அரிசி மீது சேவை வரி விதிக்கக் கூடாது! சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (பிப்ரவரி 11, 2014) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்திரராசன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-

அரிசி மீது சேவை வரி விதிக்கக் கூடாது! சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

மத்திய அரசு சேவை வரி சட்டத்தில் சில திருத்தங்களை செய்வதாகக் கூறி , வேளாண் பெருட்கள் பட்டியலில் இருந்து அரிசியை  நீக்கியுள்ளது. இதன் விளைவாக தென்னக மக்கள் அதிகம் உட்கொள்ளும் அரிசி மீது சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினால், வெளி மார்க்கெட்டில் அரிசி விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள இந்தத் தாக்குதலை  மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே உணவுப் பொருட்களின் பணவீக்கம் கடும் அளவில் உயர்ந்து சாதாரண ஏழை நடுத்தர மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க இயலாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அரிசி மீது மத்திய அரசு தன்னிச்சையாக விதித்துள்ள சேவை வரி  மக்களுக்கு இழைக்கப்படும் பெருத்த  அநீதியாகும்.

அரிசி மீதான, இந்த சேவை வரியை மத்திய நிதி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அத்துடன், பஞ்சாலைத் தொழில் ஏற்கனவே நலிந்துள்ள நிலையில் நெசவாளர்களின் துயரினை அதிகப்படுத்தும் வகையில் பருத்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியையும் ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  மத்திய அரசினை வலியுறுத்துகிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply