ஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்!

20 லட்சம் வன மக்களை வெளியேற்ற உத்தரவு
ஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்

வன உரிமைச் சட்டப்படி உரிமை கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதுமுள்ள ஆதிவாசிகள் மத்தியில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவில் வழக்கு எண். 109/2008ல் 13.2.2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவு எழுத்துப் பூர்வமாக 20.2.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது ஆதிவாசி மக்கள் மீது போர் தொடுப்பதற்கு சமமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம்’ 2006 மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு 2008 ஜனவரி 2ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ‘வன உரிமைச்சட்டம் 2006’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் கொஞ்சமும் விருப்பம் இல்லை.

2018 டிசம்பர் வரை இந்தியா முழுவதும் உரிமை கோரி வந்த மனுக்கள் 42.19 லட்சம்.இதில் உரிமைகள் வழங்கப்பட்டது. 18.89லட்சம் மனுக்களுக்கு மட்டுமே! மீதமுள்ள23.30 லட்சம் மனுதாரர்களும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி வெளியேற்றப்பட வேண்டியவர்கள். மத்திய வன அமைச்சகம் மற்றும் எல்லா மாநிலங்களையும் பிரதிவாதியாக சேர்த்திருந்ததால் 200க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் ஆஜராகியுள்ளனர். ஆனால், தொடர்ந்து மூன்று வாய்தாக்களுக்கு மத்தியஅரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் கூட ஆஜராகவில்லை. இது மத்திய பி.ஜே.பி. அரசு வேண்டுமென்றே மேற்கொண்ட திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டுகிறோம். எத்தனையோ வழக்குகளில் மத்திய அரசு வாய்தா வாங்குவதும், குறிப்பிட்ட வழக்கறிஞர் வரும் நாளில் தான் வழக்கை எடுத்து கொள்ளவேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் எத்தனையோ முறை நீதிமன்றத்தில் குறிப்பிட்டு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

பாஜக அரசே பொறுப்பு

ஆனால், வன உரிமைச் சட்டம் தொடர்பான இந்த வழக்கில் தொடர்ந்து எந்தவொரு வழக்கறிஞரும் மத்திய அரசின் சார்பில் ஆஜராகவில்லை என்றால் அதற்குவேறு என்ன காரணத்தை குறிப்பிட முடியும்.எனவே, இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு மத்திய பி.ஜே.பி. அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். இச்சட்டத்திற்கான விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு கிராம சபைதான் ஆகப் பெரிய அதிகாரம் படைத்தது. ஆனால் அதிகாரிகள்அதை மதித்து நடக்கவில்லை. சட்டம் அமலாக்கப்படும் விதம் குறித்து நீதிமன்றமும் எதுவும் கேட்கவில்லை. பல்லுயிர் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் ஆதிவாசி மக்களுக்கு எதிராக ஓய்வுப் பெற்ற வனத்துறை அதிகாரிகள் தான் பெரும்பகுதியான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் நோக்கத்தைக் கூட நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. இதன் மூலம் வரலாற்றில் மிகப்பெரும் அநீதியை உச்சநீதிமன்றம் இழைத்துள்ளது. மனு நிராகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் கோட்ட கமிட்டிக்கும், கோட்டக் கமிட்டியிலும் பாதிக்கப்பட்டவர் மாவட்ட அளவிலான கமிட்டியிலும் முறையீடு செய்ய முடியும். பாதிக்கப்பட்ட நபருக்கு எதிரான எந்த தீர்ப்பையும் அவர் தனது கருத்தை தெரிவிப்பதற்கு போதுமான வாய்ப்பை வழங்காமல் முடிவு செய்யப்படக் கூடாது என்று விதிகள் பிரிவு ஐஏ(4)ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிமை வழங்கப்படாத மனுவின் மீது எந்தவொரு ஆதிவாசிகளையும் மேற்குறிப்பிட்டுள்ள கமிட்டிகள் எதுவும் முறையாக அழைத்து விசாரணை செய்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.

உரிமை வழங்கப்படாத மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டவை என்ற அடிப்படையில் தான் விதிகளுக்கு புறம்பாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளார்கள். இதை உச்சநீதிமன்றத்தில் ஆதிவாசிகள் சார்பில் ஒருவரும் எடுத்துச்சொல்லவில்லை. மத்திய அரசும் ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில்அவர்களின் பக்கம் நின்று வாதிட தவறிவிட்டது.ஏற்கனவே உச்சநீதிமன்ற வழக்கு ரிட்மனு எண்.202/95 இடைக்கால மனு எண் 703 ன் மீது 23.11.2001 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு பழங்குடி மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியது. அதாவது, 30.9.2002க்குள் வனநிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது. அப்போதுபிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு இந்த உத்தரவை சிரமேற்கொண்டு அமல்படுத்தும் உத்தரவை 3.5.2002 அன்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியது இந்த வெளியேற்ற உத்தரவை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டதன் விளைவாக வெளியேற்றும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல், இடதுசாரி கட்சிகள் ஆதரவுடன் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வனஉரிமைச் சட்டம் 2006 நிறைவேற்றப்பட்டு காடு மக்களுக்கு சொந்தம் என்று கூட்டம் கூறியது.

வேரோடு பிடுங்குவதா?

நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டப்படி தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிலமும் அரசுக்கு சொந்தமாகும். இதைப் பயன்படுத்தித்தான் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டம் எனும் ஆயுதத்தின் மூலம் அரசும்,அதிகாரிகளும் பழங்குடி மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்தும் வாழ்வாதாரமான வனத்திலிருந்தும் வெகுசுலபமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மலையிலிருந்து ஆதிவாசி மக்களை வெளியேற்றுவது செடியை வேரோடு பிடிங்கி அழிப்பதற்கு சமம் என்பதை ஆட்சியாளர்களும், நீதிமான்களும் உணர வேண்டும். பரம்பரை பரம்பரையாக மலைகளில் வாழும் மக்களுக்கு அதற்கான சட்டப்படியான ஆவணங்களை வழங்க வேண்டிய ஆட்சியாளர்கள் வழங்காததற்கு ஆதிவாசி மக்கள் எப்படி பொறுப்பாக முடியும். ஆட்சியாளர்கள் தானே பொறுப்பேற்க வேண்டும். இப்போது மீண்டும் பி.ஜே.பி ஆட்சியில் ஆதிவாசி மக்களுக்கு எதிரான உத்தரவு வெளிவந்துள்ளது.

மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏற்பட்ட தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையில், உடனடியாக, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைக்கும் வகையில் ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவோ அல்லது கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்யவோ முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். மாநில அரசாங்கங்களும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புதிய சட்டம் பழங்குடி மக்களுக்கு வன உரிமையை வழங்கியிருக்கிறது. எனவே, பழங்குடி மக்களுக்கு விரோதமான இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறாது. ஏனென்றால் 150 ஆண்டு காலமாக பழங்குடிமக்கள் ‘மரணம் வரையில் போர்’ என்று சொல்லத்தக்க அளவுக்கு நடத்தி வந்த போராட்டத்தின் விளைவு தான் இந்த வனஉரிமை சட்டம் 2006. மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்ல எடுக்கும் முயற்சிகளை சமூகம் ஏற்காது. வனத்தையும், வனத்தில் வாழும் மக்களையும், பாதுகாக்க களம் காண்போம். வனஉரிமைச்சட்டப் படி பலன் பெற வேண்டிய பயனாளிகள் அணிதிரண்டு இந்த உத்தரவுக்கெதிராக களம் அமைக்க வேண்டும். ஆதிவாசிகளும், வனத்தை சார்ந்து வாழும் இதர சமூகத்தினரும் வனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் அதை 2002ம் ஆண்டைப் போலவே எதிர்த்து முறியடிப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்வோம்.

கட்டுரையாளர் : பெ.சண்முகம்
பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...