அரசியல் நிகழ்வுகள் பற்றிய அறிக்கை (2013, டிசம்பர் 13-15)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மத்தியக்குழு
அரசியல் நிகழ்வுகள் பற்றிய அறிக்கை
(2013, டிசம்பர் 13-15 தேதிகளில் அகர்தலாவில் (திரிபுரா) நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது)

சர்வதேச நிலைமை:

கடந்த நான்கு மாதங்களில் சர்வதேச நிலைமையில் மேற்கு ஆசிய பகுதியில் நடந்த பல்வேறு நிகழ்வுகளும், வளர்ச்சிப்போக்குகளும் பிரதான பங்கினை பெற்றிருந்தன. முதலாவது, சிரியாவில் நடந்த மோதலும் ராணுவ தாக்குதலிலிருந்து அமெரிக்கா பின்வாங்கியதுமான நிகழ்வுகளோடு தொடர்புடையது. இரண்டாவது, ஈரான் அணுசக்தி பிரச்சனையில் ராஜிய முறையில் பேச்சு வார்த்தைக்கான வழி திறக்கப்பட்டிருப்பது தொடர்புடையதாகும். இந்த இரண்டு நிகழ்வுகளும் அந்த பகுதியில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளன.

சிரியா:

பின்வாங்கிய அமெரிக்கா சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறது என்று சொல்லி அமெரிக்க அதிபர் ஒபாமா சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். இங்கிலாந்தும், பிரான்சும் அந்த ராணுவ திட்டத்தில் இணைந்து கொண்டன. ஆனால், இரண்டே வாரத்தில் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டன. இங்கிலாந்து பிரதமர் கேமரூன் அந்த ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் தோல்வியுற்றார். அதைத் தொடர்ந்து, ஒபாமாவும் சிரியாவை தாக்கும் முன்பு அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலை பெறப் போவதாக அறிவித்தார். மற்றொரு ராணுவ தலையீட்டிற்கு எதிராக அந்த இருநாட்டு மக்களின் கருத்து இருந்தது. அமெரிக்கா-நேட்டோவின் ராணுவ திட்டத்திற்கான எதிர்ப்பு வலுவடைந்து கொண்டிருந்த பின்னணியில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. அங்கு ரஷ்ய அதிபர் புடின் தலைமையில் உருவான எதிர்ப்பின் காரணமாக, அமெரிக்கா தனிமைப்பட்டு போனது. அதன்பிறகு, சிரியா வைத்துள்ள ரசாயன ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற ரஷ்யாவின் முன்மொழிவினை சிரியா ஏற்றுக் கொண்டது. அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் கெர்ரி அப்படி ஒரு நடவடிக்கையினை போகிற போக்கில்  வெளியிட்டிருந்த நிலையில் அமெரிக்காவிற்கு அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒபாமா ராணுவ நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்றும் ராஜிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பின் மூலம் ஒரு ஆண்டிற்குள் அவ்வாயுதங்களின் மொத்த இருப்பை கணக்கெடுத்து அழித்து விடுவது என்பதற்கான ஒப்பந்தம் ஜெனீவாவில் கையெழுத்திடப்பட்டது.

அண்மைக்கால வரலாற்றில் ராணுவ நடவடிக்கையை அறிவித்துவிட்டு அமெரிக்க அதிபர் அதிலிருந்து பின்வாங்க நேர்ந்தது இதுவே முதன் முறையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இது ஒரு பின்னடைவாகும்; இது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் சிந்தனைப்போக்கினை தடுத்து நிறுத்தும் ஒரு சிறிய நடவடிக்கையாகும்.

இந்த கால கட்டத்தில், இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் தீவிரமாக செயல்பட்டு நிலைமைகளை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தன. இதன் மூலம் மேற்கு நாடுகளின் ஆதரவில் செயல்படும் சிரியன் தேசிய ராணுவத்தை அடக்கி வைக்கும் முயற்சியால் அரசுக்கு எதிராக செயல்படும் சிரியா எதிர்ப்புக்கட்சிகளை பிளவுபடுத்திக் கொண்டிருந்தது. கலகப்படையினரின் ஆதிக்கத்தில் இருந்த இடங்களில் சிரியா அரசின் படைகள் முன்னேறியிருந்தன. சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த சக்திகளின் ஒற்றுமைக்கு இந்த நிகழ்வுகள் பின்னடைவை ஏற்படுத்தின. சம்பந்தப்பட்ட அமைப்புகளிடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலமும் சர்வதேச அளவில் ராஜிய நடவடிக்கைகள் மூலமும்  தீர்வு காண்பது தான் இப்பிரச்சனைக்கு ஒரே வழியாக தென்படுகிறது.

ஈரான் – தேக்க நிலையில் அசைவு

இந்தப் பின்னணியில் தான் இரண்டாவதாக கூறப்பட்ட நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. அணுசக்தி பிரச்சனையில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கில் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. நவம்பர் மாதத்தில் ஜெனீவாவில் பி 5+1 (ஐநா.பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி) நாடுகள் மற்றும் ஈரானுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளது. அதன்படி, ஈரான் 5 சதவிகிதத்திற்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டாது என்றும், 20 சதவிகிதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை குறைத்துக் கொள்ளும் என்றும் முடிவானது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஈரானின் மீது ஏற்கனவே விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதோடு அவற்றின் வங்கிகளில் உள்ள ஈரானின் நிதியை எடுக்க இருந்த தடையை நீக்குவதும் இந்த ஒப்பந்தங்களின் அம்சங்களாகும். அமெரிக்காவிற்கும், ஈரானுக்குமிடையே நடந்த அரவமற்ற பேச்சு வார்த்தைகளின் விளைவாக இந்த ஒப்பந்தம் உருவானது. ஈரானின் அதிபராக ஹசைன் ருஹானி பொறுப்பேற்றது இந்த முட்டுக்கட்டை நெகிழ காரணமாக இருந்தது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு ஆத்திரமூட்டியிருக்கிறது; அதன் அதிபர் நெதன்யாகு இதை ஒரு வரலாற்றுப் பிழை என்று குறிப்பிட்டார்.

இது சவூதி அரேபியாவையும் கவலையுறச் செய்திருக்கிறது; இந்தப் பகுதியில் ஈரானைத் தனிமைப்படுத்தி சன்னி பிரிவினரின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வம் கொண்டிருந்தது சவூதி அரேபியா. ஒரு முழுமையான ஒப்பந்தம் காண்பதற்கு முன் ஒபாமா அமெரிக்க காங்கிரசின் ஈரான் மீதான எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அனைத்து தடைகளும் தாண்டினால், இந்தப் பகுதியில் இந்த ஒப்பந்தம் பரவலான விளைவுகளைக் கொண்டு வரும். அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற இருக்கும் சூழலில், அப்போது எழும் நிலைமையினை எதிர்கொள்ள அமெரிக்கா ஈரானின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும். அமெரிக்கா – ஈரானிடையே ஏற்பட்டிருக்கும் இந்த நல்லிணக்க நடவடிக்கை இந்த பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல் நோக்கங்களுக்கு எதிரான தடுப்புச்சுவராக அமையும். சிரியா தொடர்பான பேச்சுவார்த்தை வளையத்திற்கு ஈரானையும் கொண்டு வருவது ராஜிய மற்றும் அரசியல் ரீதியான ஒத்திசைவினை கொண்டு வருவதற்கு உதவிகரமாக இருக்கும். இருந்த போதிலும், ஏகாதிபத்திய சக்திகள் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல எப்படி அனுமதிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடரும் பொருளாதார மந்தம்:

வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவான அளவிலேயே உள்ளன. சில நாடுகளில் அந்த விகிதம் வளர்ச்சிக்கு எதிர்மறை நிலையில் உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க பொருளாதாரத்தில் நெருக்கடி உருவானது, அது 2007 ஆம் ஆண்டு கடைசி காலாண்டு பகுதியில் பொருளாதார மந்த நிலையில் நுழைந்தது; அதிலிருந்து விடுபடுவதற்கான அறிகுறி ஏதுமில்லை. சர்வதேச நிதி நிறுவனம் (ஐஎம்எப்) இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 2013ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.2 சதவிகிதமாகவும், 2014 ஆம் ஆண்டுக்கு 3.8 சதவிகிதமாகவும் இருக்கும் என மதிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது அதை 2.9 சதவிகிதம் எனவும், 3.6 சதவிகிதம் எனவும் மறுமதிப்பீடு செய்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனம் வளர்ச்சி விகித மதிப்பீட்டை ஆறாவது முறையாக தொடர்ந்து குறைத்து வந்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி பலவீனமாக உள்ளதென்றும், வளர்ச்சி குறைவு ஆபத்து இன்னும் இருக்கிறதென்றும் சர்வதேச நிதி நிறுவனம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வட்டி விகிதம் உயருமேயானால் எழுந்து கொண்டிருக்கும் சந்தைகள் என சொல்லப்படும் நாடுகளும், நிதிநிலையில் ஆபத்தை சந்திக்கும் எனவும் குறிப்பிடுகிறது. 2013 இல் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 1.6 சதவிகிதமாக இருக்கும் என முன்மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது; இதுவும் கூட சர்வதேச நிதி நிறுவனத்தின் முந்தைய மதிப்பீட்டைக் காட்டிலும் 0.1 சதவிகிதம் குறைவு. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) 2013 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் மே மாதத்தில் முறையே 3.1 சதவிகிதமாகவும், 4.0 சதவிகிதமாகவும் இருக்கும் என மதிப்பிட்டிருந்தது; செப்டம்பர் மாதத்தில், அதை 2.7 சதவிகிதம், 3,6 சதவிகிதம் என்று குறைத்து மதிப்பீடு செய்திருக்கிறது. அந்த அமைப்பு உலக பொருளாதார மீட்சி, மிதமான மற்றும் ஏற்றத்தாழ்வான ஒன்று என்றும், வளர்ச்சிக்கான வாய்ப்பு வலுவற்றதாக உள்ளது என்றும் குறிப்பிடுகிறது.

சர்வதேச நிதி நிறுவனம் எழுந்து கொண்டிருக்கும் சந்தைகள் மற்றும் வளர்முக நாடுகளின் வளர்ச்சி 2013 இல் 4.5 சதவிகிதம், 2014 இல் 5.1 சதவிகிதம் இருக்கும் என மூன்று மாதங்களுக்கு முன் கணித்திருந்தது; மறுமதிப்பீட்டில் அதை 0.5 சதவிகிதம், 0.4 சதவிகிதம் அளவில் குறைத்தது. ஈரோ மண்டல வளர்ச்சி விகிதமும் இந்த ஆண்டு 0.4 சதவிகிதம் அளவு குறைந்த பிறகு, அதன் வளர்ச்சி 2014 இல் 1 சதவிகிதமாக இருக்கும் என முன் மதிப்பீடு செய்திருக்கிறது.

சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு போன்ற அமைப்புகள் அவை குறிப்பிட்ட வளர்ச்சி விகிதங்களை மீண்டும் மீண்டும் குறைத்துக் கொண்டே வரும் பொழுது, அனைத்து ஐரோப்பிய மற்றும் வளர்முக நாடுகளில் வேலையின்மை என்பது மேலும் மேலும் மோசமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது; இளைஞரிடையே வேலையின்மை இன்னும் ஆழமாக உள்ளது. நிதிமூலதனத்தின் திருப்திக்காக எடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள் வளர்ந்த, வளர்முக நாடுகளை சீரழிப்பதோடு இளைஞர்களின் ஒரு தலைமுறையினையே பயனற்றதாக மாற்றிவிடுகிறது.

விவசாயம் தொடர்பான உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்

பாலி (இந்தோனேசியா) தீவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. உணவு மானியங்களை தொடர்வது குறித்து வெற்றி பெற்றிருப்பதாக இந்தியா அறிவித்திருக்கிறது. ஆனால், அது தவறான அறிவிப்பாகும். பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வரை நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிக என்ற வார்த்தைக்குப் பதிலாக இடைக்கால என்ற சமரசப் பிரிவு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய சலுகைதான் கிடைத்திருக்கிறது. வர்த்தக அமைச்சரின் பொது அறிவிப்புக்கும் ஒப்பந்தத்தின் வாசகங்களுக்கும் இடைவெளி இருக்கிறது.

அமைச்சர் குழுவின் கூட்ட முடிவு இந்தியாவின் உணவுப் பாதுகாப்பினையும் விவசாயிகள் நலன்களையும் விட்டுக் கொடுக்கும் ஒன்றாக இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த ஒப்பந்தம் தற்போதைய உணவுப் பாதுகாப்பு திட்டங்கள் விரிவாக்கத்தையும் விவசாயிகள் பெறும் ஆதரவு விலையினையும் அதோடு அனைவருக்குமான பொது விநியோக அமைப்பினையும் ஆபத்துக்குள்ளாக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு நாடும் பொருட்களுக்காக அரசு நிர்ணயித்திருக்கும் விலைகளையும் அரசு தங்களிடம் வாங்கி வைத்திருக்கும் கையிருப்பு எவ்வளவு என்பதையும் உலக வர்த்தக அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். இது உள்நாட்டு கொள்கைகளை தேவையில்லாமல் வெளிப்படுத்தி அவற்றை உலக வர்த்தக அமைப்பின் விவசாயம் தொடர்பான குழுவின் கேள்விக்கு உட்படுத்திவிடுகின்றன. அப்படிப்பட்ட விரிவான அறிவிப்புகளையும் வெளிப்படையான செயல்முறையினையும் வளர்ந்த நாடுகளிடமிருந்து கேட்பதில்லை: அந்த நாடுகள் சிறப்பு மற்றும் வேறுபாட்டுச் சலுகைகளைப் பெற்றிருக்கின்றன. அமெரிக்கா தலைமையிலான பணக்கார நாடுகளும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தங்கள் நாடுகளில் உள்ள விவசாயிகளுக்காக கோடிக் கணக்கான டாலர்களை எவ்விதத் தடையுமின்றி ஒதுக்கும் உரிமையினையும் அவர்களின் உணவு உதவித் திட்டங்களையும் தக்கவைத்துக் கொண்டன: உலக வர்த்தக அமைப்பு பணக்கார நாடுகள் ஏற்றுமதிக்கான மானியம் வழங்குவது போன்ற பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளத் தவறியிருக்கிறது. பாலி அமைச்சர்கள் குழுக் கூட்டம் ஏற்றத் தாழ்வான செயல் திட்டங்களை முன்வைத்திருக்கிறது: வணிகத்தை எளிதாக்குதல் என்ற பெயரில் வளர்முக நாடுகள் மீது பெருஞ்செலவு மிக்க சுங்கவரி ஒப்பந்தம் திணிக்கப்படுகிறது. வணிகத்தில் ஏகபோகத்தைக் கொண்டிருக்கிற சூறையாடும் விவசாய பெரு வணிகர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட ஒப்பந்தமாக அது உள்ளது.

கம்யூனிஸ்டுகள் தேர்தலில் பெற்ற முன்னேற்றங்கள்

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் சில முன்னேற்றங்களை அடைந்திருக்கிறார்கள். போர்ச்சுக்கலில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், போர்ச்சுக்கல் கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதனோடு அணியில் இருந்த சிடியு (Democratic Unitarian Coalition) கட்சிக்கும் பெற்ற வாக்கு எண்ணிக்கையில் உயர்வு கிடைத்திருக்கிறது. (நகராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் சிடியு 6,00,000 வாக்குகளை பெற்றது: பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 10.6 லிருந்து 12க்கு உயர்ந்துள்ளது: இதனால் வெற்றி பெற்ற நகராட்சிகளின் எண்ணிக்கை 28லிருந்து 34 க்கு உயர்ந்ததைக் காட்டியது. இன்றுள்ள வட்டாரங்களில் 23 இடங்கள் அதிகம் பெற்று 169 இல் அது வெற்றி பெற்றுள்ளது.

செக் நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொஹிமியா-மொராவியா கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது இடத்திற்கு வந்தது: 3.6 சதவிகிதம் வாக்குள் அதற்கு கூடுதலாக கிடைத்திருக்கின்றன. பொஹிமியா-மொராவியா கம்யூனிஸ்ட் கட்சி 15 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது: 33 நாடாளுமன்ற தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐரோப்பிய யூனியனில் அது வலுவான கம்யூனிஸ்ட் கட்சியாக உள்ளது.

ஜப்பானில் ஜூலை 2013 இல் நடந்து முடிந்த தேர்தலில் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் தன்னுடைய பலத்தை 6லிருந்து 11 ஆக உயர்த்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஜப்பானின் இரண்டு மிகப்பெரிய மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஆளுங்கட்சிக்கு அடுத்த இரண்டாவது இடத்தை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி பிடித்துள்ளது. ஜூன் மாதத்தில் நடந்த டோக்கியோ மாநகர சட்டமன்ற தேர்தலில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அதன் பலத்தை இருமடங்காக 8லிருந்து 17க்கு உயர்த்தி வெற்றியினை பதிவு செய்திருக்கிறது.

தெற்கு ஆசியா

வங்கதேசம்

ஆளும் அவாமி லீக் கட்சிக்கும் எதிர்க் கட்சியான வங்கதேச தேசிய கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களினால் வங்கதேச நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. வங்கதேச தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி, ஜனவரியில் நடைபெறும் தேர்தல் அரசியல் சார்பற்ற அமைப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. அவாமி லீக் கட்சி அனைத்து கட்சி அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. ஜதியா கட்சியின் தலைவர் எர்ஷாத்தும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். தொடர்ந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள், கடையடைப்பு போராட்டங்கள் யாவும் அன்றாட வாழ்க்கையினையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்திருக்கின்றன. காவல் துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் நடந்த மோதல்களில் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் மோதல் நிலையினை எடுக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு அவாமி லீக் தற்காப்பு நிலையில் தான் உள்ளது. இந்த அரசியல் ரீதியான தேக்கநிலை தீர்க்கப்படாமல் அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் வாய்ப்பு கடும் சிக்கலுக்கு உள்ளாகும்.

நேபாளம்

நவம்பரில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தது. நேபாள காங்கிரஸ் 196 இடங்களைப் பெற்று முதலிடத்திலும நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 175 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளன: ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)  80 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது. மாவோயிஸ்ட் கட்சியில் ஒரு குழு கட்சியினை உடைத்து வெளியே சென்று தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்தது. மாவோயிஸ்ட் கட்சியின் தலைமை முதலில் இது மோசடித் தேர்தல் என்றும் தேர்தல் முடிவினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அறிவித்தனர். பின்னர் அரசியல் நிர்ணய சபையில் பங்கேற்பது என முடிவு செய்திருக்கின்றனர். பிரதான கட்சிகள் அரசு அமைப்பதிலும் பொறுப்புகள் எடுத்துக் கொள்வதற்கும் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும். ஒரு அரசியல் சட்டம் வரைவதற்கான கடமையினை அரசியல் நிர்ணய சபை மேற்கொள்ள வேண்டும். இது அந்நாட்டில் எதிர்காலத்தில் ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குவதற்கான அடிப்படையினை கொடுக்கும்.

தேசிய நிலைமை

சென்ற மத்தியக்குழுக் கூட்டம் முடிந்த பிறகு கடந்த நான்கு மாதங்களில் தொடர்ந்து ஏறிக்கொண்டிருக்கும் உணவுப் பொருட்களின் விலை, தெலுங்கானா மாநிலம் உருவாவதில் எழுந்திருக்கும் கருத்து வேறுபாடு, முசாபர் நகரில் வெடித்த வகுப்புவாத கலவரங்கள், பிரதமர் வேட்பாளராக பாஜக-வால் நரேந்திர மோடி முன்நிறுத்தப்பட்டது மற்றும் நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக அடைந்த வெற்றி ஆகியவை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாக இருந்தன.

பொருளாதார சரிவும், விலைவாசி உயர்வும்

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து மந்த நிலையிலேயே உள்ளது; தொடர்ந்து ஐந்து காலாண்டு பிரிவுகளில் அதில் சரிவு காணப்பட்டாலும் 2013-14ம் ஆண்டின் முதல் காலாண்டு பிரிவில் அது 4.4 சதவிகிதம் என்பதிலிருந்து 4.8 சதவிகதமாக உயர்ந்தது. தொழில்துறை உற்பத்திக்கான வளர்ச்சி விகிதம் 0.4 சதவிகிதத்திலேயே தங்கிப்போனது, பொருள் உற்பத்தியின் வளர்ச்சியும் அதைப்போலவே இன்னும் குறைவாக 0.1 சதவிகதத்தில் தங்கிவிட்டது. கட்டமைப்புக்குத் துணையாக செயல்படும் தொழில்களின் மொத்த வளர்ச்சி விகிதம் 2012-13 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் காலப் பிரிவில் 6.6 சதவிகிதமாக இருந்தது, 2013-14ம் ஆண்டு அதே காலப்பிரிவில் மிகவும் மோசமாக 3.2 சதவிகிதமாக சரிந்தது.

இந்த காலகட்டத்தில், பணவீக்கம் குறையாமலேயே நீடிக்கிறது. மொத்த விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்க விகிதம் 2013 செப்டம்பரில் 6.46 சதவிகதமாக இருந்தது. அக்டோபரில் 7.0 சதவிகிதமாக உயர்ந்தது. முக்கிய உணவுப் பொருட்களின் பணவீக்கம் மிகவும் உயர்ந்து 18.19 சதவிகிதமாக இருந்தது; மொத்த உணவுத் தொகுப்பின் பண வீக்கம் 12.43 சதவிகிதமாக இருந்தது. உணவு தானியங்கள், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலைவாசி வேகமாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் வெங்காயத்தின் விலை 1 கிலோ ரூ.80-100 என்ற அளவிற்கு உயர்ந்தது.

உணவு தானியங்கள் உற்பத்தி உயர்ந்திருக்கிறது. 2013-14ம் ஆண்டுக்கான காரீப் (Khariff) பருவ உற்பத்தி 13.127 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது சென்ற ஆண்டின் உற்பத்தியைக் காட்டிலும் அதிகம். பருவ மழை பொய்க்காதிருக்கும் பட்சத்தில், மொத்த விவசாய உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டில், 2012-13 ஆம் ஆண்டைக் காட்டிலும் 4 சதவிகிதம் உயரலாம்; அது 26 கோடி டன் அளவை எட்டக்கூடும். ஆனால் இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் ஒன்றுண்டு. உணவு தானியம் மற்றும் விவசாய உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்த போதிலும் உணவுப் பொருட்களின் பணவீக்கம் இந்த காலகட்டம் முழுமையும் இரட்டை இலக்கத்திலேயே இருக்கிறது. இது இதுவரை நிகழாத ஒன்று; புதிய தாராளமயக் கொள்கைகளின் கடுமையான விளைவுகளை இது பிரதிபலிக்கிறது. குறிப்பாக கட்டுப்பாடு தளர்வு, ஊக வணிகம் மற்றும் பியூச்சர் டிரேடிங் (Future Trading) வணிகத்திற்கு ஆதரவு கொடுக்கப்பட்டதன் விளைவுகளாக அவை இருக்கின்றன.

பொருளாதாரத்தின் மந்தமான வளர்ச்சியும் தொழில்துறையின் மோசமான செயல்பாடும்  வணிக மற்றும் தொழில் அமைப்புகள் கூட அரசு செலவினங்கள் வெட்டப்படுவதைப் பற்றி தங்கள் கவலையினை தெரிவிக்க வேண்டிய அளவிற்கு தூண்டியிருக்கிறது. ASSOCHAM என்ற முதலாளிகளின் அமைப்பு அதன் அறிக்கையில், நிதி பற்றாக்குறையினை கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் அதன் செலவினங்களை வெட்டுவதற்கான அறிகுறிகள் தெரிவது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. நிதிப் பற்றாக்குறையினை கட்டுப்படுத்த வேண்டுமென்பது தேவையான செயல்தான்; அரசாங்க செலவினங்களை கடுமையாக வெட்டுவது வணிகம் செய்வதற்கான வாய்ப்புக்களை மிகவும் குறைத்துவிடும், ஏனெனில் அரசாங்கம் தான் மிகவும் அதிகமாக பொருட்களை வாங்கும் நிறுவனமாகவும் சேவைகளை பயன்படுத்தும் நிறுவனமாகவும் உள்ளது என்று கூறியுள்ளது.

ரூபாய் அதன் உண்மையான மதிப்பில் தற்போது நிலைத்திருக்கிறது என்று அரசாங்கத்தின் கருத்தை வெளியிடுவோர் கூறுகிறார்கள். அது நிதிச்சந்தைகளின் நிலையினைப் பற்றி சொல்லுகிற விஷயமே தவிர, பொருளாதாரத்தில் எழுந்து வரும் போக்குகளை பிரதிபலிப்பதாக இல்லை. பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை கூறும் கவுன்சில் ஏப்ரல் மாதத்தில் வளர்ச்சி விகிதம் 6.4 சதவிகிதம் இருக்குமென மதிப்பிட்டிருந்தது; தற்போது அதை குறைத்து 5.3 சதவிகிதமாக இருக்குமென அறிவித்திருக்கிறது. இந்த அளவை கூட அடைவதற்கான வாய்ப்பு இல்லை.

நிதிப் பற்றாக்குறையினை கட்டுப்படுத்தவதற்காக நிதி அமைச்சகம் பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கான ஒதுக்கீடுகளை கடுமையாக வெட்டுவதற்கான ஸ்தாபன ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. இது பல்வேறு சமூக நலத்திட்டங்களை பாதிக்கும்.

ஆகஸ்ட் மாதம் நடந்த கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்திற்குப் பிந்தைய கால கட்டத்தில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நவீன தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தும் வேகத்தை அதிகரித்திருக்கிறது. அனைத்து வகையான அன்னிய மூலதனத்தையும் கொண்டு வருவதற்கு மூர்க்கத்தனமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அன்னிய மூலதனத்திற்கும் உள்நாட்டு பெரிய முதலாளிகளுக்கும் அனைத்து விதமான ஊக்க அறிவிப்புகளும் சலுகைகளும் கொடுப்பதாக அறிவிக்கப்படுகின்றன.

வகுப்புவாத வன்முறை

கடந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் மதவெறிச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதைக் குறிப்பிட்டிருந்தோம். ஜம்முவில் கிஷ்த்வார், பீகாரில் நவாடா ஆகியன அவற்றில் சில. உத்திரபிரதேசம் முசாபர் நகரில் செப். 7-8 ஆகிய தேதிகளில் மிகப்பெரிய மத வன்முறை வெடித்தது. அந்த கலவரங்களின்போது முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான கிராமங்களிலும், சாம்லி மாவட்டத்தின் ஒரு பகுதிலும் ஜாட் இனத்தவர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தினார்கள். அவற்றில் 60 பேருக்கு மேல் உயிரிழந்தார்கள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட 12 நிகழ்வுகள் நடைபெற்றன. சுமார் 40000 முஸ்லிம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓடி அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார்கள். இந்த வன்முறை நிகழ்வுகளுக்கு ஆரம்ப காரணம், ஒரு பெண் கிண்டல் செய்யப்பட்டதும், அதனைத் தொடர்ந்து ஒரு முஸ்லிம் வாலிபனும், இரண்டு ஜாட் வாலிபர்களும் ஆகஸ்ட் 27 அன்று கொல்லபட்டதும் ஆகும். உ.பியில் கடந்த ஓராண்டு காலமாக மதவெறி சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளன. அத்தகைய சம்பவங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டு, கிராமப்புறங்களுக்குப் பரவச் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. ஆர்.எஸ்.எஸ் சும் அதன் பரிவாரங்களும், பி.ஜே..பி கட்சியும் பசுவதை போன்ற காரணங்களை முன் நிறுத்தி மேற்கு உ.பியில் மதவெறி பதட்டங்கள் ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தன.

சமாஜ்வாதிக்கட்சி அரசும் அதன் கீழ்மட்ட நிர்வாகங்களும், நிலைமைகளின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளவோ, தடுத்திட தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முற்றிலும் தவறிவிட்டன. வன்முறையைத் தூண்டிவிடக் காரணமாக இருந்த செப்டம்பர் 7 மகா பஞ்சாயத்து நடந்திட அனுமதிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஒரு முஸ்லிம் கூட்டத்திற்கும் அனுமதிக்கப்பட்டது. 2014 இல் நடைபெற இருக்கும் தேர்தல்களுக்கு தயாரிப்பு ஒத்திகையாக, ஆர்.எஸ்.எஸ்-சும், பா,ஜ.க-வும், ஆண்டாண்டு காலமாக பரிசோதித்த வழிமுறையான, மதவாத பதட்டத்தையும் கலவரங்களையும் உபயோகித்து வருகின்றன. மிகப்பெரிய மாநிலங்களான, உ.பியிலும், பீகாரிலும் திட்டமிட்டு இந்த முறைகளைக் கையாண்டு, அந்த இரண்டு மாநிலங்களிலும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள சங்க பரிவாரங்களும், பாஜக-வும் விரும்புகின்றன. மதவாத சக்திகளின் வேறுசில நடவடிக்கைகளையும் நாம் கவனிக்க வேண்டும். விஷ்வ ஹிந்து பரிசத், ஐந்து மாவட்டங்களில் இருந்து அயோத்திக்கு  யாத்திரையை நடத்தப் போவதாக அறிவித்தது, மாநில அரசு அதனைத் தடை செய்தது. கலந்து கொள்ள முயன்றவர்கள் 600 பேரைக் கைது செய்தது. சமாஜவாதிக் கட்சி அரசின் இந்த உறுதியான நடவடிக்கை வி.எச்.பி யின் திட்டத்தை முறியடித்தது. ஆகஸ்ட் மாத இறுதியில்  மூடநம்பிக்கைகளுக்கும், கண்மூடித்தனமான செயல்களுக்கும் எதிராக செயல்பட்டுவந்த  முன்னணிப் பகுத்தறிவுவாதியான நரேந்திர தபோல்கர் என்பவரை புனே நகரில் சுட்டுக் கொன்றார்கள். இந்துத் தீவிரவாதிகளுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் மதவாத-அடிப்படைவாதத் தாக்குதல்களின் ஒரு பகுதியே இந்தக் கொலை ஆகும்.

தெலுங்கானா

தெலுங்கானா பிரச்சனையின் மீது தங்கள் பரிந்துரைகளை அமைச்சர்கள் குழு அளித்த பின்பு மந்திரி சபை, தெலுங்கானா மசோதாவுக்கு அனுமதி அளித்தது. இதற்கு முன்பு ராயல சீமா பகுதியைச் சார்ந்த இரண்டு மாவட்டங்களையும் புதிய மாநிலத்துடன் இணைத்து ராயலத் தெலுங்கானா அமைத்திடும் முயற்சியும் செய்யப்பட்டது. இந்த ஒருதலைப்பட்சமான முயற்சிக்கு பெருந்திரளான எதிர்ப்பு தோன்றியதால் கைவிடப்பட்டது.

சீமாந்திரா பகுதியில் ஒன்றுபட்ட ஆந்திரத்திற்கான போராட்டங்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் இந்தக் காலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போராட்டத்தில் முன்னணியாக இருந்தது. ஜாமீனில் விடுவிக்கப்பட்டதில் இருந்து ஜகன் மோகன் ரெட்டி, ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்பதற்கு ஆதரவு திரட்டி வருகிறார். முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி ஆந்திரா மாநிலத்தை பிரிப்பதற்கு எதிராக வெளிப்படையாக இருப்பதால் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்படி பிளவு ஏற்பட்டால் சீமாந்திரா பகுதியில் காங்கிரஸ் கட்சி அழிவை எதிர்நோக்க வேண்டிவரும். தெலுங்கானா அமைவதை ஆதரித்த தெலுங்குதேசக் கட்சி மாநிலத்தைப் பிரிப்பதையும் எதிர்த்து வருகிறது. இரண்டு பகுதிகளிலும் அக்கட்சியின் ஆதரவிற்கு இழப்பு ஏற்படும் என்பதால் பாஜக-வுடன் ஒத்துழைக்க சந்திரபாபு நாயுடு முயன்று வருகிறார். இந்த மசோதா, இந்தக் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் வரும் போது, ஒன்றுபட்ட ஆந்திராவுக்குத்தான் நமது ஆதரவு என்பதை உறுதியாகத் தெரிவிப்போம்.

சட்டங்கள்

இந்த மழைக் காலக் கூட்டத்தொடரில் உணவுப் பாதுகாப்பு மசோதாவையும், நிலம் கையகப்படுத்தல் மற்றும் மறு குடியமர்த்தல் மசோதாவையும் நிறைவேற்றுவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெற்றுள்ளது. சிறையிலோ, போலீஸ் காவலிலோ இருக்கும் நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செல்லத்தக்கது அல்ல என ஆக்கிடும் மசோதாவை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும் அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச்சட்ட வரையறைகளுக்கு வெளியே வைத்திட வைக்கும் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியவில்லை. ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று சில கட்சிகளும் அரசு சாரா அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ பதவியை இழக்கும்படியான ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்றால் அவர் பதவியை இழக்க வேண்டும் என்ற இந்தத் தீர்ப்புக்கு முன்னதாக வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்படும் வரை இப்பொழுது வகிக்கும் பதவியில் தொடரலாம். குற்றமிழைத்த சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியானது, என்பது கட்சியின் நிலைபாடு ஆகும். இருப்பினும் பதவியில் உள்ள உறுப்பினர் மேல் நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டின் மீது இறுதி தீர்ப்பு வரும் வரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பை இதில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தண்டனை பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மேல்முறையீடு செய்து தண்டனை ஒத்தி வைக்கப்பட்டால், அவர்கள உறுப்பினர்க்களாக தொடரலாம். ஆனால் அவர்களுக்கு ஊதியமோ, வாக்களிக்கும் உரிமையோ கிடையாது என்ற திருத்தத்தை மசோதாவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கொண்டு வர அரசு முடிவு செய்தது. இது நிலைக் குழ்வுக்கு அனுப்பட்டுள்ளது.

திரும்பப் பெறப்பட்ட அவசரச்சட்டம்

இருப்பினும் இந்த மசோதாவை நடைமுறைக்குக் கொண்டுவர ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க அரசு முடிவு செய்தது. தண்டனையை எதிர் நோக்கியுள்ள சில உறுப்பினர்களைப் பாதுக்காக்க இவ்வாறு செய்யபடுகிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்கும் விதமாக இது அமைந்திருந்தது. அத்தகைய அவசரச் சட்டதைப் பிறப்பிப்பதற்கு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த அவசரச் சட்டத்திற்கு மிகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்த பின்னர் பிரதமர் வாஷிங்டனில் இருந்தபோது ராகுல் காந்தி மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து கண்டித்தார். இதன் விளைவாக, பிரதமர் நாடு திரும்பிய பின் மந்திரிசபை கூடி அவசரச் சட்டத்தை திரும்ப பெற்றது. இது, ராகுல் காந்தியின் அரசியல் மரியாதையை அதிகப்படுத்துவதற்கு பதிலாக, அரசியல் முதிர்ச்சியின்மையை எடுத்துக் காட்டியது.

மாநிலங்களின் பின்தங்கிய நிலைமை குறித்த அறிக்கை

மாநில அரசுகளின் பின்தங்கிய நிலைமை குறியீடு குறித்த ரகுராம் ராஜன் கமிட்டியின் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தங்கள் மாநிலத்தை தனியாக வகைப்படுத்தி வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற பீகார் அரசின் கோரிக்கையின் பேரில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. ஒடிசா மாநிலமும் இதே கோரிக்கையை முன்வைத்தது. இந்த கமிட்டி பின்தங்கிய நிலைமை குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு, பத்து மாநிலங்கள் மிகவும் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் எனவும், பதினோரு மாநிலங்கள் குறைந்த வளர்ச்சி பெற்றவை எனவும், ஏழு மாநிலங்களை ஒப்பீட்டு அளவில் வளர்ந்தவை எனவும் வகைப்படுத்தியது. மிகவும் குறைந்த வளர்ச்சிப் பெற்ற மாநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டவை, ஒடிசா, பீகார், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, உ.பி, ராஜஸ்தான் ஆகியவை. இந்த அறிக்கையில், வகைப்படுத்த எடுத்துக் கொண்ட அளவீடுகளின் படியும், வகைப்படுத்தப்பட்டபடியும், மிகவும் வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கு அதிக நிதியும், குறைந்த வளர்ச்சியுற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதிக்கீடு, முன்னதைவிட குறைவாகவும், ஓரளவு வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் பெறும் நிதி இதனைக் காட்டிலும் குறைவாகவும் இருக்கும். இந்த அறிக்கைக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரித்துள்ளன. செல்வாதாரங்களை பங்கிட்டுத் தரும் பணிகளுக்காக அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள நிதி கமிஷனின் செயல்பாடுகளில் குறிக்கீடு செய்வதாக இந்த கமிட்டியின் பரிந்துரைகள் அமைந்துள்ளன என்பது மாநில அரசுகள் இதனை எதிர்க்கும் காரணங்களில் ஒன்று. செல்வாதாரங்களை பகிர்ந்தளிப்பதில், மாநிலங்களுக்கு இடையே பாகுபாடுகள் கூடாது என்பதுதான் நமது நிலைபாடு. செல்வாதரங்களை பகிர்த்து அளிப்பதற்கு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அளவீடுகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். பின்தங்கிய மாநிலங்கள் என்று கருதப்படும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதிக்கீடு செய்ய வேண்டும்.

ஒபாமா-மன்மோகன் பேச்சுவார்த்தை

வாஷிங்டனில் செப்டம்பர் 27 அன்று, பிரதமர் மன்மோகன் சிங் அதிபர் ஒபாமாவுடன் உயர்மட்ட சந்திப்பை மேற்கொண்டார். அமெரிக்க ஜனாதிபதியுடன் பிரதமரின் கடைசி சந்திப்பு இதுதான். பேச்சுவார்த்தையின் முடிவுகள் ஓர் கூட்டறிக்கையில் வெளியாகியுள்ளன. அந்த கூட்டறிக்கை நீங்கலாக இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் ஓர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சந்திப்பின் முக்கிய விளைவு என்பதே, இராணுவ ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதற்கான முடிவே ஆகும். அதிகமான ஆயுதங்களையும், இராணுவத் தளவாடங்களையும்  அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கிக் கொள்ளும். மேலும், இராணுவ தளவாடங்களைக் கூட்டாக உற்பத்தி செய்யும், தொழில் நுட்பங்களை இந்தியாவிற்கு அமெரிக்கா அளிக்கும். இராணுவ உற்பத்தியில்  அமெரிக்க கம்பெனிகள் முதலீடு செய்யவும் கூட்டு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்கவும் இந்தியா முயன்று வருகிறது. ஜூன் 2005 இல் செய்து கொண்ட இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் சாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவை தனது நேச நாடாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில்  அமெரிக்கா தீவிரமாக உள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா அறிவித்துள்ள ஆசியா-பசிபிக் ஒன்றிணைந்த செயல்பாட்டுத் திட்டத்தில் இதனைக் காணலாம். இந்தியப் பொருளாதாரத்தில் அமெரிக்க மூலதனத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளுமே, இந்த சந்திப்பின் போது நிகழ்ந்த பிற அம்சங்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான வரையறைகளை இந்தியா நீர்த்துப்போகச் செய்துள்ளது. மேலும்  அணு உலைகளை வாங்கும் வகையில் அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சியில் ஏற்கனவே இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்திய  அமெரிக்க இராணுவக் கூட்டை பலப்படுத்துவதற்கு மன்மோகன் சிங் அவரது பதவிக்காலம் முடிவதற்குள் எடுத்துள்ள இறுதி முயற்சி இது ஆகும்.

அரசியல் சூழ்நிலை இறுதியாக, செப்டம்பர் மாதத்தில் நரேந்திர மோடி பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வந்துவிட்டது. அத்வானியின் கருத்தைப் புறக்கணித்துவிட்டு முடிவு எடுக்கபாஜக-வு க்கு ஆர்.எஸ்.எஸ் இட்ட கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, கார்ப்பரேட்டுகள், நரேந்திர மோடிக்கு அளித்துவரும் ஆதரவு, பெரு முதலாளிகளின் கணிசமான பகுதியினர், தங்கள் ஆதரவை பாஜக-வின் பால் திருப்பியிருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இது 1991 ஆம் ஆண்டில் பாஜக-வுக்கு பெரு முதலாளிகளின் ஒரு பகுதியினர் ஆதரவு நிலைபாடு எடுத்ததை நினைவூட்டுகிறது. ஆனால் இப்போது கிடைத்துள்ள ஆதரவு அதனைக் காட்டிலும் மிக அதிகம். ஊடகங்களின் தலைமையிலான ஆதரவுப் பிரசாரத்திற்கு பின்னால் ஆர். எஸ். எஸ் பரிவாரங்கள் முழுமையாக உதவி செய்துவருகின்றன. செப்டம்பர் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் முன்னணி அமைப்புகளின் கூட்டத்தை இரண்டு நாட்கள் நடத்தி பாஜக-வின் பிரச்சார வியூகத்தை விவாதித்தது. இதற்குப் பிறகுதான் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தது. நரேந்திர மோடி நாடெங்கிலும் பொதுக் கூட்டங்களில் உரை நிகழ்த்தி வருகிறார். நரேந்திர மோடியின் மீதான பிடிப்பு மத்தியதர மக்களிடையேயும், வாலிபர்கள் மத்தியிலும் குறிப்பாக நாட்டின் வடக்கிலும், மேற்கிலும் வளர்ந்து வருகிறது. ஊடகங்களின் உதவியுடன் மோடியை முன்னிலைப்படுத்த பெரும்முயற்சிகள் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்வணிக நிறுவனங்களின் ஆதரவு பாஜக-வுக்கு இருப்பதை மாநில தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெற்றதன் பின்னணியில் பங்குச் சந்தையில் நிகழ்ந்த அதிகபட்ச உயர்வு சுட்டிக் காட்டுகிறது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜஸ்தானில் அது காங்கிரசை முறியடித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் நான்கில் மூன்று பங்கு பெருபான்மை பெற்றுள்ளது. சற்று அதிகரித்த பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியப்பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சத்திஸ்கரில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் மட்டும் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. தேசிய அளவில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத தேர்தல் முடிவான வடகிழக்கு மாநிலமான மிசோரமை மட்டும் காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது. எப்போதும் கண்டிராத மிக மோசமான தோல்வியை காங்கிரஸ் தழுவியுள்ளது. ராஜஸ்தான், மாநிலத்தில் 200 இடங்களில் 21 இடங்கள் மட்டுமே அது பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் இதுதான் இதுவரை பெற்ற மிகக்குறைந்த இடங்களாகும். டெல்லியில் அது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 70 இடங்களில் 8 இடங்கள் மட்டுமே அதற்குக் கிடைத்துள்ளன. மத்தியப்பிரதேசத்திலும், சட்டிஸ்கரிலும் 10 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த திறமையற்ற, ஊழல் மிகுந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசுகளை காங்கிரசால் அகற்ற முடியவில்லை. மத்தியில் ஆளும் காங்கிரசின் ஊழல்களும், விலைவாசி உயர்வுகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்று காங்கிரஸ் என்பதை மக்கள் நிராகரித்ததற்கான காரணங்களாகும். டில்லியில் நம்பகமான மாற்றாக ஆம் ஆத்மி கட்சி உருவாகியுள்ளது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

ஆரம்பித்த ஓர் ஆண்டுக்குள் 30 சதவிகித வாக்குகளையும் 28 இடங்களையும் அக்கட்சியால் பெற முடிந்துள்ளது. அது மத்தியதர மக்கள் மட்டுமல்லாமல் நகர்ப்புற ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியோரின் ஆதரவையும் பெற முடிந்துள்ளது. ஊழல் எதிர்ப்பு இயக்கம், மின் கட்டண உயர்வு, மக்களின் பிற பிரச்சனைகளில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய போராட்டங்கள் ஆகிவற்றின் மூலம் மக்களிடம் ஆதரவை பெற முடிந்துள்ளது. டெல்லியில் அந்தக் கட்சி, பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் மாற்றாக வெற்றிகரமாக முன்னிறுத்திக் கொண்டுள்ளது. தனது அரசியல் தளத்தை தக்கவைப்பதிலும் தனது அரசியல் செயல்திட்டத்தை வகுத்துக் கொள்வதிலும் அந்தக் கட்சி எவ்வாறு செயலபடப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நமது கட்சி, ராஜஸ்தான் தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த மூன்று இடங்கள் உட்பட 37 இடங்களில் கட்சி போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளன. ஏற்கனவே வென்ற இடங்களில் தோற்றுபோய் ஒரு இடத்தில கூட வெற்றிபெற முடியவில்லை. முடிவுகள் குறித்து முறையான பரிசீலனை தேவை. இப்போது ஒரு அரசியல் காரணம் மட்டுமே கூற முடியும். 81 சதவிகித இடங்களில் பா,ஜ.க. பலத்த வெற்றியை அடைந்துள்ளது. காங்கிரஸ் அரசை தோற்கடிக்க அக்கட்சிக்கு மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளர்கள். நாம் பெற்றுவந்த காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் பா,ஜ.க.-வுக்கு சென்றதால் நாம் வெற்றி வாய்ப்பினை இழந்தோம். இந்த தேர்தலில் பா,ஜ.க. பெற்றுள்ள வெற்றி, பாராளுமன்ற தேர்தலுக்கு நரேந்திர மோடியின் தலைமையிலான பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கமளிப்பதாக இருக்கும். மறுபுறம் மக்கள் மத்தியில் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவும் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. அதேநேரத்தில் இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா,ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகள் தான் மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக எண்ணிக்கையிலான இதர மாநிலங்களில் நிலைமை இவ்வாறு இல்லை.                  

மாநில நிலைமைகள்

உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகர் கலரவரத்தை சரியாக அடக்கத் தவறியதன் காரணமாக சமாஜ்வாதி கட்சி அரசின் மதிப்பு மிகவும் அடிவாங்கியுள்ளது. அரசு சூழ்நிலையை எப்படி கையாண்டது என்பது குறித்து முஸ்லிம் சிறுபான்மையினர் மத்தியில், குறிப்பாக மேற்கு உ.பி. பகுதியில் உள்ளவர்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது. முஸாபர்நகர் கலவரத்திற்கு முன்பாகவே உ.பியில் பா.ஜ.க.வின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. இந்த கலவரத்திற்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தியதன் விளைவாக பா.ஜ.க.வின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்தோடு கூட்டணியை முறித்துக் கொண்ட பின்பு, பா.ஜ.க மிகவும் கடுமையான நிலையை எடுத்து வருகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, கூட்டணி இருந்த போது நிதிஷ்குமார் அரசுக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவு தளமாக விளங்கிய உயர்சாதி மக்களின் ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் இழந்துவிட்டது. கூட்டணி அரசு ஆட்சியிலிருந்ததை பயன்படுத்தி பா.ஜ.கவும் ஆர்எஸ்எஸ்-சும் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளன. இந்த கூட்டணி உடைந்ததைப் பயன்படுத்தி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்த நினைத்திருந்த நேரத்தில் லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், அந்த விருப்பம் முடங்கியுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் காங்கிரசுடன் கூட்டணிக்கு விருப்பம் கொண்டுள்ளன. ஆனால், காங்கிரஸ் இது வரை அதற்கு எந்த ஒரு சமிக்ஞையையும் காட்டவில்லை. காங்கிரஸ் ஐக்கிய ஜனதா தளத்துடன் தேர்தல் உடன்பாடு கொள்வதற்கான வாய்ப்பை பயன்படுத்த நினைக்கிறது. ஒடிசாவில், பிஜூ ஜனதா தளம் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இரண்டு சுற்றாக நடத்தப்பட்ட நகரசபை தேர்தல்களில் அது வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் தோல்வியில் அது பலனடைந்துள்ளது. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க தனது நிலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 2011 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெற்ற அனைத்து இடைத் தேர்தல்களிலும் அது வெற்றி பெற்று வந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மிகப்பெரிய வித்தியாசத்துடன் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. வைகோவின் மதிமுகவையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் கூட்டணிக்காக அணுகியுள்ளது.

ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னை குறித்தும் மாநிலத்தை பிரிப்பது குறித்தும் குழப்பமான நிலை எடுத்ததால் தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியின் ஆதரவு தளம் தெலுங்கானா பகுதியிலும், சீமாந்திரா பகுதியிலும் அரிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணியுடன் கைகோர்க்க விரும்புகிறார். இதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற மதவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

கர்நாடகாவில், 2012 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தொடர்ந்து தனது மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வசம் இருந்த இரண்டு பாராளுமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தலில், இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் மிகப்பெரிய வித்தியாசத்துடன் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி, பா.ஜ.க.வுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதன் விளைவாக, பா.ஜ..க தனது வேட்பாளர்களை திரும்பப் பெற்றது. இதற்கு கைமாறாக சட்ட மேல்சபைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க.வினருக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளித்தது. கட்சியின் வசம் இருந்த இரண்டு இடங்களில் படுதோல்வி அடைந்ததன் விளைவாக மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து குமாரசாமி ராஜினாமா செய்தார். ஒரு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். தேவ கவுடா அக்கட்சியின் அகில இந்திய தலைவர், தனது மகன் பா.ஜ.க.வுடன் உடன்படிக்கை செய்து கொண்டது தவறு என்று விமர்சித்தார். அகில இந்திய அளவில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு பா.ஜ.வுடன் எந்த ஒட்டும் உறவும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. பா.ஜ.க. எடியூரப்பாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர நினைக்கிறது. எடியூரப்பா கே.ஜே.பி என்ற கட்சியை கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆரம்பித்தார். எடியூரப்பா நரேந்திர மோடிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 10 பிரதேச கட்சிகள் இணைந்து, வடகிழக்கு பிரதேச அரசியல் முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் நாகாலாந்து மக்கள் முன்னணி, அசாம் கண பரிஷத் மற்றும் மேகாலாயாவின் ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடக்கம். இதற்கான முன்முயற்சியை அசாம் கண பரிஷத் எடுத்துள்ளது. நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ இந்த அமைப்பின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபுல்ல குமார் மகந்தா இதன் கன்வீனர். இதற்கு முன்பு அசாம் கண பரிஷத் கட்சி பா.ஜ.கவுடனான உறவு குறித்த பிரச்சனையில் பிளவுபட்டு நின்றது. இருப்பினும், மதவாத எதிர்ப்பு மாநாட்டில் இணைத்துக் கொள்வது குறித்த கேள்வி எழுந்தபோது, அசாம் கண பரிஷத் கட்சி தாங்கள் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அணியில் இருக்க விரும்புவதாக தெரிவித்தது. இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் கட்சிகளின் வரலாற்றை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது, மத்தியில் ஆளும் கட்சி மாறும் போது, இதில் உள்ள பல கட்சிகள் மத்தியில் உள்ள ஆளும் கூட்டணியில் இணைவது என்பது நன்கு தெரிந்த விஷயம்.

கேரளாவில், முதல் மந்திரி பதவி விலகல் கோரியும், சூரிய சக்தி தகடுகள் ஊழல் குறித்து நீதி விசாரணக்கு உத்திரவிடக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த போராட்டம் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்குள்ளேயும் கருத்து வேறுபாடுகளும், பிரச்சனைகளும் தொடர்ந்து எழுகின்றன. கேரளா காங்கிரஸ் (மா) மற்றும இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றன. இடது ஜனநாயக முன்னணி மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளை எடுத்து வருகிறது. அதன் அழைப்பின்  பேரில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மக்களை கலந்தாலோசிக்காமல் கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவதை எதிர்த்து மாநில அளவிலான பந்த் நடைபெற்றது. சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் பினரயி விஜயனை எஸ்.என்.சி. லாவலின் வழக்கில் குற்றம் செய்யவில்லை என்று அறிவித்து வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. இது கட்சியின் நிலைபாடான, இந்த வழக்கு ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனைந்த வழக்கு என்பதை உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனி1ட் கட்சி தலைவரின் செல்வாக்கை சீரழிக்க நடந்த முயற்சியை முறியடித்துள்ளது. கேரள மக்களால் பரவலாக வரவேற்கப்பட்டிருக்கிறது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சியின் ஆட்சி பலதரப்பட்ட மக்களின் மீது பல சுமைகளை ஏற்றியுள்ளது. திரிணாமுல் ஆட்சிக் காலத்தில் 89 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விலைவாசி உயர்வு பிரச்னை மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. அரசின் தோல்வியால் உருளைக்கிழங்கு மற்றும் உப்பின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதை மாநிலம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாலியல் பலாத்காரம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. சாரதா சிட் பண்ட் ஊழலுடன் திரிணாமுல் காங்கிரசுக்கு உள்ள தொடர்பை மூடி மறைக்க முயற்சிக்கிறது. இந்த ஊழலால் 17 லட்சம் பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊழலை முழுமையாக வெளிக் கொண்டுவர உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை தேவை.

இந்த எல்லாப் பிரச்னைகள் மீதும் இடதுசாரிகள் பிரச்சாரங்களும் இயக்கங்களும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், கட்சியின் மீதும், இடது முன்னணி மீதும் தாக்குதல்கள் கொஞ்சமும் இடைவெளியின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பஞ்சாயத்துத் தேர்தல்களில் வன்முறை மற்றும் வாக்கு சாவடியைக் கைப்பற்றியவர்கள், அதே பாணியை ஹௌரா மற்றும் இதர நகரசபை தேர்தல்களில் பயன்படுத்தினர். கட்சி ஸ்தலப் பிரச்னைகள் மீதும் இயக்கங்கள் நடத்த மக்களை திரட்ட கவனம் செலுத்த வேண்டும். கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளை கண்டு அஞ்சாமல் கட்சியின் ஸ்தாபனத்தை புனரமைக்க வேண்டும்.

மதவாத எதிர்ப்பு சிறப்பு மாநாடு கடந்த மத்தியக் குழு கூட்டத்தில் நாம் மதவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் ஆர்.எஸ.எஸ், பாஜகவின் சதிகளை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்தோம். இது தொடர்பாக நாம் மதவாத சக்திகளை எதிர்த்து போராடவும் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் பரந்த மேடை அமைப்பது என்று முடிவு செய்தோம். இதற்காக நாம் முதலில் அனைத்து இடதுசாரி கட்சிகள் மற்றும் மதச்சார்ப்பற்ற எதிர்கட்சிகளுடன் கலந்து பேசி ஒரு தேசிய சிறப்பு மாநாடு நடத்த முன் முயற்சி எடுத்தோம். மதவாதத்திற்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்கவும ஒரு தேசிய சிறப்பு மாநாடு அக்டோபர் 30-ம் தேதி, டெல்லியில் உள்ள தல்கதோரா உள்ளரங்க ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டது. பதினான்கு கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த சிறப்பு மாநாடு,  காங்கிரஸ் அல்லாத மதசார்பற்ற கட்சிகள் மதவாதத்தையும் பா.ஜ.க,  ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தையும் எதிர்த்து போராடுவது என்ற உறுதியான செய்தியை வெளியிட்டது. இந்த மதவாத எதிர்ப்பு சிறப்பு மாநாட்டிற்கு முன்பும் பின்பும், பல சிறப்பு மாநாடுகள் மற்றும் பேரணிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தலில் தலைமைக்கு முன்னிருத்தப்பட்ட பின்னணியில் இந்தப் பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. நிறைவாக பாஜக-வின் பிரச்சாரம், மோடியை பிரதம வேட்பாளராக அறிவித்தவுடன் சூடு பிடித்துள்ளது. நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஆனால், இதிலிருந்து தேசிய அளவிற்கான முன்மாதிரியை கண்டுணர முடியாது. இந்த மாநிலங்களிலெல்லாம், காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கிடையே மட்டுமே போட்டி உள்ளது. ஆனால், பெரும்பான்மையான இதர மாநிலங்களில் அரசியல் சூழல் வித்தியாசமானதாகும். பலமான மாநில கட்சிகள் உள்ளன. மூன்று மாநிலங்களில் இடதுசாரிகள் பலமாக உள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக மத்தியக் குழு வெளியிட்ட அறிக்கைகள் எல்லாவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது போல், காங்கிரஸ் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்களிடையே உள்ள உச்சபட்ச அதிருப்திக்கு முக்கியமான காரணங்களாக இருப்பது ஐக்கிய முன்னணி கூட்டணி அரசின் சாதனைகளான விலை உயர்வு, ஊழல் மற்றும் வேலையின்மை ஆகியவை மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

இந்தச் சூழலில் நமது அரசியல் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை, காங்கிரஸ் தலைமையில் உள்ள அரசின், மக்கள் விரோத, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், மதவாத, சீர்குலைவு அரசியல் நடத்தும் பாஜக-விற்கு எதிராகவும் நாம் அதிகரிக்க வேண்டும். நமது மாற்றுக் கொள்கைகளுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் இவையே மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளமாக இருப்பதால், காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு மாற்றாக அமையும். நாம் நமது அரசியல் வேலையை தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தியில் அதிகரிக்க வேண்டும். தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை மத்திய தொழிற்சங்கங்கள் உருவாக்கியுள்ள பின்னணியில் இது முக்கியத்துவம் வாய்ந்தது.

அனைத்து மாநிலக்குழுக்களும் கீழ்க்கண்ட பிரச்சனைகள் மீது பிரச்சாரத்தை நடத்த வேண்டும்; விலைவாசி உயர்வுக்கு எதிராக, ஊழல் மற்றும் வேலையின்மை;  விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழைகள் பிரச்சனை, உணவுப் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வன்முறை. மாநிலக்குழுக்கள் அந்தந்த மாநிலத்திற்கு பொருத்தமான பிரச்சனையின் மீது பிரச்சாரங்களை நடத்த வேண்டும். இந்த பிரச்சாரங்கள் 2014 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு பொருத்தமான காலத்தில் நடத்தப்பட வேண்டும்.

அதேசமயம் கட்சி மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளை கையில் எடுத்தும், ஸ்தல பிரச்சனைகள் மீதும் போராட்டங்கள் நடத்த வேண்டும். அக்டோபர் 30-ல் நடைபெற்ற மதவாத எதிர்ப்பு சிறப்பு மாநாட்டின் தொடர்ச்சியாக, கட்சி பரந்துபட்ட மதவாத எதிர்ப்பு மாநாடுகளையும், பேரணிகளையும்,  பரந்துபட்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு நடத்திட வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தலைச் சந்திக்க தேவையான அமைப்பு ரீதியான தயாரிப்புகளை செய்திட வேண்டும். அத்துடன் எங்கெல்லாம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறதோ; அங்கெல்லாம் அதற்கான அமைப்பு ரீதியான தயாரிப்புகளையும் இணைத்து செய்திட வேண்டும்.

————————-

  English Version (Report on Political Developments 2013)

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply