ஆகஸ்ட்20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம் அனுசரித்திடுக!மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் முதன்முறையாக இணையத்தின் வழி (ஆன்லைனில்) ஜூலை 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை மாலை கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு

பிரதமர் நரேந்திர மோடி எவ்விதத் திட்டமிடலும் இல்லாது, திடீரென்று அறிவித்த பொது முடக்கம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதில் வலுவிழந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மிக நீண்ட காலத்திற்கு பொது முடக்கத்தை அறிவித்த போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, நம்முடைய சுகாதார வசதிகளைப் பெருக்கி, சுகாதார ஊழியர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்களை அளித்து, அதனைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அதற்கு சுகாதார ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை அளித்திருக்க வேண்டும், நாட்டு மக்களிடையே விரிவான அளவில் சோதனைகள் செய்திருக்க வேண்டும், ‘பாசிடிவ்’ என கண்டுபிடித்தவர்களைத் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும்.  இவ்வாறு அறிவியல் நடைமுறைகள் எதனையும் கடைப்பிடிக்காது, பிரதமர், மகாபாரத யுத்தத்தைக் குறிப்பிட்டு, நாம் 21 நாட்களில் வெற்றியை எய்திடுவோம் என்று கர்ஜித்தது முற்றிலுமாக படுதோல்வி அடைந்துவிட்டது.

ஆயினும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சி நிரலையும் நவீனதாராளமயப் பொருளாதார சீர்திருத்தக் கெஎள்கைகளையும் வெறித்தனமாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது.

இவற்றின் மூலம் நாட்டின் சொத்துக்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கும், தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதல்களை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.

மத்தியக்குழு இன்றைய தினம் நாட்டில் உள்ள சூழ்நிலைமைகளில், கீழ்க்கண்ட 16 முக்கியமான  கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்தின் முன்வைத்திருக்கிறது.

1.   வருமான வரி செலுத்தாக அனைத்துக் குடும்பத்தினருக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதந்தோறும் 7500 ரூபாய் ரொக்க மாற்று உடனடியாக அளித்திட வேண்டும்.

2.   தேவைப்படுவோர் அனைவருக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு தனிநபர் ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் இலவசமாக அளித்திட வேண்டும்.

3.   மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தினை விரிவுபடுத்தி, ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், உயர்த்தப்பட்ட ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இதேபோன்று நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டமும் பிரகடனம் செய்யப்பட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலையின்மை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

4.   மாநிலங்களுக்கிடையேயான இடம்பெயர் தொழிலாளர் (வேலைவாய்ப்பு மற்றும் பணிநிலைமைகள் முறைப்படுத்தல்) சட்டத்தை ரத்து செய்திடும் முன்மொழிவைத் திரும்பப்  பெற வேண்டும். மாறாக, அச்சட்டத்தை மேலும் வலுப்படுத்திட வேண்டும்.  

5.   மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபியில்) குறைந்தபட்சம் 3% பொது சுகாதாரத்திற்கு மத்திய செலவினத்தில் உயர்த்திட வேண்டும்.

6.   இன்றியமையாத பண்டங்கள் சட்டத்தை நீக்கியும், வேளாண் உற்பத்தி சந்தைக்குழு சட்டத்தை (Agricultural Produce Marketing Committee Act) உணவு தான்யங்களை மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்குக் கட்டுப்பாடு எதுவுமின்றி கொண்டு செல்வதற்கு வகை செய்யும் விதத்தில் திருத்தங்கள் கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

7.   அமலில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்ட/திருத்த/நிறுத்தி வைக்க மேற்கொண்டிருக்கும் முன்மொழிவுகளைத் திரும்பப் பெற வேண்டும்.

8.   பொதுத்துறை நிறுவனங்களை, குறிப்பாக ரயில்வேயையும், மற்றும் மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி, வங்கிகள்/இன்சூரன்ஸ், பாதுகாப்பு உற்பத்தித்துறைகளை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்.

9.   பிஎம்கேர்ஸ் என்ற ஒரு தனியார் அறக்கட்டளையின் பெயரில் வசூலித்துள்ள தொகைகளை, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளித்திட வேண்டும்.

10. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பேரிடர் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்தியிருப்பதால், இச்சட்டத்தின் ஷரத்துக்களின் படி தேசிய பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு தடவை நிதி உதவி அறிவித்திட வேண்டும்.

11. தலித்/பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் (ஊனமுற்றோருக்கும்) இட ஒதுக்கீடுகளைக் கறாராக அமல்படுத்திட வேண்டும். நிரப்பப்படாத காலியாக இருக்கும் இடங்களையும் இவர்களைக் கொண்டு பணி நியமனம் செய்து நிரப்பிட வேண்டும்.

12. கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு அவர்களின் முந்தைய செமஸ்டர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, பட்டங்கள் வழங்கிட வேண்டும்.

13. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2019 ஆகஸ்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும். அனைத்து தகவல் தொடர்புகளையும் மீளவும் அளித்திட வேண்டும். மக்கள் சுதந்தரமாக போய் வர அனுமதித்திட வேண்டும்.

14. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகப் பிரிவு ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்திட வேண்டும்.

15. 2020 சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

16. தலித்துகளுக்கு எதிராக சாதிய வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், பழங்குடியினரை சுரண்டுபவர்களுக்கு எதிராகவும் ஈடுபடும் கயவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களைத் தண்டித்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை உயர்த்திப்பிடித்து, வரும் ஆகஸ்ட் 20 முதல் 26 தேதிகள் வரை, அகில இந்திய அளவில் எதிர்ப்பு வாரம் அனுசரிக்குமாறும், தன் கட்சிக் கிளைகள் அனைத்திற்கும் மத்தியக்குழுக் கூட்டம் அறைகூவல் விடுத்துள்ளது.

மேலும் வரும் ஆகஸ்ட் 9 அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் நடத்தவுள்ள இந்தியாவைப் பாதுகாப்போம், இந்திய மக்களைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் நடத்தவுள்ள அகில இந்திய எதிர்ப்பு தினத்திற்கும் மத்தியக்குழு தன் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...