அவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…

அனைத்து மாநிலங்களும் தங்கள் அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வ செய்திகளைச் சொல்வதற்கு செய்தித் துறையினை பயன்படுத்துகிறார்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் ‘சுயசார்பு’ அரசாங்கம் இந்த வேலைக்காக ஒரு விளம்பர கம்பெனியை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள். அதுவும் ஹத்ராசில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கடந்த செப்.29ம் தேதி இறந்துபோன பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என்று சொல்வதற்கு இந்த விளம்பர கம்பெனியை உ.பி. அரசாங்கம் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது.

வியாழக்கிழமை இரவு இந்தியாவிலுள்ள பிற நாட்டு பத்திரிக்கை நிரூபர்களுக்கு Concept PR என்கிற விளம்பர கம்பெனியிலிருந்து “விளக்க அறிக்கை” என்கிற பெயரில் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மும்பையிலிருந்து செயல்படுகிறது. அந்த விளக்க அறிக்கையில் “ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை. தடயவியல் சோதனை, ஆரம்பகட்ட மருத்துவ மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அம்பலம். இந்த அறிக்கைகளில் மாநிலத்தை சாதி கொந்தளிப்புக்கு தள்ளுவதற்கு செய்யப்பட்ட சதி அம்பலம். சிறப்பு புலனாய்வுக்குழு இதற்குப் பின்னே இருக்கும் கெட்ட நோக்கங்களை வெளிப்படுத்தும்” என்று அந்த விளம்பர நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தடயவியல் சோதனையிலும், ஆரம்பகட்ட மருத்துவ மற்றும் பிரேதப் பரிசோதனையிலும் உலகிலேயே முதன் முறையாக மோடியின் யோகி ஆட்சியில்தான் சதி பற்றிய விபரங்களை எல்லாம் வெளிப்படுத்தும் முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் அந்த விபர அறிக்கை அவசர அவசரமாக ஏன் அந்தப் பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது என்பதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காகத்தான் அது செய்யப்பட்டதாம். இந்த விளக்க அறிக்கை ஏற்கனவே அந்த மாநில உதவி காவல்துறை இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு) பிரசாந்த் குமார் சொன்னதைத்தான் இது சொல்லியிருக்கிறது. ஆனால், அவரது இந்த அறிக்கையை மருத்துவ மற்றும் சட்ட வல்லுநர்கள் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த அறிக்கை வந்திருப்பது அரசுத் தரப்பிலிருந்து செய்யப்படும் சதியையும் முயற்சியையும் வெளிப்படுத்துகிறது. ‘புதிய இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளை நடப்பதில்லை. இங்கு சாதி ரீதியான அநீதிகளுக்கு வாய்ப்பில்லை’ என்று பறைசாற்றுவதற்காகவே அரசு இதைச் செய்திருக்கிறது.

2012ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு உலகம் முழுவதும் இந்தியாவை பேச வைத்தது போன்று இந்தப் பிரச்சினை ஆகிவிடக் கூடாது என்று அவர்கள் முயற்சிக்கிறார்கள். எனவேதான், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை. தவறான நோக்கத்துடன் சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு இதைப் பரப்பும் நோக்கத்துடன் சதி செய்யப்படுகிறது. அதை தெளிவுபடுத்துவதற்காகத்தான் இந்த அறிக்கை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், அதற்கு முன்பாகவே நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் இவை தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கின்றன. அதைத் தடுப்பதற்கும் இந்திய பத்திரிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவுமே இந்த விளம்பர கம்பெனி வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறது.

மோடிகளுக்கும் யோகிகளுக்கும் பாலியல் வன்கொடுமை நடப்பது அவமானமாகத் தெரியவில்லை. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்குத் துப்பில்லை. ஒட்டுமொத்த காவல்துறையையும் நிர்வாகத்தையும் தங்கள் அடியாட்களாகப் பயன்படுத்தி தங்களது இயலாமை கையாலாகாத்தனம் பெண்ணடிமைத்தனம் தலித் வெறுப்பு என அத்தனையையும் மூடி மறைக்க நினைக்கிறார்கள்.

இது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்ட குஜராத்தில் இசுலாமியர்கள் மீதான வன்முறைகளிலிருந்து இவர்கள் தப்பித்து புனிதர்கள் ஆகிவிட்டார்கள்.

ஆசீபா வழக்கை ஊற்றி மூடுவதற்கு இவர்கள் செய்த அட்டூழியங்களும் புழுகுனிப் பிரச்சாரங்களையும் நாடு பார்த்துவிட்டது.

உன்னாவ் பெண்ணை இவர்கள் கட்சியின் எம்.எல்.ஏ. பாலியல் வன்கொடுமை செய்து, அதற்கு நியாயம் கேட்க காவல்நிலையத்திற்குச் சென்ற தந்தையை கொலை செய்துவிட்டு, குரல் கொடுத்த சித்தப்பாவை சிறையிலடைத்துவிட்டு, இந்த வழக்கிற்காக சென்றபோது அந்தப் பெண்ணையும் அவளோடு துணைக்குக் சென்ற இரண்டு அத்தைகளையும் கொல்வதற்கு முயற்சி செய்து, அதில் அத்தைகள் கொல்லப்பட்டு அந்தப் பெண் படுகாயமுற்றாள். அத்தனைக்கும் பிறகும் மோடியும் யோகியும் வாய்திறக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு ‘காவலுக்கு’ இருந்த காவலர்களே அந்தப் பெண்ணின் பயண விபரத்தை எதிராளிகளுக்கு தெரிவித்த கதையும், அதற்கு முன்பே அவர்களின் சந்தேகத்திற்கு உரிய நடவடிக்கைகளை அந்தப் பெண் அரசாங்கத்திற்கு தெரிவித்திருந்தும் அவர்கள் மாற்றப்படாமல் இருந்ததும் இவர்களின் ராமராஜ்ஜியத்தில்தான். இந்த ராம ராஜ்ஜியத்தில்தான் அந்தப் பெண் தனக்கு பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகியதும், அந்தக் கடிதம் கூட நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்ததும், அவள் உயிருக்கும் போராடும் போதுதான் வெளியே வந்தது.

இவர்கள் பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்களுக்கு ஆதரவானவர்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு இந்தியாவின் அனைத்து சட்டங்களையும் வளைத்து ஒடிக்கக் கூடியவர்கள். ஹத்ராஸ் பெண் வழக்கில் அந்த ஊருக்குப் பக்கத்திலேயே அவளது பிணத்தை உறவினர்கள் இல்லாமல் எரிக்கிறார்கள். எரிவது என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்கும்போது, நான் மூன்றாம் நிலைக் காவலர் எனக்கு அதைச் சொல்ல அதிகாரம் இல்லை என்கிறார்.

பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு இருக்கும்போது பாதிக்கப்பட்டவரின் உடலை எரிக்கக் கூடாது என்று பல முறை நீதிமன்றங்கள் சொன்னதைக் கவனத்தில் கொண்டுதான் அவர்கள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் நீங்கள் கொடுத்த புகாரை மாற்றி எழுதிக் கொடுங்கள், இப்போது இருக்கிறது பத்திரிக்கையாளர்கள் எல்லாம் போன பிறகு நீங்களும் நானும்தான் இருப்போம் என்று மிரட்டுகிறார். ஏடிஜிபி விசாரணை முடிவடைவதற்கு முன்பே இது பாலியல் வன்கொடுமை இல்லை என்பதற்கு குப்பைத்தனமான காரணங்களைப் பேசித்திரிகிறார்.

இவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள். வேண்டுமானால் நீதி தேவதையின் மீது பாலியல் வன்கொடுமையை ஏவுவார்கள். அவர்களின் ஆசான் சாவர்க்கர் பாலியல் வன்கொடுமையை ஒரு அரசியல் ஆயுதம் என்று சொன்னவர்தான். நீதி கிடைக்க வேண்டுமென்றால் மோடியும் யோகியும் அவர்களின் பரிவாரும் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

என்னதான் இருந்தாலும் குஜராத்தில் செத்த மாட்டுத் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர்களின் தோலை உரித்தவர்கள் இவர்கள். இவர்கள் மாடுகளுக்கு வேண்டுமானால் ஆட்சியாளர்களாக இருக்க முடியும். உறுதியாக மனிதர்களை ஆள்வதற்கான எந்த லட்சணமும் இல்லாத கூட்டம் இது.

Source:
https://thewire.in/government/adityanath-government-hathras-case-rape-pr-firm

https://thewire.in/caste/in-up-maintaining-law-and-order-also-means-a-secret-rushed-cremation-of-dalit-rape-victim

தோழர் க.கனகராஜ்

Check Also

உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்!

வரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளை கண்டுள்ளது கோவை நகரம். ஆனால், அவற்றில் ஒரு சில நிகழ்வுகளே, உலகறியச் செய்தவை. அப்படிப்பட்ட ...