ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அனைவருக்கும்  பழைய ஓய்வூதிய திட்ட நடைமுறையை அமலாக்குவது, சிறப்பு ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை விடுத்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது, 8-வது ஊதிய மாற்ற குழுவை அமைப்பது – இடைக்கால நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசுப்பணிகள் ஸ்தம்பித்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு காண ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தொடர்ச்சியாக பலகட்டப் போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2011 தேர்தல் அறிக்கையில்  தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்சன் திட்டம் திரும்பப் பெறப்பட்டு பழைய பென்சன் திட்டம் தொடர வழிவகை காணப்படும், தொகுப்பூதியம்- மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற ஊதிய முறைகள் ஒழிக்கப்பட்டு முறையான காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், 2016 பிப்ரவரியில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் அன்றைய முதல்வர் ஜெயலலிதா புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வல்லுனர்குழு அமைப்பது உள்ளிட்டு 11 அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்த கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில்  அதிமுக அரசு ஆக்கப்பூர்வமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் இந்த அலட்சியத்தை கண்டித்தும், சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்த வலியுறுத்தியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்திய பின்னரும் அதிமுக அரசு அரசுப்பணியாளர்களை வஞ்சித்து வருகிற நிலையில் வேறு வழியின்றி அரசு ஊழியர்கள் மீண்டும் போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் இந்த நியாயமான  போராட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

முந்தைய முதல்வர் ஜெயலலிதாவால்  சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ்  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்டு அறிவிக்கப்பட்ட 11 அறிவிப்புகளை செயல்படுத்த முன்வராமல் பல லட்சம் அரசு ஊழியர்களுக்கும் –  ஆசிரியர்களுக்கும்  – அவர்தம் குடும்பங்களுக்கும்   தற்போதைய அஇஅதிமுக அரசு மிகப்பெரும் அநீதியை இழைத்து வருகிறது.

எனவே, போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின்  கோரிக்கை நியாயத்தை கருத்திற்கொண்டு தமிழக முதலமைச்சர்  உடனடியாக தலையீடு செய்து, ஏற்கெனவே சட்டப்பேரவையில் அளிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை  நிறைவேற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழகஅரசை வலியுறுத்துகிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...