ஆன்-லைன்தேர்வுகளை நிராகரித்திடுக !மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூலை 12

பல்கலைக் கழகங்களின் கீழான அனைத்து இறுதித் தேர்வுகளையும் ஆன்-லைன் மூலமாக மேற்கொள்வரை நிராகரித்திட வேண்டும் என்றும், இதற்கு முன்பு எழுதிய செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், மாணவர்களின் தேர்ச்சியினை முடிவு செய்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 பல்கலைக் கழக மானியக் குழு ஜூலை 6 அன்று வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை மூலமாக தேர்வுகள் குறித்து ஒருதலைப்பட்சமாக மேற்கொண்டுள்ள முன்மொழிவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நிராகரிக்கிறது. இந்த முன்மொழிவானது, இப்போதைய சமூக முடக்கம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டுள்ள நிலைமைகளின் கீழ், மாணவர்கள் நேரடியாக வந்து தேர்வு எழுத முடியாத காரணத்தால், ஆன்லைன்/திறந்த புத்தகப் பாணியில் தேசிய அளவில் ஒரேவிதமான முறையில் தேர்வினைத் திணித்திருக்கிறது.

நாட்டில் இணையவழித் தொடர்பு என்பது இப்போதும் 36 சதவீத அளவிற்கு மட்டுமே இருக்கிறது. நம் மாணவர்களில் பெரும்பான்மையினருக்கு, அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையிலும் மற்றும் நாட்டில் டிஜிடல் முறைப்படி தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாத விதத்தில் ஏராளமான பகுதிகள் இருக்கின்ற நிலையிலும், ஆன்லைன் வகுப்புகள் அல்லது தேர்வுகள் சாத்தியமில்லை. பல்கலைக் கழக மானியக்குழுவின் இந்த உத்தரவு மிகவும் பாகுபாடானதாகும். எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

கல்வி என்பது நம் அரசமைப்புச்சட்டத்தில் பொதுப் பட்டியலில் (concurrent list) இருக்கிறது. பல்கலைக் கழக மானியக் குழு  மாணவர்களைப் போதிப்பதற்கும், மாணவர்களின் தேர்வுகளுக்கும் பல்வேறுவிதமான நடைமுறைகளைப் பின்பற்றிவரும் மாநில அரசாங்கங்கள், மாநிலப் பல்கலைக் கழகங்கள்/கல்லூரிகள் ஆகியவற்றைக் கலந்தாலோசிக்காமல், இவ்வாறு ஒரே சீரான கட்டளையைப் பிறப்பித்திட முடியாது. மேலும், ஆசிரியர்களின் பிரதிநிதிகளையும், குறிப்பாக  எதிர்காலத்தில் இதனால் பாதிக்கப்படவிருக்கும் மாணவர்களின் பிரதிநிதிகளையும் கலந்தாலோசிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். 

பல பல்கலைக்கழகங்கள் விரிவான அளவில் ஏராளமான கல்லூரிகளை இணைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவது அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், சமூக முடக்கத்தின் விளைவாக பலவிதமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாணவர்கள் இணையத் தொடர்பை ஏற்படுத்துவதற்கே இயலாமல் போய்விடும் மற்றும் அதன் காரணமாக ஆன்லைன் தேர்வுகள் எழுதமுடியாமல் போய்விடும். 

நம் கல்வி அமைப்பில் ஒரு டிஜிடல் பிளவு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், இறுதி ஆண்டில் உள்ள பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி மாணவர்கள் எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கைத் தொழிலைத் தேர்ந்தெடுக்க ஏதுவாக, அவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி, பட்டங்களை வழங்க வேண்டிய நிலை இருப்பதன் காரணமாக, அவர்கள் ஏற்கனவே தங்களுடைய செமஸ்டர்களில் பெற்ற மதிப்பெண்களை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில்  பட்டங்கள் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்கள் தற்போது, அதிகாரிகளின் கூருணர்வற்ற நடவடிக்கைகளின் காரணமாகவும், நிச்சயமற்ற தன்மைகளின் காரணமாகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த சமயத்தில் இவ்வாறு ஆன்லைன் தேர்வுகள் என்பது அவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்கிடும். ஏற்கனவே, ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்க முடியாமல் மாணவர்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை துயரார்ந்தமுறையில் முடிந்திருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலைகளில், இதற்குமுன் நடைபெற்ற செமஸ்டர்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர்களுக்குப் பட்டங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, கோருகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...