறு விவசாயிகளை விவசாயத்துறையை விட்டு விரட்டுவதே ஆகும். இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் விவ சாயத்தில் ஊடுருவுவது என்பது வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிலச்சீர்திருத்த சட்டங்கள் உடைக்கப்படு கின்றன. நாடு முழுவதும் நிலச்சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களை நடத்துவது மற்றும் நிலப்பிரபுக்கள், கிராமப்புற செல்வந்தர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவினையும், அரசின் கொள்கையினையும் எதிர்த்து விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஓரணியில் திரட்டுவது ஆகியவையே கட்சியின் முன் இருக்கும் பிரதான கடமைகளாகும்.

நிலம் கையகப்படுத்துதல்

2.28 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் கையகப்படுத்தல் மற்றும் 1894ம் வருடத்தைய அரக்கத்தனமான நில கையகப்படுத்துதல் சட்டத்தைப் பயன்படுத்தி பெருவர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுரங்கப் பயன்பாட்டிற்காக வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் நடத்தி வரு கின்றனர். 17 மாநிலங்களில் உள்ள 40 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளன. நிலத்தை மட்டுமே சார்ந் திருக்கும் விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குறைந்தபட்ச இழப்பீடோ, நிவாரணமோ வழங்கப்படாமல் பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதிவாசி மக்கள் தங்களது நிலங்களிலிருந்து விரட்டப்பட்டு, தங்களது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடற்கரையோர கிராமங்களி லிருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் அவர்களுடைய  வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் யமுனா விரைவு வழித் திட்டத்தின் கீழ் நெடுஞ் சாலை அமைப்பதற்காக மட்டுமின்றி நில விற்பனையாளர்கள் நகரியங்களை உருவாக்குவதற்காகவும் பெருமளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அலிகார், மதுரா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஹரியானா, ஒரிசா, ஆந்திரம்,மத்தியப்பிரதேசம், மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்ட்ர மாநிலம் ராய்க்காட் மாவட்டத்தில் மகாமும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக ரிலையன் நிறுவனம் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து மக்கள் நடத்திய உறுதிமிக்க போராட்டத்தின் விளைவாக அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. பலவந்தமாக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும், தங்களது நில உரிமைக்காகவும் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்குக் கட்சி மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் தலைமை தாங்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்துதல், மறுசீரமைப்பு மற்றும் மறு குடியேற்ற சட்டம், 2001

2.29 அரசினால் தயாரிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு தொடர்பான மசோதா விவசாயிகளைப் பாதுகாப்பதாக அமையவில்லை. தனியார் நிலத்தைக் கையகப்படுத்தும் போது இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்கான உத்தரவாதம் வழங்குவதை இந்த மசோதா சட்டபூர்வமாகக் கட்டாயமாக்கவில்லை. கனிம சுரங்கங்கள், ரயில்வே, மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக சட்டங்களில் கொடுக்கப்படும் விதி விலக்குகள் இந்த சட்டத்தை கேலிக்குரியதாக்கி விடுகிறது. கனிமவளம் நிறைந்துள்ள ஆதிவாசி மக்கள் பகுதிகளை பெரிய நிறுவனங்களுக்கு திறந்து விடுவதால் ஆதிவாசிகளின் நில உரிமை கடுமையாக பாதிக்கப்படும்.

2.30 நில உரிமையாளர்களின் உரிமையைப் பாதுகாக்கிற வகை யில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு மசோதா அமைய வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். குறிப்பாக சிறு நில உரிமையாளர்கள் மற்றும் நிலத்தைச் சார்ந்துள்ள வாரசாகுபடியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கத் தக்க வகையிலும் மிரட்டல், மற்றும் ஏமாற்றி அவர்களது நிலம் பறிக்கப்படு வதை தடுக்கும் வகையிலும் இந்த மசோதா அமைய வேண்டும்.

தாராளமயமாக்கலின் 20 ஆண்டுகள்

2.31 இந்தியாவில் நவீன தாராளமயமாக்கல் பொருளாதார சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு 2011ம் ஆண்டுடன் 20 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. இந்த 20 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்துடன் பெருமளவு ஒருங்கிணைக்கப்பட்டு தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள் கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இந்திய பெரு முதலாளிகளின் தலைமையிலான ஆளும்வர்க்கத்தின் முழு மையான ஆதரவுடன், மத்தியில் எந்தக்கட்சி ஆட்சி நடத்தி னாலும் வேறுபாடின்றி நவீன தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. பெரிய வர்த்தக நிறுவ னங்கள் மற்றும் நகர்ப்புற வசதி படைத்தவர்கள் விரைவான வருமான வளர்ச்சி மற்றும் வாங்கும் சக்தி அதிகரிப்பு ஆகிய பலன்களை அனுபவிக்கும் நிலையில், உழைக்கும் வர்க்கம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள குறைந்த வருவாய் உடைய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள நிலப் பிரபுக்கள், பணக்காரர்கள் தவிர மிஞ்சியுள்ள அனைத்து விவசாய வர்க்கத்தினரும் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதை சந்திக்க வேண்டியுள்ளது. இதே காலகட்டம்தான் வருமானம் மற்றும் செல்வ விநியோகத்தில் சமனற்ற நிலை விரிவடைவதையும் மாநிலங் களுக்கு இடையேயும், சமூகத்திலும் உள்ள ஏற்றத்தாழ்வு விரிவடைவதையும் சந்தித்தது. ஒரு புறத்தில் உயர்வர்க்கத் தினரின் வாழ்க்கை வளம் பெற மறுபுறத்தில் பெரும்பகுதி உழைக்கும் மக்கள் ஒட்டச்சுரண்டப்படுவதே இந்தியாவில் நவீன தாராளமயமாக்கல் கொள்கையால் கண்ட பலனாகும்.

பெருவர்த்தக நிறுவனங்கள்

2.32 நவீன தாராளமயமாக்கல் சீர்திருத்தத்தால் பிரதானமாக பயன் அடைந்தவர்கள் பெரு முதலாளிகளே ஆவர். கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய பெரிய வர்த்தக நிறுவனங் களின் செல்வாதாரம் மற்றும் சொத்து மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை (ஒரு பில்லியன் டாலரின் உத்தேச மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடி) போர்ப்ஸ் பத்திரிகை அளித்துள்ள விபரத்தின்படி 2003ல் 13 ஆக இருந்ததிலிருந்து 2011 மார்ச்சில் 55 ஆக உயர்ந்துள்ளது.

2.33 கடந்த பத்தாண்டில் இந்தியாவின் பெரிய வர்த்த நிறுவ னங்கள் உலகளவில் போட்டிபோடக் கூடியவர்களாக வளர்ந் துள்ளனர். இந்தியாவின் அந்நிய முதலீட்டு மதிப்பு 2000-ல் 2 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2010ல் 79 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2010-11ஆம் ஆண்டில் இந்தியாவி லிருந்து சென்ற அந்நிய முதலீடு 43 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்திய பெருநிறுவனங்களின் அந்நிய முதலீடு என்பது பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் செயல் பட்ட நிறுவனங்களை கைப்பற்றுவதாகவே அமைந்தது. உதாரணமாக டாடா ஸ்டீல் நிறுவனம் 12 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கோரஸ் நிறுவனத்தையும், 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாகூர் அண்டு லேண்ட் ரோவர் நிறுவனத்தையும் கையகப்படுத்தி யுள்ளது. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியப் பகுதியில் இந்திய விவசாயம் சார் வர்த்தக நிறுவ னங்கள் பணப்பயிர் சாகுபடிக்காக பெருமளவு நிலங்களை வளைத்துள்ளன. ஒரு மதிப்பீட்டின்படி 80க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் பெரிய தோட் டங்களை வாங்க ரூபாய் 12 ஆயிரம் கோடி (2.4 பில்லியன் டாலர்)  முதலீடு செய்துள்ளன. இந்திய சந்தைக்காக உணவு தானியங்கள் மற்றும் பணப்பயிர் சாகுபடிக்கு இந்த நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சுரண்டப்படும் தொழிலாளர்கள்

2.34 முறைசார் துறையில் வேலை வாய்ப்பு 1998ல் 28.2 மில்லிய னாகவும் (2.8 கோடி) 2008ல் 27.5 மில்லியனாகவும் (2.75 கோடி) இருந்தது. உற்பத்தி சார்ந்த முறைசார் தொழில்களின் (தொழில்துறை ஆய்வு ஆண்டறிக்கையின்படி) ஊதியத்தின் பங்கு நிகர மதிப்புக்கூட்டலில் 1980களில் 30 சதவீதமாக இருந்த நிலையில் 1990களில் 20 சதவீதமாகக் குறைந்து 2008-2009ல் வரலாற்றிலேயே மிகக்குறைவாக 10 சதவீத அளவிற்கு வீழ்ந்துள்ளது. மறுபுறத்தில் நிகர மதிப்புக்கூட்டலில் லாபத்தின் பங்கு ஊதியத்தின் பங்கை விட 1980கள் முழுவதும் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்துள்ளது. 1990களில் தாராளமயமாக்கல் அமலாக்கப்பட்ட பிறகு லாப விகிதம் ஊதிய விகிதத்தை விட சுமார் 30 சதவீதம் அளவிற்கு 1990கள் முழுவதும் அதிகமாக இருந்துள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் லாபத்தின் பங்கு அதிகரிக்கத் துவங்கி 2008ல் 60 சதவீதத்தைத் தொட்டது. 1999-2000-ல் ஆலைத்துறையில் ஒப்பந்தத் தொழி லாளர்களின் எண்ணிக்கை மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதமாக இருந்த நிலையில் 2008-2009 ஆண்டில் 32 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு இல்லை என்பது மட்டுமல்ல. சமூக பாதுகாப்புப் பலன்களும் வழங்கப்படுவ தில்லை.

2.35 மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு களை உருவாக்கத் தவறியதோடு மட்டுமின்றி உருவாக்கப் பட்ட வேலையின் தன்மையும் மிகவும் சுரண்டல் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. இதனால் லாப விகிதம் உயர்ந்ததோடு நிரந்தரத் தொழிலாளர்களின் இடத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் தொழிலாளி, முதலாளிகளுடன் நடத்தும் கூட்டுபேர ஆற்றலும் குறைக்கப்பட்டது. 2009-10ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வின்படி தேசிய அளவில் ஒட்டு மொத்தத் தொழி லாளர்களில் சுமார் 51 சதவீதம் பேர் சுய வேலைவாய்ப்பு சார்ந்தவர்கள், 33.5 சதவீதம் பேர் தற்காலிகத் தொழி லாளர்கள், 15.6 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர/ஊதியம் பெறும் தொழிலாளர்கள் ஆவர். பெண் தொழிலாளர்களை தற்காலிகத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்துவது குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.

2.36 முறைசாரா தொழில்துறைக்கான தேசியககுழு (என்.சி.இ. யு.எஸ்) அளித்துள்ள விபரத்தின் படி 2004-2005ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒட்டுமொத்த உழைப்பாளர் 456 மில்லியனாக (45.6 கோடி) இருந்தனர். இவர்களில் முறைசாரா துறை தொழிலாளர்கள் 393.2 மில்லியன் (39.3 கோடி) ஆவர். 2004-2005ல் இவர்கள் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களில் 86 சதவீதம் ஆவர். இந்த பிரிவுத் தொழிலாளர்கள் மிகக் கடுமை யாக சுரண்டப்படுவதன் விளைவாக இந்திய மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவாக செல விடும் நிலையில் உள்ளனர். கைவினைஞர்களும், நெசவாளர் களும் கடுமையா பாதிக்கப்படடுள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றனர். மாநிலங்களுக்கிடையே தொழி லாளர்கள் புலம் பெயர்வதும் இவ்வாறு புலம்பெயரும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும் அதிகரித்து வருகிறது.

2.37 நவீன தாராளமயமாக்கல் யுகம் நிரந்தரமான வேலை வாய்ப்பை உருவாக்கும் திறனற்று இருப்பதால் உழைக்கும் மக்கள் முறைசாராத் தொழில் மற்றும் சுயவேலைவாய்ப் புக்குத் தள்ளப்பட்டு பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழல் மற்றும் வறுமையில் உழல்கின்றனர். இத்தகைய தொழிலாளர்களின் சுயவேலைவாய்ப்பு என்பது இவர்கள் சொற்ப மற்றும் நிச்சயமற்ற ஊதியத்திற்காக மிகக்குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட தொழில்களில் தள்ளப்படுகின்றனர் என்பதே ஆகும். இந்தப்பிரிவினர் பொருளாதார சரிவுநிலை மற்றும் உணவுப்பொருள் பணவீக்கத்தினால் ஏற்படும் சுமையை தாங்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

பெரும் ஊழல்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முத்திரை

2.38 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை உயர்மட்ட ஊழலுடன் இணைத்தே பார்க்கவேண்டியுள்ளது. 2-ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டு ஊழல் அம்பலமானதன் விளைவாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர், தற்போதைய எம்.பி. மற்றும் சில அதிகாரிகள், பெரு நிறுவன நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2008-ஆம் ஆண்டில் 2-ஜி அலைக்கற்றை உரிமங்கள் அடிமாட்டு விலைக்கு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ரூ.57ஆயிரம் கோடி முதல் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அதிகாரியின் அறிக்கை மதிப்பிட்டுள்ளது. சுதந்திர இந்தி யாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலான இந்த ஊழலை மூடிமறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டபோதும் உச்சநீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணையை மேற் பார்வை செய்வதால் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஊழலில் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் பிரதமரின் பங்கு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. நவீன தாராள மயமாக்கல் யுகத்தின் விளைவாக ஊழலுக்கு அடித்தளமாக அமைந்த பெருவர்த்தக நிறுவனங்கள், ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு இடையிலான வலைப் பின்னல் 2 ஜி அலைக்கற்றை வரிசை ஊழல் மூலம் பட்டவர்த் தனமாக அம்பலமானது. இதில் பெருவர்த்தக ஊடகங்களுக்கு உள்ள தொடர்பு ராடியா டேப் மூலம் மேலும் அம்பலமானது.

2.39 லஞ்சம் வாங்கிக் கொண்டு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு பெர மதிப்புமிக்க ஒப்பந்தங்களை வழங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் அம்பலமானதைத் தொடர்ந்து காங்கிர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அவரது சகாக்களோடு கைது செய்யப்பட்டுள்ளார். டில்லியில் நிறைவேற்றப்பட்ட மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய கான்வெல்த் விளையாட்டுப் போட்டி சார்ந்த திட்டங்களில் நடந்த ஊழலையும் மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்தினார். கிருஷ்ணா-கோதாவரி நதிப்படுகையில் ரிலையன் நிறுவனம் எரிவாயு எடுக்கும் திட்டத்தில் நடைபெற்ற ஊழலால் மூலதன செலவு செயற்கையாக உயர்த்தப்பட்டது தெரியவந்தது. பெட்ரோ லியத் துறை அமைச்சகத்தின் ஆசியுடன் நடைபெற்ற இந்த ஊழலால் அரசு கஜானாவிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஊழல் கறைபடிந்த வலைப் பின்னல் காரணமாக சட்ட விரோத சுரங்கங்க ஊழலில் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் சம்பந்தப்பட்டுள்ளது. ஐபில் கிரிக்கெட் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், எ.பேண்ட் அலைக் கற்றை வரிசை ஒதுக்கீட்டில் இரோவின் ஆன்ட்ரிக் நிறுவனம் மற்றும் தேவா மல்டிமீடியா நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற முறைகேடான ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஊழல்கள் அம்பலமாகியுள்ளன. அரசின் உயர் மட்டத்தில் முடிவெடுக்கும் பணியை எந்த அளவிற்கு சலுகைசார் முதலாளித்துவம் சீரழித்துள்ளது என்பதை இவை வெளிக்காட்டுகின்றன. அரசுப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சியினரும் இந்த ஊழல் நடவடிக்கைகளை மூடி மறைக்கும் பணியிலே ஈடு பட்டுள்ளதோடு, அரசும் இந்த ஊழல் கூட்டிணைப்பை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது போல் தெரிகிறது. 

2.40 உலக நிதி நாணயத்தன்மை அமைப்பின் (GFI) ஆய்வின்படி 2008ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து வெளியேறிய சட்டவிரோத மூலதனத்தின் இன்றைய மதிப்பு குறைந்த பட்சம் 462 பில்லியன் டாலராக (சுமார் 23 லட்சம் கோடி) இருக்கும் என்று தெரியவந்துள்ளது. லஞ்சம், ஊழல், கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவையே இத்தகைய சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட நிதியாகும். கட்டுப் பாடுகளைத் தளர்த்துதல் மற்றும் 1991 லிருந்து 2008ஆம் ஆண்டு வரை அமலாக்கப்பட்ட தாராளமயக் கொள்கைகள் சட்டவிரோதப்பணத்தை வெளியேற்றுவதை வேகப்படுத்தியுள்ளது என்பதை உலக நிதி நாணயத்தன்மை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

2.41 பெருமளவிலான கறுப்புப் பணம், சட்டவிரோத பணத் திரட்சி, வரி ஏய்ப்பின் மூலம் சுருட்டப்படும் பணம் ஆகியவை சுவிட்சர்லாந்து வங்கிகள் மற்றும் வரிச்சலுகை கொடுக்கு மிடங்களில் பதுக்கப்பட்டுள்ளன. இவற்றை வெளிக்கொணருவதில் அரசு தொடர்ந்து தனது ஊசலாட்டத்தை வெளிப் படுத்தி வருகிறது. ரகசிய வங்கிக்கணக்குகள் வைத்திருப்போர் யார் என்ற பட்டியல் அதனிடம் இருந்தபோதும் அதை வெளியிட அரசு மறுத்து வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள இத்தகைய பணம் அரசினால் கண்டுபிடிக்கப் பட்டு, கையகப்படுத்தப்பட்டு வளர்ச்சிப்பணிகளுக்கு பயன் படுத்தவேண்டுமென்று மார்க்சிட் கம்யூனிட் கட்சி வலியுறுத்தியுள்ளது. வரியில்லா லாபத்தை அனுபவிப்பதற்கு மொரீசிய வழியாக இந்தியாவிற்கு கருப்புப்பணம் பெரு மளவு கடத்திவரப்படுகிறது. இந்தியாவில் செய்யப்பட்டுள்ள அந்நிய முதலீட்டில் 41 சதவீதம் மொரீசிய வழியாக வந்ததேயாகும். இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் (DTAA) பெருமளவு தவறாகப் பயன்படுத்தப்படுவதால் மொரீசிய வழி முதலீடு தடுக்கப்பட வேண்டும்.

2.42 காங்கிரஸ் கட்சி பின்பற்றுகிற அதே பொருளாதார சித்தாந்தத்தை கொண்டுள்ள பாஜகவினால் ஊழலைத் தடுப்பதற்கான மாற்று மேடையை வழங்க முடியாது. பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வர், பல அமைச் சர்கள் மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப் பினர்கள் நில ஊழல் தொடர்பாக லோக் ஆயுக்தாவால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் அமைச் சர்களாக இருந்த ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோத சுரங்க முறைகேடுகளில் தொடர்புடையவர்கள்; அவர்களில் ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். பாதுகாப்புத்துறை ஊழல், யுடிஐ ஊழல் மற்றும் பொதுத் துறை பங்குகளை மலிவான விலைக்கு தள்ளிவிட்ட ஊழல் உட்பட பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஊழலில் தனக்கென ஒரு சாதனைப்பட்டியலை வைத்துள்ளது. ஊழலுக்கு எதிராக பாஜக மேற்கொள்ளும் பிரச்சசாரத்திற்கு எந்தவித நம்பகத்தன்மையும் இல்லை.

ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்

2.43 பெரும் ஊழல்கள் மற்றும் பெருமளவிலான முறைகேடுகள் அம்பலமானதால் வெகுஜன எழுச்சி ஏற்பட்டுள்ளது. வலு வான லோக்பால் மசோதா வேண்டும் என்று அன்னா ஹசாரே தலைமையிலான இயக்கத்தால் எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு பரவலான ஆதரவு குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடையே ஆதரவு எழுந்தது. வலுவான லோக் பால் சட்டத்தை கொண்டுவர அரசுக்கு விருப்பமில்லை என்ற போதும் தொடர்ச்சியான மக்கள் நிர்பந்தம் காரணமாக ஒரு வழியாக சட்டமசோதா அரசால் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூர்வ மசோதா மிகவும் பலவீனமானதாகவும், லோக்பாலின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதாகவும், லோக்பால் அமைப்பு அரசை சார்ந்திருக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டது. 2011 குளிர் காலக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையின் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்களை ஏற்றுக் கொள்ள அரசு மறுத்தது; இந்தப் போக்கு ஒரு வலுவான லோக்பால் அமைப்பை ஏற்படுத்த அரசின் விருப்பமின்மையினை அம்பலப்படுத்தியது.

2.44 சுயேட்சை தன்மையோடும், சொந்த விசாரணை அமைப்பை கொண்டும் வலுவான லோக்பால் அமைக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. எனினும் ஊழலை எதிர்த்து போராடுவது என்ற முக்கிய விஷயத்தில் அன்னாஹசாரே குழுவினரிடம் இருந்து கட்சி மற்றும் இடதுசாரிகள் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளனர்.  நவீன தாராளமயமாக்கல் யுகத்தில், பெரு நிறுவனங்கள், ஆளும் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள கூட்டணியினால் உருவாக்கப்பட்ட நோயே உயர்மட்ட ஊழல் என்று மார்க்சிட் கம்யூனிட் கட்சி வரையறுக்கிறது. பெரு நிறுவனங்கள் இயற்கை வளத்தை கொள்ளையடிக்கவும், நிலம், எரிவாயு, அலை வரிசை மற்றும் சுரங்கத்துறைகளில் பெரும் ஊழல்கள் நிகழவும் அரசு துணை நிற்கிறது. லோக்பால் அமைப்பு தவிர வேறு சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். நீதிபதிகளை நியமனம் செய்வதற்கும், நீதித்துறை தொடர்புடைய ஊழல்களை விசாரிப்பதற்கும் அதிகாரம் கொண்ட தாக தேசிய நீதித்துறை கமிஷன் அமைக்கப்படவேண்டும். தேர்தலில் சட்டவிரோத பணம் விளையாடுவதைத் தடுக்க தேர்தல் சீர்திருத்தம் துவக்கப்படவேண்டும். இத்தனைக்கும் மேலாக அந்தக் கூட்டணியின் மூலம் எழும் பெருநிறுவனங் களின் கொள்ளைக்கும், ஊழலுக்கும் காரணமான நவீன தாராள மயமாக்கல் கொள்கைகளை முறியடிக்க உறுதிமிக்க, அயர்வற்ற போராட்டம் அவசியமாகும்.ஊழலுக்கு எதிராக வும், நீதித்துறை மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களுக்காகவும் பரந்த அளவில் ஒன்றுபட்ட இயக்கத்தினை கட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

வகுப்புவாதம்

2.45 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில் அதிலிருந்து மீள இந்துத்துவா சக்திகள் தங்களது வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கின்றன. அரசியல்தளத்தில் இசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொள்ளப் படுவதோடு இந்த குற்றச்சாட்டின் கீழ் முலிம் மக்கள் குறிவைக்கப் படுகின்றனர். உள்ளூர் அளவில் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தி வன்செயலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 19வது அகில இந்திய மாநாட்டிற்குப்பிறகு, ஹைதராபாத், பெரேலி, அகமதாபாத், நான்டன்ட், கோபால்கார், முர்தாபாத் மற்றும் ருத்ராபூரில் வகுப்புவாத வன்செயல்கள் நடந்துள்ளன. உள்துறை அமைச்சகம் அளித்துள்ள விவரத்தின் படி 2009ஆம் ஆண்டில் 791 வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளன. இதில் 119 பேர் கொல்லப்பட் டுள்ளனர். 2342 பேர் காயமடைந்துள்ளனர். 2010ல் நடந்த 658 வன்முறை நிகழ்வுகளில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1971 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகைய வன்செயல்கள் மூலம் மதவெறி அரசியல் தக்கவைக்கப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களான கர்நாடகம், மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கிறிதவ மற்றும் முலிம் சிறு பான்மை மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படு கின்றனர். ராஜதானில் பாஜக அதிகாரத்தை இழந்ததைத் தொடர்ந்து தொடர்ச்சியான வகுப்புவாத வன்செயல்கள் நடைபெற்று வருகின்றன.

பயங்கரவாத அபாயம்

2.46 பயங்கரவாத வன்செயல்களில் இந்துத்துவா தீவிரவாத குழுக்களின் பங்கு குறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரம் பயங்கரவாதத்தைத வகுப்பு வாத அடிப்படையில் சித்தரித்து வந்ததற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாலேகாவ் குண்டுவெடிப்பு, அஜ்மீர் ஷெரீப், மெக்கா மசூதி மற்றும் சம்ஸ்கதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்புகளில் சில இந்துத்துவ தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரக்யா தாகூர், அசிமானந்தா மற்றும் அவர்களது கூட்டாளிகள் தங்களது கொடிய குற்றங்களுக்காக விசாரணையை சந்தித்து வருகின்றனர். விசாரணைக்கு உள்ளாகியுள்ள இந்துத்துவா மதப் பிரமுகர்களை பாதுகாக்க அரசைக்குறை கூறுவதன் மூலம் ஆர்எஸ்எஸ், பாஜக முயன்றபோதும், அவர்களது முயற்சியை முறியடிக்கும் வகையில் இவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இஸ்ரத் ஜெகன் வழக்கு போன்ற போலீஸ் என்கவுண்டர் கொலைகள், 2002-ம் ஆண்டு நடத்திய திட்டமிட்ட இனப் படுகொலை நிகழ்வுகள் ஆகியவற்றை மூடி மறைக்க தொடர் முயற்சிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறையை திசைதிருப்பும் முயற்சிகள் போன்ற குஜராத் அரசின் சாதனைகள் இந்துத்துவா சித்தாந்தம் எந்தளவிற்கு மதச்சார்பற்ற, ஜனநாயக முறைமையை சீர்குலைக்கும் என்பதற்கு கண் முன்னால் தெரியும் சாட்சியமாக உள்ளது.

2.47 கடந்த நான்காண்டுகளில் சில முஸ்லிம் வகுப்புவாத குழுக்கள் தொடர்ச்சியாக வன்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதையும் காண முடிந்தது. பாகிஸ்தானில் உள்ள ஜிகாதி குழுவால் திட்டமிடப்பட்டு மும்பையில் 2008 நவம்பரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து 2011 ஜூலை மாதத்தில் மும்பையில் மூன்று இடங்களில் தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள், டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு போன்ற வன்செயல் களில் பலர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். முஸ்லிம் மற்றும் இந்து தீவிரவாதி களால் கிளப்பிவிடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் எதிர்கொள்ளப்பட வேண்டும், முறியடிக்கப்பட வேண்டும். மக்களை அணி திரட்டுவதன் மூலம் தீவிரவாத மதவெறி சித்தாந்தம் மற்றும் பயங்கரவாத வன்செயல்கள் முறியடிக் கப்பட வேண்டும். வகுப்புவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை இவர்களுக்கிடையிலான உள் ளார்ந்த தொடர்புகளை அம்பலப்படுத்தி முன்னெடுக்க வேண்டும்.

பிளவினை ஊக்குவிக்கும் மாவோயிஸ்ட்டுகளின் வன்செயல்கள்

2.48 மாவோயிஸ்ட்டுகளின் முழுவீச்சிலான சீர்குலைவு நடவடிக் கைகள் மற்றும் ஜனநாயக இயக்கத்தை சீரழிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எந்தளவிற்கு செல்லும் என்பதற்கு கடந்த மூன்றாண்டுகால நிகழ்வுகள் தெளிவான உதாரண மாகும். சதீஷ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் மாவோயிஸ்டுகளின் வன் செயல்கள் அதிகரித்தன. இந்த மாநிலங்களில் ஆதிவாசி மற்றும் வனப்பகுதிகளிலும் பீகார், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சில பகுதிகளிலும் மாவோ யிஸ்ட்டுகள் செயல்படுகின்றனர். ஆயுதந்தாங்கிய நடவடிக் கைகள் மூலம் அரசுக்கு எதிராக செயல்படுமாறு மலைவாழ் மக்களை தூண்டிவிடுவதன் மூலம் மலைவாழ் மக்களுக்கு எதிராக அரசு முழுஅளவிலான அடக்குமுறையை பிரயோ கிக்க இவர்கள் வழிவகுக்கின்றனர். மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப்படையினரை மட்டும் தாக்குவதில்லை. பல்வேறு மக்கள் பகுதியினர் மற்றும் பலதரப்பட்ட மக்கள், அவர் களோடு ஒத்துழைக்க மறுக்கும் அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பட்டவர்களை அவர்கள் குறி வைக்கின்றனர்.

2.49 கடந்த மூன்றாண்டுகளில் மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 210 பேர் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். புரட்சியாளர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் இவர்கள் இடதுசாரி எதிர்ப்பு சக்திகளின் கைப்பாவையாகவே செயல்படுகின்றனர் என்பதன் மூலம் அவர்களது உண்மையான சுயரூபம் அம்பலமாகியுள்ளது. நாடு முழுமையும் பிற அரசியல் கட்சிகளைவிட கூடுதலான அளவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களையே மாவோயிஸ்ட்டுகள் படுகொலை செய்துள்ளனர்.

2.50 தாந்தேவாடாவில் பேருந்துப் பயணிகளை கொடூரமாக கொலை செய்ததன் மூலமும், 149 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்த ஜானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு மூலமும் மாவோயிஸ்ட்டுகள் மேற்கொள்ளும் பயங்கரவாத முறைகள் அம்பலமானது. சாமானிய மக்களுக்கு எதிராக மாவோயிஸ்ட்டுகள் கொடூரமான இத்தகைய பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2.51 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தாக்குவதற்காக மாவோயிஸ்ட்டுகள், திரிணாமுல் காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டது நக்சலிச வரலாற்றில் கொடூரமான அத்தியாயமாகும். ஜார்கண்ட், சதீஷ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பணத்திற்காக பல்வேறு முதலாளித்துவ கட்சிகளுடன் மாவோயிஸ்ட்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒப்பந்தகாரர்கள், வர்த்தகர்கள், மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் வரி வசூலிக்க தனியானதொரு ஏற்பாட்டை வைத்துள்ளனர்.

2.52 அதிதீவிர இடது சாகசவாதத்தின் சீரழிந்த வடிவமே மாவோயிஸ்ட்டுகள் ஆவர். அவர்களது பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் சீர்குலைவு அரசியலை வலுவாக அம்பலப் படுத்த வேண்டும்.தங்களை இடதுசாரிகள் என்று கூறிக் கொள்ளும் சில குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள் மாவோயிஸ்ட்டுகளை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். அவர்களது இரட்டை வேடத்தை தத்துவார்த்த ரீதியாக முறியடித்து அம்பலப்படுத்த வேண்டும்.

2.53 கட்சி மாவோயிஸ்டுகளை அரசியல் ரீதியாகவும், தத்து வார்த்த ரீதியாகவும் எதிர்த்து போராட வேண்டும். மாவோயிஸ்ட்டுகளின் இடையறாத வன்செயல்கள் அரசியல் எதிரிகளிடம் பாசிஸ்டுகள் போன்று சகிப்புத்தன்மையின்றி நடந்துகொள்வது, மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள், ஆதரவாளர்களை அவர்கள் குறிவைப்பது போன்றவற்றிற்கு எதிராக ஜனநாயகப்பூர்வ கருத்தை திரட்ட கட்சி முயற்சி எடுக்கும்.

வடகிழக்கு

2.54 ஆதிவாசி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த அடையாள அரசியல் மற்றும் மத்திய அரசின் தொடர்ச்சியான பார பட்சம் மற்றும் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருவதே வட கிழக்கு மாநில நிலைமையாக உள்ளது. அதிருப்தி மற்றும் தனிமைப்படுத்தப்படுதலுக்கு உள்ளாகி உள்ள மக்களை இன மற்றும் ஆதிவாசிக்குழுக்களாக பிரிப்பதற்கு தீவிரவாத சக்திகள் பயன்படுத்திக்கொள்கின்றன.

2.55 120 நாட்களுக்கும் மேலாக நீடித்த நெடுஞ்சாலை முற்றுகைப் போராட்டத்தினால் மணிப்பூர் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். குகி மற்றும் நாகா குழுக்கள் மலைப்பகுதியை போட்டிபோட்டுக் கொண்டு உரிமை கோரியதன் விளைவாக இந்தப்போராட்டம் நடந்தது. முற்றுகை நடந்த காலம் முழுவதும் மத்திய அரசு செயலற்று இருந்ததோடு முற்று கையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்தது. பல்வேறு ஆதிவாசி குழுக்கள் மற்றும் ஆதிவாசிகளல்லாதோர் குழுக்களும் தங்களுக்கென்று ஆயுதந்தாங்கிய பிரிவுகளை அமைத்துக்கொண்டு பெருந்தொகையை வசூலிப்பதோடு நிர்வாகத்தின் அதிகாரத்திற்கும் சவால் விடுகின்றனர். பரந்த அளவில் மக்கள்கோரிக்கை விடுத்தபோதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் அரசினால் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

2.56 முதலாளித்துவ அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு நிதியை உறிஞ்சும் ஒப்பந்தகாரர்கள் ஆகி யோரின் வலைப்பின்னலால் இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டமைப்புப்பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன. இந்தப்பகுதியில் இதற்கு விதிவிலக்காக இருப்பது திரிபுரா மாநிலம் மட்டுமே.

2.57 தனது நாட்டில் தங்கியிருந்த உல்பா அமைப்பின் உயர் மட்டத் தலைவர்கள் பலரை வங்கதேசம் ஒப்படைத்த பிறகு, உல்பா தலைமை மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கிடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் காரணமாக அசாமில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பு மேம்பட்டுள்ளது.உல்பா தலைமையின் பெரும்பகுதியினர் ஆயுதப்போராட்டடத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர். பரேஷ்பரூவா தலைமையிலான ஒரு சிறுபகுதி மட்டும் இன்னமும் அமைதி முயற்சியை எதிர்த்து வருகிறது. என்எசிஎன்(ஐஎம்) அமைப்புடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தபோதும் முட்டுக்கட்டை நீங்கவில்லை. நாகாலிம் என்ற பெயரில் மகா நாகாலாந்து கோருவது முட்டுக்கட்டைக்கு காரணமாக உள்ளது. வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள ஏனைய அனைத்து தீவிரவாதக் குழுக்களுடனும் மத்திய அரசு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைய துவக்க வேண்டும்.

2.58 திரிபுராவில் தொடர்ச்சியான அரசியல் பணி மற்றும் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளாலும், இடது முன்னணி அரசின் உறுதிமிக்க நடவடிக்கையாலும் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது வன்செயல்கள் ஒடுக்கப்பட்டு ஆதிவாசிகள் மற்றும் ஆதிவாசிகள் அல்லாதவரின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஏனைய வடகிழக்கு பிராந்தியத்திற்கு இது ஒரு முன்மாதிரியாகும்.

ஜம்மு -காஷ்மீர்

2.59 பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் வன்செயல்கள் இந்த மாநிலத்தில் பெருமளவு குறைந்துள்ளதை காண முடிகிறது. எனினும் இந்தச் சமவெளியில் வாழும் மக்கள் இந்திய அரசிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும் உணர்வி லிருந்து வெளிவந்து விட்டதாகக் கொள்ள முடியாது. 2010ம் ஆண்டு கோடை மாதங்களில் நடைபெற்ற பெருந்திரள் போராட்டங்களின் போது 120 இளைஞர்கள் மற்றும் பதின்பருவத்தினர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படை யினர் மீது இந்த இளைஞர்கள் கல்வீச்சுத்தாக்குதல் நடத்திய போது கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையில் ராணுவத்தினர் தங்கவைக்கப்பட்டிருப் பதும், அடக்குமுறை சார்ந்த பாதுகாப்புக் கட்டமைப்பும் மக்களின் கோபத்திற்கான நிரந்தர ஊற்றுக்கண்களாக உள்ளன. பெருந்திரள் போராட்டங்களின் போது வழங்கப் பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற, வழக்கம்போல மத்திய அரசு முன்வரவில்லை.

2.60 ராணுவத்தினர் நிறுத்தப்படாத மாநிலத்தின் பெரும்பகுதியில் பாதுகாப்புப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று பரவலான கோரிக்கை எழுந்த போதும் அதைச் செய்ய அரசு தவறிவிட்டது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கருத்துத் தோட்டங்களையும் கணக்கில் கொண்டு அரசியல் ரீதியிலான பேச்சுவார்த் தையை மேம்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பேச்சு வார்த்தைக்கு மூன்று பேரை நியமித்தது இந்த நோக்கத்திற்கு உதவுவதாக இல்லை. பதற்றத்தை தணிக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், அரசியல் ரீதியிலான பேச்சு வார்த்தையை மேம்படுத்தவும் விரிவான ஆலோசனைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ளது. மாநி லத்தில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக் கையை குறைப்பது; மாநிலத்தின் பல பகுதிகளில் பாது காப்புப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை திரும்பப்பெறுவது; அடக்குமுறையான பாதுகாப்புக் கட்டமைப்பை கைவிடுவது போன்றவை இந்த ஆலோசனைகளில் அடங்கும். பாது காப்புப் படையினரின் அதீத நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு தவறிழைத் தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் உள்ள மக்களுக்கும் இங்குள்ள மக்க ளுக்கும் இடையிலான உறவும், தொடர்பும் ஊக்கப்படுத் தப்பட வேண்டும். அரசியல் ரீதியாக மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து மாநிலத்திற்கு அதிகபட்ச சுயாட்சியும், மூன்று பிராந்தியங்களுக்கும் பிராந்திய சுயாட்சியும் வழங்கப்பட வேண்டும்.

2.61 ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக 2010 நவம்பரில் கூடிய கட்சியின் மத்தியக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை கட்சி முன்னிறுத்துவ தோடு, நீண்டகாலமாக நீடித்துவரும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண நாட்டிலுள்ள ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்டும்.

தெலுங்கானா போராட்டம் மற்றும் புதிய மாநிலங்கள்

2.62 கடந்த இரண்டாண்டுகளில் தெலுங்கான தனிமாநிலத்திற் கான போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, பாஜக, ஆகிய கட்சிகளும் 2009 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தெலுங்குதேசம் கட்சியும் அந்தப்பகுதியில் உள்ள காங்கிரகாரர்களும் இந்தக் கோரிக்கையை எழுப்பினர். சிபிஐ கட்சியும் கூட தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு அளித்தது. மொழிவாரி மாநில அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆந்திரப்பிரதேசத்தை பிரிக்கலாகாது என்ற நிலையை மார்க்சிட் கம்யூனிட் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நெடுங்கால போராட்டத்திற்குப் பிறகு, மொழிவாரி மாநிலம் என்ற நிலைபாடு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் மாநிலங்களை உடைப்பது தேவையற்றது என்ற நிலைபாட்டின் அடிப் படையில் இந்த நிலை மேற்கொள்ளப்பட்டது.

2.63 புதிய மாநிலங்கள் அமைக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சரின் அறிவித்திருந்ததிலிருந்து பின் வாங்கி இது குறித்து ஆராய ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அமைத்ததைத் தொடர்ந்து நிலைமை தீவிரமடைய மத்திய அரசு வழி வகுத்தது. இந்தக்குழு தனது அறிக்கையை அளித்து ஓராண்டு கடந்தபின்னும்கூட முடிவெடுப்பதில் மத்திய அரசு தவறி விட்டது. முடிவு தாமதமாவதால் மக்களிடையேயான பிளவு அதிகரிக்கும் நிலையில், மேலும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு முடிவை அறிவிப்பது அவசியமாகும்.

2.64 விதர்பா, கூர்க்காலாந்து, போடோலாந்து, கமதபுரி ஆகிய தனி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளன. மாநில சீரமைப்பை ஜனநாயகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்களை பிரிக்கக்கூடாது என்ற தனது நிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. சிறிய மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படும் கோட்பாடு ஏற்கத்தக்கதல்ல. சிறிய மாநிலங்கள் பொருளாதாரரீதியாகவும், நிதிரீதியாகவும் வலிமையானதாக இருக்கமுடியாது, முற்றிலும் மத்திய அரசைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதால் கூட்டாட்சி அமைப்பு முறை பலவீனமாகும். அந்தந்த மாநிலங்களில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் சமூக-பொருளாதார ரீதியாக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கு பிராந்திய சுயாட்சி வழங்குவதற்கு வகை செய்யப்பட வேண்டும்.

அடையாள அரசியல்

2.65 ஜாதி, மதம், பிரதேசம், ஆதிவாசி மற்றும் இனங்களின் அடிப்படையிலான அடையாள அரசியல் வளர்ந்து வருவது இடதுசாரி அரசியலுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய நிதி மூலதனம் இத்தகைய அரசியல் தங்களது நலனுக்கு மிகவும் உகந்தது என்று கருதுகின்றன. அடையாளத்தின் அடிப்படையில் மக்களை துண்டு துண்டாக பிளவுபடுத்து வதும் அவர்களை அடையாள அரசியலுக்குள் ஆழ்ந்திருக்கச் செய்வதும் அரசு மற்றும் மூலதனத்தின் ஆட்சிக்கு மிரட்ட லாக உருவெடுக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2.66 சமூக அடக்குமுறை, பாரபட்சம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்படும் குழுக்கள் மற்றும் சமூகங்கள் அடையாள அரசியலை வளர்ப்பதற்கு வளமான மண்ணாக விளங்கு கிறது. ஜாதி, ஆதிவாசி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் ஒருபகுதி மக்கள் அடையாள அரசியலின் பின்னால் அணி திரட்டப்படுவதற்கு ஏற்ற நிலையில் இருக்கிறார்கள். சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குறுகிய நோக்கம் கொண்ட குழுக்கள் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய அரசியலுக்கு நிதி உதவி செய்கின்றன; இது வர்க்க ரீதியான திரட்டல் மற்றும் வர்க்கம் சார்ந்த இயக்கங்களைச் சிதைக்கும் நோக்கம் கொண்டது.

2.67 பொதுவான வர்க்க அடிப்படையிலான இயக்கங்களைக் கட்டுவதன் மூலம் அடையாள அரசியலை மார்க்சிட் கம்யூனிட் கட்சி எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் சமூகத்தின் பல்வேறு பகுதியினரிடம் காணப்படும் ஜாதி சமூக மற்றும் பாலியல் ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சனை களைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

வெளியுறவுக் கொள்கை

2.68 ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு கடந்த எட்டாண்டுகளில் பின்பற்றி வந்துள்ள வெளியுறவுக் கொள்கையானது அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொண்ட கேந்திரக் கூட்டணியின் நிர்ப்பந்தம் காரணமாக சுயேச்சையான வெளியுறவுக் கொள்கைக்கு விடைகொடுத்ததேயாகும். 2005ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க ஜனாதிபதியும், இந்தியப் பிரதமரும் வெளியிட்ட கூட்டறிக்கையிலிருந்து கேந்திரக்கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னேறத்துவங்கியது. 19வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு இந்தக் கேந்திரக் கூட்டணியைப் பலப்படுத்துவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

2.69 அமெரிக்காவின் ஆயுத வியாபாரத்திற்கு ஏதுவாக பயனாளி கண்காணிப்பு உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த நிபந்தனைகளுக்கேற்ப அமெரிக்காவிடமிருந்து ரூ. 40 ஆயிரம் கோடிக்கு ஆயுதத் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. 2010 அக்டோபர் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய வருகை இரண்டு நோக்கங் களைக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் வர்த்தக நலன் களுக்கேற்ப இந்திய சந்தையை திறந்துவிட நிர்ப்பந்திப்பது. மற்றும் இந்தியாவை பாதுகாப்பு மற்றும் ராணுவத்துறையில் நெருங்கிய கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்வது என்பதே அந்த நோக்கங்களாகும். அமெரிக்காவின் சில முக்கியமான கேந்திர நோக்கங்களுக்கு ஒத்துழைப்பதாக இந்தியா ஒத்துக் கொண்டால்தான் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா விற்கு நிரந்தர இடம் கிடைக்கும் என்று ஜனாதிபதி ஓபாமா வெளிப்படையாகக் கூறினார். ஆப்கானிதான் விஷயத்தில் அமெரிக்காவின் கேந்திர திட்டங்களுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்தது. சர்வதேச அணுசக்தி முகமைக் கூட்டத்தில் ஈரானுக்கெதிராக நான்காவது முறை யாக இந்தியா வாக்களித்தது. ஈரான்- பாகிதான்-இந்தியா (ஐபிஐ) எண்ணெய்க்குழாய் திட்டம் நிர்த்தாட்சண்யமாக உடைக்கப்பட்டு அமெரிக்க சார்பு துர்க்மெனிதான்-ஆப்கானிதான்-பாகிதான்-இந்தியா (டிஏபிஐ) எண்ணெய்க்குழாய் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

2.70 லிபியாவில் நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளின் முரட்டுத்தனமான தலையீட்டிற்காக ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதன் உறுப்பு நாடான இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இது நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் தலையிடுவதற்கு வழி வகுத்தது. ஆனால், ஐரோப்பாவிற்கு வெளியே நேட்டோவின் தலையீட்டிற்கு எதிராக இந்தியா வால் உறுதியான நிலை எடுக்கமுடியவில்லை. ஏனெனில், ஆப்கானிதானில் நேட்டோ தலையீட்டிற்கு இந்தியா ஆதரவளித்திருந்தது. பிப்ரவரி 2012-ல் இந்தியா அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து  ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராக வாக்களித்தது. பிரிக் அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருந்தபோதும், இந்திய-சீன-ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் முத்தரப்பு ஆலோசனையில் பங்கேற்ற போதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கேந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ள தால் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை முன் னெடுத்துச் சென்று பன்முக உலகை மேம்படுத்துவதில் வலிமையான பங்கினை ஆற்ற இந்தியாவினால் முடியவில்லை.

2.71 சீனாவுடனான உறவை வளர்த்தெடுக்கவும், மேம்படுத்தவும் தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இந்திய நலனுக்கு இது தேவையான ஒன்று. சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவுடனான கேந்திர கூட்டணியைக் கொண்டு அமெரிக்கா முயன்று வரும் பின்னணியில் இதைப் பார்க்க வேண்டும். 2010-11ம் ஆண்டில் 63 பில்லியன் டாலர் (ரூபாய் 3 இலட்சத்து 15 ஆயிரம் கோடி) அளவிற்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொண்டுள்ள சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்குகிறது.

2.72 2011ம் ஆண்டில் பாகிதானுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கியது சாதகமான வளர்ச்சிப் போக்காகும். மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற அந்ததை இந்தியாவிற்கு பாகிதான் வழங்கியதும், ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கட்டுப் பாட்டுக்கோடு குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தும் பேச்சு வார்த்தைகள் நடந்ததும் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும். பாகிதான் அதன் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத சக்திகளுக்கெதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

2.73 சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை பின்பற்று மாறும், அமெரிக்காவுடனான கேந்திரக்கூட்டணியை முறித்துக் கொள்ளுமாறும் நடத்தப்படும் போராட்டங்கள் இந்தியாவில் நவீன தாராளமயக் கொள்கைகளை விட்டொழித்து மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியா வின் வளர்ச்சியை உறுதிப்படுததுவதற்காக நடத்தப்படும் போராட்டத்துடன் நேரடியான தொடர்பு கொண்டதாகும். அயல்துறைக் கொள்கை மற்றும் கேந்திரக் கூட்டணியானது, உள்நாட்டுக் கொள்கை மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடிய ஒன்றாகும். சில்லரை வர்த் தகத்தில் அன்னிய முதலீடு என்றாலும், சுதந்திர வர்த்தக உடன்பாடு என்றாலும் விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தி யாளர்களைப் பாதிக்கும்-இவைகள் யாவும் இந்திய அமெரிக்க கேந்திரக்கூட்டணியுடன் இணைக்கப்பட்டவை. அணுசக்தி உடன்பாட்டில் அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழியின்படி அதிக செலவு பிடிக்கக்கூடிய அணு உலைகளை இறக்குமதி செய்வதன் மூலம் எரிசக்திக்கான செலவு உயர்வதோடு சுற்றுச்சூழலுக்குப் பெருந்தீங்கும் ஏற்படும். அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையின் காரணமாகவே மலிவான விலையில் எரிபொருள் தயாரிக்கும் சாத்தியம் கொண்ட ஈரான் எரிவாயு கொண்டுவரப்படும் குழாய்த் திட்டம் கைவிடப்பட்டது. அடிப்படைத் தேவை மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை நிலவும் போது அதிக பொருட்செலவில் அமெரிக்காவிடமிருந்து ஆயுத இறக்குமதி செய்வதும் கூட கேந்திரக்கூட்டணியின் காரணமாகவே ஆகும்.

2.74 நாட்டின் வளர்ச்சிப் பாதையின் ஒரு பகுதியாக விளங்கக் கூடிய சுயேச்சையான அயல்துறைக் கொள்கைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயர்வின்றி மக்களிடம் பிரச்சாரம் செய்யும்.

அணுசக்தி உடன்பாட்டிற்குப் பிறகு

2.75 இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டிற்குப் பிறகு மன்மோகன்சிங் அரசு கூறிவந்த கூற்றுகள் அம்பலமாகிய தோடு இந்த உடன்பாட்டின் நேர்மையற்ற அம்சங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பிய கேள்விகள் உறுதிப்பட்டன. மேலும், இந்த உடன்பாடு இந்தியாவின் அயல் துறைக் கொள்கையை நேரடியாகப் பாதிக்கும் என்பதும் உறுதியானது. இந்த உடன்பாட்டின் மூலம் இந்தியாவிற்கு முழுமையான அணுசக்தி ஒத்துழைப்பு கிடைக்கும் என்று கூறி நுட்பமான அணுசக்தி சார்ந்த தொழில்நுட்பத்தை இந்தியாவினால் முழுமையாகப் பெற முடியயும் என்றும் கூறி வந்தது பொய்ப்பிக்கப்பட்டது. 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா தவிர்த்த ஏனைய அணுசக்தி விநியோக நாடுகளின் குழு,  மறுசுழற்சி மற்றும் செறிவூட்டுதல் தொடர்பான தொழில்நுட்பத்தை, அணு ஆயுத பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாத இந்தியா போன்ற நாடுகள் பெறுவதற்கு தடை செய்யும் புதிய வழிமுறைகளை வெளியிட்டன. வெளிநாடுகளிலிருந்து அதிக செலவு பிடிக்கக்கூடிய அணு உலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் இல்லாத அணு எரிபொருளை பெறுவதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழியில்லாமல் போயிற்று. இந்த உடன்பாட்டின் விலையாக 10,000 மெகாவாட் திறனுள்ள அணு உலைகளை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. இத்துடன் வெளிநாட்டு விநியோகதர்களுக்கு விபத்தில் எந்தவிதமான பொறுப்பும் இல்லாதவகையில் சட்டத்தைத் திருத்தவும் உறுதிமொழி அளிக்க வேண்டியதாயிற்று. இதைமனதில் கொண்டு வெளி நாட்டு விநியோகதர்களை விடுவிக்கும் வகையில் நாடாளு மன்றத்தில் அணுசக்தி பொறுப்பு சட்ட மசோதாவை அரசு கொண்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றம் இதை ஏற்க மறுத்து வெளிநாட்டு விநியோகதர்களையும் விபத்துக்கு பொறுப்பாக்கும் வகையிலான பிரிவு சேர்க்கப்பட்டது. தற்போது இந்த சட்டத்தின் கீழ் சில விதிகளைப் புகுத்தி வெளிநாட்டு விநியோகதர்கள் பொறுப்பு குறித்த அம்சங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

2.76 உண்மையில் அமெரிக்காவை தாஜா செய்யும் நோக்கத்துடன் அணு உலைகளில் விபத்து நடந்தால் அமெரிக்கக் கம்பெனி களை அதற்கு பொறுப்பாக்குவதைத் தவிர்க்கும் முயற்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது. இது இந்தியக் குடிமக்களின் வாழ்வதற்கான உரிமை மற்றும் பாதுகாப்பிற்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோக மாகும். வரலாற்றில் மிகப் பெரிய அணுசக்தி பேரழிவாக, ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் விபத்து ஏற்பட்ட பிறகும் கூட அமெரிக்கா மற்றும் பிரான் உள்ளிட்ட அணு விநியோக நாடுகளைத் திருப்திப் படுத்துவதிலேயே ஐக்கியமுற்போக்குக்கூட்டணி அரசு குறியாக உள்ளது. நம்முடைய எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்வதற்கு 2020ம் ஆண்டுவாக்கில் தேவைப்படக் கூடிய 40,000 மெகாவாட் திறனுள்ள அணு உலைகள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என நம்பகத்தன்மையற்ற  ஆலோசனையினை அரசு முன் வைத்தது. அதனடிப்படையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரிவா நிறுவனத்துடன் அண்மையில் செய்துகொள்ளப் பட்டுள்ள உடன்பாடு மிகவும் செலவு பிடிக்கக்கூடியது, சோதனை செய்யப்படாத தொழில் நுட்பத்தைக் கொண்டது. இதுவரை எங்குமே நிறுவப்படாத ஒன்றாகும். மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள ஜெய்தாபூரில் இந்த அணுஉலைகள் நிறுவப்பட உள்ளன. இந்த அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்த்து உள்ளூர் மக்கள் தொடர்ச்சி யான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

2.77 ஜெய்தாபூர் மற்றும் இதர பகுதிகளில் அணுமின் நிலையங் கள் அமைப்பதற்காக அணு உலைகள் இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருகிறது. இந்தியாவில் ஏற்கெனவே உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து சுயேச்சையான ஒரு அமைப்பின் மூலம் மறுஆய்வு செய்யப்படவேண்டும். சுயேச்சை மற்றும் சுயாட்சித் தன்மை கொண்ட அணு சக்தி பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். தற்போது இத்தகைய ஒரு ஆணையத்தை உருவாக்குவதற்காக அரசினால் உத்தேசித்துள்ள மசோதா இந்த அமைப்பை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டதேயாகும்.

2.78 இந்த அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு முன்பே ரஷ்யாவிடமிருந்து வாங்கி, கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டு அணு உலைகளும் மாறுபட்ட நிலையில் உள்ளன. உள்ளூர் மக்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்தும், சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்தும் பல்வேறு அச்ச உணர்வுகளுக்கு குறிப்பாக புகுஷிமா விபத்திற்குப் பிறகு ஆட்பட்டுள்ளனர். ஆகவே, ஆலை செயல்படுவதற்கு முன்பே ஒரு சுயேட்சை யான பாதுகாப்பு ஆய்வு நடத்தி அவர்களின் அச்சத்தை போக்க வேண்டிய தேவை இருக்கிறது.

பெரும் வர்த்தக நிறுவனங்கள், பணபலம் மற்றும் அரசியல்

2.79 அரசியல் மற்றும் அரசியலமைப்பு முறைமீதும் நவீன தாராளமயமாக்கல் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருவர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியலுக்கிடையிலான வலைப்பின்னலும் வெளிப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வந்த அரசுகள் பின்பற்றிய கொள்கைகள், மக்களை வஞ்சித்து பெருமுதலாளிகள் மற்றும் அன்னிய மூலதனத்தின் நலன் களுக்கு நேரடியாக சேவை செய்யக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளன. தேர்தலின் போது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணம் செலவிடப்படுவது இந்த வலைப் பின்னலின் நேரடி விளைவே ஆகும். பெரும்பணம் விளையாடுவது ஒட்டுமொத்த அமைப்பையே ஊழல்மயமாக்கி விடுகிறது. முதலாளித்துவ அரசியல் கட்சிகள் பணபலத்தை அடிப்படையாகக் கொண்டே வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றன. பணபலம் தற்போது பஞ்சாயத்து தேர்தல் வரை பாய்ந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பது பல மாநிலங்களில் ஒரு நடைமுறையாகவே மாற்றப்பட்டு விட்டது. இதனால் ஜனநாயக அமைப்பு முறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் தேர்தலில் பணபலத்தை எதிர்த்து கட்சி விரிவான அடிப் படையில் பிரச்சாரம் மேற்கொள்ளும்: அந்தப் பிரச்சாரம் பெரும் வர்த்தக நிறுவனங்கள் மக்கள் நலனுக்கான கொள்கைகள் உருவாவதை நிலைகுலையச் செய்யும் முயற்சி களை அம்பலப்படுத்த வேண்டும்; அந்த முறைகளை பயன்படுத்தும் முதலாளித்துவ கட்சிகளையும் அம்பலப்படுத்தும் வகையிலும் அந்தப் பிரச்சாரம் அமைய வேண்டும்.

2.80 மறைமுகமானதும், பெருந்தீங்கிழைக்கக் கூடியதுமான பண பலப் பிரயோகத்தாலும், நவீன தாராளமயமாக்கல் அணுகு முறையாலும், நாடாளுமன்ற ஜனநாயக முறையே சிதைவுக் குள்ளாக்கப்படுகிறது. பணபலம், குற்ற நடவடிக்கைகள் மற்றும் பல நிலைகளில் மாபியாக் கும்பல்களைப் பயன் படுத்துதல் உள்ளிட்டவற்றால் ஜனநாயகம் கீழிறக்கப்படு கிறது. மக்களுக்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய பொறுப் பில் உள்ள அமைப்புகளை வலுவிழக்கச் செய்யும் போக்கு அதிகரித்துக் கொள்டிருக்கிறது.  நவீன தாராளமயமாக்க லால் உத்தரவிடப்படும் அரசியலால் ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆர்ப் பாட்டம், பொதுக்கூட்டம், பொதுவேலைநிறுத்தம் ஆகிய வற்றை நடத்துவதற்கான உரிமைகள், நிர்வாக நடைமுறைகள் மூலமாகவும் நீதித்துறை உத்தரவுகள் மூலமாகவும தடை செய்யப் படுகின்றன. உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு எதிராக கருத்தொற்றுமையை உருவாக்க முதலாளித்துவ ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்தல் சீர்திருத்தங்கள்

2.81 ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கவும், அரசியல் ஊழல் களைத் தடுக்கவும், தேர்தல் சீர்திருத்தங்கள் இன்றியமையாத தேவையாகும். தேர்தலில் பணபலம் மற்றும் சட்டவிரோத பணப்புழக்கம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உறுதிமிக்க விதிகள் உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் பிரச்சார சாதனங்களுக்கு அரசு நிதி தருவது அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதைத் தடை செய்யவும், அதைத் தேர்தல் குற்றமாக அறிவிக்கும் வகையிலும் சட்டத் திருத்தம் செய்யப்படவேண்டும். கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், பட்டியல் முறையின் ஒரு பகுதியாக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுவருவது அடிப்படையான தேர்தல் சீர்திருத்தமாக அமைய வேண்டும். இதன்மூலம் பணபலம் மற்றும் அடியாள்பலத்தை ஓரளவு தடுக்க முடியும். பகுதி அளவிலான பட்டியல் முறையின் மூலம் மொத்த இடங்களில் 50 சதம் இடங்களுக்கு கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாச்சாரத்தில் கட்சிகளின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்; 50 சதம் பேர் பிரதேச தொகுதிகளிலிருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தேர்தல் சீர்திருத்தம் கோருவதை தங்களது முக்கிய அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னிறுத்தும்.

மத்திய-மாநில உறவுகள்

2.82 மத்திய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பதும் மாநிலங்களின் அதிகாரங்களை ஆக்கிரமிப்பதும் இடை வெளியின்றி தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளன. மத்தியில் தொடர்ச்சியாக கூட்டணி அரசுகள் இருந்துவருவதாலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் கூட் டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லாததாலும் மாநில அரசுகள் மீது நேரடியாகத் தலையிடக் கூடிய 356 சட்டப் பிரிவை பயன்படுத்துவது குறைந்துள்ளது. ஆனால் நிதி மற்றும் சட்டம் சார்ந்த வகைகளில் மாநிலங்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பது தொடர்கிறது. நிதியாதாரம் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு நவீன தாராளமய மாக்கல் கொள்கைகளை அமலாக்க வேண்டும் என்ற நிபந் தனைகள் வகுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்ந்த திட்டங் கள் இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. முந்தைய இரு நிதிக்குழுக்களும் கடைப்பிடித்த போக்கினை தொடர்ந்து 13வது நிதிக்குழுவும் மேலும் மிகக் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீதத்தைப் பகிர்ந்தளிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. கல்வி, கூட்டுறவு நிறுவனங்கள் சார்ந்த துறைகளில் தொடர்ச்சியான சட்டங்களைக் கொண்டுவ ந்ததன் மூலம் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமித்தது ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு-2. தற்போது முன் மொழியப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவிலும் கூட மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. தேசிய, தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைக்கப்படுவது என்பது மாநிலங்களின் காவல்துறை அதிகாரத்தை பறிப்பதாகும். மாநில அரசுகள் மத்திய அரசைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை அதிகரித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிரான அதிருப்தி வளர்ந்து வருகிறது. மத்திய-மாநில உறவுகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் மார்க் சிட் கம்யூனிட் கட்சி எப்போதும் முன்னணியில் இருந்து வந்துள்ளது. மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய- மாநில உறவுகளை சீரமைக்க பாடுபடுவதிலும் கட்சி முன் நிற்கும்.

பெண்கள் நிலை

2.83 பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டாண்டுகள் ஆனபின்னும் கூட மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முன் வராததில் இருந்து பெண்கள் உரிமை சார்ந்த பிரச்சனைகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொய்மையைப் புரிந்து கொள்ள முடியும். பல்வேறு மாநிலங்கள் நடைமுறைப்படுத்திய பிறகு தான் பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பாகிதான், ஆப்கானிதான் உள்ளிட்ட இந்தியா வின் பெரும்பாலான அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியுள்ள விஷயத்தில் இந்தியா பின்தங்கியே உள்ளது. தொழிலாளர் பங்கேற்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்தலுக்கான போராட்டம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகிய நான்கு உலக பாலியல் குறியீட்டு எண் அடிப்படையில் 2006ம் ஆண்டில் 135 நாடுகளில் 98ம் இடத்தில் இருந்த இந்தியா 2011ல் 113ம் இடத்திற்கு பின்சென்றுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றொரு கொடூரமான யதார்த்தத்தை வெளிக்காட்டுகிறது. குழந்தைத் தேர்வு என்ற பெயரில் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தான் அது. 2011ம் ஆண்டு ஆண்-பெண் குழந்தைகள் விகித விவரத்தின்படி 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற அளவிலேயே அமைந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் குறைந்த அளவாக 10 ஆண்டுகளில் 13 சதவீதம் அளவிற்கு இந்த விகிதம் சரிந்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பில் சமச் சீரற்ற தன்மை, ஏற்றத்தாழ்வான வருமானம் மற்றும் பெண் களுக்கெதிரான வன்முறை இந்தக்காலத்தில் அதிகரித்ததற்கு அரசு பின்பற்றிய கொள்கைகள் முக்கிய காரணமாக உள்ளன. இதன்காரணமாக பெண்களின் நிலையில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் காரணமாக சமூக மானியங்கள் வெட்டப்பட்டதன் விளை வாக வீட்டு உழைப்பின் மொத்த அழுத்தமும் பெண்கள் தலைமீதே சுமத்தப்பட்டதோடு குடும்பப் பராமரிப்பு முழு வதற்கும் பெண்களே பொறுப்பாக்கப்பட்டனர். அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஊட்டச் சத்து குறைந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐந்து வயதிற்கும் கீழ்ப்பட்ட குழந்தைகளில் 42 சதவீதம் பேர் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2.84 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களில் தேசிய அளவில் 51 சதவீதம் பேர் பெண்கள் என்பது தங்களது மிகப் பெரிய சாதனை என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பீற்றிக்கொள்கிறது. கடுமையான வேலை விதிமுறைகள், கடும் பணிச்சுமை இருந்தபோதும் வேறு வழியில்லாத நிலையி லேயே தேசிய அளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களின் துயரநிலை அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. மேலும் அரசு அளித்துள்ள விவரங்களின் படி பார்த்தால் கூட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்கள் ஈட்டும்  ஊதியம் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக, சில இடங்களில் 25லிருந்து 30 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது. இந்தக்காலத்தில் பெண் தொழி லாளர்களை ஒப்பந்த முறையிலும், தற்காலிக அடிப்படை யிலும் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மிகப் பெருமள விலான பெண்கள் எந்தவிதமான தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்புமில்லாத, வீட்டிலேயே பார்க்கக்கூடிய பணிகளில், மிகக் குறைந்த பீ ரேட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு அரசு திட்டங்களில் பணியாற்றும் அங்கன்வாடித் தொழிலாளர்கள், ஊரக சுகாதார திட்டங்களில் பணியாற்றும் முறையான பயிற்சி பெற்ற சமூக, சுகாதார பணியாளர் (Asha) தொழிலாளர்கள், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகிய 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சுரண்டப்படும் நிலையை பார்க்கும்போது அரசே மிகப் பெரிய சுரண்டலாளராக இருப்பதை உணர முடியும். இந்த லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்களை கவுரவ தொழிலாளர்கள் என்று அழைத்து மிகச் சொற்ப ஊதியத் தையே மத்திய அரசு வெட்கங்கெட்ட முறையில் அளித்து வருகிறது பெண் தொழிலாளர்கள் குறித்த அரசின் ஆணா திக்க அணுகுமுறையையே இது காட்டுகிறது. நகர்ப்புறங்களில் பெருமளவிலான வீட்டுவேலைத் தொழிலாளர்கள் குறிப் பாகப் பெண்கள் தேசிய அளவில் தொழிலாளர்கள் என்று அங்கீகரிக்கப்படவில்லை. சில மாநிலங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களின் காரணமாக இவர்கள் சில உரிமைகளைப் பெற முடிந்துள்ளது.

2.85 வங்கித்துறை தனியார்மயமாக்கப்பட்டதாலும் முன்னுரிமைத்துறை கடன்கள் குறைக்கப்படுவதாலும் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்களை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்கள் பெற்று வந்த பலன்கள் பறிக்கப் பட்டுள்ளன. முந்தைய கடன் திட்டங்களுக்கு மாற்றாக முன்னிறுத்தப்படும் நுண்நிதி நிறுவனத் திட்டம் முற்றிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட அமைப்பை கொண்டுள்ளதோடு மிக அதிகமான வட்டி விகிதத்தை வசூலிப்பதாக உள்ளது. முந்திய வங்கிக் கடன் களுக்கும் சுயஉதவிக் குழுக்களுடனான இணைப்புக்கும் மாற்றாக எடுக்கப்படும் இந்த முயற்சி மிக மோசமான பாதிப்பு களை உருவாக்குகிறது. நவீன தாராளமயமாக்கல் காலத்தின் கந்துவட்டிக்காரர்களான நுண் நிதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது. இந்நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற நடைமுறை காரணமாக நூற்றுக்கணக்கான பெண்கள் தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அல்லலுக்கு ஆளாயினர். குறிப்பாக ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களிடையே பணியாற்றி வந்த சுயஉதவிக் குழுக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

2.86 நவீன தாராளமயமாக்கலின் கலாச்சார சீரழிவால் பெண்கள் வெறும் போகப் பொருளாகவே முன்னிறுத்தப்படுவதால் அவர்கள் இழிவுபடுத்தப்படுவதும், ஒடுக்கப்படுவதும் அதி கரித்துள்ளது. கணினிசார் சாதனங்கள் மூலம் மிரட்டுவது போன்ற புதிய வகையில் பெண்களுக்குத் தீங்கிழைக்கும் வடிவங்கள் அதிகரித்துள்ளன. இதைக் கட்டுப்படுத்து வதற்குப் போதுமான சட்டக் கட்டமைப்புகள் இல்லை. பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றச் செயல்கள், தலித் மற்றும் பழங்குடிப் பெண்களுக்கான அடக்குமுறைகள் காதல் தம்பதியரைத் தீர்த்துக்கட்டும் கவுரவக் கொலைகள் என பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் ரீதியாகப் பெண்களைத் தாக்குவது, பணியிடங் களில் பெண்களைப் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்வது மற்றும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுப்பதற்கான சட்ட மசோதா பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தபோதும் அரசு அதை நிறைவேற்ற முன்வராதது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். கவுரவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதற்கு உறுதிமொழி அளித்துள்ளபோதும் அதற்கான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மறுக்கிறது. சில மாநில அரசுகள் குறிப்பாக இந்தக் குற்றங்கள் அதிகமாக நடக்கும் ஹரியானா மாநில அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதே காரணமாகும்.

2.87 இந்தக்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பெண்களின் போராட்டங்கள் இயக்கங்கள் நடந்துள்ளன. ஜனநாயக போராட்டங்களில் பெண்கள் அணிதிரள்வதும் அதிகரித்துள்ளது. பெண்களைப் பாதிக்கக்கூடிய சமூகப் பிரச்சனைகளில் வலுவாகவும் தொடர்ச்சியாகவும் கட்சி தலையிடுவதோடு மேம்பட்ட ஊதியம் மற்றும் சிறப்பான பணி நிலைமைக்காக போராடும் உழைக்கும் பெண்களின் போராட்டத்திற்கும் தலைமையேற்கும்.

சிறுபான்மை முலிம்களின் பிரச்சனைகள்

2.88 முலிம் சமூகத்தின் சமூக, பொருளாதார வாழ்நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்த சச்சார் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வலுவான தொடர்நடவடிக்கைகள் எடுக்கத் தவறியது முலிம் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பழங்குடியின மக்களுக்கு இருப்பதைப் போல முலிம் சமூகத்தினருக்கும் துணைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் முலிம் மக்கள் கணிசமான வாழும் பகுதிகளின் வளர்ச்சிக்காக குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்க முடியும்.

2.89 நீதிபதி ரெங்கநாத் மிரா தலைமையிலான மத மற்றும் மொழி வாரி சிறுபான்மையினர் குறித்த தேசியக் குழுவின் அறிக்கை நீண்ட தாமதத்திற்குப் பிறகே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய- மாநில அரசு வேலை வாய்ப்புகளில் அனைத்து நிலைகளிலும் சிறுபான்மை முலிம்களுக்கு 10 சதவீதமும் இதர சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் அவர்களது சமூக மற்றும் கல்வி ரீதியிலான பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரை செய் துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், இடது முன்னணி தலைமையிலான ஆட்சி நடந்த மேற்கு வங்கத்தில் மட்டும் தான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின் உட்பிரிவாக முலிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

2.90 நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரையை ஏற்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறுத்துவிட்டது. இதற்கு பதிலாக இதர பிற்படுத்ததப்பட்ட பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அனைத்து சிறுபான்மையின ருக்கும் சேர்த்து 4.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவதாக அறி வித்தது. இந்த நடவடிக்கை ஏற்கெனவே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் முஸ்லிம்களுக்குள்ள வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் ஒன்றாகும். இத்தகைய உதிரிப் பங்கீடு பாதிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பகுதி முஸ்லிம் மக்களை மோசடி செய்யும் நடவடிக்கையாகும்.

2.91 நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரை அடிப் படையில் கிரீமி லேயரை (பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறி யோர்) நீக்கிவிட்டு முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் உள்ள முலிம் மற்றும் கிறிதவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் பொழுது தற்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு உள்ள இடஒதுக்கீடு பாதிப்படையக் கூடாது. பொதுப் பிரிவிலிருந்து கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் வரம்பைத் தளர்த்த அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும்.

2.92 பயங்கரவாத நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் பாரபட்சமான கைது நடவடிக்கைகள், சித்ரவதை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம் சமூகம் குறிவைத்துத் தாக்கப்படுகிறது. பயங்கரவாத நிகழ்வு களுக்குப் பிறகு முஸ்லிம் இளைஞர்கள் சுற்றிவளைக்கப் படுவதோடு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பொய்வழக்கு களுக்கும் இலக்காகின்றனர். ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பின் போதும், மகாராஷ்ட்ராவில் மாலேகாவில் நடந்த குண்டுவெடிப்பின் போதும் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் குண்டு வெடிப்புகளின் பின்னால் தீவிரவாத இந்துத்துவா அமைப்புகள் இருக் கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். உத்தரப்பிரதேசம் ஆசம்கார் மாவட் டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் முலிம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் கூட அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. காவல்துறையினர் மற்றும் புலனாய்வு அமைப்பினரின் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள் மூலம் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் இதேபோன்று நடப்பது, முலிம் மக்களிடையே வகுப்பு வாதம் ஊட்டப்படுவதற்கு இட்டுச் செல்கிறது. இத்தகைய பாரபட்ச போக்கு மற்றும் மனித உரிமை மீறலுக்கு முடிவு கட்டுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ஆதிவாசி மக்களின் உரிமைகள் மீதான தாக்குதல்

2.93 இந்தக் காலத்தில், பெரு நிறுவனங்களின் சுரங்கங்களுக்காகவும் மின்சாரம் மற்றும் பாசனத் திட்டங்களுக்காகவும் ஆதிவாசி மக்களின் நிலங்களை அரசு தொடர்ச்சியாக கையகப்படுத்திவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆதிவாசி மக்கள் தங்கள் வாழிவிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு வருவது இந்தியாவில் உள்ள ஆதிவாசி சமூகம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆந்திரப்பிரதேசம், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இத்தகைய நிலம் கையகப்படுத்தல் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதோடு முனைப்பாக ஊக்கப்படுத்தவும் செய் கிறது. கிராம சபைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பன போன்ற பிஇஎஏ (PESA – பஞ்சாயத்து  பட்டியல் பகுதி களுக்கு விரிவாக்கம்) சட்டம் 1996) சட்ட விதிகள் அப்பட்ட மாக மீறப்படுகின்றன. அதேநேரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வன உரிமைச் சட்டம், மிகவும் சிறப்பாக அதை செயல் படுத்திக் கொண்டிருக்கும் திரிபுரா மாநிலத்தைத் தவிர, மற்ற இடங்களில் சீர்குலைக்கப்படுகிறது. கனிம வளம் நிறைந்த ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் தனிநபர் பெயர்களில் உள்ள நிலப்பட்டா மற்றும் ஆதிவாசிகளின் சமூக உரிமைகள் பெருநிறுவனங்கள் நுழைவதற்குத் தடையாகக் கருதப் படுகிறது. தேசிய அளவில் ஆதிவாசிகளின் கோரிக்கைகள் சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக நிராகரிக்கப்பட் டுள்ளன. இத்தகைய கோரிக்கைகளை குறிப்பாக ஆதிவாசி மக்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்காகவே சட்டத் திற்கு வெளியே விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிவாசி மக்களைப் போன்றே ஏழைகளாக, உள்ள, பாரம்பரியமாக வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசியல்லாத பிரிவினரும் கூட பாதிக்கப்படுகின்றனர். 75 ஆண்டுகளுக்கும் மேலாக வனப் பகுதியில் வசித்ததை நிரூபிக்க வேண்டும் என்ற விதியின் காரணமாக பெரும்பகுதி மக்களின் உரிமை நிராகரிக்கப் படுகிறது. சட்டத்தில் உள்ள இந்தப் பிரிவு உடனடியாகத் திருத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளபடி 1980ம் ஆண்டை கட்-ஆஃப் தேதியாக கொள்ளவேண்டும். இந்த சமூகத்தினருக்கு நீதி கிடைத்திட இது அவசியமாகும்.

2.94 பொதுநோக்கத்திற்காக என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வுச் சட்டத்திற் கான முன்மொழிவு ஆதிவாசி மக்களின் நிலங்களைப் பறிக்கும் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த முன்மொழிவு ஆதிவாசி மக்களின் முன் அனுமதியைப் பெறாமலே அவர்களிடமிருந்து நிலத்தைப் பறிக்க வகை செய்கிறது. ஆதிவாசி மக்களின் நிலத்தைப் பாதுகாப்பது என்பது மிக முக்கியமானதொரு பிரச்சனையாகும். கட்சி இந்தப் பிரச்சனையைத் தொடர்ச்சியாகக் கையிலெடுத்து போராடும் அதே நேரத்தில் கனிமவளத்தில் ஆதிவாசி மக்கள் உரிமை கோரும் பிரச்சனையும் மிக முக்கியமான ஒன்றாகக் கட்சி கருதும். சுரங்க நிறுவனங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் நிறுவனங்கள்  அரசு பெறும் உரிமத் தொகைக்கு சமமான வரியினை செலுத்த வேண்டுமென்றும், அந்தத்தொகை ஆதிவாசிமக்கள் வசிக்கும் பகுதியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு ஆலோசனையை முன்வைக்கிறது. அற்பத்தனமான இந்தப் பங்கீடு முற்றிலும் ஏற்கத் தக்கதல்ல. மறுபுறத்தில், சமதா வழக்கில் கனிம வளத்தில் ஆதிவாசிகளின் உரிமையை அங்கீகரிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. கனிம வளத்தில் ஆதிவாசிகளின் உரிமை அங்கீகரிக்கும் வகையிலான கொள்கை உருவாக்கப்பட்டு ஆதிவாசி மக்களின் பங்கேற்பு மற்றும் ஒப்புதல் உறுதி செய்யப்பட வேண்டும்.

2.95 ஆதிவாசி மக்களின் குறிப்பாக ஆதிவாசி மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகள் மிக மோசமான முறையில் புறக்கணிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன. ஆதிவாசி பகுதிகளில் நிலவும் வேலையின்மையைப் போக்க ஆதிவாசி இளைஞர்களுக்கு பயிற்சி நிலையங்கள் அமைப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பணியிடங்களில் ஆதிவாசிகளுக்கான இடஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவுப் பணியிடங்கள் தொடர்புடைய பிரச்சனைகளிலும் கடந்த மூன்றாண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. மாறாக, மத்திய அரசே ஆதிவாசி துணைத்திட்டத்தின் வழிகாட்டுதலின் படி மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் சட்டப்படி குறைந்தபட்சம் 8.2 சதம் வழங்க வேண்டும் என்பதை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறது; அதோடு மட்டுமல்லாமல், பல அமைச்சரகங்களுக்கு விதி விலக்குகளை கொடுப்பதன் மூலம் அந்த வழிகாட்டுதல்களை நீர்த்துப் போகவும் செய்திருக்கிறது.

2.96 பெரும்பாலான ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒரு புறம் மாவோயிஸ்ட்டுகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்றால் மறுபுறம் பாதுகாப்புப்படையினரின் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். ஏழைகளுக்கெதிரான, அராஜகமான மாவோயிட்டுகளின் நடவடிக்கைகளுக் கெதிராக ஆதிவாசி மக்களை அணிதிரட்டும் அதே வேளையில் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக் காகவும், அரசு அடக்குமுறைகளுக்கெதிராகவும் கட்சி போராடும். நிலம் மற்றும் வனத்திற்கான உரிமை, வளர்ச்சியில் சமமான பங்கு, ஆகியவற்றுக்காக ஆதிவாசி மக்களை அணிதிரட்டி அவர்களது போராட்டத்திற்கு கட்சி தலைமை தாங்கும்.

தலித் மக்கள் பிரச்சனைகள்

2.97 16.66 கோடி எண்ணிக்கையிலான தலித் மக்கள் தொகை (இந்திய மக்கள் தொகையில் 16.2சதவீதம்) சாதிய ரீதியான அடக்குமுறைகளுக்கு ஆளாவது மனித உரிமை மீதான மிக மோசமான தாக்குதலாகும். நிலமின்மை, குடிநீர் பெறுவதற்கான வசதி மறுக்கப்படுவது பொதுச் சாலை, இடுகாட்டு நிலம் மற்றும் இதர சேவைகள் மறுக்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமை சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்த போதும் 10லட்சத்திற்கும் மேலான மக்கள் இந்தக் கொடுமையைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆண் டிற்கு சராசரியாக 30 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன என்ற விவரமே கூட தலித் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறை அதிகரித்து வந்துள்ளதைக் காட்டுகிறது. அதிலும் தண்டிக்கப்பட்டவர் விகிதம் மிகவும் குறைவானது. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ முறை பெயரளவிற்கு அரசியல் சட்ட ரீதியாகவும், சட்ட உரிமைகள் ரீதியாகவும் அவர்களுக்கான உரிமைகளை வழங்கியிருந்த போதும் அவற்றை அர்த்த பூர்வமாக நடைமுறைப்படுத்துவதில்லை.

2.98 தனியார்மயமாக்கல் மற்றும் அரசு பணிகளுக்கு ஆள் எடுக்க த்தடை போன்றவை தலித்துகளின் வேலை வாய்ப்பிற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்பு உட்கூறு நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது அல்லது திருப்பி விடப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர் களுக்கான கூட்டுத்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் உட்கூறு நிதி வேறு பணிக்கு திருப்பிவிடப்படுவதைத் தடுக்கும் வகையிலும், காலாவதி ஆகாமல் இருக்கும் வகையிலும் மத்திய அளவி லான சட்டம் நிறைவேற்றப்படுவது அவசியமாகும். இட ஒதுக்கீடு வழங்குவதில் உள்ள இடைவெளியும் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளது. தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குவதைச் சட்டபூர்வமாக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. அதைப்பெற பரந்த இயக்கம் கட்டப்பட வேண்டும்.

2.99 தீண்டாமைக் கொடுமை மற்றும் தலித் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் கட்சியினால் முனைப்பாக முன்னெடுக்கப்படும். அண்மைக்காலத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்தரப்பிரதேச மாநிலங்களில்  கட்சி மற்றும் முற்போக்கு சக்திகளால் துவக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந் துள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள்

2.100 மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறார்கள், புறக்கணிப்பிற்கு ஆளாகிறார்கள் அவர்களது அடிப்படை மனித உரிமைகள் கூட கொடூரமானமுறையில் மறுக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதால் நிதி ஆதாரப்பங்கீட்டில் அவர்களுக்குரிய அடிப்படைப் பங்கு மறுக்கப்படுகிறது. பெரும் பான்மையான மாற்றுத் திறனாளிகள் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களது பாதிப்பு இரட்டிப்பாகிறது. இப்போதுள்ள சட்டக்கட்ட மைப்பு எந்தவகையிலும் போதுமானதல்ல. உரிமை சார்ந்த நோக்கத்தின் அடிப்படையில் சட்டம் மற்றும் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் வழங்குதல், மருத்துவ உதவி, ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அம்சங்களில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுததுவதில் ஏற்பட்டுள்ள தோல்வியைச் சரி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் முடிவுகளுக்கேற்ப தற்போதுள்ள சட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, மாநாட்டின் நோக்கத்தை நிறைவேற்ற முன்வரவேண்டும். மாற்றுத்திறனாளி குடிமக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் என்பது அவர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள் என்ற வகையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். மாறாக கருணை மற்றும் இரக்கத்திற்கு உரியவர்கள் என்ற வகையில் அவர்களை அணுகுதல் ஆகாது.

கல்வி

2.101 2011-ம் ஆண்டு மனிதவள வளர்ச்சி குறியீடுகள் பற்றி பட்டிய லிடப்பட்ட 187 நாடுகளில் இந்தியா மிகக்கீழே 134-வது இடத்தில் உள்ளது.  2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி இந்தியர்களில் 26 சதவீதம் பேர் இன்னமும் எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர். பெண்களில் 35 சதவீதம் பேர் எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர். 2010-ம் ஆண்டில் இந்தியாவில் பள்ளிக்கல்வி பெறுவோர் சராசரி ஆண்டு 4.4 ஆண்டுகளாகும். இது உலகளாவிய சராசரி ஆண்டான 7.4 ஆண்டுகளை விடக் குறைவானது. இந்தியாவில் ஒட்டுமொத்த உயர்கல்வி பெறுவோர் விகிதம் 15 சதவீதமாக உள்ளது. இது உலகளவில் 26 சதவீதமாக உள்ளது. கல்விக்கான ஒட்டு மொத்த ஒதுக்கீடு (மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண் டையும் சேர்த்து) 2010-11ம் ஆண்டில் ஒட்டுமொத்தத உள் நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. கல்வித் துறையில் இந்தியாவின் பின்தங்கிய நிலை யையும், மக்களுக்கு கல்வி அளிப்பதில் இந்திய அரசின் பொறுப்பற்ற தன்மையையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது.

2.102 அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை உறுதி செய்வதற்காக மிகுந்த வலியுறுத்தலுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், போதிய அளவு நிதி ஒதுக் காததன் காரணமாக வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்ப தற்கான சிறப்புத் திட்டமும் புறக்கணிக்கப்பட்டது. நிதியாதா ரத்தின் பெரும்பங்கை ஏற்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இதற்கு பதிலாக, பள்ளிக்கல்வி தனியார்மயமாக்கப்படுவதை ஊக்கப்படுத்தும் வகையில் மானிய உதவியுடன் அரசு-தனியார் கூட்டு என்ற பெயரில் நாடுமுழுவதும் தனியார் நிறுவனங்களால் 2,500 மாதிரி பள்ளிகள் உருவாக்கப் பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வி என்பது அடிப்படை உரிமையாகும். இது ஒருங்கிணைந்த முறையில் அனைவருக்கும் அரசினால் வழங்கப்படவேண்டும்.

2.103 கல்வியை அனைத்து நிலைகளிலும் மத்தியப்படுத்துவது மற்றும் வணிகமயமாக்குவதன் மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 அரசின் நவீன தாராளமயத் தாக்குதல் கல்வித் துறையிலும் தொடுக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சித் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், ஜனநாயகக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் வகையிலும், உயர் கல்வித் துறையை தனியாரின் வேட்டைக்காடாக மாற்றும் வகையிலும், ஏராளமான சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வெளிநாட்டு கல்வி நிறுவன மசோதா என்பது வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தக ரீதியிலான பயிற்சிக்கடைகளைத் திறக்கவும், அநியாயக் கட்டணம் வசூலிப்பின் மூலம் மாணவர்களை ஒட்டச் சுரண்டவும் வழிவகுக்கிறது. உயர்கல்விக்கான தேசியக் குழுவை ஏற்படுத்துவதற்காக உத்தேசிக்கப் பட்டுள்ள மசோதா உயர்கல்வி நிறுவனங்களின் சுயாட்சி மற்றும் பன்முகத் தன்மையின் ஆணிவேரையே வீழ்த்துவதாக உள்ளது. இது உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும்.

2.104 இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்கள் திட்டமிட்டே நிரப்பப்படாத தால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது. பொதுக் கல்விமுறை சீரமைக்கப்படுவதும் ஜனநாயகப்படுத்தப்படுவதும் அவசிய மாகும். பொறியியல், மருத்துவம், நிர்வாகவியல் ஆகிய தொழில் துறை படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள் கல்வியை லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றிவிட்டனர். மாநில அரசுகள் அனுமதியுடன் தனியார் பல்கலைக் கழகங்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன. பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகளின் பாடத்திட்டங்களை மாற்றி எழுதி, கல்வி அமைப்பையே வகுப்புவாத மயமாக்க முயற்சி கள் எடுக்கப்படுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தவும்,உயர்கல்வியில் சமூக நீதியினை உறுதிப்படுத்தவும் மத்திய சட்டம் ஒன்று தேவைப்படுகிறது.

2.105 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணி யாளர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் மாணவர் பேரவைத் தேர்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரிணாமுல் காங்கிர தலைமையிலான அரசு, மேற்கு வங்கத்தில் நீண்டகாலமாக செழித்து வளர்ந்திருந்த ஜனநாயக நெறிமுறைகளான கல்வி நிலையங்களின் ஆட்சி நிர்வாகக் குழுக்களுக்கான பிரதிநிதி களையும் பல்கலைக்கழக செனட்டுகளுக்கான பிரதிநிதி களையும் தேர்தல் மூலம் தேர்வு செய்வது என்ற நடை முறையின் மீது பன்முகத் தாக்குதலை நடத்துகிறது. மாணவர் பேரவை தேர்தல்களின் போது திரிணாமுல் காங்கிரசாரால் வன்செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. மாணவர் நடவடிக் கைகளை ஒடுக்குவதற்காகவும், மாணவர் அரசியலின் மீது அவதூறை ஏற்படுத்துவதற்காகவும், மேலும் அவர்களது வலதுசாரி நிகழ்ச்சி நிரலான கல்வி நிலையங்களில் அனைத்து வகையான ஜனநாயக அரசியலையும் தடைசெய்வதற்காக இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும் அதிக கட்ட ணங்கள் வசூலிக்கப்படுவதை எதிர்த்தும் அனைத்து வகை யான விதிமுறைகளும் மீறப்படுவதைக் கண்டித்தும் 2011ம் ஆண்டில் கேரளத்தில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் உறுதியான மாணவர் இயக்கங்கள் நடைபெற்று வந்துள்ளன. காவல்துறையினரின் கொடூரமான தடியடித் தாக்குதல் மற்றும் கையெறிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர்.

2.106 இளைஞர்களுக்கான விளையாட்டுத்துறை செயல்பாடுகளுக்கு கிடைக்க வேண்டிய முன்னுரிமையும், கவனமும் கிடைப்பதில்லை. விளையாட்டுத் திடல்களும், விளையாட்டு வசதிகளும் குறிப்பாக ஏழை மக்களுக்கு கிடைப்பதில்லை. விளையாட்டுத்துறை வணிக மயமாவது அந்தத் துறையின் குறிப்பாக அது கிராமப்புற இளைஞர்களின் வளர்ச்சியினை தடை செய்கிறது.

2.107 அனைவரும் கல்விக்கான வாய்ப்பு, சமநிலை, தரம், ஆகிய வற்றை பெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்புடன் செயல்படும்.

சுகாதாரம்

2.108 சுகாதார சேவைக்கான அரசு செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் என்ற அளவிற்கே தொடர்ந்து இருந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் பொதுசுகாதார முறை செயலிழந்துள்ளது. சுகாதாரத் திற்கான செலவினத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக இந்தியர்கள் தங்களது சொந்தப் பணத்திலிருந்தே செலவிட வேண்டியதுள்ளது. தாய் மற்றும் சேய் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. தேசிய ஊரக சுகாதார செயல்திட்டம் தேவையான வேகத்தில் செயல் படுத்தப்படவில்லை. எட்டப்பட வேண்டிய இலக்கு ஊழல் நடைமுறையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கும்பலின் நிர்ப்பந்தம் காரணமாக நகர்ப்புற சுகாதாரத் திட்டம் தொடர்ச்சியாக முடக்கி வைக்கப்பட் டுள்ளது. பெருவர்த்தக நிறுவனங்களின் தலைமையிலான தனியார் சுகாதாரத் துறையின் விரிவாக்கம் மற்றும் ஒருங் கிணைப்பிற்காக பொது சுகாதாரத் திட்டம் ஒட்டுமொத்த மாக குறைபாடுள்ளதாக மாற்றப்படுகிறது. பொது சுகாதாரத் திட்டம் இல்லாததால் ஏழை எளிய நோயாளிகள் கட்டுப் பாடற்ற தனியார் மருத்துவத் துறையின் கருணைக்காக விடப் பட்டுள்ளனர். இவர்கள் மோசடியான மருத்துவ சேவையைத் தருவதோடு அநியாயக் கட்டணமும் வசூலிக்கின்றனர்.

2.109 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் குறிப் பிட்ட அளவு பணத்தையே திரும்பப் பெற முடியும் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பிரிவைச் சேர்ந்த நோயாளிகள்தான் இத்திட்டத்தில் சேர முடியும் என்ற விதிகளோடு துவக்கப்பட்ட பொது சுகாதார காப்பீட்டுத் திட்டம் தொடக்கம் முதலே குறைபாடுள்ள ஒன்றாக உள்ளது. பெரும்பாலான திட்டங்கள் மருத்துவ வசதியை தனியார் மருத்துவமனைகளில் பெறும் வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் சுகாதாரத்திற்கு உரிய தேவையை பூர்த்தி செய்யவில்லை என்பது மட்டுமல்ல பொதுப்பணத்தில் தனியார் துறையைச் செழிக்க வைக்கும் தன்மை கொண்டதாகவே உள்ளது.

2.110 மருந்து உற்பத்தித் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழையவும், நிலைநிறுத்திக் கொள்ளவும் அனுமதித்ததன் மூலம் மருந்துகளின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய மருந்துகள் விலையைத் திறம்படக் கட்டுப் படுத்த அரசு தயங்கி வருகிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள மருந்து விலை நிர்ணயக் கொள்கை தற்போதுள்ள விலையையே மருந்துகளுக்கு நிர்ணயிக்க வகை செய்கிறது. பல மருந்து களைப் பொறுத்த வரை விலை மிகமிக அதிகமாகும். மருந்து நிறுவனங்களின் லாப வேட்டைக்காகவே இவ்வாறு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 2005ல் திருத்தம் கொண்டுவரப் பட்டதன்மூலம் வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது புதிய மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்களை இந்தியாவில் மனிதர்கள் மீது சோதனை நடத்துவதற்கு இருந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் இந்தியக் குடிமக்கள் மீது நெறிமுறையற்ற மருத்துவ சோதனைகள் நடத்தப்படுகின்றன.

2.111 பொதுத்துறையின் கீழ் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரத்தை இலவசமாக வழங்க உறுதி செய்ய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத அளவிற்கு சுகாதாரத்திற்கான அரசு செலவினம் அதிகரிக்கப்பட வேண்டும். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொதுசுகாதார முறையை பலப்படுத்தும் வகையில் தேசிய ஊரக சுகாதாரத்திட்டம் புதிய அணுகுமுறையுடன் விரிவு படுத்தப்பட வேண்டும். அனைத்து நிலைகளிலும் தனியார் துறை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அனைத்து அத்தியா வசிய மருந்துகளின் விலைகளும், உற்பத்திச் செலவு அடிப் படையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மேலும் அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் இலவசமாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பதிவு உரிமம் பெற்ற மருந்துகளின் விலையை அரசு கண்காணிக்க வேண்டும். மேலும் பதிவு உரிமம் பெற்ற அனைத்து மருந்துகளின் விலையையும் பொது சுகாதார முக்கியத்துவம் கருதி அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்தி யாவில் பெரிய மருந்து நிறுவனங்கள் நடத்தும் மருத்துவ சோதனைகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.

பெருநிறுவனங்களின் பிடியில் ஊடகம்

2.112 தாராளமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் இந்திய ஊடகங்களின் முகத் தோற்றம் முற்றிலுமாக மாறிவிட்டன. பெருநிறுவன வர்த்தகங்களின் பகுதியாக அச்சு மற்றும் மின்னணு ஊடகம் மாறியுள்ளன. பெரும்பாலான செய்தி ஏடுகள், தொலைக்காட்சிகள் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், பெருநிறுவனங்களா லேயே நடத்தப் படுகின்றன. செய்தித்துறையில் 26 சதவீதம் நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டதாலும், செய்தி அல்லாத துறைகளில் 100 சதவீத பங்குமூலதனம் அனுமதிக் கப்பட்டதாலும் மின்னணு ஊடகத்துறையில் உலக ஊட கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முர்டோக்கின் பிடி குறிப்பிடத்தக்க அளவிற்கு இறுகியுள்ளது. இதனோடு ஊட கங்கள் ஆற்றும் பங்கிலும் அவைகளின் உள்ளடக்கத்திலும் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெருநிறுவனங்களால் நடத்தப் படும் ஊடகங்கள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மக்களின் ஒப்புதலை உருவாக்க முயல்கின்றன.  தங்களது லாப வேட்டைக்காக உணர்ச்சி மயமான செய்திகளை முடிவின்றி மக்களுக்கு அள்ளிப்புகட்டுவது மற்றும் பாலியல் மற்றும் வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகின்றன. விளம்பர வருவாயே பிரதானப்படுத்தப்படுவதால் நுகர்வு கலாச்சாரம் முதன்மைப்படுத்தப்படுகிறது. பெண்களை சந்தைப்பொருளாகவும், ஆபாசமாகவும் சித்தரிப்பதாலும் அறிவியலுக்கு புறம்பான மதிப்பீடுகளை வெளியிடுவதாலும் சமூகத்தில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியாக வந்த அரசுகள் தனியார்மயத்தை ஊக்கப்படுத்தி அரசு ஒளிபரப்பு ஊடகத்தின் செயல்பாட்டைக் கீழிறக்கி விட்டது. பணத்திற்கு செய்தி வெளியிடுவதென்பது நவீன தாராளமய மாக்கலின் விரிவாக்கமே ஆகும். ஊடக நிறுவனங்களுக்கும் வர்த்தகப் பெருநிறுவனங்களுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

2.113 ஊடகத் துறை ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும் என்றும் மிக முக்கியமான இந்தத்துறை பெருவர்த்தக நிறுவனங்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஊடகத் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான கொள் கையைத் திரும்பப் பெறுவது; ஊடகத் துறையில் ஒட்டு மொத்த உரிமைக்குத் தடை; (இதன்பொருள் என்னவென்றால் செய்தித் தாள் நடத்தும் ஒரு நிறுவனம் தொலைக்காட்சி தொடங்க அனுமதிக்கக்கூடாது என்பன போன்றதாகும்) பிரசார்பாரதியைப் புனரமைத்து அரசு ஒளிபரப்பு சேவையை ஊடகத் துறையின் முக்கியமான பகுதியாக மாற்றுவது; இப்போதுள்ள பிர கவுன்சிலுக்குப் பதிலாக ஒட்டுமொத்த ஊடகத்துறையையும் உள்ளடக்கும் வகையில் ஊடகத் துறைக்கென சுயேச்சையான கட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பண்பாடு

2.114 சந்தையால் வழிநடத்தப்படும் நவீன தாராளமயமாக்கல் முறைமையின் விளைவுகளான நுகர்வுக் கலாச்சாரம், வணிகமயமாக்குதல், தனிநபர்மயமாக்கல், ஆகியவற்றினாலேயே பண்பாடு வார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மதச் சார்பின்மை மற்றும் பண்பாட்டின் உள்ளார்ந்த அம்சங்கள் மீது இந்துத்துவா சக்திகளின் தாக்குதல் தொடர்கிறது. கலாச்சார ஆளுமைகள் மற்றும் படைப்புகள் மீதும் அவர்கள் தாக்குதல் தொடுக்கின்றனர். கடந்த சில ஆண்டு களாக கலாச்சாரப் படைப்புகள் மீது குறிப்பாக திரைப் படங்கள் மீது ஜாதி அமைப்புகள் தங்களது சொந்த தணிக்கை முறையைத் திணிக்க முயல்கின்றன. சக்தி வாய்ந்த வெகுஜன ஊடகம் சந்தை சார்ந்த கலாச்சாரத்தை மட்டும் முன்வைக்க வில்லை. பெண்ணடிமைத்தனக் கருத்துகளைப் புகுத்துவது, வன்முறையைப் போற்றுவது, மூடநம்பிக்கை மற்றும் ஆபாசத்தைத் திணிப்பது போன்ற பிற்போக்குத்தனமான அம்சங்களை முன்னிலைப்படுத்துவதால் சமூகத்தில் தீய விளைவுகள் ஏற்படுகின்றன.

2.115 விவசாயிகள், கைவினைஞர்கள், ஆதிவாசிகள் உள்ளிட்டோரின் மகிழ்வையும், துயரத்தையும் வெளிப்படுத்தக் கூடிய வளமையான, பாரம்பரியமான நாட்டுப்புறக்கலைகளைக் கொண்ட நாடு இந்தியா. விவசாயத்துறை நெருக்கடியாலும், சந்தை சார்ந்த கலாச்சாரத்தாலும் இந்தக் கலை மற்றம் கலைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் பன்முகக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது என்ற நிகழ்ச்சி நிரலின் பின்னால் அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும். இந்த முயற்சிக்கு கட்சி முழுமையாக துணை நிற்கும்.

*********

இதை ஆங்கிலத்தில் படிக்க

http://www.cpim.org/content/political-resolution-adopted-20th-congress

 

 

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply