ஆண்டுதோறும் தமிழகத்தில் 5000 தலித்துகள் அசாதாரண மரணமா? நீதி விசாரணை நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5000 தலித்துகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மரணம் அடைவதாக வந்துள்ள செய்தி (தி இந்து, நாள்: 06.02.2016) மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளது. இத்தகவல் யாரோ ஒருவர் சொன்னதல்ல, மாறாக தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ராஜேஸ்தாஸ் தெரிவித்துள்ளதாகும். அவரது கூற்றுப்படி சராசரியாக 5000 தலித்துகளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட மரணங்கள் நடைபெறுவதாகவும், அதில் 45 சதவிகிதம் தற்கொலைகள் என கூறப்படுவதாதாகவும் தெரிவித்துள்ளார். “வயிற்று வலி அல்லது இதர நோய்களுக்காக இளைஞர்கள் உட்பட பல தற்கொலைகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. வயிற்றுவலி அல்லது உடல் நோவிற்காகவா இவ்வாறு தற்கொலை செய்து கொள்வார்களா? இத்தகைய தீவிரமான முடிவுகள் மேற்கொள்ளுமளவிற்கு நிர்ப்பந்திக்க வேறு பல காரணிகள் இருக்கக் கூடும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகததில் இளவரசன் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் உள்ளிட்டு தலித் பிரிவினர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது பற்றி முறையான விசாரணை நடத்த ஏற்கனவே சிபிஐ (எம்) உட்பட பல ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் தமிழக அரசு இதனைக் கண்டுகொள்ளாத போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வெமூலா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்திட நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சிகள் நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம்.

இப்பின்னணியில் தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான தலித் பிரிவைச் சார்ந்தவர்கள் அசாதாரணமான முறையில் மரணம் அடைவதாக அதிகாரப் பூர்வமான முறையில் காவல்துறையைச் சார்ந்த முக்கியமான அதிகாரியே தெரிவித்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதிபதிகளைக் கொண்ட குழுவினர் இத்தகைய மரணங்கள் குறித்தும், தலித் இளைஞர்கள் உட்பட தலித் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமையே இல்லை என முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப அடித்துக் கூறினாலும் அக்கூற்றை மறுதலிக்கும் ஏராளமான சம்பவங்கள் நடந்தேறுகின்றன என்பது தான் உண்மை.

ஆகவே இப்பிரச்சனை குறித்து ஆராயவும், உண்மை நிலையைக் கண்டறிந்து அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தில் முன் நிறுத்திடவும் தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்டு அனைத்து சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் முடிவு கட்டவும் மேற்கூறப்பட்டவாறு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக்குழுவை தாமதமின்றி அமைத்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி ...