அரசியல் மாற்றும் ஆர்.கே.நகர் தேர்தலும்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தனது சொந்த மேடையிலிருந்து ஆதரிப்பது என்றும், இதன் முக்கியமான நோக்கம் அதிமுகவையும், பாஜகவையும் தோற்கடிப்பதுதான் என்றும், நவம்பர் 30 அன்று கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்தது. இந்த தீர்மானம் கட்சியின் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் சிலரிடம் கவலையையும், சில கூர்மையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்வாங்கிக் கொள்கிறது, மதிக்கிறது.

கைப்பாவை அதிமுக – களவெடுக்கும் பாஜக

மாநில அதிமுக அரசை பாஜகவின் ஏவல் ஆளாக மாற்றி, ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசத்தோடு செயல்படுகிறது. இது தமிழக மக்களின் நலன்களுக்கும், தமிழகத்தின் சமூக அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. தாங்கள் என்ன ஊழல் செய்தாலும் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லையென்றாலும் பாஜக விரும்பும்படி நடந்து கொண்டால் மீதமுள்ள ஆட்சிக் காலத்தையும் மத்திய அரசின் தயவில் பூர்த்தி செய்துவிடலாம் என அதிமுக நினைக்கிறது. கோயில் மாடு விளைநிலத்தில் புகுந்தது போல தமிழகத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கும் அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்.

இரண்டாவதாக, ஊழல் மலிந்த ஒரு அரசை அந்த கட்சியின் நிர்வாகிகளின் ஊழலை முன்னிறுத்தி, பயமுறுத்தி தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்ளலாம்; தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனைகள் பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை; நிறைவேற்ற வேண்டியதில்லை; தமிழகத்தின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்க வேண்டியதில்லை; ஒரு பலவீனமான அரசை பயன்படுத்திக் கொண்டு, தங்களின் நாசகர அரசியல் கோட்பாடுகளையும், மக்களை பிளவுபடுத்துகிற வகுப்புவாத கொள்கைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றலாம்; இதை பயன்படுத்தி தமிழக நிர்வாகத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் தனது கையாட்களை அமர்த்திக் கொள்ள முடியும். அதன் மூலம் விசிக இயக்கம் நடத்தினாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து சொன்னாலும் ஆட்களை தாக்கலாம், அலுவலகத்தை தாக்கலாம், கொடியை எரிக்கலாம் தங்களை அதிமுக அரசு தட்டிக் கேட்காது. சங்பரிவார் அமைப்புக்கள் மக்களை பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை நடத்தினாலும் கைப்பாவை அரசு கண்டு கொள்ளாது என்கிற ஆணவத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிற மத்திய அரசுக்கும், பாஜகவிற்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

ஒரு இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் ஆளும் கட்சிக்கு தோல்வியை கொடுப்பதன் மூலம் ஆட்சி மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது என்பது உண்மையே. பாஜகவின் கைப்பாவையான அதிமுக, அரசியல் சட்டம் – தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், உரிமைகள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று செயல்பட்டு கொண்டிருக்கும் பாஜக – அதிமுக முறைகேடான கூட்டணிக்கு இந்த தோல்வி நிதானத்தை கொண்டு வரும்.

எனவே, கைப்பாவை அதிமுகவிற்கும், ஆட்டுவிக்கும் பாஜகவிற்கும் ஒரு கடுமையான பாடம் கற்றுக் கொள்ளக் கூடிய தோல்வியை ஆர்.கே. நகர் மக்கள் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்திருக்கிறது.

ஆதரவாளர்களும், நண்பர்களும் பிறகு ஏன் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது?, அப்போதிலிருந்து என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டது? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவிருந்த போது அதிமுக அரசாங்கத்தோடு மத்திய அரசும், பாஜகவும் எதிர்நிலை எடுத்து அதன் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் நினைத்தபடி யெல்லாம் அரசு நிர்வாகத்திற்குள் அவர்கள் தலையிட முடியாதவாறு இருந்தது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு அதிமுக என்கிற மிகப்பெரிய கட்சியையும், மாநில அரசாங்கத்தையும் பாஜகவிற்கு சேவகம் செய்கிற அமைப்பாக அதிமுக தலைமை மாற்றிவிட்டது. இதுதான் இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்கும் மிக முக்கியமான அம்சம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

நீயோ அரசு!

முன்னர் நெடுவாசலில் தாங்கள் அனுமதியே கொடுக்கவில்லை என்று சொன்ன மாநில அரசாங்கம்தான் இப்போது மத்திய அரசின் கண் அசைவுக்கு ஏற்றபடி மனதில் இருப்பதை புரிந்து கொண்டு பாஜகவிற்கு சேவகம் செய்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது கிடையாது.

ஆனால் தர்மபுரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொள்கிறார். மதுரையிலும் செல்லூர் ராஜூவின் அறிக்கையை உண்மை எனக் கொண்டால் அவருடைய சம்மதம் இன்றியே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை துவக்கி வைப்பார் என்று அழைப்பிதழ் போடும் அளவிற்கு சுவரொட்டிகள் ஒட்டும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். ஊக்கம் பெற்றுள்ளது என்பதை நாம் காண முடிகிறது.

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி ஆறு மாதத்திற்கு முன்பே 1200 கோடி ரூபாய். இந்த பணம் இன்று வரை கிடைத்ததாக தெரியவில்லை. இதே போன்று +2விற்கு பிந்தைய படிப்பிற்கு தலித், ஆதிவாசி மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி தொகையில் 75 சதவிகிதம் மத்திய அரசும், 25 சதவிகிதம் மாநில அரசும் கொடுத்து வந்தன. பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மத்திய அரசு இதற்காக கொடுக்க வேண்டிய 1500 கோடி ரூபாயை இன்றளவும் கொடுக்கவில்லை. இதனால் மாநில அரசு அந்த கல்வி உதவித் தொகையை குறைத்துவிட்டது. இப்படி சுமார் 17,000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கம் மாநில அரசுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு கடிதம் எழுதிய பிறகு பின்னர் கைப்பாவையாகிவிட்ட தமிழக அரசாங்கம் அதைப் பற்றி பேச மறுக்கிறது. இத்தனைக்கும் தமிழக அரசு மிகப்பெரும் கடன் சுமையில் சிக்கி இருக்கிறது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகங்கள் பணிமனைகளை அடமானம் வைக்க வேண்டிய அளவுக்கும், ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன பிறகும் ஓய்வூதிய பலன்களை கொடுக்காமலும், ஓய்வூதியத்தையே உரிய நேரத்திலும் கொடுக்காமலும் தொழிலாளர்கள் இன்சூரன்ஸ், கடன் திருப்புதல் ஆகியவற்றிற்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உரிய நிறுவனங்களுக்கு செலுத்தாமலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையிலும் கூட தங்களுடைய நெருக்கடியைச் சொல்லி தங்களின் உரிமையான நிதியை பெறுவதற்கு முனகக் கூட தயாரில்லாத அரசாக அதிமுக மாறிவிட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி மத்திய அரசாங்கம் அறிவித்த பிறகு, மாநில அரசும் இடங்களை தேர்வு செய்த பிறகு இன்று வரையிலும் எந்த இடம் சரியான இடம் என்று தேர்வு செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

நீண்டநெடுங்காலமாக மாநில உரிமைகள் குறித்து கூடுதலான அக்கறையும், உணர்வும் உள்ள மாநிலம் தமிழகம். இந்த மாநிலத்தில் ஆளுநர் முதலில் கோவை மாவட்டத்திற்கு போகிறார், தானடித்த மூப்பாக அதிகாரிகளை அழைத்து திட்டங்கள் பற்றி பேசுகிறார், விமர்சனம் வந்தவுடன் இது என் உரிமை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் செல்வேன், இதே மாதிரி ஆய்வுக் கூட்டங்களை நடத்துவேன் என்று கொஞ்சமும் பயமின்றி பேசுகிறார். ஆனால் மாநில அமைச்சர்கள், முதலமைச்சர் உட்பட ஒருவார்த்தை கூட பேச மறுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில அமைச்சர்கள் மிகக் கூடுதலாக குனிந்து ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறு ஒன்றும் இல்லை என்று சந்தோசப் பாட்டு பாடுகிறார்கள்.

சுட்டாலும் சுட்டுப்போட்டாலும்

தமிழகத்தில் கருத்து உரிமையும், பேச்சு உரிமை பற்றிய புரிதலும், உணர்வும் நீண்ட நெடுங்காலமாக அவ்வப்போது தாக்குதலுக்கு உள்ளானாலும் அரணாக நின்று பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போது அவற்றையெல்லாம் பாஜகவின் கைப்பாவையாக நின்று சுதந்திரத்தை நசுக்கும் அரசாக அதிமுக அரசாங்கம் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. திருநெல்வேலியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு குடும்பம் கந்து வட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மடிந்து போகிறது. அதற்கடுத்து நடக்கிற அதுவும் திருநெல்வேலியிலேயே நடக்கிற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் கந்து வட்டிக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேச மறுக்கிறார். அதே சமயம் கந்து வட்டிக்கு எதிராக கார்ட்டூன் போட்டதற்காக பாலா என்கிற கார்ட்டூனிஸ்ட்டை தேச விரோதி போல தர தரவென இழுத்து போகிறது. அதுவும் குழந்தைகள், குடும்பத்தினர் முன்னிலையில். இந்த வழக்கு உடனடியாக பிணையில் விடக் கூடிய வழக்கு என்கிற காரணத்தினால் திருநெல்வேலி நீதிமன்றம் பிணை வழங்குகிறது. உடனடியாக மற்றொரு வழக்கில் சிக்க வைக்க நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் ரவுடியைப் போல இழுத்துச் செல்ல முயன்ற போது வழக்கறிஞர்கள் அவர்களோடு போராடி தடுத்து நிறுத்தியதும், நீதிமன்ற வளாகத்திற்குள் இந்த வேலையெல்லாம் காட்டாதீர்கள் என்று நீதிபதி சொல்லும் அளவிற்கு சென்றதும் நடந்தது. ஆனால் இவற்றிலிருந்து எல்லாம் பாடம் கற்றுக் கொள்ளாத மாநில அரசாங்கம் கார்ட்டூனிஸ்ட் அவர் மீது மீண்டும் ஒரு வழக்கையும், அவர் மீதான வழக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு என்று வழக்கின் மூலமே பிரச்சனைகளை தீர்த்து விட முடியும் என்கிற அரசாக இந்த அரசாங்கம் இருக்கிறது. மெர்சல் படம் கூட தாக்குதலுக்குள்ளானது. அதிமுக வாயே திறக்கவில்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது ஒரு தொடர் நிகழ்வாக இருந்து கொண்டுள்ளது. ஆனால் சமீபத்தில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இதுகுறித்து குறைந்தபட்சம் தனது கண்டனத்தையும், கவலையையும் கூட மாநில அரசாங்கம் பதிவு செய்யவில்லை.

ரேசனில் சீனியின் விலை 13.50 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையெல்லாம் அதிமுக அரசாங்கம் பாஜக காலால் இட்ட கட்டளையை தலைமேல் ஏற்று நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இந்த அரசாங்கம் ஒரு பாடம் கற்றுக் கொள்கிற முறையில் ஒரு தோல்வி அதற்கு அதன் கையில், அதன் முகத்தில், அதன் நாடி, நரம்புகளில் பிரதிபலிக்கிற வகையில் வழங்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

நீயே கள்வன்!

பாஜக காவிரி பிரச்சனை, கதிராமங்கலம், நெடுவாசல் எல்லாவற்றிலும் தமிழகத்திற்கு வஞ்சனை செய்திருக்கிறது. கீழடி நமது தொன்மையை, நமது நாகரீகத்தை, நமது உயர்வை பறைசாற்றும் ஏராளமான ஆதாரங்களைக் கொண்ட புதையல். அந்த ஆய்வை எவ்வித நியாயமுமின்றி சீர்குலைத்துவிட்டது.

சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களையெல்லாம் அவற்றின் நியாயம், பிரத்யேக தன்மை இவற்றையெல்லாம் கருதாமல் நீட் என்ற ஒற்றைச் சுருக்கில் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை, தமிழக மக்களின் உணர்வுகளை தூக்கிலிட்ட அரசாங்கமாக பாஜக விளங்குகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும். சாரணர் இயக்கம் உட்பட தமிழகத்தின் பொதுவெளி, அரசு அமைப்பின் அடுக்குகள் இவற்றில் எல்லாம் நிர்பந்தத்தின் மூலம் நுழைந்து அதிகாரம் செலுத்த பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. குறிவைக்கப்பட்ட வருமான வரி சோதனைகள் மூலம் ஊழலில் திளைத்து போன, ஊழலில் மொத்த உருவமாய் காட்சியளிக்கிற அதிமுகவை பயமுறுத்தி, மிரட்டி ஒவ்வொரு அடுக்கிலும் தன் ஆட்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிரப்புதல் எந்தவிதமான பேரழிவை தமிழகத்திற்கு கொண்டு வரும் என்பதற்கு சில உதாரணங்களை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்.

நிறுவனம் கைக்கு வந்தால்

2015ம் ஆண்டில் அக்லாக் என்கிற இஸ்லாமியரை மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று அடித்தே கொன்றார்கள். பின்னர் அது ஆட்டிறைச்சி என்று நிரூபணமானது. பின்னர் தங்கள் ஆட்கள் நிரம்பியிருக்கிற நிறுவனத்தின் மூலம் அதை மாட்டிறைச்சி என்று அறிவிக்க தொடங்கினார்கள். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் இறந்து போனார். அவருடைய உடலுக்கு தேசிய கொடியை போர்த்தி அடக்கம் செய்தார்கள். அவர் மனைவிக்கு அரசு வேலை கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் பிணையில் வெளியில் வந்ததும் அவர்களுக்கெல்லாம் தேசிய அனல் மின் கழகத்தில் வேலைவாங்கி கொடுத்திருக்கிறார்கள். ஃபெஹ்லுகான் என்கிற பால் வியாபாரி பால் மாடுகளை வாங்கிச் சென்றதற்காக ராஜஸ்தானில் ஊடகங்கள் முன்பே அடித்துக் கொல்லப்பட்டார். அத்தனையும் ஆவணங்களாக, வீடியோக்களாக இருக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஏற்கவில்லை, சாட்சிகளும் அடையாளம் காட்டவில்லை என்று சொல்லி அத்தனை பேர் மீதும் வழக்குகள் கைவிடப்பட்டிருக்கிறது. 19 ஆண்டு காலம் போராடி பில்கிஸ்பானு வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பு இன்று வரை அமலாக்கப்படவில்லை. மாலேகான், மெர்க்கா மஜித், சம்ஜதா எக்ஸ்பிரஸ் இவற்றில் எல்லாம் குண்டுகள் வெடித்து 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் காயம்பட்டார்கள். ஆரம்பத்தில் முஸ்லிம் இளைஞர்கள் தான் கைது செய்யப்பட்டார்கள். புலன் விசாரணையில் அபினவ் பாரத் என்கிற அமைப்பின் சுவாமி அசிமானந்தா, பிரயாக்சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி உள்ளிட்டு பலர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் குற்றத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது இவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள். செராபுதீன் போலி எண்கவுண்ட்டர் வழக்கில் அமித் ஷா குற்றவாளி என்று தீர்ப்பளித்தவர் மர்ம மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு அப்போதைய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அழுத்தம் கொடுத்தார் என்கிற விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. அமித் ஷா குற்றவாளி என்று சொன்ன லோயா மர்மமான முறையில் இறந்திருப்பதும், அவரை விடுவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதும் தற்செயல் நிகழ்வல்ல. இதே போன்று குஜராத் கலவரத்திலும் நாரோடா பாட்டியா படுகொலைகளிலும் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று ‘முடிவுக்கு’ வந்த சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன் சைப்ரஸ் நாட்டின் ஹை கமிஷனராக நியமிக்கப்பட்டிருப்பதும் தற்செயலான நிகழ்வல்ல. அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் தனது அடியாட்களை வைத்துக் கொண்டும், தான் செய்யும் தவறுகளிலிருந்து தப்புவிக்க செய்பவர்களுக்கு எல்லாம் பதவிகள் கொடுத்தும் பாஜக அரசு எந்திரங்களை தன் அட்டூழியங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகிறது. இந்த நிலை தமிழகத்திற்கும் வரக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தமிழக அதிகார அமைப்பில் தன் ஆட்களை நிரப்புவது என்ற பாஜகவின் முயற்சிக்கு ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு ஒரு கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. அதன் மூலம் பாஜகவிற்கும், அதன் கைப்பாவையாக விளங்கும் அதிமுகவிற்கும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தமிழக மக்கள் ஆர்.கே. நகர் தேர்தல் மூலம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த காரணங்களினால் தான் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவு எடுத்தது. இந்த முடிவு கட்சியின் மாநிலக்குழுவிலும் மிகத் தீவிரமான ஜனநாயகப்பூர்வ விவாதங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டது.

மாற்றே இலக்கு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது மிகத் தீவிரமான பல புதல்வர்களை களப்போராட்டத்தில் பலி கொடுத்திருக்கிறது. கந்து வட்டிக்கு எதிராக பள்ளிப்பாளையம் வேலுச்சாமியும், நெல்லை கோபியும் உயிர்ப்பலியாகியிருக்கிறார்கள். தலித் மக்களுக்குஆதரவாக இருந்தார் என்பதற்காக இடுவாய் ரத்தினசாமி படுகொலை செய்யப்பட்டார். இப்படி அடுக்க முடியும். இவையெல்லாம் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவளித்து அவர்களை வளர்த்து விடுவதற்காக அல்ல. எல்லாவிதமான சமூகப் பிணிகளுக்கும் தீர்வளிக்கும் செங்கொடி இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவதற்காகத்தான், அந்த கனவுக்காகத்தான் தங்கள் உயிரை துச்சமென மதித்து போராடினார்கள்.

ஆனால் தமிழகத்தில் 8 கோடி மக்களையும் ஒரு சேர பாதிக்கிற நெறிமுறையற்ற ஒரு அரசியல் கள்ளக்கூட்டு அதிமுகவால், பாஜகவால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்துவதும், எச்சரிப்பதும், கண்டிப்பதும் தன்னுடைய தேர்தல் நலனை விடவும் கூடுதல் முக்கியத்துவம் உடையது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாலேயே இந்த முடிவை மேற்கொண்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவிற்கு மாற்று என்கிற தனது வழித்தடத்தில் உறுதியாக பயணிக்கிற அதே நேரத்தில் இடைப்பட்ட காலத்தில் உடனடியான உணர்ந்து கொள்ள முடியாத, ஆனால் தொலைநோக்கில் சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் பாதிக்கக் கூடிய எதிரிகளை அடையாளம் காட்டுவதும் அவர்களை தோற்க டிக்கச் செய்வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்தே வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியே இது.

எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நலனி லிருந்து தங்கள் விமர்சனங்களை, கவலைகளை பதிவு செய்துள்ள நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை உறுதியாகச் சொல்லுகிறது. மாற்று அரசியலும், மாற்று சமூகக் கொள்கைகளும் மட்டுமே எங்கள் அடிப்படை நோக்கம். இடையில் மக்களை தொலைநோக்கில் துண்டாடுகிற ஒரு எதிரியை தோற்கடிப்பதற்காக நாம் இந்த முடிவை மேற்கொண்டோம். அதிமுகவின் தோல்வி பாஜகவின் தோல்வியே. அந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏற்படுகிற தோல்வி தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும். அந்த நோக்கிலிருந்தே ஆர்.கே.நகர் தொகுதி குறித்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...