ஆமைவேகத்தில் அரசு மீட்புப் பணி – ஜி.ராமகிருஷ்ணன்

புயல் வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் பணியில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆமை வேகத்தில் செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் குற்றம் சாட்டினார். ஒக்கி புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக் கிழமையன்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் என்.முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், என்.எஸ்.கண்ணன், உஷாபாசி, ஆர்.செல்லசுவாமி, கே.மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் விஜயமோகனன் ஆகியோர் சென்றிருந்தனர்.

பின்னர் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,கடந்த 29 ஆம் தேதி இரவு துவங்கி நீடித்த புயல் மற்றும் கனமழையால் குமரிமாவட்டம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் மரணமடைந்துள்ளார்கள். பல லட்சம் வாழை, ரப்பர், பலா, ஆயினி, தேக்கு போன்ற மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. மண்பாண்டம், செங்கல் சூளை போன்றவை நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. பல நீர்நிலைகள் உடைப்பெடுத்துள்ளது. தொடர் மழையால் பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேறி முகாம்களில் உள்ளனர். சுமார் 4000க்கும் அதிகமான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வெளிமாவட்டங்களிலிருந்து வந்துள்ள மின்வாரிய தொழிலாளர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 முதல் 5 பேர் வரை அதிகாரிகளாகவும், 5 அல்லது 6 பேர் மட்டுமே களப்பணி செய்பலர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு மரங்களை வெட்டி அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு உரிய கருவிகள் இல்லாததால் சீரமைப்புப் பணி மிகவும் பின்தங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற இளைஞர் அமைப்புகளே மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த நிலை போக்கப்பட்டு துரித வேகத்தில் இப்பணி நடைபெற வேண்டும்.வீடுகள் பயிர்களுக்கு இழப்பீடு முகாம்களில் இருப்பவர்களுக்கு குடிநீர், உடை, உணவு, மருத்துவம், சுகாதாரம் என எந்த ஏற்பாடும் இல்லை.

தன்னார்வலர்கள், பொதுமக்கள் பல உதவிகளை செய்து பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், ஷீட் போட்ட வீடுகள் இடிந்தால் மட்டுமே நிவாரணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் அதிகபட்சம் ரூபாய் 5000 என நிர்ணயித்துள்ளார்கள். இது குறைந்தபட்சம் 1 லட்சம் என உயர்த்தப்பட வேண்டும். காங்கிரீட் வீடுகள் சேதமடைந்தாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வாழை, தென்னை, ரப்பர் போன்ற மரங்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.

உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். வாழை மரத்துக்கு குறைந்தது ரூபாய் 300, செவ்வாழைக்கு ரூபாய் 500, ரப்பர் மரத்துக்கு குறைந்தது ரூபாய் 1000, இதர மரங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள இழப்புகளை அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி அடங்கிய குழுக்கள் மூலம் கிராம அளவில் ஆய்வு செய்து இழப்பீடுகளை கணக்கிட்டு இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் மழையால் மின்னணு கணக்கீடு இயந்திரம் செயல்படவில்லை என கூறி ரேசன் கடைகள் மூலமான அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை காரணமாக்காமல் அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வினியோகிக்க வேண்டும். வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாற்று வேலைகள் வழங்கிட வேண்டும். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்கள் நிலை என்ன என்பதே தெரியவில்லை.

குமரிமாவட்ட மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் புரட்டி போட்ட புயல் மற்றும் கனமழை குறித்து தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கையும் செய்யவில்லை. பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஆமைவேகத்தில் செயல்பட்டு வருகிறது. கடலில் சென்ற மீனவர்களை மீட்க உரிய அக்கறையோடு போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மீனவர்களை மீட்க விரைந்த நடவடிக்கை தேவை

குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களான நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர் மற்றும் பல கடற்கரை கிராமங்களிலிருந்து புயல் அறிவிப்புக்கு முன்னரே ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக 350 விசைப் படகுகளில் மீனவர்கள் சென்றனர். இவர்கள் அனைவருமே திடீரென ஏற்பட்ட புயலில் சிக்கியுள்ளனர். இப்படகுகளில் 1250 மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 300 பேர் பற்றிய தகவல் மட்டுமே வந்துள்ளது. 950 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. கேரள மாநில அரசு நடத்திய தேடும் முயற்சியில் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கேரள மீனவர்களோடு குமரி மாவட்ட மீனவர்கள் சிலரும் காப்பாற்றப்பட்டு கரைக்கு பத்திரமாக கொண்டு வரப்பட்டுள்ளனர். எந்த தகவலும் இல்லாமல் 950 மீனவர்கள் புயல் தாக்கிய கடல் பகுதியில் உள்ளதால் அவர்களது உறவினர்களும், அந்த கிராமங்களில் உள்ள மீனவர்களும் அவர்களது பாதுகாப்பு குறித்து கடும் அச்சத்துக்கும் பதற்றத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் தேடிக் கண்டுபிடிக்கவும், அவர்களைக் காப்பாற்றி கரைசேர்க்கவும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் கவலையுடன் கூறுகின்றனர். இதனால் மீனவர்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் உட்பட பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று புயலில் சிக்கியுள்ள மீனவர்களை பாதுகாப்புடன் மீட்க ஹெலிகாப்டர், விரைவு விசைப்படகு கப்பற்படை கப்பல்கள் ஆகியவற்றை பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்

பொதுவாக மீனவர்கள் யாரேனும் காணாமல் போனால் 7 வருடங்கள் வரை அவர்கள் திரும்பி வராமல் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கும் நிலை உள்ளது. ஆனால் அந்த 7 வருடங்களுக்குள் அவர்களின் மனைவி, குழந்தைகள் குடும்பத்தினரின் பொருளாதாரம் பின்னடைவு ஏற்பட்டு, குழந்தைகளின் கல்வி, எதிர்காலம், திருமணம் ஆகியவை கேள்விக்குறியாகி சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த சுனாமி காலத்தில் காணாமல் போனவர்கள் குடும்பத்திற்கு விதிவிலக்கு அளித்து நிவாரணம் வழங்கியதை போல, தற்போதும்புயலால் பாதிக்கப்பட்டு கடலில் காணாமல் போய் தேடியும் கிடைக்காத மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கேரள மாநில அரசு புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியதை போல, தமிழக அரசும் புயலால் பாதிக்கப்பட்டு கடலில் உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கும் ரூபாய் 10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசையும், மத்திய அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது என அவர் கூறினார்.

மீனவர்களிடம் குறைகேட்பு

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீரோடி காலனி, வள்ளவிளை பகுதி மீனவ மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திக்க சென்றார். அப்போது நீரோடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீட்புப் பணிக்குழுவினரோ, அதிகாரிகளோ மீட்பு பணிகள் செய்யவில்லை. கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டனர்.

This slideshow requires JavaScript.

அங்கு மீனவர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தூத்தூர் மறை வட்டார அலுவலகத்தில் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அந்த கூட்டத்தில், மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர் கேரள கடற்பகுதியில் காணாமல் போன மீனவர்களை மீட்க கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மேல்புறம், அருமனை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ள மக்களை பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...