அருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை உயர்மட்ட அதிகாரிகளுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்திய வழக்கு தமிழகத்தை அதிர வைத்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகளின் போராட்டங்களின் பின்னணியில் பேராசிரியர் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை இவர்கள் இருவருடனுமே முடித்துக் கொள்ள சிபிசிஐடி துறை முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே வெளியான ஒலி நாடாவில் நிர்மலா தேவி தமிழக ஆளுநர் குறித்துப் பேசியது வெளிவந்தது. மேலும் உயர்மட்ட அதிகாரிகளின் துணை இருந்தால் அனைத்து உதவிகளும், வசதிகளும் கிடைக்கும் என்ற பொருளிலும் அவரது பேச்சு அமைந்திருந்தது.

எனவே தான், பல உயர்மட்ட நபர்கள் ஈடுபட்ட கிரிமினல் வலை பின்னலாக இது இருக்கலாம் என்ற ஐயம் எழுந்த காரணத்தால் ஆளுநர் அமைத்த சந்தானம் கமிஷன் மற்றும் தமிழக அரசு உத்தரவிட்ட சிபி சிஐடி விசாரணை இரண்டுமே ஏற்புடையதல்ல, உயர்நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ஆளுநர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது. விசாரணை அறிவித்த உடனேயே சிபி சிஐடி துறையின் தலைவரைத் தமிழக அரசு மாற்றியதும் சந்தேகங்களை அதிகமாக்கியது. முருகன் மற்றும் நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தில் வெளிவந்த சில உயரதிகாரிகளின் பெயர்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்றும், இதில் ஈடுபட்ட அனைவர் குறித்த விவரங்களை சொல்லுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்றும் தகவல் வருகிறது. சம்பவம் வெளிவந்து 4 மாதங்கள் ஆகியும் விசாரணை மந்தமாகவே நடந்து கொண்டிருக்கிறது. உயர்மட்ட அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு விசாரணையை முடக்கிவிடும் ஏற்பாடாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.

சிலை திருட்டு, கடத்தல் வழக்கில், பல்வேறு எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணையைக் கோரும் தமிழக அரசு, இதில் அதே கோரிக்கையை நிராகரிக்க வேண்டிய அவசியம் என்ன, மறைப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என மக்கள் மத்தியில் குரல்கள் எழுகின்றன. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணை நடக்க தேவையான முயற்சிகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...