ஆகஸ்ட் 9 இந்தியா பாதுகாப்பு தினம்: “இந்தியாவைப் பாதுகாப்போம்”, “மக்களைப் பாதுகாப்போம்”சிஐடியு, அகில இந்திய விவசாயிகள்சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் அறைகூவல்

புதுதில்லி, ஜூலை 24

வெள்ளையனே வெளியேறு தினமான ஆகஸ்ட் 9 அன்று இந்தியா பாதுகாப்பு தினம் கொண்டாடுவோம். இந்தியாவைப் பாதுகாப்போம், மக்களைப் பாதுகாப்போம் என்று இந்தியத் தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பாக இம்மூன்று சங்கங்களும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம், ஆகஸ்ட் 9 அன்று மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள  “இந்தியா பாதுகாப்பு தினத்தன்று” சிறை நிரப்பும் போராட்டம்/சத்தியாக்கிரகம்/பல்வேறு வடிவங்களில் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திடுவோம். வெள்ளையனே வெளியேறு தினத்தன்று இந்தியாவைப் பாதுகாப்போம் என்றும், மக்களைப் பாதுகாப்போம் என்றும் வீர முழக்கமிடுவோம்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்துகொண்டிருந்தபோதும்கூட, சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அளவில், மக்களுக்கு ரேஷன் வழங்கக் கோரியும், வேலைகள்/வேலையில்லாக் காலத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரியும், பெரும்பான்மையான மக்களுக்கு சுகாதார வசதிகளை அளிக்கக்கோரியும் மகத்தான அளவில் இயக்கங்களை நடத்தினோம். இந்த இயக்கங்களில் ஏராளமான அளவில் இளைஞர்களும், பெண்களும் பங்கேற்றனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளம் கடுமையாக மாநிலத்தைப் பாதித்துள்ள போதிலும் பல இடங்களில் வெள்ள நிவாரணம் கோரி இயக்கங்கள் நடந்துள்ளன.

திரிபுரா மாநிலம், அகர்தலாவில் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 120 போராளிகள் கைதுசெய்யப்பட்டார்கள். மாநிலத்தில் கடும் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. 

·         அனைவருக்கும் இலவச சுகாதாரப் பாதுகாப்பு வழங்கக் கோரியும்,

·         வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 7500 ரூபாய் வழங்கக்கோரியும், இவ்வாறாக அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரியும்,

·         மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தவாதச் சட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலையும், நாளொன்றுக்கு 600 ரூபாய் ஊதியமும் வழங்கக்கோரியும், அல்லது வேலையில்லா நிவாரணம் வழங்கக் கோரியும், நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் அமல்படுத்தக்கோரியும்,

·         இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், பண்ணை வர்த்தகம், மின்சார சட்டம், தொழிலாளர் நல சட்டங்களில் அவசரச்  சட்டம் கொண்டுவந்துள்ளதை ரத்து செய்யக்கோரியும்,

·         பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும்

நடைபெற்ற இயக்கங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்றார்கள். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக பணியில் ஈடுபட்டுள்ள திட்ட ஊழியர்கள் தங்களுக்கு ‘பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்’, ‘முறையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என்று கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். மத்தியப் பிரதேசத்தில் ‘ஆஷா’ ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஹர்யானாவில் சனிக்கிழமையன்று இப்போராட்டம் நடைபெறுகிறது.

நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் பெரும் திரளாகப் பங்கேற்றிருப்பதிலிருந்து மத்திய ஆட்சிக்கு எதிராக மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதைப் பார்க்க முடிந்தது.  போராட்டங்களில் பெரும்திரளாகப் பங்கேற்ற அனைவருக்கும் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

தொழிலாளர்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மத்திய பாஜக அரசாங்கத்திற்கு எதிரான இத்தகைய ஒன்றுபட்ட போராட்டத்தை வரவிருக்கும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கோருகிறோம்.

‘வெள்ளையனே வெளியேறு’ தினமான ஆகஸ்ட் 9 அன்று “இந்தியா பாதுகாப்பு தினம்” கொண்டாடுவோம், “இந்தியாவைப் பாதுகாப்போம்”, “மக்களைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் பாஜக அரசாங்கத்தின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிடுவோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...