ஆதார் எண் இணைக்கவில்லையெனில் சமையல் எரிவாயு மானியம் ரத்து சிபிஐ(எம்) கடும் கண்டனம்

சமையல் எரிவாயு உருளை மானிய விலையில் பெறுபவர்கள் அனைவரும் செப்டம்பர் 30க்குள் தங்களது ஆதார் எண்ணை வங்கியில் அல்லது எரிவாயு விநியோகிக்கும் நிறுவனத்திடம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் எரிவாயு உருளைக்கான மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அதிர்ச்சியளிக்கும் முடிவு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மத்திய பாஜக அரசு தொடுத்துள்ள கொடுந்தாக்குதலாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு ஆதார் எண் அவசியமில்லை என்றும், ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டுமென்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் 2016, ஜூலை 1 முதல்  எரிவாயு உருளை வாங்கிய அனைவருக்கும்  ஆதார் எண் பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. 2016, செப்டம்பர் 30-க்குள் ஆதார் எண் பதிவு செய்யப்படாவிட்டால் அக்டோபர் 1 முதல் மானியம் ரத்து செய்யப்படும் என்று குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது. மத்திய அரசு மற்றும் எண்ணை நிறுவனங்களின் மேற்கண்ட நடைமுறை உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். நாட்டின் தலைமை நீதிமன்ற உத்தரவை மீறுகிற எதேச்சதிகார, அதிகாரவர்க்க போக்காகும். ஜனநாயகத்தை துச்சமென மதிக்கும் மக்கள் விரோத செயலாகும்.

தமிழகத்தில் எரிவாயு உருளை பெறும் 1 கோடியே 62 லட்சம் குடும்பங்களில் 1 கோடியே 55 லட்சம் குடும்பங்கள் மானிய விலையில் எரிவாயு உருளை பெறும் நிலை உள்ளது. இதில் சுமார் 60 லட்சம் குடும்பங்கள் மட்டுமே ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் செப்டம்பர் 30க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்யாத அனைவருக்கும், எரிவாயு மானியம் ரத்து செய்யப்படும் என்பது மானிய விலையில் எரிவாயு உருளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை மறைமுகமாக வெட்டிச்சுருக்கும் சதிச்செயலேயாகும். மத்திய பாஜக அரசின் இந்த முடிவால் தமிழகத்தில் மட்டும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும்.

நேரடியாக மானிய விலையில் எரிவாயு உருளை பெற முடியும் என்றிருந்த நிலையை மாற்றி, வங்கி கணக்கில் மானியத்தை செலுத்தும் நடைமுறையை மத்திய பாஜக அரசுதான் ஜனவரி 2015 முதல் ஏற்படுத்தியது. தற்போது ஆதார் எண்ணை கட்டாயமாக்கி எரிவாயு உருளைக்கான மானியத்தை  நிரந்தரமாக ரத்து செய்யும் சதித்திட்டத்தை மத்திய மோடி அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. வங்கிக்கணக்கில் மானியத்தை செலுத்தும் நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது – இது படிப்படியாக மானியத்தை ரத்து செய்யும் சதித்திட்டமாகும் என்றும் தெரிவித்தது. இப்போது மோடி அரசின் சதித்திட்டம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தவறான பொருளாதாரக் கொள்கை செயலாக்கத்தினால் ஏற்கெனவே அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. நிரந்தரமற்ற வேலை, வேலையிழப்பு, வருமானக்குறைவு, வாங்கும் சக்தி இழப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை காரணமாக கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளி மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் நிலையில் இந்த மானிய ரத்து திட்டம் கோடிக்கணக்கான குடும்பங்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கும். எனவே, சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை ரத்து செய்ய முனையும் சதித்திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டுமென்றும், ஆதார் எண் அவசியமில்லை –  கட்டாயப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு கறாராக செயல்படுத்தப்பட வேண்டுமென்றும், இதனை பின்பற்றாமல் மானியத்தை நிறுத்தி வைத்துள்ள எண்ணை நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

எரிவாயு உருளை மானியத்தை பறிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத செயலுக்கு துணை நிற்காமல்  அனைவருக்கும் நேரடியாகவே  மானிய விலை எரிவாயு உருளை கிடைப்பதை  உறுதி செய்திட உடனடி தலையீடு செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...