அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக!

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அரசுப்  பள்ளிகளில் 2012ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டு காலமாக, 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5,000/- தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போது ரூ. 7,700/- ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வருடத்திற்கு 11 மாதச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் மே மாதத்திற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே குறைந்த ஊதியத்தில் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வரும் இவர்களுக்கு வருடந்தோறும் மே மாதம் சம்பளம் வழங்காமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கும் செயலாகும்.

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், இந்த ஆசிரியர்களும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். தமிழக அரசு இவர்களுக்கு 2020 மே மாத சம்பளத்தையாவது மனிதநேயத்தோடு கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அதுவும் கொடுக்க மறுத்து வருகிறது.

எனவே, பேரிடர் கால உதவியாக, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் சம்பளத்தைக் கொடுப்பதோடு, இப்படி முதல்முறையாக தராமல் விடுபட்ட 2012 ஆம் ஆண்டிற்கான மே மாத ஊதியம் தொடங்கி, 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை 9 மாதம் ஊதியத்தை நிலுவையில்லாமல் உடனடியாக வழங்கிட தமிழக முதலமைச்சரை நடவடிவக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபையில் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு செய்து நான்காண்டுகள் கடந்த நிலையில் இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

அதே போல, அரசு வேலையை நம்பி வந்த 16,549 பகுதிநேர ஆசிரியர்களில், மரணம், 58 வயதாகி பணி ஓய்வு போக, தற்போது மீதமுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 10வது கல்வி ஆண்டிலும் ரூ.7,700 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் குடும்ப நலனையும், வாழ்வையும் கருத்தில் கொண்டு, இவர்களது பணியை வரைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...