அரசியல் நிகழ்வுகள் குறித்த மத்தியக்குழு அறிக்கை 2013, ஆகஸ்ட் 17-18

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

மத்தியக்குழு அரசியல் நிகழ்வுகள் குறித்த அறிக்கை

(2013, ஆகஸ்ட் 17-18 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது)

சர்வதேச நிலைமைகள்

கடந்த மூன்று மாதத்திலும் உலகளவில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி கிட்டதட்ட 3 சதவீதமாகவே இருக்கும். ஆண்டின் முற்பகுதியில் சீனா மற்றும் இதர பிரதான வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்றவற்றின் பொருளாதார வளர்ச்சி வேகம்குன்றிய போக்கினை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. இந்த போக்கு மற்றும் ஐரோப்பிய பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் பொருளாதார மந்த நிலை, அமெரிக்காவில் மிகவும் பலவீனமான வேகத்தில் நடைபெறும் மீட்சி ஆகியவை உலக பொருளாதார வளர்ச்சியை கீழ்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றன.

ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கும் முகமாக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொது செலவுகளை வெட்டுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இது வேலையின்மையை அதிகரித்திருக்கிறது: ஊதியத்தைக் குறைத்திருக்கிறது: உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வீழ்ச்சியடைச் செய்துள்ளது. சரக்குகளின் குறைவான விலை மற்றும் ஏற்றுமதியில் வீழ்ச்சி போன்றவை வளரும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதித்திருக்கிறது. கடந்த காலங்களில் ஒப்பீட்டு அளவில் சிறப்பான வளர்ச்சியைக் கண்ட நாடுகளில் கூட மக்கள் அதிருப்திகள் பெரும் அளவில் வெடித்திருக்கின்றன. இதற்கு உதாரணமாக துருக்கி மற்றும் பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளைக் குறிப்பிடலாம். இந்த இரண்டு நாடுகளிலும் மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்தாலும் அவற்றிற்கான காரணங்கள் வேறாகும்.

துருக்கி எதிர்ப்பியக்கங்கள்

துருக்கியில் மிகப்பெரிய எழுச்சியுடன் மக்கள் போராட்டங்கள் இஸ்தான்புல்லில் உள்ள தக்சிம் சதுக்கத்தில் நடைபெறத் துவங்கியது. இந்த சதுக்கத்தில் அமைந்துள்ள கேஸி பூங்காவை இடித்துவிட்டு அந்த இடத்தில் ஒரு மால் கட்டுவதற்கு அரசு அனுமதித்திருந்தது. இதற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய பேராட்டங்கள் அங்காரா நகரத்திற்கும் பின்னர் நாடு முழுவதிலுமுள்ள 77 நகரங்களுக்கும் பரவியது. இந்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்களும், மதசார்பற்ற எண்ணம் கொண்டவர்களும், எதிர் கட்சிகளும், சிறுபான்மை இனக்குழுக்களும் கலந்து கொண்டனர்.  பிரதம மந்திரி எர்டோகன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. கலவரத்தை அடக்க சிறப்பு காவல்படையினர் குழுமியிருந்த போராட்டக்காரர்களிடையே திரும்பத் திரும்ப கண்ணீர் புகை குண்டை வீசியும், தண்ணீரைப் பீச்சியடித்தும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். இறுதியாக ஜூன் 15 ஆம் தேதியன்று போராட்டக்காரர்களை தக்சிம் சதுக்கத்திலிருந்து அரசு வெளியேற்றியது. பல வாரங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், 5000 பேர் காயமடைந்தனர்: ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

பரந்துபட்ட எதிர்ப்பு போராட்டங்கள் ஆளும் இஸ்லாமியக் கட்சிக்கும் பிரதம மந்திரி எர்டோகனின் தலைமைக்கும் எதிராக எழுந்துள்ள முதல் சவாலாகும். நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தியதாலும், தீவிரமான மதச்சார்பின்மை பாரம்பரியம் கொண்ட நாட்டில் இஸ்லாமிய மத நடைமுறைகளை புகுத்த முயற்சித்ததால் ஏற்பட்ட அதிருப்திகளுமே இத்தகைய மக்கள் எழுச்சிகளுக்கு அடிப்படை காரணமாகும். எர்டோகன் அரசின் அயல்நாட்டு கொள்கைகளும் அவரின் கனவு திட்டங்களும் இந்த உள்நாட்டு கிளர்ச்சியினால் சிதறுண்டு போனது. சிரிய அரசுக்கு எதிராக துருக்கி அரசு ஆதரவு அளிப்பது, சிரியாவின் உள்நாட்டு மோதல்களில் தலையிடுவது, அதில் ஈடுபடுவது போன்றவை ஆழமான அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

பிரேசில் மக்கள் கிளர்ச்சி

ஜூன் மாதம் பிரேசில் நாட்டில் மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பியக்கங்கள் வெடித்துக் கிளம்பின. அரசு போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தியதே இந்த போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது. இந்த நாட்டின் மிகப்பெரும்பான்மை மக்கள் வேலைகளுக்கு செல்வதற்கு பயன்படுத்துவது பொது போக்குவரத்தாகும். இந்த கட்டண உயர்வுக்கு எதிராக மட்டுமல்லாது, பொது வீட்டுவசதி ஏற்பாடு, மருத்துவத் திட்டம், கல்வி போன்றவற்றை கோரியும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அரசாங்கம் போக்குவரத்து கட்டண உயர்வை ரத்து செய்தது. ஆயினும், மக்கள் போராட்டங்கள் தொடர்ந்தன. அதிபர் தில்மா ரூசப் இந்த போராட்டங்களின் நோக்கங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து சீர்திருத்த நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளார். இந்த போராட்டத்தின் பரந்துபட்ட வீச்சும் மற்றும் தன்னெழுச்சியாக அது வெடித்த கிளம்பியதும் மிக முக்கியமானதாகும்.

எகிப்து: மோர்சி வெளியேற்றம்

எகிப்தில் மற்றொரு மிகப்பெரிய மக்கள் எழுச்சி நடைபெற்றுள்ளது. முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் சார்பில் மோர்சி வெற்றி பெற்று அதிபரான ஓராண்டில் மிகப் பெரிய கிளர்ச்சிகள் நாடு முழுவதும் வெடித்துக் கிளம்பின. மோர்சியை அதிபர் பதவியிலிருந்து திரும்பப் பெறும் மனுவில் நாடு முழுவதும் 220 லட்சம் பேர் கையெழுத்திட்டிருந்தனர். ஜூன் 30 ஆம் தேதி எதிர்கட்சிகளின் அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் ஒன்றரை கோடி மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். தக்ரிர் மைதானம் மீண்டும் ஒரு முறை மக்கள் போராட்ட வெள்ளத்தில் முழ்கியது. ஜூலை 3 ஆம் தேதி இராணுவம் தலையிட்டு மோர்சியை பதவியிறக்கி ஆட்சியதிகாரத்தை இடைக்கால அரசிடம் வழங்கியது.

முபாரக் ஆட்சியின் போது முக்கிய எதிர்கட்சியாக விளங்கிய முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு தனது ஓராண்டு ஆட்சிக் காலத்தில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலைப் புகுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதற்கு எதிராக மதசார்பற்ற எதிர்கட்சிகள் போராடியபோதும் அவற்றை புறக்கணித்து இஸ்லாமிய அம்சங்களை புகுத்துவதை தீவிரமாக செயல்படுத்தியது. அரசு கட்டமைப்பிலும், நீதித்துறையிலும் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி தன்னுடைய ஆட்களை பல பதவிகளுக்கு நியமித்தது. அந்த அரசு விரைவாக அமெரிக்காவுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டது. நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தியது. மேலும், ஐ.எம்.எப். நிறுவனத்திடம் கடன் வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியது. மக்களின் பொருளாதார வாழ்வு இந்த காலத்தில் மிகவும் மோசமடைந்தது.

மோர்சி அரசுக்கு எதிரான இயக்கங்கள் மற்றும் கிளச்சிகள் வலுவடைந்தது அதன் முத்தாய்ப்பாக இராணுவம் தலையிட்டது. எகிப்து இராணுவம் கடந்த ஐம்பதாண்டு காலமாக நாட்டின் நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் இராணுவத்தின் வேர்கள் ஆழமாக ஊடுருவியுள்ளது. எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து இராணுவம் அமெரிக்க நிர்வாகத்திடமிருந்து நிதியுதவி பெற்று வருகின்றது. வரும் காலங்களில் இராணுவம் எப்படி நடந்து கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இராணுவம், காவல்துறை மற்றும் மோர்சி ஆதரவாளர்களுக்கிடையே மிகப்பெரிய மோதல்கள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மோர்சி வெளியேற்றப்பட்டதை அமெரிக்க அரசு ஆதரிக்கவில்லை. ஆயினும், இராணுவம் ஆட்சியதிகாரத்தை மேற்கொண்டதைப் பற்றி அதிகமாக கவலைப்படவும் இல்லை. அமெரிக்க அரசு இரண்டு தரப்பினருடனும் தொடர்புகளை பராமரித்து வருகிறது. இராணுவம் தன்னுடைய ஆட்சியை ஒரு பொம்மை சிவில் அரசாங்கத்தின் மூலமாக நிலைநிறுத்திக் கொள்ளும் ஆபத்து உள்ளது. அவ்வாறு நடைபெற்றால், முபாரக் காலத்தில் இருந்ததைப் போன்று இராணுவ – அரசு நிறுவனங்கள் திரும்புவது நடைபெறும். எகிப்திலுள்ள வெகுஜன ஜனநாயக சக்திகளைப் பொறுத்தமட்டில் இது முக்கியமான காலகட்டமாகும். அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக மதச்சார்பற்ற ஜனநாயக நடைமுறை நிறுவப்படுவது முக்கியமானதாகும். அதன் மூலம் முபாரக் காலத்து சர்வாதிகாரப் போக்குகளையும் குறுங்குழுவாத இசுலாமியப் பாதையையும் முறியடிக்க வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.

சிரியா மோதல்கள்

எகிப்தில் நடைபெறும் நிகழ்வுகள், இந்த பிராந்தியத்தில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்திருக்கும் இஸ்லாமிய சக்திகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால், எகிப்திலும் துனிசியாவிலும் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி அவற்றின் விளைவுகள், மேற்கத்திய நாடுகளின் தலையீடு ஆகியவைகளும் தொடரவே செய்கின்றன. லிபியாவில் கடாஃபி, நேட்டோ தலையீட்டின் உதவியுடன் தூக்கி எறியப்பட்டவுடன், அங்கு பல்வேறு தீவிரவாதக் குழுக்களிடையே மோதல்கள் வெடித்தன. அவற்றில் இஸ்லாமிய சக்திகளும் கணிசமாக உண்டு. இந்த மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. லிபிய அரசாங்கம் தன் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.

சிரியாவில் இரண்டாண்டு உள்நாட்டுப் போர் மற்றும் மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அரசு மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆசாத் அரசை தூக்கியெறிந்து விடலாம் என்ற நம்பிக்கை தகர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போராட்டத்தை சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி போன்றவை தூபம் இட்டு துண்டிக் கொண்டிருந்தாலும், கிளர்ச்சிக் காரர்களால் முன்னேற முடியவில்லை. ஏரளாமான பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் நிகழ்ந்துள்ளன. சிரிய இராணுவம் லெபனான் எல்லையில் உள்ள இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த குசேயர் நகரத்தை மீண்டும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளது. சிரிய கிளர்ச்சிக்காரர்களிடையே ஒற்றுமையற்ற நிலை நீடிக்கிறது. கிளர்ச்சிப் படையில் பெரும்பகுதியினர் துனிசியா, செச்சன்யா, ஆப்கானிஸ்தான், யேமன், மற்றும் லிபியாவிலிருந்து வந்த இஸ்லாமிய சக்திகளாகும்.

சிரிய இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் சிரிய கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் அறிவித்தார். இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை. மாறாக, போராளிகள், சாரின் வாயு (இரசாயன ஆயுதம்) பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ரஷ்ய அரசு இதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்துள்ளது. சிரிய அரசிற்கு வலுவான ஆதரவை ரஷ்யாவும், ஈரானும் வழங்கி வருகின்றன. சிரிய அரசு ஜெனிவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த பேச்சுவார்த்தையை ரஷ்யாவும், அமெரிக்காவும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. இருப்பினும், மேற்கத்திய நாடுகளின் மறைமுக ஆதரவுடன் செயல்படும் கிளர்ச்சிக்காரர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய குழுக்களுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் சவூதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் மேற்கத்திய நாடுகளின் முழு பின்புலத்துடன் ஆதரவு அளித்து வருகின்றன. இது அமெரிக்கா ஆப்கனிஸ்தான், ஏமன் மற்றும் வட ஆப்பிரிக்காவில் அல்கொய்தா மற்றும் இதர தீவிரவாத குழுக்களுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் ஆளில்லா ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் இரட்டை வேஷத்தை வெளிப்படுத்தியுள்ளது. எந்த சக்திகளுக்கு எதிராக போர் தொடுப்பதாக அமெரிக்கா தெரிவிக்கிறதோ அதே சக்திகளுக்கு சிரியாவில் ஊக்கமும் ஆதரவும் அளித்து வருகிறது.

ஆகவே, வரலாறு மீண்டும் திரும்புகிறது. அமெரிக்க அரசின் செயல்கள் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கி வருகின்றன. ஆப்கனிஸ்தானில் சோவியத் ஆதரவு அரசுக்கு எதிராக போராடிய ஜிகாத் குழுக்களுக்கு நிதியுதவியும் ஆயுத உதவியும் வழங்கியது. இதன் விளைவுதான் தாலிபான்கள் உதயம். இன்றைய தினம் சிரியாவில் மதசார்பற்ற ஆசாத் ஆட்சிக்கு எதிராக களத்தில் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது. அமெரிக்கா, ஈராக் மற்றும் லிபியாவில் உள்ள மதசார்பற்ற அரசுகளை அழித்துவிட்டு அந்தப் பகுதிகளை இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் கொதிகலன்களாக மாற்றியுள்ளது. இன்றைய ஈராக் மதக்குழு சண்டைகளாலும், பயங்கரவாத தாக்குதல்களாலும் பீடிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க இராணுவம் ஈராக்கை ஆக்கிரமித்ததன் விளைவே ஆகும். அமெரிக்க ஆக்கிரமிப்பின் மற்றொரு விளைவு சுன்னி, ஷியா பிரிவினருக்கிடையே உள்ள பிளவு தீவிரப்பட்டதாகும். ஆசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சி மத அடிப்படையிலான குறுங்குழுவாதத் தன்மையைக் கொண்டது. ஏனெனில், சுன்னி தீவிரவாதிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். இவர்களது போராட்டம் கிறிஸ்தவ மற்றும் மதச்சார்பற்ற சுன்னி ஆதரவுடன் அலாவைட் சிறுபான்மையினரால் தலைமை தாங்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரானதாகும்.

ஜப்பான் இராணுவமயம்

2012 டிசம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எல்.டி.பி கட்சி வெற்றி பெற்றதன் விளைவாக ஷின்ஜோ அபே ஜப்பான் நாட்டின் பிரதமரானார். இதைத் தொடர்ந்து ஜூலையில் பாராளுமன்றத்தின் மேல்சபை தேர்தல்களில் எல்.டி.பி கட்சி பெரும்பான்மை பெற்றது. இது அரசுக்கு பாராளுமன்றத்தில் தேவையான சட்டங்களை இயற்றவும், அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வரவும் உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாடு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த போது உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டமே தற்போது அங்கு நடைமுறையில் உள்ளது. வலதுசாரியும் அதிதீவிர தேசீயவாத அணுகுமுறை கொண்டவருமான அபே தற்காப்பு படைகளின் பலத்தை அதிகரிக்க இராணுமய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஜப்பான் ஆயுதங்களையும் ஏற்றுமதி  செய்து வருகிறது. ஜப்பானின் அரசியல் சாசனத்தின் படி முறையான இராணுவம் வைத்துக் கொள்வதும், வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தை  திருத்த பிரதமர் அபே விரும்புகிறார். இவரின் இந்த நடவடிக்கை இந்தப் பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் ஜப்பான் இராணுவம் சீனா, கொரியா மற்றும் இந்த பிராந்தியத்தின் இதர நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடத்தியுள்ளது. ஜப்பானிய அரசு அமெரிக்காவுடனான இராணுவ கூட்டணியை பலப்படுத்தவும் விரும்புகிறது. அபேயின் தலைமையின் கீழ் ஜப்பான் சீனாவுடன் கிழக்கு சீனக்கடல் பிராந்தியத்தில் உள்ள சில தீவுகளில் உள்ள பிரச்னைகளில் தற்போது மிகவும் தீவிர நிலை எடுத்து வருகிறது. அபே தீவிரமாக பிரச்சாரம் செய்யும் மற்றொரு விஷயம் நாற்கர கூட்டணி. சீனாவை கட்டுபடுத்தும் நோக்குடன் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்த அபே முயற்சிக்கிறார். இந்த முயற்சிக்கு இந்திய அரசு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜப்பானுடன் இந்தியா இராணுவ ஒத்துழைப்பை உள்ளடக்கிய கேந்திரமான உறவு கொள்ள மிகவும் ஆர்வமுடன் உள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச வேவு பார்க்கும் நடவடிக்கை

மிகவும் விரிவான கண்காணிப்பு, வலைத்தளம் மற்றும் தொலைபேசி தகவல்களை ஒட்டுக்கேட்டல் ஆகியவற்றில் அமெரிக்க தேசீய பாதுகாப்பு ஏஜென்சி (NSA) ஈடுபட்டு வந்ததை எட்வர்ட் ஸ்னோடென் அம்பலப்படுத்தினார். இவர் இந்தத் துறையின் பணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் ஊழியர். மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான வெரிசான் மற்றும் வலைத்தள நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், யாகூ மற்றும் பேஸ்புக் போன்றவை பிரிசம் திட்டத்தில் அமெரிக்க அரசின் கருவிகளாக செயல்படுவது குறித்த தகவல்களை இவர் அளித்துள்ளார். வெளியிடப்பட்ட தகவல்கள் மூலம் இந்த உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் இந்தியா மிக முக்கிய இலக்காக இருந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. உளவு பார்க்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. சொல்லப்போனால், ரஷ்யா மற்றும் சீனாவை விட முன்னதாக உள்ளது. இந்த உளவு பார்க்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் நியாயப்படுத்தும் விதமாக வெளிநாட்டினர் மட்டுமே உளவு பார்க்கப்பட்டனர் என்றும், அமெரிக்க பிரஜைகளின் அந்தரங்கம் மீறப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் வெளியிடப்பட்ட தகவல்கள் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் இத்தகைய வேவு பார்க்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது. மேலும், எக்ஸ் கீ ஸ்கோர் என்ற ஒரு மென்பொருளின் வழியாக உலகின் 150 இடங்களில் உள்ள மையங்கள் மூலமாக அமெரிக்கா உளவு பார்த்தது தெரியவந்துள்ளது. இதில் ஒரு இடம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய உளவு பார்க்கும் வேலையின் மூலம் இமெயில், தொலைபேசி பரிமாற்றம் மற்றும் தந்திகள் மூலம் இந்தியாவிற்குள்ளே இந்தியர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இந்த தகவல்கள் வெளியிடப்பட்டதும் இதற்கு ஆளான பல நாடுகளிடையே மிகவும் பலமான கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய கூட்டாளி நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. ஆனால், இந்திய அரசு இந்த விஷயத்தில் அடக்கி வாசித்தது. இந்தியாவின் சுயாதிபத்தியத்திற்கு எதிராகவும், நமது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதுமான ஒரு நிகழ்வில் இந்திய அரசு தனது கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

அகங்காரத்தின் உச்சியில் இருக்கும் அமெரிக்கா ஸ்னோடெனை பிடிக்க எந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கும் என்பதை பொலிவிய அதிபர் ஈவோ மொராலெஸ் மாஸ்கோவிலிருந்து திரும்பிய போது அவரது விமானம் நான்கு ஐரோப்பிய நாடுகளின் மீது பறக்க அனுமதி மறுக்கப்பட்டது  என்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் தங்களின் வான் வழியை மூடிவிட்டு, அதிபரின் விமானத்தை வலுக்கட்டாயமாக வியன்னாவில் இறக்கி அந்த விமானத்தில் ஸ்னோடன் இருக்கிறாரா என்று சோதனை இட்டனர். இது சர்வதேச விதிகளுக்கு முரணான நடவடிக்கை. அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகள் சர்வதேச சட்டங்களை இத்தனை அப்பட்டமாக மீறியதை அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் வன்மையாக கண்டித்தன. இந்த சம்பவம் அமெரிக்கா தன்னை சர்வதேச விதிகளுக்கு மேலான நாடாக கருதிக் கொள்கிறது என்பதையும், மேலும், நாடுகளின் சுயாதிபத்திய உரிமையை அது மதிப்பதில்லை என்பதையும் காட்டுகிறது. இந்த நிகழ்வுக்குப் பின் ஸ்நோடனுக்கு ரஷ்யா தற்காலிக அடைக்கலம் அளித்துள்ளது. அவ்வாறு அடைக்கலம் அளித்ததின் உடனடி விளைவாக அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புடினுடன் ஜி-20 உச்சி மாநாட்டில் செப்டம்பரில் சந்திப்பதாக இருந்ததை இரத்து செய்துவிட்டார்.

பங்களாதேஷ்

மே மாத மத்தியக்குழு தீர்மானத்தில் தெரிவித்திருந்த படி, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், ஜனநாயக மதசார்பற்ற சக்திகளுக்குமிடையே மிகவும் உக்கிரமான மோதல் நடைபெறுகிறது. இதுவரை போர்க்குற்ற தீர்ப்பாயம், ஐந்து ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்களை குற்றம் செய்தவர்கள் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களிலும், தாக்குதல்களிலும் ஜமாத் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக ஷாபாக் என்ற இடத்தில் இளைஞர்களின் இயக்கங்களும் நடைபெறுகின்றது.

முக்கிய எதிர்கட்சியான பி.என்.பி ஜமாத் இயக்கத்திற்கு பின்னிருந்து ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த அமைப்பு மக்களின் மத வெறி உணர்வை விசிறி விடுகிறது. (ஆளும்) அவாமி லீக்  கட்சி தனது ஆதரவு தளத்தை இழந்து வருகிறது. ஐந்து மாநகராட்சித் தேர்தல்களில் பி.என்.பி கட்சியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. மக்களின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் ஊழல் எங்கும் வியாபித்துள்ளது. பொதுத் தேர்தல் 2014-ல் நடைபெறவுள்ளது. இதோடு தொடர்புடைய நிகழ்வாக பங்களாதேஷ் உயர்நீதிமன்றம், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு வரும் தேர்தலில் போட்டியிட தகுதியிழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே எல்லைப் பிரச்னையில் ஏற்பட்ட உடன்பாடு இன்னமும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. அரசியல் சாசன திருத்தம் செய்துதான் இந்திய பாராளுமன்றம் இந்த உடன்பாட்டை அங்கீகரிக்க முடியும். அதற்கு பா.ஜ.க. ஆதரவளிக்க மறுத்துவிட்டதால் அரசியல் சாசனத்தை திருத்த முடியவில்லை. இதன் காரணமாக அவாமி லீக் கட்சி மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டு, அங்குள்ள முக்கிய எதிர்க்கட்சி இந்தியாவுக்கு எதிரான உணர்ச்சிகளை விசிறி விட வாய்ப்பாக அமைந்துள்ளது.

இலங்கை

வடக்கு மாகாணத்தில் தேர்தல்கள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக, இலங்கை அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தத்தில் திருத்தம் செய்ய முயற்சித்தது.

இந்த திருத்தம் ஜூலை 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாணங்களில் சில அதிகாரப் பகிர்வுக்கு வழிவகுக்கிறது. அதிபர் ராஜபக்சே இந்த அதிகாரங்களை நீர்த்து போக செய்ய முயற்சிக்கிறார். நிலம் மற்றும் காவல்துறையை மாநிலங்களின் அதிகார வரம்பிலிருந்து அகற்ற முயற்சிக்கிறார். இது மாகாண அரசுகளின் அதிகாரத்தை நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கை. இந்த நடவடிக்கையை இலங்கை தமிழர்களின் மத்தியில் உள்ள  அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. நமது கட்சியும் இந்த நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்து, மத்திய அரசை இதில் உடனடியாக தலையிடக் கோரியுள்ளது. இந்திய அரசாங்கம் 13-வது சட்ட திருத்தத்தை நீர்த்துப் போக செய்யும் முயற்சிக்கு எதிரான தனது கருத்தை பதிவு செய்துள்ளது. இதுவரை இலங்கை அரசு 13-வது சட்ட திருத்தத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால், மாகாண தேர்தல்களுக்குப் பிறகு ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேசீய நிலைமைகள்

பொருளாதாரச் சூழல்

வளர்ச்சியில் மந்தம், தொழில்துறையில் உற்பத்தி வீழ்ச்சி, தொடரும் மிக அதிகமான பணவீக்கம் மற்றும் அன்னிய செலாவணி நடப்புக் கணக்கில் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்வது ஆகிய அம்சங்களுடன்  பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமடைந்து வருகிறது.

கடந்த ஆண்டு தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி விகிதம் இவ்வாண்டில் சுருங்கிக் கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தோடு ஒப்பிடுகிறபோது இவ்வாண்டு மே மாதத்தில் வளர்ச்சி 2.8 சதவீதம் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த சுருக்கம் 2.2 சதவீதமாக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி விகிதம் 2012-13 ஆம் ஆண்டு 5 சதவிதமாக குறைந்துள்ளது. இது 2011-12 ஆம் ஆண்டு 6.2 சதவீதமாக இருந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை  இதுவரை இல்லாத அளவான 4.8 சதவீதத்தை 2012-13 ஆம் ஆண்டில் எட்டியது.  நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடும் போது, சில்லரை பணவீக்கம்  ஜூன் மாதம் 9.87 சதவீதமாகவும், ஜூலை மாதம் 9.64 சதவீதமாகவும் இருந்தது.

இந்த நெருக்கடி வளர்ந்து கொண்டிருப்பதன் மற்றொரு வெளிப்பாடு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருப்பது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.60 என்பதைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60-61 வரை உள்ளது. பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதோடு குறைவான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி ) மற்றும் தொடரும் உயர் பணவீக்கம் ஆகியவை கொண்ட மோசமாகி வரும் பொருளாதார நிலைமையின் அறிகுறியே ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவது. ஏற்றுமதியில் வீழ்ச்சியும், இறக்குமதியில் அதிகரிப்பும் ஏற்பட்டதன் விளைவாக அன்னிய செலாவணி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு நாட்டிற்கு வெளியே உள்ள காரணங்களை மட்டும் கூற முடியாது. அரசு பொருளாதாரத்தை மோசமாக நிர்வாகம் செய்வது மற்றும் நவீன தாராளமய கொள்கைகளை தொடர்ந்து கடைபிடிப்பது ஆகியவற்றின் விளைவே இது.

இந்தப் பொருளாதார சிரமங்கள் அன்னிய மூலதன வரவு குறைவதற்கு இட்டுச் சென்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அன்னிய மூலதன வரவுகள் பங்குச் சந்தையை ஊக்கப்படுத்தவும், ரியல் எஸ்டேட் வரலாறு காணா அளவிற்கு கொடிகட்டி பறக்கவும் வழிவகுத்தது. அமெரிக்கா அதனுடைய பணக்கொள்கையில் மாறுதல் செய்துள்ளதால் பண அளிப்பு விரிவாக்கத்தை மட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதால் தற்போது இந்த வரவு குறைந்துள்ளது. இந்த ஜூன் மாதத்தில் மட்டும் 9 பில்லியன் டாலர் (சுமார் 54,000 கோடி ரூபாய்) அன்னிய மூலதனம் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையை விட்டு வெளியேறியுள்ளது. இந்தியாவின் தற்போதைய அன்னியக் கடன் 400 பில்லியன் டாலர் (24 லட்சம் கோடி ரூபாய்). ஆனால் அன்னிய செலாவணி கையிருப்போ தற்போது 277 பில்லியன் டாலர்கள் (16 லட்சத்து 62 ஆயிரம் கோடி  ரூபாய்) மட்டுமே. வரும் பன்னிரெண்டு மாதங்களில் இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கு மட்டுமே நமது அன்னிய செலாவணி இருப்பில் 60 சதவீதத்தை அதாவது 169 பில்லியன் டாலர் (10லட்சத்து 14ஆயிரம் கோடி ரூபாய்) செலவிட வேண்டியுள்ளது. இந்த கடன்களில் பெரும்பாலான கடன்கள் குறைந்த கால கடன்களும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வாங்கிய வியாபாரக் கடன்களும் ஆகும். ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு பல நிறுவனங்களுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த சிரமத்தை ஏற்படுத்தும்.

அரசாங்கம் அன்னிய மூலதனத்தை பங்குச் சந்தையிலும் மற்றும் கடன் சந்தையிலும் (அரசு வெளியிடும் பத்திரம் என்பதால் முதலீட்டிற்கு வருவாய் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும்) நேரடி அன்னிய முதலீடாகவும் வருவதற்கு அனுமதித்தது. இந்த முதலீட்டின் மூலம் கிடைத்த லாபம், ஈவுத் தொகை (டிவிடெண்ட்) போன்றவற்றை மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு கொண்டு சென்றதன் மூலமே மிகப் பெரிய அளவில் அன்னிய செலாவணி நமது கையிருப்பிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக இறக்குமதி சரக்குகளில் பெரும்பகுதியாக இருக்கிற கச்சா எண்ணையின் இறக்குமதி விலை உயர்ந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக இதர அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து. பணவீக்கத்தை மேலும் அதிகபடுத்தி அதன் காரணமாக ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைகிறது.

இறக்குமதியாகும் மற்றொரு முக்கிய பொருள் தங்கம். தங்கம் மற்றும் ஆபரணங்களின் இறக்குமதி கடந்த ஆண்டு 70 பில்லியன் டாலராக (4,20,000 கோடி ரூபாய்) இருந்தது. அரசாங்கத்தின் கொள்கை தங்கத்தை தாராளமாக நுகர ஊக்கமளித்தது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தனிநபர்கள் இறக்குமதி தீர்வையின்றி இறக்குமதி செய்வதற்கான தங்கத்தின் அளவு உயர்த்தப்பட்டது. தற்போது அரசாங்கம் 10 சதவீத இறக்குமதி வரி விதித்து தங்கத்தின் இறக்குமதியை கட்டுபடுத்த முயற்சிக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டிருப்பதால், இதிலிருந்து மீண்டு வர அரசு, அன்னிய மூலதன முதலீட்டை எப்படியாவது பெற்றுவிட துடிக்கிறது. சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அன்னிய நேரடி முதலீட்டில் ஏற்கனவே அமலில் உள்ள உச்சபட்ச அளவிற்கான கட்டுப்பாட்டை தளர்த்தியும், 12 துறைகளில் அன்னிய முதலீட்டிற்கான விதிகளை மேலும் தளர்த்தியுள்ளது. தொலைத்தொடர்பு துறையில் 100 சதவீத முதலீடும், பாதுகாப்பு துறையில் 26 சதவீத முதலீடும் அனுமதித்துள்ளது. பத்து மாதங்களுக்கு முன்பு பல்பொருள் (ஆரடவ க்ஷைசயனே) சில்லறை வர்த்தகத்தில் விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை இப்பொழுது தளர்த்திவிட்டது. அரசின் எண்ணப்படி அன்னிய நேரடி முதலீடு பாய்ந்து வந்தால், அது நடப்புக் கணக்கு பற்றாக்குறையை இட்டு நிரப்ப உதவும் என்பதாகும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. வளர்ச்சியின்மை மற்றும் மிக அதிக பணவீக்கம் போன்ற பொருளாதார சிரமங்களை கணக்கில் கொண்டால், அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களது நிதியை இந்தியாவில் முதலீடு செய்ய அச்சப்படுவார்கள். அவர்கள் அரசிடமிருந்து மேலும் சலுகைகளை கறக்க காத்திருப்பார்கள். மேலும், கடந்த கால அனுபவங்கள் காட்டுவது என்னவெனில், லாபம், ஈவுத்தொகை, பணமாக வெளியேறும் அன்னியச் செலவாணி போன்றவை எப்பொழுதும் மூலதன வரவைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்பதாகும்.

வறுமைக் கோடு

திட்டக் கமிஷனின் அறிக்கை வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. 2004-05 ஆம் ஆண்டில் 37.2 சதவீதமாக இருந்தது 2011-12 ஆம் ஆண்டில் 21.9 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. இத்தகைய உண்மைக்கு புறம்பான புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டதன் அடிப்படை என்னவெனில், ஒரு நபர் கிராமப்புறத்தில் வசித்தால் ஒரு நாளைக்கு ரூ.27.20/-க்கு குறைவாகவும், நகர்ப்புறத்தில் ரூ.33.40/-க்கு குறைவாகவும் செலவழித்தால் அவர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவராக கருதப்படுவார். இந்த தகுதியின்படி, வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்களின் சதவீதம் கிராமப்புறத்தில் 41.8-லிருந்து 27.5 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புறத்திலோ 25.7 சதவீதத்திலிருந்து 13.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2004-05 ஆம் ஆண்டிற்கும் 2011-12 ஆம் ஆண்டிற்குமான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விவரம் ஐக்கிய முற்போக்கு  கூட்டணி அரசிற்கு கடந்த 8 ஆண்டுகள் ஆட்சியில் வறுமை மிகவும் குறைந்துள்ளது என்பதை பறைசாற்றுவதற்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் நாடு முழுவதும் மிகுந்த கண்டனத்தையும் எரிச்சலையும் தூண்டியது. நகர்ப்புற வறுமைக்கான வரையறையை எடுத்துக் கொண்டால், ஒரு வேலைக்கு செல்பவர் பயணத்திற்கு செலவிடும் தொகையை கழித்து விட்டு பார்த்தால், அவர் ஒரு நேரம் முழுமையான சாப்பாடு கூட சாப்பிட முடியாது. ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டிருக்கும், மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீரழிக்கிறது என்பதை வறுமைக் குறியீட்டெண் கணக்கில் கொள்ளவில்லை. ஏன், மக்களின் அடிப்படை தேவைகளான, ஊட்டசத்து, மருத்துவம், உறைவிடம், ஆடை, மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளைக் கூட கணக்கில் கொள்ளவில்லை.

வறுமைக் குறைக்கப்பட்டுள்ளது என்று பறைசாற்றுவதன் மூலம் ஏழைகள் பால் இதயமின்றி நடந்து கொள்கிறது அரசு என்பது அம்பலப்பட்டுள்ளது.

இயற்கை வாயு விலை உயர்வு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் பெரு நிறுவனங்களின் நலனுக்கு சேவகம் செய்கிறது என்பது வெளிப்படையானது. ஆயினும் கூட  இயற்கை எரிவாயுவின் விலையை இரட்டிப்பாக்குவது என்று அரசாங்கம் முடிவெடுத்தது. இது அப்பட்டமாக இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு ஆதரவான செயலாகும். கிருஷ்ணா – கோதாவரி படுகையில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டுமென ரிலையன்ஸ் நிறுவனம் கோரி வந்தது. அதை நிர்ப்பந்திப்பதற்காக  நிச்சயிக்கப்பட்ட இலக்கிற்குக் குறைவாகவே வாயுவை உற்பத்தி செய்து வந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் எந்தவித தர்க்க ரீதியான நியாயங்களுமின்றி சர்வதேச விலையோடு இணைத்து வாயுவின் விலையை நிர்ணயித்தது. உற்பத்தியாகும் வாயுவின் விலைக்கும் சர்வதேச வாயு விலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. 2008 ஆம் ஆண்டில் வாயுவின் விலையை ஒரு பில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு 2.4 டாலரிலிருந்து 4.2 டாலராக அரசு நிர்ணயித்தது. இதுவே, ரிலையன்சிற்கு கொள்ளை லாபத்தை அளித்தது. இப்போது புதிய சூத்திரத்தின் படி 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த விலை 4.2 டாலரிலிருந்து 8.4 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. வாயு விலையில் ஒவ்வொரு டாலர் உயர்விற்கும் ரிலையன்சிற்கு 74 பில்லியன் டாலர் கூடுதல் லாபம் கிடைக்கும்.

மேலும், அரசாங்கம் இப்போதைய உரம் மற்றும் மின்சார விலைகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்தாமல் இருக்க வேண்டுமானால் ரூ. 71,250/- கோடி கூடுதல் மானியத்தை ஏற்க வேண்டியிருக்கும். அரசாங்கம் இந்த சுமையை பொதுமக்கள் தலையில் ஏற்றும். இயற்கை வாயுவின் விலை உயர்வானது உரம், மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி நடைபெறும் பொதுப்போக்குவரத்து ஆகியவற்றின் விலையை அதிகரிக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள் இயற்கை எரிவாவுவின் விலை உயர்வை கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்த மிக மோசமான முடிவு குறித்து இதுவரையிலும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது முக்கியமானது.

பெட்ரோலிய விலை உயர்வுகள்

பெட்ரோல் விலை கடந்த 7 மாதங்களில் ஐந்து தடவை உயர்த்தப்பட்டது. மொத்த உயர்வு ரூ 7.30 ஐ விட அதிகமாகும். கடைசி மூன்று உயர்வுகளும் அடுத்தடுத்து ருபாய் மதிப்பு செங்குத்தாக சரிந்ததால் ஏற்பட்டது. எனினும், பெட்ரோல் விலை உயர்வு உற்பத்திச் செலவுகளை அதிகரிப்பதும் அதன் வாயிலாக பணவீக்கத்திற்கு வழிவகுப்பதும் மோசமான சுழல் ஆகும். அதிக பணவீக்கம் திரும்பவும் ரூபாய் மதிப்பைப் பாதிக்கிறது.

அடுத்தடுத்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள் தொடர்ச்சியான பணவீக்க அதிகரிப்பை உருவாக்கியுள்ளன. நுகர்வோர் விலைக் குறியீட்டெண் மூன்று மாதக் குறைவிற்குப் பின்னர் 10 சதவீத அளவிற்கு உயர்ந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் வெங்காய விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

உணவுப் பாதுகாப்புச் சட்ட வரைவு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றம் கூடுவதற்கு சில வாரங்களே இருந்த நிலையிலும் உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. தற்போது சட்ட வரைவாக நாடாளுமன்றம் முன்பு கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டம், அனைவருக்குமான பொது விநியோகம் என்ற அம்சம் இல்லாத குறைபாட்டுடன் உள்ளது.

பல மாநிலங்களில் கிட்டத்தட்ட அனைவருக்குமான பொது விநியோகம் என்கிற வகையில் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அவசரச் சட்டமும், சட்ட வரைவும்   50 சதவீத நகர மக்களையும், 25 சதவீத கிராம மக்களையும் தானாகவே விலக்கி  வைப்பதை சட்ட பூர்வமாக்குகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தற்போதுள்ள 35 கிலோ என்கிற பயன் அளவு, ஐந்து உறுப்பினர் குடும்பத்திற்கு 10 கிலோ வெட்டப்பட்டு 25 கிலோ எனவும், இன்னும் குறைவாக உறுப்பினர் இருக்கிற படசத்தில் இதைவிட குறைவான பயனையே பெறுகிற நிலைமையையும் ஏற்படுத்துகிறது. மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களே உள்ள குடும்பங்களைக் கொண்ட கேரளா  போன்ற மாநிலங்களுக்கு இது தண்டனை ஆகும். ஏனெனில் 15 கிலோவில் இருந்து 20 கிலோ வரைதான் அக்குடும்பங்களுக்கு கிடைக்கும். குறைந்தபட்சம் 35 கிலோ, அதிகமான உறுப்பினர்கள் இருப்பின் கூடுதல் அளவு என்று சி.பி.ஐ (எம்) கோரியது. ஆனால் அரசோ இருப்பதையும் குறைத்துள்ளது. இது உணவு பாதுகாப்பு அல்ல; உணவு பாதுகாப்பின்மையேயாகும்.

இந்த  சட்டவரைவு மையப்படுத்தப்பட்டதாகவும் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசின் வசம்  ஒப்படைப்பதாகவும் உள்ளது. ஆனால், பெரும் நிதிச்சுமை உட்பட எல்லா பொறுப்புகளையும் மாநில அரசின் தலையில் கட்டுகிறது. பயனாளிகளை அடையாளம் காண்கிற மொத்த நடைமுறைகளையும்  180 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அவசரச் சட்டம் விதித்துள்ளது. ஆனால், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை. மாநில அரசுகளுடன் எவ்வித கலந்தாலோசனை இல்லாமலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவசரச் சட்டத்தில் விஷமத்தோடு இணைக்கப்பட்டுள்ள அம்சம் என்னவெனில், மத்திய அரசு நினைத்தால் உணவுக்குப் பதிலாக பணமாகக் கொடுக்கும் திட்டங்களை அறிவிக்கிற உரிமை தரப்பட்டிருப்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய அரசு மக்கள் விரோத திட்டங்களை அமலாக்க முடியும் என்பதே ஆகும்.

சி.பி.ஐ (எம்) இச்சட்ட வரைவின் மீது திட்டவட்டமான திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. அனைவருக்குமான பொதுவிநியோகம், குறைந்த பட்சம்  35 கிலோவை  (அரிசி,  கோதுமை) அதிக பட்சம் ரூ 2 க்கு வழங்குதல், மையப்படுத்துகிற சரத்துகளை நீக்குதல், மாநில அரசுகளுடன் செலவினப் பகிர்வு குறித்த எல்லா அம்சங்களையும் கலந்தாலோசிப்பதை கட்டாயமாக்குதல் ஆகிய  திருத்தங்கள் அதில் உள்ளன. ரொக்கப்  பட்டுவாடா மற்றும் ஆதார் அட்டையுடனான இணைப்பு ஆகிய அம்சங்களையும் நீக்குவதற்கான திருத்தங்களையும்  முன்மொழிந்துள்ளது.

தெலுங்கானா

ஜூலை 30 அன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கும், தெலுங்கானாவை உருவாக்குவதற்கும் முடிவெடுத்தது. இவ்விரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் பொதுத் தலைநகராக பத்து ஆண்டுகள் இருக்கும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இம்முடிவு எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். 2009 லிருந்தே இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி ஏமாற்று வித்தைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் அரசு எந்த நடவடிக்கையையும் அதன் மீது எடுக்கவில்லை. தற்போது ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள மோசமான நிலைமையையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அதன் வெகுஜன தளத்தை அரித்திருப்பதையும் கணக்கிற் கொண்டே காங்கிரஸ் இம்முடிவை எடுத்துள்ளது. தெலுங்கானா உருவான பின்னர் அங்கு தனக்கு கிடைக்கிற லாபங்களைக் கொண்டு சீமந்திரா பகுதியில் ஏற்படுகிற இழப்புகளை ஓரளவு ஈடுகட்ட முடியுமென்று காங்கிரஸ் நம்புகிறது.

சி.பி.ஐ(எம்)ஐ பொறுத்த வரையில் மொழிவாரி மாநிலங்கள் என்ற அடிப்படையில் உறுதியாக நின்று ஆந்திரா குறித்த நிலைபாட்டை மேற்கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ், தெலுகு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகள் சந்தர்ப்பவாத நிலைகளை எடுத்தன. சமீபத்திய ஆண்டுகளில், தெலுங்கானா பகுதியில் நிலவுகிற வெகுஜன உணர்வும் தனி மாநிலத்திற்கு ஆதரவாகவே இருந்தது. தெலுங்கானா மீதான அறிவிப்பு சீமாந்திரா பகுதியில்  ஒன்றுபட்ட மாநிலமாகவே தொடர வேண்டுமென்ற கோரிக்கையோடு பரந்த எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ளது. வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களால் கடலோர மாவட்டங்கள், ராயலசீமா பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலப் பிரிவினைக்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பதால் இரண்டு பகுதிகளிலும் உள்ள மக்கள் மத்தியில் சுமுக உறவை நிலவச் செய்வது  முக்கியமானது. நதிநீர், சொத்து மற்றும் வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியனவற்றை சுமூகமாகச் செய்ய வேண்டும். தற்போதைய அரசின் கொள்கைகள் தொடர்ந்தால் வாழ்வுரிமை, நிலம், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் ஆகிய மக்கள் பிரச்சினைகள் நீடிக்கும். இப்பிரச்சினைகளை கட்சி எடுப்பதோடு, உரிய செயல்பாடுகள் மூலம்  மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையும், பிரிவினைகளும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மற்ற மாநிலங்களில் தாக்கங்கள்

தெலுங்கானா மீதான முடிவு மாநிலப் பிரிவினை குறித்த போராட்டங்களை பற்ற வைத்து புதுப்பித்துள்ளது. கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா டார்ஜிலிங்கில் மூன்று நாள் முழு அடைப்பிற்கான அறைகூவலை விடுத்தது. இப்போதும் அங்கு போராட்டம் தொடர்கிறது.  அஸ்ஸாமில் போடோலாந்து போராட்டம் முழு அடைப்பை செய்ததோடு, தகவல் தொடர்புகளை துண்டிக்கவும் செய்தது. அஸ்ஸாமின் கார்பி ஆங்லாங்கில் நிலைமை மோசமடைந்து தனி மாநிலக் கோரிக்கை மோதல்களுக்கு வழிவகுத்து ராணுவத்தை அழைக்கிற சூழல் ஏற்பட்டது. மகாராஷ்ட்ராவில் விதர்பா மாநிலப் பிரிவினைக்கான கோரிக்கையை சில அரசியல் தலைவர்கள் முன்வைத்துள்ளார்கள்.

நமது கட்சி வலியுறுத்துவது என்னவெனில், மொழிவாரி மாநிலங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செய்யப்பட்ட மாநிலக் கட்டமைப்பு உடைக்கப்படக் கூடாது என்பதாகும். எங்கு தேவையோ, அங்கு பிராந்திய தன்னாட்சி தரப்படலாம்.

மத வெறி மோதல்கள்

ஈத் பெருநாளையொட்டி மதவெறி மோதல்கள் நிகழ்ந்துள்ளன. ஜம்முவின் கிஷ்த்வார் நகரத்தில் ரம்ஜான் அன்று மத வெறி மோதல் ஏற்பட்டது. இரண்டு பேர் உயிர் இழந்ததோடு கடைகள் பல எரிக்கப்பட்டன. ஜம்முவின் இதர பகுதிகள் சிலவும் கலவரங்களால் பாதிக்கப்பட்டன. ஒருவார காலத்திற்கு கிஷ்த்வார் ஊரடங்கில் இருந்தது. பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இக்கலவரங்களை விசிறி விடுவதில் முனைப்போடு செயல்பட்டனர். அரசு நிர்வாகமும் உறுதியாகத் தலையிடுவதில் தாமதம் செய்தது.

பீகாரில் ஏற்பட்ட ஐக்கிய ஜனதா தளம் – பி.ஜே,பி ஆளுங் கூட்டணி முறிவு கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியான மதவெறி மோதல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. கடந்த காலத்தில் மத வெறி மோதல் வரலாறைக் கொண்ட நவாடாவில் நடைபெற்ற சமீபத்திய மோதல் மிக மோசமானது. இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதில் ஒருவர் முஸ்லிம், இன்னொருவர் இந்து. முக்கிய பஜாரில் கடைகள் எரிக்கப்பட்டன. பி.ஜே.பி , ஆட்சியை விட்டு வெளியேறிய பின்னர் இந்த நிகழ்ச்சிகள் நடந்தேறியிருக்கிறது. மத வெறி மோதல்களை பிஜேபி உசுப்பி விடுகிற முயற்சியே இது என்பது முக்கியமானது. அக்கும்பல்கள் நரேந்திர மோடியை புகழ்ந்தும், நிதிஷ்குமாரைத் தாக்கியும் முழக்கங்களை எழுப்பின என்பது வெளியான செய்திகள் ஆகும். பெட்டியாவில், நரேந்திர மோடியின் படத்தோடு முஸ்லிம்களுக்கு எதிரான அட்டைகளை ஏந்தி நடத்தப்பட்ட மத ஊர்வலம் பிரச்சினையை உருவாக்கியது.

உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட தொடர் மதவெறி மோதல்களோடு இந் நிகழ்ச்சிகளும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத அடிப்படையில் மக்களை பிரிக்கிற பி.ஜே.பி- ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் திட்டமே.

மத்திய தகவல் ஆணைய உத்தரவு

ஆறு தேசியக் கட்சிகளை "பொது அமைப்புகள்" (PUBLIC AUTHORITIES) என உத்தரவிட்டு அதன் காரணமாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமெனவும் மத்திய தகவல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் எவர் வேண்டுமானாலும் அரசியல் கட்சியின் முடிவு எடுக்கிற முறை, வேட்பாளர் தேர்வுக்கான அளவுகோல்கள், நிதி வரத்து குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை தகவலாக கோரிப் பெற முடியும். அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் என்பது மேற்கண்ட ஆணையத்தின் உத்தரவில் உள்ள தவறான சித்தரிப்பாகும். முடிவெடுத்தல் குறித்த கட்சியின் உள் விவாதங்கள் பற்றிய தகவல்களை வெளியிடச் சொல்வது அரசியல் கட்சிகளின் செயல்பாட்டைப் பாதிப்பதாகும். கட்சிகளுக்கு அரசின் நிதி முழுமையாகவோ, பகுதியாகவோ கிடைக்கிறது என்ற காரணத்தைக் காட்டி பொது அமைப்பு என வரையறுப்பது தவறானதாகும்.

இதை சி.பி.ஐ.(எம்)  எதிர்த்ததோடு, தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொணர்ந்து அரசியல் கட்சிகள் "பொது அமைப்புகள் " என்ற வரையறைக்குள் வராது என்பதை தெளிவு செய்ய வேண்டுமெனவும் கோரியது. அரசும் ஓர் சட்டத் திருத்தத்தை தயாரித்துள்ளதோடு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கும் முன்வைக்கவுள்ளது. (நிதி வரத்து விபரங்களை வெளியிடுவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. நமது கட்சியின் வலைத்தளத்தில் இந்த விபரங்களை நாமாகவே வெளியிட ஆரம்பித்துவிட்டோம். மொ-ர்)

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்

உச்சநீதிமன்றத்தின் பெஞ்ச் இரண்டு தீர்ப்புகளை அடுத்தடுத்து அளித்துள்ளது. ஒன்று, சிறைத் தண்டனை பெற்ற தற்போதைய எம்.எல்.ஏ, எம்.பி க்கள் அத்தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்து தடையாணை பெற்றால் பதவியில் தொடரலாம் என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்  சரத்தை செல்லாது என்று அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி அவர்கள் உடனே தகுதி நீக்கத்திற்கு ஆளாவார்கள். இதன் கோட்பாடு என்னவெனில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குற்றங்களைப் புரிபவர்கள் தகுதி நீக்கத்திற்கு ஆளாக வேண்டுமென்பதே ஆகும். இது சரியானது. எனினும், மேல் நீதிமன்றங்களில் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டால் அதற்கு ஓர் வழிவகை இருக்கவேண்டும்.எனவே மேல்முறையீடு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிவு செய்யப்படுவதற்கும், அது வரை அந்த உறுப்பினரை தற்காலிகப் பணி நீக்கத்தில் வைத்திருப்பதற்குமான வழிவகை செய்ய வேண்டும்.

இன்னொரு தீர்ப்பு, மிகவும் ஊறு விளைவிக்கக் கூடியது. காவல்துறையின் வசமோ அல்லது சிறையிலோ ஒருவர் ஒரு நாள் இருந்தால் கூட அவர் தண்டிக்கப்படாவிட்டாலும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படக் கூடாது என்பதே அது. இது ஆளும் கட்சிகளாலும், ஆட்சியாளர்களாலும் பெருமளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்களை சிறு சிறு காரணங்களுக்கு சிறையில் வைத்து தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கு வழிவகுத்துவிடும். நீதிமன்றம் வாயிலாகவோ, சட்ட தலையீட்டின் மூலமோ இத்தீர்ப்பை சரிசெய்ய வேண்டும்.

எல்லையில் பதட்டங்கள்

இவ்வாண்டு அதிகரித்துள்ள  போர் நிறுத்த மீறல்களின் பின்னணியில் பூஞ்ச் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் (Line of Control) இந்திய ராணுவ பாதுகாப்பு மையத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதில் ஐந்து படை வீரர்கள் இறந்து போனார்கள். பாகிஸ்தானின் தரப்பிலும்  உயிரிழப்புகள்  இருந்திருப்பதாக செய்திகள் உள்ளன. ராணுவத் தரப்பு அறிக்கையிலிருந்து மாறுபட்டு பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை இருந்ததால் அரசு தேவையற்ற சர்ச்சையில் சிக்கி பின்பு அது திருத்தப்பட்டது. முன்கூட்டி தாக்கித் தடுத்தல் (PRE-EMPTIVE ACTION), பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை நிறுத்துதல் போன்ற தீவிரப் பிரச்சாரத்தை பி.ஜே.பி, பாதுகாப்பு நிபுணர்கள், ஊடகங்களின் ஒரு பகுதி ஆகியோர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்  " பாகிஸ்தானுடனான  பலவீனமான அணுகுமுறை" என்பதை  "சிறுபான்மையினரை மென்மையாக அணுகுதல்" என்ற குற்றச்சாட்டோடு  இணைக்கிற அவர்களின் இயல்பான  குணத்தை நரேந்திர மோடியும், பி.ஜே.பியும் இப்பிரச்சினையிலும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறார்கள். போர் நிறுத்த உடன்பாடு 2003ல்  வாஜ்பாய் அரசு இருந்தபோது ஏற்பட்டதுதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து, இந்தியத் தரப்பிலான ராணுவ வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உயிர் இழப்புகள் பெரிதும் குறைந்துள்ளன.

இத்தகைய வலதுசாரி நிர்ப்பந்தங்களுக்காக பாகிஸ்தானுடனான உறவுகளையோ, பேச்சுவார்த்தைகளையோ கைவிடக் கூடாது. பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்தியாவுடனான உறவுகள் மேம்பட வேண்டுமென்று வெளிப்படையாக விருப்பம் தெரிவித்துள்ள பின்னணியில் இதை நாம் பார்க்கவேண்டும். போர் நிறுத்த மீறல்களுக்கு எதிராகவும், எல்லை தாண்டி தீவிர வாதிகள் ஊடுருவதற்கு எதிராகவும் உறுதியான நிலையை மேற்கொள்ளும் வேளையில் பாகிஸ்தான் தலைமையுடனான பேச்சுவார்த்தைகளையும் அரசு தொடர வேண்டும்.

உத்தரகாண்டு பேரழிவு

பெருவெள்ளம், நிலச் சரிவு காரணமாக உத்தரகாண்டில் பெருமளவிற்கு உயிர் இழப்புகளும், சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளன. மாநில அரசு தந்துள்ள விவரங்களின்படி 582 பேர் மரணம் அடைந்துள்ளனர். 5100 பேரின் இருப்பு இதுவரை கண்டறியப்படவில்லை.இதன் பொருள், உயிர் இழப்புகள் மிக அதிகமாக இருக்கலாம். சி.பி.ஐ.(எம்) மற்றும் அதன் வெகுஜன அமைப்புகள் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள்

மோடி : பி.ஜே.பி

கோவாவில் ஜூன் மாதம் கூடிய பி.ஜே.பியின் தேசிய செயற்குழு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக நரேந்திர மோடியை  நியமித்தது. மோடி அக்கட்சியின் நாடாளுமன்ற உயர்மட்டக்குழு உறுப்பினராக நியமனம் பெற்ற பின்னரும் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த  பின்னணியிலுமே இம்முடிவு எடுக்கப்பட்டது. எல்.கே.அத்வானி இம்முடிவை எதிர்த்ததோடு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். எனினும் அது குறுகிய காலமே நீடித்தது. ஆர்.எஸ்.எஸ் தலையிட்டு அவர் விலகலை திரும்பப் பெறச் செய்தது. நரேந்திர மோடி அவரது பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இது பெரு நிறுவன ஊடகங்களில் விரிவாக இடம் பெறுகிறது. நகர நடுத்தரவர்க்கம், படித்த இளைஞர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு மோடி தனது பிரசாரத்தை நகர்த்துகிறார். 

மோடி முன்னிறுத்தப்படுவது "வளர்ச்சி" என்கிற கருத்தியலை முன்வைத்து மட்டுமல்ல, தீவிர இந்துத்துவா பிரச்சார மேடையாகவும் அது மாற்றப்பட்டுள்ளது. மோடி தன்னை "இந்து தேசிய வாதி" என்றே அழைத்துக் கொள்கிறார். அவப்புகழ் பெற்ற அமீத் ஷா உத்தரபிரதேசத்திற்கு அனுப்பப்பட்டு கட்சியை மேற்பார்வை செய்ய பணிக்கப்பட்டுள்ளார். அவர் ராமர் சிலை நிறுவப்பட்டுள்ள பாபர் மசூதி இருந்த இடத்திற்கு சென்றார். மோடியை முன்னிறுத்துகிற திட்டத்திற்கு தனது சக்திகளையெல்லாம் திரட்டி முனைப்போடு ஆர்.எஸ்.எஸ் உதவி வருகிறது.

பி.ஜே.பி அணியிலிருந்து பிரிந்த ஐக்கிய ஜனதா தளம்

மோடி தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமனம் பெற்றது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிச் செல்வதற்கும், பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் –  பி.ஜே.பி உறவு முறிவதற்கும் இட்டுச் சென்றது. நிதிஷ் குமார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சுயேச்சைகளின் ஆதரவோடு வெற்றி பெற்றார். அவருக்கு ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் மற்றும் ஒரு சி.பி.ஐ எம்.எல்.ஏ ஆதரவும் கிடைத்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக வாகளித்தது. ராம் விலாஸ் பாஸ்வானின் எல்.ஜே.பி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இப்பிரிவுக்கு முன்னர் நடந்த மகாராஜ்கஞ்ச் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதாதளம் மிகப் பெரும் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை தோற்கடித்து தனது தொகுதியை தக்க வைத்தது. பி.ஜே.பி தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தர மறுத்து எதிர்த்து வேலை பார்த்ததாக ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியது.

காங்கிரஸின்  நடவடிக்கைகள்

காங்கிரசும் தனது வலுவை மேம்படுத்தவும், இழந்த தளங்களை மீட்டு சரிவைத் தடுக்கவும்  முயற்சிகள் செய்து வருகிறது. பி.ஜே.பி – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு கவிழ்ந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்ட  ஜார்கண்டில், ஜே.எம்.எம் உடன் பேரம் நடத்தி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை முதல்வராகக் கொண்ட அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் நிறைய இடங்களில் போட்டியிடும் என்பதே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் ஏற்பட்டிருக்கக் கூடிய உடன்பாடு என்பதை புரிந்து கொள்ள முடியும்.

காங்கிரஸ் தலைமையின்  இன்னொரு முக்கியமான நடவடிக்கை தெலுங்கானா மாநில உருவாக்கம் ஆகும். காங்கிரசின் வாய்ப்புகள் ஆந்திரா கடலோரங்களிலும், ராயலசீமா பகுதியிலும் மிக மோசமாக உள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் லாபம் பெறலாம் என்பதே காங்கிரசின் நோக்கம்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த நிர்ப்பந்தம் காரணமாகவே உணவு பாதுகாப்பு அவசரச் சட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் பிறப்பிக்கப் பட்டது. நாடாளுமன்றத்தை மீறுகிற இம்முடிவு, உணவுப்பாதுகாப்புச் சட்டத்தால் காங்கிரசுக்கு பலன் கிடைக்கும்; தேர்தலுக்கு முன்பாக அமலாவது காங்கிரசுக்கு உதவும் என்ற அரசியல் கணக்கோடு எடுக்கப்பட்டுள்ளது.

கேரளா

கடந்த மத்தியக் குழுக் கூட்ட அரசியல் அறிக்கையில் , ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்தின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறியிருப்பதையும், அக் கூட்டணிக்குள்ளும், காங்கிரசுக்குள்ளும் பிளவுகள் தோன்றத் துவங்கியிருப்பதையும் குறிப்பிட்டு இருந்தோம். பின்னர், காங்கிரசுக்குள் இருந்த உட்கட்சி குழு மோதல்கள் கூர்மையானதோடு, முதல்வர் உமன் சாண்டிக்கும், கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கும் இடையான வேறுபாடுகள் அம்பலத்திற்கு வந்தன. சென்னிதலாவை அமைச்சரவையில் சேர்ப்பது உட்பட்ட பிரச்சினையும் அதில் உண்டு.  

இச்சூழலில் சூரிய ஆற்றல் திட்ட மோசடி வெடித்தது. முதல்வர் அலுவலகத்தின் ஈடுபாடும், முதல்வரே சூரிய ஆற்றல் சாதன மோசடி விற்பனையில் தலையிட்டதும் வெளிப்பட்டது. இடது ஜனநாயக முன்னணி, முதல்வரின் பதவி விலகலையும், நீதி விசாரணையையும் கோரியது. நடப்பில் இருந்த சட்டமன்ற அமர்வை அரசாங்கம் திடீரென்று ரத்து செய்தது. இப்பிரச்சினை மீதான எதிர்ப்பு இயக்கங்களை காவல்துறையின் கொடூரமான தாக்குதல் மூலம் அரசு எதிர்கொண்டது. இடது ஜனநாயக முன்னணி முதல்வரின் பதவி விலகலையும், நீதி விசாரணையையும் கோருகிற காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தது. முதல் கட்டமாக ஜூலை 22 லிருந்து இரண்டு வார காலம் 24 மணி நேர இரவு பகல் தர்ணா தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக நடத்தப்பட்டன. இதில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்றனர். 

இரண்டாவது கட்டமாக, ஆகஸ்ட் 12 முதல் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் துவக்கப்பட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு மத்திய துணை ராணுவப் படையை வரவழைத்தது. வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை, ஓட்டல்களில் போராட்டக்காரர்களுக்கு இடம் தரக் கூடாது என்பது போன்ற தடைகளை மாநில அரசு விதித்தது. எனினும் முற்றுகை போராட்டத்தில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர். மக்களிடமும், ஊடகங்களிலும் இப்போராட்டம் மிகுந்த கட்டுப்பாட்டோடு நடந்தேறிய பாங்கு  பாராட்டுதலை பெற்றது. இரண்டாம் நாள், மாநில அரசு சூரிய ஆற்றல் சாதன மோசடி மீது தற்போது பதவியில் உள்ள நீதிபதியைக் கொண்ட விசாரணைக்கு ஒப்புக் கொண்டது. இடது ஜனநாயக முன்னணி முற்றுகையை விலக்கி கொண்டு தங்களது கோரிக்கையின் ஒரு பகுதி ஈடேறி இருப்பதை அறிவித்தது. எனினும் முதல்வரை வெளியேற்றுகிற போராட்டத்தை இடது ஜனநாயக முன்னணி தொடரும்.

மேற்கு வங்காளம்

ஜூலை 21 லிருந்து 25 வரை ஐந்து கட்டங்களாக மேற்கு வங்காளப் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றன. மாநில அரசுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே தொடர்ந்து ஏற்பட்ட மோதல் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்ற ஆணையின்படியே ஐந்து கட்டத் தேர்தல்களும், மத்திய துணை ராணுவ படை வருகையும் நடந்தேறியது.

தேர்தல் முழுவதும் பரவலான தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நடந்தேறியது. சுமார் 6000 சி.பி.ஐ.(எம்) மற்றும் இடது முன்னணி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் உடல் ரீதியாகவே தடுக்கப்பட்டனர். மூன்று அடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் 6191 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இப்பிரச்சாரத்தில் திரிணாமுல் அமைச்சர்களும் தலைவர்களும் எதிர்க் கட்சிகளின் மீது ஆத்திரமூட்டுகிற பேச்சுக்களின் மூலம் வன்முறையைத் தூண்டிவிட்டனர். பிரச்சாரத்தின் போது இடது முன்னணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; காயப்படுத்தப்பட்டனர். இதில் சில பெண் வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டனர்.தேர்தலுக்கு முன்பும், பின்பும் நடைபெற்ற வன்முறைகளில் 24 சி.பி.ஐ.(எம்) ஊழியர்களும்,ஆதரவாளர்களும் உயிரிழந்தனர்.

அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப் பதிவுகளின்போது மொத்தம் 4470 வாக்குச் சாவடிகள் முழுமையாகவோ, பகுதியாகவோ கைப்பற்றபட்டன. பர்துவானில் 909, மேற்கு மிட்னாபூரில் 750, தெற்கு 24 பர்கானாவில் 429, கூச் பிகாரில் 400 ஆகிய வாக்குச் சாவடிகளும் இதில் அடங்கும்.

ஜூலை 29 வாக்கு எண்ணிக்கையின் போது பரவலான தாக்குதல்களும், வாக்கு எண்ணிக்கையிலேயே முறைகேடுகளும் அரங்கேறின. இடது முன்னணியின் முகவர்கள் வெளியே விரட்டப்பட்டு முடிவுகளே மாற்றப்பட்டன. வாக்குச் சாவடிகளிலும், வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இருந்த மாநில காவல்துறையினர் தாக்குதல்கள் நடந்தபோது தலையிடவே மறுத்தனர். மிகவும் பதட்டம் அல்லது பதட்டம் நிலவிய பகுதிகளில் மத்திய துணை ராணுவப் படை பயன்படுத்தப்படாதது திட்டமிட்ட செயலே ஆகும். 17 மாவட்ட பஞ்சாயத்துகளில் 13-லிலும், பஞ்சாயத்து சமிதிகள் – கிராமப் பஞ்சாயத்துகளில் பெரும்பாலானவற்றிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முடிவுகள் மக்களின் விருப்பத்தை முழுமையாகப் பிரதிபலிப்பவை அல்ல; ஓர் திரிக்கப்பட்ட சித்திரமே ஆகும். திரிணாமுல் காங்கிரஸ் ஜனநாயகத்தின் மீதும், மக்களின் உரிமைகள் மீதும் அப்பட்டமான தாக்குதலை ஏவிவிட்டுள்ளது.

சி.பி.ஐ (எம்) மற்றும் இடது முன்னணி ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு பொறுமையோடும், உறுதியோடும் பணியாற்ற வேண்டும். உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை மக்களைத் திரட்டி நடத்த வேண்டும்.மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துகிற வகையில் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். அகில இந்திய மட்டத்தில், கட்சியும் இடதுசாரிகளும் விரிந்த அளவில்  ஜனநாயக சக்திகளை திரட்டி ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை எதிர்ப்பதோடு மேற்கு வங்காளத்தில் கட்சியும் இடது முன்னணியும் நடத்துகிற போராட்டங்களுக்கு ஆதரவையும், உறுதிபாட்டையும் அளிக்க வேண்டும். 

காங்கிரஸ் அல்லாத – பி.ஜே.பி அல்லாத கட்சிகள்

ஐக்கிய ஜனதா தளம் பி.ஜே.பி உடனான உறவை முறித்த பின்னர் , தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பி.ஜே.பி, சிவசேனா, அகாலிதளம் ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகளான ராஷ்ட்ரிய லோக் தளம், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியன மட்டுமே உள்ளன.

இச்சூழ்நிலையில் மூன்றாவது அணி பற்றிய பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. காங்கிரஸ் அல்லாத , பி.ஜே.பி அல்லாத கட்சிகள் மீதான கவனமும் குவிந்துள்ளது.

மம்தா பானர்ஜி மாநில கட்சிகளின் அணிக்கான அறைகூவலை விடுத்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரோடு இது குறித்து தொடர்பு கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இம் மூன்று மாநிலங்களும் பின்தங்கியவையாகவும், புறக்கணிப்பை இப்போதும் எதிர்கொள்பவையாகவும் இருப்பது  ஓர் பொதுவான அடிப்படையாக இருப்பதால்  இம் மாநிலங்களின் உரிமைகளுக்காக மத்திய  அரசுடன்  ஒன்றுபட்டு போராடப் போவதாகவும் அவர் கூறினார். எனினும் இந்த முயற்சி அதற்கு மேல் பெரிதாக நகரவில்லை.

நவீன் பட்நாயக் ஓர் மூன்றாவது அணியை தான் விரும்புவதாக அறிவித்தாலும் அதற்கான திட்டவட்டமான பேச்சுவார்த்தைகளோ, முயற்சிகளோ இதுவரை நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் அறிக்கைகளை பொதுவாக விடுத்தபோதும் மற்ற அரசியல் கட்சி தலைவர்களுடன் பேசும் போது மூன்றாவது அணி தேர்தலுக்கு பின்பே உருவாகும் என்று தெரிவித்துள்ளார். மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவ கௌடா விரைவில் மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று கூறியதோடு அதற்கான முன்முயற்சியை சி.பி.ஐ(எம்) மும், இடது சாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சந்திரபாபு நாயுடுவும், தெலுங்குதேசமும் காங்கிரஸ் அல்லாத பி.ஜே.பி அல்லாத கட்சிகள் கைகோர்க்க வேண்டுமென்று சில காலமாகவே சொல்லி வருகிறார்கள்.

இக்கட்சிகளின் தலைவர்களோடு இதுவரை நாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் அறிவது என்னவெனில், பெரும்பாலான கட்சிகள் தங்களின் மாநிலங்களில் தங்களின் வலுவை அதிகமாக்கி கூடுதல் நாடாளுமன்ற இடங்களைப் பெற்று தேர்தலுக்கு பின்பு பேரம் பேசுவதற்கும், தேர்தலுக்கு பிந்தைய அணி சேர்க்கைக்குமே அவர்களிடம்  முனைப்பு இருக்கிறது என்பதே. சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தில் எவ்வளவு அதிகமான இடங்களை பெற முடியுமோ அதைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது. அ.இ.அ.தி.மு.க வும் இதே போன்ற கவனத்தை செலுத்தி வருகிறது.  எவ்வளவு அதிக இடங்களில் வெற்றி பெறுகிறோமோ அவ்வளவு முக்கியத்துவத்தை அடுத்த அரசாங்க உருவாக்கத்தில் பெற முடியும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஜனவரி மத்தியக் குழு கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் நிலவுகிற அரசியல் சூழல் பற்றியும், கட்சி கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை உத்திகளைப் பற்றியும் மதிப்பீடு செய்தோம். தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க, ஒரிஸ்ஸாவில் பிஜு ஜனதா தளம், அஸ்ஸாமில் ஏ.ஜி.பி, ஆகிய கட்சிகளோடு தொகுதி  உடன்பாடு கொள்வதற்கான வாய்ப்புகளை நாம் பரிசீலிக்க வேண்டும். ஆந்திராவைப் பொறுத்த வரையில், மாநிலப் பிரிவினைக்கு பின்னர் உள்ள நிலைமையை புதிதாய் பரிசீலித்து நடைமுறை உத்தியை வகுக்கலாம்.

தற்போதைய நிலையில், நாம் பல்வேறு மாநிலங்களில் தெரிவு செய்துள்ள தொகுதிகளில் தயாரிப்புகளைத் தொடர வேண்டும். அதற்கு மேல் காங்கிரஸ் அல்லாத மதச் சார்பற்ற கட்சிகளோடு உறவை பேண வேண்டும். சில கட்சிகளோடு மாநில அளவில் நாம் தேர்தல் தொகுதி உடன்பாடு  கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். சிலரோடு தேர்தலில் தொகுதி உடன்பாடு இல்லாவிட்டாலும் தேர்தலுக்குப் பிந்தைய ஒத்துழைப்பு தேவைப்படலாம்.

தற்போதைய சூழலை மனதிற்கொண்டு ஜூலை 1 அன்று இடதுசாரிக் கட்சிகள் ஒரு தேசியக் கருத்தரங்கை நடத்தின. ஓர் மாற்றுக் கொள்கைகளுக்கான மேடையை உருவாக்கி அதனை நோக்கி ஜனநாயக, மதச் சார்பற்ற சக்திகளை ஈர்க்க முடிவு செய்துள்ளோம். இதை ஏன் செய்தோம் எனில், மாற்றுத் திட்டம், மாற்றுக் கொள்கைகள் மீதான கவனத்தை ஈர்ப்பதற்கே ஆகும்.

கருத்தரங்கத்தின் முடிவின்படி, இடதுசாரிகள் மாநிலத் தலைநகர்களில் அடுத்த மூன்று மாதங்களில் பேரணிகளை நடத்துவதென உள்ளோம். இவ்வாய்ப்பை பயன்படுத்தி நமது அரசியல் புரிதலை, மாற்று பற்றிய கருத்தை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும்.

ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளன. ராஜஸ்தானில் சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, சமாஜ்வாதி கட்சி, மதச் சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய ஐந்து கட்சிகளின் அணி உருவாகி உள்ளது. நமது கட்சி 40 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. டெல்லியில் 3 இடங்களிலும்,மத்திய பிரதேசத்தில் 9 இடங்களிலும், சத்தீஸ்கரில் 4 இடங்களிலும் போட்டியிட உத்தேசித்துள்ளோம்.

நிறைவாக…

வருங்காலங்களில் கட்சி மக்கள் நலன், விலைவாசி உயர்வு, உணவுப் பாதுகாப்பு, நிலம், கூலி, சமுக நீதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வர்க்க, வெகுஜன பிரச்சினைகளை எடுத்து மக்களைத் திரட்ட வேண்டும். இக் கோரிக்கைகளின் அடிப்படையில் ஸ்தலப் பிரச்சினைகளை  கையில் எடுத்து போராட்டங்களை நடத்த வேண்டும். மத வெறி நடவடிக்கைகளின் அதிகரிப்பு, மதவெறி மோதல்கள் தீவீரமாதல் ஆகிய பின்புலத்தில் மதவெறிக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்துவதோடு ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி யின் சதிகளை அம்பலப்படுத்த வேண்டும். மாநிலங்களில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கான அமைப்பு ரீதியிலான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். இடதுசாரிகளின் கூட்டுப் பேரணிகள் மாநிலத் தலைநகர்களில் நடைபெறுவதையொட்டி மாற்றுப் பாதை சார்ந்த கொள்கைகளை பிரச்சாரம் செய்ய வேண்டும். மேற்கு வங்காளத்தில் நடைபெறுகிற தாக்குதல்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதோடு ஆதரவு இயக்கங்களையும் நடத்த வேண்டும்.

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply