ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (7-8.08.2016) ஆகிய தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்க அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் கூட்டத்தை கூட்டுக!

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு வழக்கமாக ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். நடுவர்மன்ற தீர்ப்பு வெளியான கடந்த 10 ஆண்டுகளில், எட்டு ஆண்டுகளில் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12 அன்று திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் 5.62 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடி கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாமல் டெல்டா மாவட்டம் ஒருபோக சாகுபடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. நெல்சாகுபடியை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல லட்சம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் விவரிக்க முடியாத வேதனையில் வாழ்ந்து வருகிறார்கள். நடப்பாண்டிலும் இதே நிலைமை தான் நீடித்து வருகிறது.

இவ்வளவுக்கும் தற்போது கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டுள்ளதுடன், அப்பகுதியில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டுள்ளன. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு நடுவர்மன்ற ஆணைப்படி இன்று வரை வழங்க வேண்டிய 70 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படவில்லை.

மறுபக்கம் தண்ணீரை வற்புறுத்தி பெற வேண்டிய தமிழக அரசோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வாளாயிருப்பது தமிழ்நாட்டின் துயரம் என்றே கருத வேண்டியுள்ளது.

எதற்கெடுத்தாலும் நடுவர்மன்ற ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளோம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என முதலமைச்சர் கூறுவது தேவையை ஈடுகொடுப்பதாக இல்லை.

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அவசியமானதே. அதே நேரத்தில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைத்திடவும், காவிரி ஒழுங்குமுறை குழு அமைத்திடவும், நடப்பாண்டில் சாகுபடிக்கான தண்ணீர் பெற்றிடவும் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து மத்திய அரசை வற்புறுத்துவதை அஇஅதிமுக அரசு தொடர்ந்து தவிர்த்து வருகிறது. அஇஅதிமுக அரசின் இத்தகைய அணுகுமுறை காவிரி தண்ணீர் பெறுவதற்கு உதவாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தற்போது சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் ஏங்கி கொண்டுள்ளார்கள். எனவே மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வற்புறுத்தி தமிழ்நாட்டுக்கு உடனடியாக தண்ணீர் பெறுவதற்கு முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி, அனைத்து விவசாய தலைவர்கள் குழு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து வற்புறுத்த வேண்டும். மேலும் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அவசரமாக அனைத்து கட்சி, அனைத்து விவசாய சங்கங்கள் தலைவர்களது கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்டவைகளை வற்புறுத்தி, காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு அனைத்து விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு  குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் ஆந்திர முதலமைச்சரை நேரில் சந்தித்து வற்புறுத்த தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து வருகிறது. இதுவரை 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை 12 அடியாக உயர்த்தி கட்டுமான பணிகளை முடித்து இருக்கின்றது. இதன் காரணமாக பாலாற்றில் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீர் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயம், குடிநீர், நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநிலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஆந்திரா தொடர்ச்சியாக பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 1892ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும், மைசூர் அரசுக்கும் ஏற்பட்டுள்ள உடன்பாட்டில் பாலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் அணைகள் கட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதையும் மீறி ஆந்திர அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. மத்திய பாஜக அரசு அரசியல் காரணங்களுக்காக ஆந்திர அரசின் நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது.

எனவே, பாலாற்றில் நமது உரிமையை பாதுகாத்திடவும். உயர்த்தி கட்டப்பட்டுள்ள அணையை இடித்து பழைய நிலைக்கு கொண்டு வரவும் மத்திய அரசை தமிழக முதலமைச்சர் வற்புறுத்த வேண்டும். அத்துடன் ஆந்திரா முதலமைச்சரை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து வற்புறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்

செம்மரக் கடத்தல்காரர்களை பிடிக்கிறோம் என்ற பெயரில் ஆந்திர மாநில காவல்துறை  அப்பாவி தமிழர்கள் 32 பேரை கைது செய்து பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று ஆந்திர மாநில அரசை மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...