அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிடுக!

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிடுக! தமிழக முதல்வருக்கு – சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டுமெனவும், அவ்வாறு நிரப்பிடும் போது கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இன்று (28.8.2019) தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. இதனை தங்களின் மேலான பத்திரிகை தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

வணக்கம்.

பொருள்:- அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக:

தமிழகத்தில் உள்ள 99 அரசு கல்லூரிகள் கல்வித்துறையின் கீழ் இயங்கி வருகின்றன. இவைகளில் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இக்கல்வியாண்டில் புதிதாக 81 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு 2334 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப் போவதாக அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 4000 ஆகும்.  எனவே உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பிடும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 
இவ்வாறு நிரந்தர கல்லூரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது, கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.


மேலும் 22 முதல்நிலைக் கல்லூரிகளிலும், 19 இரண்டாம் நிலைக் கல்லூரிகளிலும், முதல்வர் பணியிடங்கள், கல்லூரி கல்வி இயக்குனர், இணை இயக்குநர் போன்ற பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இத்தகைய பணியிடங்களையும் நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்

Check Also

இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

நாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் ...