அவதூறு வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் சிபிஐ(எம்) வரவேற்பு

ஜனநாயகத்தின் குரல்கள் தடையின்றி ஒலிக்கட்டும்

அவதூறு வழக்குகள் தொடுக்கப்படும் பிரச்சனையில், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது  முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ஜனநாயகக் குரல்களை ஒடுக்கும் அதிமுக அரசிற்கு விழுந்த சாட்டையடியாக இது அமைந்திருக்கிறது.

அதிமுக ஆட்சியின் தவறுகளை விமர்சிப்போருக்கு எதிராக, கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. பத்திரிக்கையாளர்கள், எதிர் கட்சித் தலைவர்களின் குறைந்தபட்ச விமர்சனங்களைக் கூட சகித்துக் கொள்ளாத போக்கே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணையின் பேரால் ஏற்படுத்தும் அலைக்கழிப்பு உட்பட பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகும். கடந்த அதிமுக ஆட்சியில், 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் மட்டும் 131 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தன் மீது விதிக்கப்பட்ட பிடி வாரண்ட்டுக்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.  தமிழக அரசு அவதூறு வழக்கு தொடுப்பதை உச்சநீதிமன்றம் கண்டித்ததோடு  ‘‘பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தமிழ்நாடு அரசைப்போல வேறு எந்த அரசும் மாநில அரசு இயந்திரத்தை, இதுபோல தேவையில்லாத விஷயங்களில் தவறாகப் பயன்படுத்துவதில்லை’’ “விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர விமர்சன குரல்களை ஒடுக்கும் வகையில் மாநில அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சில நாட்கள் முன்பாக உச்ச நீதிமன்றம் “இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-ம் பிரிவுகள் விமர்சனங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அதைத் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று சுட்டிக்காட்டியது. நீதிமன்றத்தின் இக்கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது

1987 ஆம் ஆண்டு விகடன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட பிரச்சனையில், தமிழக அரசு அபராதம் செலுத்த நேர்ந்தது தொடங்கி தான் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கும்போதும், அதிமுக அரசு அதிலிருந்து பாடம் கற்கவில்லை. தற்போதைய அரசு 15 முறைகளுக்கும் மேல் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேர்ந்தது பற்றிய பட்டியலையே சில பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இனியாவது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலின் படி,  விமர்சனக் குரல்களை ஒடுக்கும் நடவடிக்கையை அதிமுக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். எதிர்க் கட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகள் அனைத்தையும் உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...