அராஜகமாகவும் – சட்ட விரோதமாகவும் நடைபெற்ற கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்து ஜனநாயக முறையில் மறுதேர்தல் நடத்துக தேர்தல் ஆணையத்தை சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு நடந்து முடிந்துள்ள இரண்டு கட்டத் தேர்தல்களில் பரவலாக நடைபெற்ற ஆளும் கட்சியினரின் அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், தேர்தல் ஆணையம் வெறும் பார்வையாளராக இருப்பதை விமர்சித்தும், கூட்டுறவுத் தேர்தலை ஜனநாயக முறையிலும் நேர்மையாகவும் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும் ஜனநாயக விரோத செயல்கள் நடக்கும் இடங்களில் வலுவான கண்டன இயக்கங்கள் நடத்தும் படி கட்சி அணிகளுக்கு அறைகூவல் விடுத்திருந்தது.

சென்னையில் இன்று மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற போது, பரவலாகப் பல இடங்களில், ஆளும் கட்சி தவிர இதர கட்சிகள், அமைப்புகள், தனி நபர்கள் குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள், சிஐடியு சங்கத் தோழர்கள் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப் படவில்லை. காவல்துறை பல இடங்களில் ஆளும் கட்சியின் அராஜகத்துக்கு ஆதரவாக செயல்பட்டதைப் பார்க்க முடிந்தது.
ஆளும் கட்சியினர், வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டிய அலுவலகங்களில் கதவைப் பூட்டிக் கொண்டு மற்றவர்களை உள்ளே விட மறுப்பது, கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு கத்தி, சைக்கிள் செயின் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அச்சுறுத்துவது, தாக்குவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

வேட்பு மனு கொடுக்க உள்ளேயே போக முடியாத நிலையில், தாக்குதல்களையும் எதிர்கொண்டு, ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட போராடிய தோழர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். தி.நகர் கூட்டுறவு வங்கி, தாம்பரம் நகர கூட்டுறவு வங்கி, பல்லவன் போக்குவரத்துக் கழக பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், போக்குவரத்து கழகப் பணியாளர் கடன் சொசைட்டி, அண்ணா தொழிலாளர் கூட்டுறவு சங்கம், நொச்சிக்குப்பம் மீனவர் சொசைட்டி, இதய தெய்வம் புரட்சி தலைவி மீனவர் கடன் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களில் இது தான் நிலைமையாக இருந்தது. இந்தப் படுமோசமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 கூட்டுறவு தேர்தல் ஆணையம் தலையிட்டு, அராஜகமாகவும், சட்ட விரோதமாகவும் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்.
 வேட்பு மனுக்கள் முறையாகத் தாக்கல் செய்யப்பட்டு, உரிய முறையில் மறு தேர்தல்கள் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
 சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை சட்ட விரோத செயல்களுக்குத் துணை போன பின்னணியில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 அராஜக செயல்களில் ஈடுபட்ட ஆளும் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கூட்டுறவு சங்கப் பொறுப்புகள் விற்பனையாகும் ஜனநாயக விரோத நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது. இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...

Leave a Reply