ஆய்வுகுழு அறிக்கையா, வேதாந்தா குழுமத்தின் ஊதுகுழலா?

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்கள், கால்நடைகள் மீதான ஸ்டெர்லைட் ஆலையின் பல்வேறு கடுமையான பாதிப்புகளின் காரணமாக ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்னுக்கு வந்து, பல கட்ட போராட்டங்களும், காவல்துறையின் துப்பாக்கி சூடும் நடந்த  பின்னணியில்தான் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

ஆலை மூடல் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன் சார்பில் பொதுநலன் சார் தலையீட்டு மனு (Intervening petition) போடப்பட்டு, அது அனுமதிக்கவும் பட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு நடந்திருக்கிறதா என்று ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து எவரும் இடம் பெறக்கூடாது என்ற ஸ்டெர்லைட்டின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது பெரும் நெருடலை ஏற்படுத்தியது. இருப்பினும், பொதுநலன்சார் தலையீட்டாளர் (intervener) என்ற முறையில் இந்த உத்தரவின் நகல் அர்ஜூனனுக்கு அளிக்கப்பட்டதை ஏற்று, ஆய்வு குழுவிடம் எழுத்து மூலமான விரிவான அறிக்கை கொடுத்ததோடு பல்வேறு வாதங்களும் அர்ஜூனன் சார்பில் வழக்கறிஞர்களால் எடுத்து வைக்கப்பட்டன. ஏராளமான மக்கள் ஆலை மூடலை ஆதரித்து மனுக்கள் கொடுத்தனர். ஆலை மூடலுக்குப் பிறகு, ஜூலை 2018ல் நாடாளுமன்றத்தில் நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வத், ஸ்டெர்லைட் இருக்கும் சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீர் மாசு பட்டிருக்கிறது, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல உலோகங்களின் இருப்பு தண்ணீரில் இருக்கிறது என்று அதிகாரபூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.

தற்போது, ஆய்வு குழு சமர்ப்பித்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது தவறு, மூடுவதற்கு உரிய காரணங்கள் இல்லை என்ற ரீதியில் முடிவுகள் இடம் பெற்றுள்ளன என்று தெரிகிறது. ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு, அது மக்கள் மீது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்வது தான் குழுவின் வரம்பு. ஆனால் ஆலையை மூடியது தவறு, உரிய காரணங்கள் இல்லை என்று குழு சொல்வது,  வரம்பை மீறிய செயலாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கடும் ஆட்சேபணையைத் தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையின் நகலை வேதாந்தா குழுமம், தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மட்டும் அளித்தால் போதும், டிசம்பர் 7ம் தேதிக்குள் அவர்கள் தம் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதர பொதுநலன்சார் தலையீட்டாளர்கள் அவசியமற்றவர்கள், எனவே அறிக்கையின் நகலை அவர்களுக்கு அனுப்பவேண்டிய அவசியமில்லை என்றும் பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அவசியமில்லை என்றால் தலையீட்டு மனு தாக்கல் செய்த போதே கூறியிருக்க வேண்டும். மனுவை அட்மிட் செய்ததோடு, உத்தரவுகளின் நகல்கள் உட்பட தலையீட்டாளர் என்று குறிப்பிட்டு அனுப்பி விட்டு, வழக்கு முடியும் தருவாயில், இவர்கள் அவசியமற்றவர்கள் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? டிசம்பர் 10 தான் அடுத்த வாய்தா என்று இருந்ததை மாற்றி, ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை ஏற்று பசுமை தீர்ப்பாயம் உடனே கூடியதும், மேற்கூறிய உத்தரவுகளைப் பிறப்பித்ததும், ஆய்வு குழுவின் அறிக்கையின் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை மட்டும் இணைய தளத்தில் ஏற்ற ஏற்பாடு செய்ததும் போன்ற நடவடிக்கைகள் ஆட்சேபணைக்குரிய நடவடிக்கைகளாகும்.

வேதாந்தா நிறுவனத்தின் நன்கொடையாளர் பட்டியலில் மத்திய ஆளும் கட்சியான பாஜக இருப்பதும், மத்திய மாசு கட்டுப்பாட்டு குழு தமிழகத்துக்கு வந்து, பூட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்குள் போக முடியாத போதும், ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே மாசு படுகிறது என்று சொல்ல இயலாது என்று அறிக்கை கொடுத்ததும், பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நியமனம், ஆய்வு குழுவின் தலைவர் தருண் அகர்வால் குறித்த விமர்சனங்களும், தீர்ப்பு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாகவே இருக்கும் என்ற அறிகுறியை ஏற்படுத்தின. தற்போது அது நடந்திருக்கிறது.

இது பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு அணுகுமுறை இழைக்கும் பெரும் துரோகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது. தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழுவின் அறிக்கைக்கு கடும் ஆட்சேபணை தெரிவித்து, அதை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும், உச்சநீதிமன்றத்தையும் அணுக வேண்டும், சட்டமன்றத்தைக் கூட்டி ஆலை மூடலுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...