அரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கும் மாதச் சம்பளம் பணமாக வழங்கிடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 21.11.2016 அன்று சென்னையில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

  1. அஞ்சலி

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே புக்ராயன் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், சிஐடியுவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மின்ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான தோழர். பி. மதுரை அவர்களின் மறைவிற்கும் முன்னதாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

  1. அரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கும் மாதச் சம்பளம் பணமாக வழங்கிடுகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மத்திய அரசு ரூ1000, 500 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி அறிவித்தது முதல் பணப் பரிமாற்றம் முடங்கி, அனைத்துப் பகுதி மக்களும் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அன்றாடச் செலவுகளுக்குக் கூட பணமில்லாமல தினசரி பல மணி நேரம் வங்கிகளின் முன்னாலும், ஏ.டி.எம். முன்னாலும் மக்கள் சில ஆயிரம் ரூபாய்கள் பெறுவதற்காக,  தங்களது அன்றாடப் பணிகளை விட்டு காத்து கிடக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய வசதி இல்லாதவர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பெரும்பாலான அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாநில, மத்திய பொதுத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வங்கிகளிலேயே செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் பணப் பரிமாற்றம் முடங்கியுள்ள சூழலில் மாதச் சம்பளம் வங்கிகளில் செலுத்தப்பட்டால் தேவையான பணத்தினை எடுக்கவும், மாதத் துவக்கத்தில் தேவைப்படும் பல்வேறு செலவுகளுக்கு பணத்தைப் பயன்படுத்தவும் இயலாமல் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே பல்வேறு ஊழியர் சங்கங்களும் மாதச் சம்பளத்தை பணமாகக் கையில் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளன. எனவே பணப்பரிமாற்றம் சீரடையும் வரை மத்திய, மாநில அரசுகளும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் மாதச்சம்பளம் வழங்கும் போது அதை வங்கிக் கணக்கில் போடாமல், பணமாகக் கையில் வழங்கும் படியும், முதியோர் பென்சன், முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பென்சன், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் இதர சமூக நலப் பணப்பயன்கள் அனைத்தையும் வங்கியில் செலுத்தாமல் அவரவர் கைகளில் வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவதோடு, தனியார் நிறுவனங்களையும் நேரடி பணமாக வழங்க உத்தரவிடுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள 4600 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும், மத்திய கூட்டுறவு வங்கிகளும் முடக்கப்பட்டு விவசாய சாகுபடி முற்றாக நடைபெறவில்லை. இதனால் கிராமப்புற பொருளாதாரமே பாதித்துள்ளது. உடனடியாக மேற்கண்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும் பண பரிவர்த்தனை செய்திட அனுமதிக்க வேண்டும். மேலும் டிசம்பர் 30 வரை  500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திட  அனுமதிக்க வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...