ஆசிரியர் பணி நியமனங்களில், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் விடுவிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் மாநில அரசிற்கு தலைமைச் செயலாளர் மூலம் பரிந்துரை செய்துள்ளார். இது மிகவும் கவலைக்குரிய, அதிர்ச்சிக்குரிய ஒரு விஷயம் ஆகும். ஆசிரியர் பணி நியமனங்களில் தொடர்ந்து ஊழல் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. தொடர்ந்து ஆசிரியர் நியமனத்துக்கு பரீட்சை எழுதிக் கொண்டிருக்க கூடிய 5 ஆசிரியர்கள் கொடுத்த புகார் மனுவை விசாரித்த போது, இந்த முறைகேடுகள் நடைபெற்றது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.

சரியான விடைகளை அளித்த போதும் அவற்றுக்கு மதிப்பெண்கள் அளிக்காமல், அவர்களை தேர்வு செய்யாமல் விட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் இதுபோன்ற முறைகேடுகள் இனிமேல் நடக்காது என்று உத்தரவாதம் அளித்த பின்னும், மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த தேர்வுகளில் இதே முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து மார்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் மாநில தகவல் ஆணையர் முத்துராஜ், இந்த முறைகேடுகள் நடைபெற்ற விதம் குறித்து விரிவான அறிக்கையை மாநில அரசுக்கு கொடுத்திருக்கிறார். “இந்த ஒன்பது அதிகாரிகளின் மீது உடனடி நடவடிக்கையை மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரும் கட்டாய ஓய்வில் பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்” எனவும் பரிந்துரைத்துள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மட்டுமல்லாது, ஊழல் முறைகேடுகள் சம்பந்தமான சிவில், கிரிமினல் பிரிவுகளில், இந்திய குற்றப்பிரிவு சட்டங்களின்படி உரிய வழக்குகள் தொடரப்பட வேண்டும் என்றும், இதற்குப் பின்புலமாக இருந்திருக்கக்கூடிய அதிகாரத்திலிருந்த பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

மேலும், “நேர்மையான வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான ஆசிரியர் தேர்வை உத்தரவாதப் படுத்தும் முகமாக, தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய முறையில், இந்த தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...