தமிழ் அறிஞரும், சிறந்த ஆய்வாளருமான பேராசிரியர் தொ.பரமசிவன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடைய முனைவர் பட்ட ஆய்வான “அழகர் கோவில்” குறித்த ஆய்வு தமிழ் இலக்கிய ஆய்வுலகில் ஒரு திருப்புமுனையாகும். மானுடவியல், பண்பாட்டு நோக்கில் தமிழக வரலாற்றை அவர் ஆய்வு செய்து சிறந்த நூல்களை வழங்கியுள்ளார்.
அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள் உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழில் பெரும் கவனத்தைப் பெற்றவை. மார்க்சிய, பெரியாரிய நோக்கிலேயே அவர் தன்னுடைய ஆய்வை அமைத்துக் கொண்டார்.
கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மூட்டா அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவராக அவர் பணியாற்றினார். ஆசிரியர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். ஏராளமான ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழ் வரலாற்றியல் ஆய்வுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், அவர் வழிவந்த மாணவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்